நாஞ்சிலாரின் உரை.. எழுத்து வடிவில்..
மகாபாரதம் வடதமிழகத்தில் தெருக்கூத்து வடிவில் நிலைத்திருக்கிறது, திரௌபதி வஸ்திராபரணம், அபிமன்யு கதை என்று விதவிதமாக கூத்துகள். மதுரைக்கு தெற்கே இந்த கூத்து வடிவம் கிடையாது. மாறாக வேறோர் வடிவில் உண்டு. அது தோல்பாவைக்கூத்து. பாவைக்கூத்தில் இராமாயணம் தான் பிரதானம், பாரதத்தின் கதைமாந்தருக்கு அத்திரையில் இடமில்லை. இராமயணக்கதையின் எளிமை இதற்குக்காரணமாகஇருக்கலாம். இராமாயணத்தில் இருக்கும் பரிச்சயம் எனக்கு மகாபாரதத்தில் இல்லை, தமிழில் மூன்று பாரதம் இருந்திருக்கிறது நல்லாப்பிள்ளை பாரதம், பெருந்தேவனார் பாரதம், வில்லி பாரதம். இவர்கள் யாருமேமுழுவதுமாக பாரதம் பாடியவர்களில்லை. பாரதியால் கூட மகாபாரதத்தின் சிறு பகுதியையே இலக்கியமாக்க முடிந்தது, பாஞ்சாலி சபதம் மட்டுமே எழுதினார். தேசபக்தியை மனதில் கொண்டு பாரதமாதாவை பாஞ்சாலியாக உருவகித்துப்பாடினார் என்று சொல்வார்கள். ஆனால் நான் படித்த மட்டில் எனக்கு அப்படித்தோன்றவில்லை, அவர் இன்னும் நீண்ட ஆயுள் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் இன்னும் அதிகமாகஎழுதியிருக்கக்கூடும். தேவி பாஞ்சாலி உரைப்பாள் என்று துவங்கி அவர் எழுதியுள்ளதை வில்லி பாரதத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பாரதியின் வீச்சு புரியும்.
வில்லிபுத்தூரார் பற்றிய ஓர் கதையுண்டு. அவர் பிறப்பால் செல்வந்தர், நிலபுலங்கள் நிறைய உண்டு. அவரது தமையனாருக்கும் அவருக்கும் சொத்து பாகத்தில் பிரச்சினை. வழக்கு பாண்டிய மன்னனிடம் போகிறது. அவரோ அவர்களிடம் பாரதத்தை கொடுத்து முதலில் இதை தமிழில் எழுதி முடியுங்கள் பின் வழக்காய்வோம் என்றனுப்பி விடுகிறார். வில்லிபாரதம் பாடி சுவடிகளை மன்னனிடம் கொடுத்தனுப்புகிறார்.மன்னனுக்கு வழக்கு நினைவுக்கு வருகிறது வில்லியை அழைக்கிறார், வில்லி சொத்துக்களை எல்லாம் அண்ணனே எடுத்துக்கொள்வதில் தனக்கும் சம்மதமே என்று பதிலளித்து விடுகிறார். ஒரு காவியம்படிப்பதினால் கிடைக்கும் தரிசனம், திறப்பு இல்லையா இது.
கம்பன் வால்மீகிக்கு முன் மூன்று இராமாயணம் இருந்ததாக பதிவு செய்கிறான். ஆனால் வியாச மகாபாரதத்திற்கு முன் வேறு பாரதங்கள் இருந்ததா தெரியவில்லை. ராஜாஜி எழுதிய இரண்டு முக்கியமானபுத்தகங்கள் சக்ரவர்த்தி திருமகன் மற்றும் வியாசர் விருந்து. இதில் வியாசர் விருந்து தான் நான் படித்தறிந்த மகாபாரதம். சோழ மன்னனுக்கு அம்பிகாபதி அமராவதி மேல சந்தேகம், இவங்க எதோபேசிக்கிறாங்களே எதுக்கும் சோதிச்சுப்பார்ப்போம்னு கம்பரையும் அவர் மகனையும் விருந்துக்குக்கூப்பிடுறார், விருந்துன்னா இன்னைக்கு அஞ்சு நட்சத்திர ஓட்டலிலே மூன்று டேபிள் போட்ட மாதிரி சாப்பாடு போட்டிருக்க மாட்டாங்க, காவல்கோட்டத்தில