Sunday, April 28, 2019

இருட்கனி அத்தியாயம் 13-14.



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனி அத்தியாயம் 13-14.  சல்யருடன் பேசிவிட்டு துச்சாதனன் கர்ணனை சந்திக்கிறான்.  துரியோதனனைக் கைவிட்டு விட்டதாக துச்சாதனன் கருதும் கோணம், அதன் உணர்வு எவ்வகையிலும் கர்ணனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்று காட்டுகிறது அவனது பேச்சு.  பேராற்றல் கொண்ட தெய்வம் ஒன்றினைப் போன்றவன் அவன்.  தெய்வம் தன்னிடம் கோரிய பலருக்கும் வரங்கள் அருள்கிறது ஆனால் அவர்களின் எளிய மனங்கள் முக்கியம் எனக் கருதும் எவையும் அதற்கு முக்கியமானதல்ல.  ஒரு மெல்லிய திடுக்கிடல், ஆற்றலின் முன் பிலாக்கணம் வேண்டாம் அது என்ன தருகிறதோ அதைப் பெற்றுக்கொள் அது எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு செல், அதனுடன் இணைந்து அவ்வாறே செல்வதொன்றெ உன் கடன்.

“என் வாழ்வை இன்று இக்களத்தில் அங்கர் கையில் அளிக்கவில்லை. வில்லுடன் அவர் அக்களத்தில் எழுந்த அன்றே அளித்துவிட்டேன். இதுவரை அவர் அளித்த அனைத்தும் அவரது கொடை. இனியும் அவர் அளிப்பது எதுவோ அதுவே என் வாழ்வு”

முற்றிலும் சரணுற்ற பக்தன் என இங்கு தோற்றமளிக்கிறான் துரியோதனன்.


அன்புடன்,
விக்ரம்,
கோவை.

வெள்ளிவிழா



இனிய ஜெயம் 

புதுவை வெண் முரசு [வெள்ளிவிழா] கூடுகை இனிதே நிகழ்ந்தேறியது. ஹெகைய பார்கவ குலங்களின் தலைமுறைகளாக தொடரும் வஞ்சத்தின் கதையா விரிவாக பகிர்ந்து கொண்டார் விஜயன் அவர்கள். 

கூடுகை நண்பர்கள் அனைவருமே இன்றைய  மொத்த பாரதப் போரின் சித்தரிப்பும் அன்றே வந்து விட்ட தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள். 

குறிப்பாக மேலான அறம்,அரச அறம்,விலங்கு அறம் என மூன்றையும் துறந்து கார்த்தவீர்யன் ஜமதக்கினி ரிஷியின் சிரம் கொய்யும் சித்திரம்.

திருமாவளவன் தனது ஊர் பகுதியில் நிகழும் கார்த்தவீர்யன் கூத்து குறித்து சொன்னார். தாமரைக்கண்ணன் நெல்லை ஸ்ரீ வைகுண்டம் கோவிலில் கண்ட கார்த்தவீர்யன் பார்க்கவராமன் சமர் குறித்த புடைப்பு சிற்பம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக அனைவருமே நெற்குவை நகர் பகுதியில் அருகர் சன்னதியில் நிகழும் உணவு உபசரிப்பில் ஊழை உப்பக்கம் கண்டு  நிகழும் உரையாடலை ரசித்துப் பேசிக்கொண்டோம் . 

கீகடர் கதாபாத்திரம் முழுமையாக உருவாகி வந்திருக்கும் அழகு குறித்தும், இத்தனை வஞ்சம் நுரைத்துக் குமிழும் சூழலில், அருகர்கள் வணக்கம் முளை பெற்று நிற்கும் தருணம் குறித்தும், பீமனும் துரியனும் முதல் முதல் சந்திப்பு துவங்கி இன்றைய நெற்குவை நகர் அத்யாயத்தில் அவர்கள் இருவரும் சம ஆற்றல் கொண்டு நிறை நிலையில் எந்த உணர்வும் இன்றி ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்வது வரை, பார்வைகள் வழியாக மட்டுமே இந்த இருவர் மத்தியில் தோன்றி வளர்ந்து நிலை கொண்டு காத்து நிற்கும் வஞ்சம் குறித்தும், அந்த வஞ்சம் ஐந்து நிலைகள் வழியே மனிதர்களுக்குள் குடியேறுவதை இந்த அத்யாயம் எவ்வாறு சூதர்கள் சொல் வழியே வர்ணிக்கிறது,அந்த வர்ணனை எவ்வாறு நாடகீயமாக பீமன் துரியன் இடையே சித்திரரிக்கப்படுகிறது என்பனவற்றை இறுதியாக நான் பகிர்ந்து கொள்ள கூடுகை இனிதே நிறைவடைந்தது.

கடலூர் சீனு

Friday, April 26, 2019

துச்சாதனன்



அன்பின் ஜெ,

வணக்கம்!.

துச்சாதனின் உள்ளதில் எண்ணம் என்று ஒன்று உள்ளதாக தான் கருதியதில்லை என்று கர்ணன் நகைப்பிற்க்காக சொன்னாலும், உண்மையே.

அன்னையின் ஆணையை தலைமேற்க்கொண்டு துரியனின் நிழலுருவாய் இதுகாறும் அமைந்தவன்.


போர்களத்தில் குந்தி கர்ணனை சந்தித்ததை பற்றி துரியோதனன் அறிந்திருப்பதை சொல்கையில் முதல் முறையாக மனதளவில் தமையனை விலகிச்செல்கிறான். திரௌபதி பொருட்டு பிழைபொறுக்க கர்ணனிடம் மன்றாடியதும் பேரெடை ஒன்றை கீழிறக்கிய உவகையோடு வெடித்து சிரிக்கிறான்.

 இன்றைய (இருட்கனி - 16) அத்தியாயத்தில் துச்சாதனின் மேல் கொண்டிருந்த உள்ளகசப்புகள் அனைத்தும் அகன்றுவிட்டது.

-யோகேஸ்வரன் ராமநாதன்.

Tuesday, April 23, 2019

அதர்வினவு, கருநீக்கம்



அன்புள்ள ஜெ,

அதர்வினவு, கருநீக்கம் என்றால் என்ன பொருள்?

   புகழ் அதர்வினவித் தேடி வரவேண்டும், புகழை ஈட்ட
   முயல்பவன் கொடையாளி அல்ல, சிறுமதியன்.
         - ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13
           
இச்சொல் மாமலரிலும் வந்திருக்கிறது. நான் கேட்க மறந்துவிட்டுருக்கிறேன்.

    புரூரவஸ் மேலும் பணிந்து  “முனிய வேண்டாம் பொருளரே,
   இங்கு நான் ஈட்டியுள்ள பொருளனைத்தும் அறத்தின் விளைவாக
   அதர்வினவி எனைத் தேடிவந்தவையே. அறம் துறந்தொரு பொருளை
   என் உள்ளமும் தொட்டதில்லை” என்றான்.
        - ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15

இன்றைய வெண்முரசில் கருநீக்கம் என்ற சொல் உள்ளது.

    நான் ஊழுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன். ஊழின்
    கருநீக்கங்கள் என்ன என்பதை கணக்கிடுவதை கைவிட்டுவிட்டேன்.
         - ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14

நன்றி

அன்புள்ள கார்த்திகேயன்

ஆக்கம் அதர்வினாய் செல்லும்  அசைவிலா ஊக்கம் உடையானுழை என்பது குறள். அதர் என்பது வழி. வழிதேடிச்செல்லும் என பொருள்

கரு என்பது சதுரங்கக் காய். கருநீக்கம் என்றால் காய்நகர்த்துதல்

ஜெ


Monday, April 22, 2019

மைந்தர்கள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனி 8-ஆம் அத்தியாயம்.  கண்களில் நீர்மல்கச் செய்தது.  எச்சுழலிலும் தந்தையை விட்டுத்தராத மகன் விருஷசேனன் தன் மகன் மீது பேரன்பு கொண்ட அதிரதர்.  இருவரும் அவனை நன்கு புரிந்திருப்பவர்கள்.

சுப்ரியையும், குந்தியும், ராதையும் அவனை புரிந்திருப்பவர்களே வேறொரு கோணத்தில்.  சுப்ரியைக்கு அவன் ஒரு மோசமான கனவு.  என்னுள் இருக்கும் ஆணை வென்று என்னை வென்றாய் அல்லவா பார் என் வழியில் உன்னுள் இருக்கும் பெண்ணை வென்று உன்னை வெல்கிறேன் என்று அவனிடம் சொல்ல வழியே இல்லை.  அவன் முழுவதும் ஆண் மட்டுமே ஆயிற்றே.  அவள் உடலை உரித்து அகற்றிச் செல்லும் நாகினி ஆவதில் ஒரளவு நியாயம் இருப்பதாகவே படுகிறது.  தன் உடல் மதிப்பற்றது என்று அவளை உணரச் செய்திருக்கிறான் அவன்.