வெங்கடேசன் எழுதுறார் பாருங்க தளபதிகள் கம்மங்கூழ் குடிச்சாங்கன்னு அது ரொம்ப சரி. கம்பர், சோழன், அம்பிகாபதி அப்புறம் ரெண்டு தளபதிங்க, அமைச்சருங்க இருந்திருப்பாங்க, தரையில உக்கார்ந்திருக்காங்க, அப்போ அந்தப்பொண்ணு சாப்பாடு விளம்ப வர்றா, பாத்தவுடனே பாடிட்டான் கம்பர் மகன் “இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய”ன்னு, பாவி குடியக்கெடுத்தானேன்னு நினைக்கிறார் கம்பர். அவன் விட்ட இடத்திலேயிருந்து பாடுறார் “கொட்டிக்கிழங்கோ... கிழங்கென்று கூவுவாள் வழங்கோசை வையம்பெறும்”னு. இந்த மாதிரி தெருவிலே கூவி விக்கிறவங்களுக்கு கூவியர்னு பேரு சங்கப்பாடல்களிலே. இடியாப்பத்தை கூவி வித்திருக்காங்க அப்போ, இப்போவும் விக்கிறாங்க. சோழ ராஜாவுக்கு சந்தேகம், கொட்டிக்கிழங்கென்பது ஆம்பல் போன்ற நீர்த்தாவரமொன்றின் கிழங்கு, கடும் பஞ்சகாலத்தில் குளத்தின் நீர்வற்றினால் தான் கொட்டிக்கிழங்கு அகழமுடியும். என் நாட்டில கொட்டிக்கிழங்கு திங்கிற அளவுக்கா பஞ்சம்னு எட்டிப்பாக்குறான் ராஜா,அங்க ஒரு கிழவி கிழங்கு வித்துப்போறா. புலவனுக்காக அவன் மனம் துயரப்படக்கூடாதுன்னு சரஸ்வதி வாரா இல்லையா.
புலவன் தப்பா எழுதுவதில்லை, என்பு தின்னும் ஒட்டகம்னு சங்கப்பாடல் ஒண்ணுல குறிப்பு வருது வையாபுரிப்பிள்ளை முதலிய எல்லா உரையாசிரியர்களும் அதை எலும்புன்னுதான் சொல்றாங்க. ஒட்டகம்எலும்பு திங்குமா அது ஹெர்பியோரஸ், சாகபட்சினி, ஆனா மூணு மாதம் பசியில இருக்கற ஒட்டகம் எஜமானனின் தோல் கூடாரத்தையே உண்ண வல்லது. தமிழ்நாட்டுல ஒட்டகம் எலும்பு தின்ன என்னஅவசியம்? இது ஒன்னும் பாலை இல்லையே. பிறகு நான் அகராதிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கல, கோரக்கர் அகராதியில இதுக்கு விடை கிடைச்சது - வெள்ளிய உலர்ந்த புல், என்புங்குறது புல் அப்பிடிங்குறஅர்த்தம் அதில் கொடுத்திருந்தது. தேடினால் கிடைக்கும், யாரு சொன்னா என்ன, தேடனும் அவ்வளவுதான்.
ஒட்டகம், ஒட்டகை முதலிய வார்த்தைகள் சங்கப்பாடல்களிலே இருக்கு. தொல்காப்பியத்திலே ஒட்டகம் இருக்கு எந்தெந்த விலங்குகளின் குழந்தைகளை குட்டின்னு சொல்லனுங்குற இடத்திலே ஒட்டகம் வருது. இந்த வார்த்தை எப்படி தமிழ் இலக்கியத்துல வருது. இது தமிழகத்தோட விலங்கு இல்லையே. ஒட்டகமும் குதிரையும் வெளியிலருந்து வந்தது ஆனா குதிரை தங்கிடுச்சு ஒட்டகம் தங்கல. ஆங்கிலத்துலகேமல், இந்தியில கம்லா இதுல ஒட்டகம் எனும் சொல்லோட வேர் எங்க இருக்கு. வடமாநிலங்கள்ல ஒட்டகத்த ஊன்ட் அப்டிங்கிறாங்க, பீகார் பகுதியிலே ஊட் அப்டிங்கிறாங்க இங்கருந்து தான் ஒட்டகம் என்கிறவார்த்தை பிறக்குது. இங்க ஒரு பேராசிரியர் ஒட்டிய வயிருள்ளதால ஒட்டகம்னு பெயர் வந்ததுங்கறாரு அப்பிடிப்பார்த்தா முதல்ல நாய்க்கில்ல அந்தப்பேர் வந்திருக்கனும்.