அன்னையரிடம் தாள் பணிந்து பெற்றுக்கொள்பவனாக அவன் நடந்து கொண்டாலும் அது வெறும் நடிப்பு, அவன் வானின்று கீழ் நோக்கி வழங்குபவனாகவே எப்போதும் இருக்கிறான், அவனது பெற்றுக்கொள்ளலில் ஒரு போலித்தனம் இருக்கிறது என்று அன்னையரும் உணரக்கூடும்.  தான் சமைப்பதை உண்ணாமல் அடிக்கடி வெளியே சாப்பிட்டால் தான் மிகவும் அவமதிக்கப்படுவதாக வருந்தும் தன் அன்னை என்ற இடமே உணவு அளிப்பதில்தான் உள்ளது என்பதுபோல கருதும் அம்மாவை எண்ணுகிறேன்.

உலக முழுவதும் சூரியன் குறித்த தொன்மங்களை இணையத்தில் தேடினேன்.  உலக முழுவதும் சூரியன் ஆண் கடவுள் (சீனாவில் தையாங் ஷென், இந்தியாவில் சூரியன், எகிப்தில் ரா, தென் அமெரிக்காவின் ஆன்டீசில் இன்டி என்றவாறு) இனூட் எஸ்கிமோக்களுக்கு மட்டும் சூரியன் பெண் கடவுள் மலினா (Malina), கருணை, துணிவு, பேரழகு கொண்ட சூர்யை அல்லது சூர்யதேவி.  வியக்கத்தக்க வகையில் எஸ்கிமோ புராணங்களிலும் அவள் கொடுக்கும் தன்மை கொண்டவளாகவே இருக்கிறாள்.


அன்புடன்,
விக்ரம்,
கோவை.

மைந்தன்

இதோ இவர் நான் என எண்ணி மைந்தன் தந்தையை நோக்கி அடையும் பெருமிதம் ஒன்று உண்டு. பெருந்தந்தையரை அடைந்த மைந்தருக்கு மட்டுமே தெய்வங்கள் அளிக்கும் நற்கொடை அது. கோடியினரில் ஒருவருக்கு மட்டுமே அமைவது.

ஜெ வெண்முரசில் சமீபத்தில் மனம் உருகிய இடங்களில் ஒன்று கர்ணனின் மகன் அவனிடம் சொல்லும் இந்த வரி.

மகாதேவன்

வேதனை



அன்புள்ள ஜெயமோகன் சார்,


இருட்கனியின் 6ம் அத்தியாயத்தில்  குந்தியின் "தனது வேதனையை பெருக்கிகொள்ளும் இயல்பை கண்ட " அஸ்வர் திடீர் என முற்றிலும் அயலான ஒரு சூழலை எதிர்கொள்வதை குறித்து பொதுவாய் மனிதர்களை குறித்து  : "அச்சூழலையும் பொழுதையும் அவர்கள் முன்னரே அறிந்திருக்கவில்லை என்றால், அதில் அவர்களின் அகம் முற்றாகவே ஈடுபடவில்லை என்றால் அவர்கள் நிலைகுலைவார்கள். பொருத்தமில்லாப் பதற்றமாக, பொருளில்லாச் சொற்களாகவே வெளிப்படுவார்கள். அவர்கள் அமர்ந்திருப்பதும் விழுந்திருப்பதும் கூட பிழையாக இருக்கும். பயிலா நடிகனின் கூத்தென நம்மில் ஒவ்வாமையையே அளிக்கும்.அத்தருணத்தை எங்கோ விரும்பி எவ்வண்ணமோ முன்னர் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள் அப்போது முழுதுறப் பொருந்துவார்கள்.பிழையிலாது வெளிப்படுவார்கள்.” என்கிறார். இது முன்பே வெண்முரசில் வேறு வார்த்தைகளில் வந்ததுதான். ஆனால் இன்றுதான் எனக்கு பொருந்தியது அல்லது நான் அதை ஆழமாய் உணர்ந்தது. அர்ஜுனன் காண்டீபதில் சித்ராங்கதனுக்கு " வெற்றி பெற்றவர்கள் எல்லாரும் அந்த வெற்றியை ஆயிரம் முறை தங்கள் உள்ளத்தில் நடித்தவர்கள் " என கூறுவான்.அது வெற்றிக்கு மட்டும் அல்ல, தோல்விக்கு,துயருக்கு, வீழ்ச்சிக்கு எல்லாம் பொருந்தும் போல. 