திருக்குறளில் ஒன்பதாயிரத்து முன்னூற்று பத்து சீர் மொத்தம், வள்ளுவர் உத்தேசமாக ஏழாயிரம் சொற்கள் பயன்படுத்தியிருக்கலாம். கம்பனது பாடல், விருத்தம். சீவக சிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் பயன்படுத்திய அத்தனை விருத்தப்பாக்களையும் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான். கம்பனுடைய பாடல்களில் குறைந்தது ஒரு லட்சம் சொல்லாவது இருந்துள்ளது, இது உலகம் முழுதுமுள்ள செய்யுள் காப்பியத்தில் அதிக சொல்லுடைய காப்பியம், இந்த சிறப்பு மொழியிலே நிகழ்ந்திருக்கிறது. தாமரை என்னும் ஒரு சொல்லுக்கு அரவிந்தம் வனசம் பங்கயம் என்று பல்வேறு சொற்களை தமிழ்ப்படுத்தி பயன்படுத்தியிருக்கிறான், அதற்கான தேவை மொழியிலே இருந்திருக்கிறது. இதை தொல்காப்பியம் அங்கீகரிக்கிறது. செய்யுளுக்கான இலக்கணப்படி, வடஎழுத்து தவிர்த்து தமிழ்ப்படுத்தி வடசொல்லை பயன்படுத்தலாம். இப்படி மொழிக்குள் ஏராளமான சொற்களை கொண்டுவந்தும், அதுவரை வராத சொற்களை பதிவு செய்தும் காப்பியம் செய்திருக்கிறான் கம்பன்.
தூது வந்த அனுமனுக்கு வாலிலே நெருப்பு வைக்கிறார்கள், செய்தி சீதைக்கு செல்கிறது, அப்போதுதான் இன்றென இருத்தியல் என்று வாழ்த்தியிருக்கிறாள், தான் கற்புநெறி காப்பதையும் உயிரோடிருப்பதையும்இராமனுக்கு சொல்ல வேறொருவன் இல்லை. அக்கினி பகவானை அழைக்கிறாள், நிற்கே தெரியும் என் கற்பு எனக்கூறி, அவனை சுடல் என்கிறாள். சொன்ன மாத்திரம் கடலின் வடவைத்தீ அவிகிறது, இருசுடர்அணைகிறது, வேள்வித்தீ குளிர்கிறது, இறுதியாக முக்கண்ணனின் வன்னியும் அவிந்தது என்கிறார் கம்பர். அழல், (காரைக்காலம்மையார் பாடுறா இல்ல அழலால் அங்கை சிவந்ததோ, அங்கை அழகால் அழல்சிவந்ததோன்னு) தழல் கனல் அனல் நெருப்பு எரி அக்கினி தீ என்றெல்லாம் சொல்லிய கம்பர் வன்னி என்றோர் சொல்லும் கையாள்கிறார். வன்னி ஓர் மரம், ஈழத்து வன்னி உள்ளது, ஓர் சாதிப்பிரிவு உண்டு. இங்கு வன்னி எனப்படுவது நெருப்புத்தானே. காளமேகம் பாடுகிறாரே தீத்தான் அவன் கண்ணிலே, தீத்தான் அவன் உடலெலாம், புள்ளிருக்கு வேளூரா உன்னை தையலெப்படி சேர்ந்தாள் என்று. அயற்சொல் அகராதியிலே இந்த வார்த்தையை கண்டெடுத்தேன் வஹ்னி என்பது நெருப்புக்கான வடசொல் அதுவே கம்பனிடத்து வன்னியாயிருக்கிறது.
கம்பன் யுத்த காண்டத்திலே ஒரு இடத்திலே பூளைப்பூ பற்றிப்பேசுகிறான். மாருதத்தில் சிதறிய பூளை போல இராவணின் படை சிதறியதாக. நான் வசிக்கும் கோவையில் பொங்கல் பண்டிகையின்போதுவேப்பிலை ஆவாரம்பூ பூளைப்பூ மூன்றையும் சேர்த்து எரவாணத்தில் சொருகி வைக்கும் வழக்கமிருக்கிறது,. இதற்குக் காப்புக்கட்டுதல் என்று பெயர். கபிலர் குறிஞ்சிப்பாட்டின் பூ வரிசையில் பூளையையும்சேர்த்திருக்கிறார். சங்க இலக்கியத்தில் இப்பூ வெண்தலைக்கும், வரகரிசிச்சோறுக்கும் ஒப்புமை சொல்லப்படுகிறது. காற்றடித்தால் சிதறி விடும் ஓர் எளிய பூ. இலக்கியத்தில் எவ்வளவு நயம் சேர்க்கிறது, எக்காலமும் நிலைத்து விடுகிறது.
வெண்முரசு நாவல் உரைநடை இலக்கியத்திலே உலகப்பெரும் ஆக்கமாக உருவாகி வருகிறது. இதிலுள்ள சொற்களை எல்லாம் ஓர் பல்கலைக்கழகம் அட்டவணைப்படுத்தி அகராதிப்படுத்தினால் மேலும்பல்லாயிரம் சொற்கள் மொழியில் சேர்ந்திருக்கும். இந்த பாரதம் எழுதும் பெருமுயற்சிக்கு ஜெயமோகனுக்கு தேவையான சக்தியும் ஆற்றலும் கிடைக்கப்பெற ப்ரார்த்திக்கிறேன்.
பாண்டி வெண்முரசு விமர்சனக்கூட்டம் ஜூன் 2018ல் பேசியது]