ஸ்டீபன்ராஜ்

Saturday, April 20, 2019

இருட்கனி 7-ஆம் அத்தியாயம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனி 7-ஆம் அத்தியாயம்.  கர்ணனின் ஆதியும் அடிப்படை இயல்புமான கொடையை ஒட்டியே அவனது முடிவுகள் அமைகின்றன.  ஒவ்வொன்றாக பரிசீலித்து நான் இதுவல்ல நான் இதுவல்ல என்று சென்று சிவமே நான் என்பதைப் போல, ஆனால் நன்கு சிந்தித்துச் செல்வதல்லாமல், இயற்கையாக எல்லாவற்றையும் கடந்து கொடை என்றே சென்று அமைகிறது அவன் உள்ளம்.  பிறப்பு முதல் இறப்பு வரை முற்றிலும் தன் வாழ்வை ஊழுக்கு கொடை அளித்துவிட்டவன் அவன், ஆனால் ஊழாலும் அவனிடமிருந்து நீக்கப்பட முடியாததாக எஞ்சுகிறது கொடை அதுதான் அவன், அது இழக்கப்படவே முடியாதது. 

அவமதிப்பின் வலியும் துயரும் கொந்தளிப்பும் என்று செல்லும் அவன் ஆசிரியர் என்கிறான்.  மிக்கதொரு ஆசிரியர் அவனுக்கு அருளப்படுகிறார்.  அவன் துயர் என்று சொல்லும் போது கற்றலின் வாயிலாக வளர்ந்து துயர்கடக்கும் வழி அவனுக்கு சொல்லப்படுகிறது.  வஞ்சம் என்று அவன் மனம் கருதும்போது வஞ்சம் தீர்க்க அவனுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.  அவனுக்கு கிடைக்காதது என்று எதுவும் இல்லை.  ஆனால் ஒவ்வொன்றையும் அது நான் அல்ல என்று சொல்லி, மற்றவர்க்கு தந்துவிடச் சொல்லி அவற்றின் இடத்தை கொடை கொடை பெற்றுக்கொண்டு விடுகிறது.

ஒவ்வொரு அம்சத்தில் அவன் ஒவ்வொருடன் பொருந்துகிறான், அவர்களின் விழைவை அவனும் கொள்கிறான், ஆனால் அவர்களின் சென்று சேருமிடம் அவன் சென்று சேரவதில்லை.  தெரிவு, வழிமுறை, சேருமிடம் எல்லாவற்றிலும். கொடை தன் வேலையை செய்துவிட்டு, முதல் விழைவையும் பொய் என்று ஆக்குகிறது.

அவன் அர்ஜுனனை விட பெருவில்லவன் ஆனால் வில்லின் பேரால் அறியப்படுபவன் அல்ல.  பரசுராமர் போல் வஞ்சம் எழுகிறது ஆனால் அவர் போல் வஞ்சம் தீர்க்க விருப்பம் இல்லை.  வஞ்சம் தீர்க்க விருப்பம் இல்லையானால் உனக்கு இவை எதற்கு என்று தீச்சொல்லின் வாயிலாக இப்போது வைத்துக்கொள் கொஞ்ச நேரம் கழித்து உரிய தருணத்தில் தந்துவிடு என்று தந்திரமாக தட்டிப்பறிக்கிறது ஊழ்.

கொடை அவனது ஊழ் கொடை அவனது விடுதலை.

அன்புடன்,
விக்ரம்,
கோவை.

Friday, April 19, 2019

கர்ணனின் கொடை



அன்புள்ள ஜெ

கர்ணனின் கொடையைச் சொல்லும் கதைகள் ஒரு ஃபோக் பாணி கதை ஒரு கிளாஸிக்கல் கதை சில ரியலிஸ்டிக் கதைகள் என கலைடாஸ்கோப் திரும்புவதுபோல மாறி மாறி வெவ்வேறு கோணங்களைக் காட்டின. கர்ணன் தன் குருதியைக் கொடுக்கும் இடம் கற்பனை என நினைக்கிறேன். இல்லை ஏதாவது மகாபாரத வடிவங்களில் இருக்கிறதா? ராதைக்கும் கர்ணனுக்குமான உறவு அவள் தன் கணவனுக்காகப் பேரம்பேசிய அன்றே நுட்பமாக முடிந்துவிட்டது. அது அவளுக்கும் தெரியும். அவளுடைய பிரச்சினையே அதுதான். அவள் இப்போது அழுவதும் புலம்புவதுமெல்லாம் அவள் அவனை அப்போதே மானசீகமாக இழந்துவிட்டாள் என்பதனால்தான்


ராஜேந்திரன்

கொடுப்பவன் பெற்றுக்கொள்வது



அன்புள்ள ஜெ

கர்ணனின் கதையை முதலாம்சூதர் சொல்லத்தொடங்கும் இடத்திலிருந்து கர்ணன் தன் மகன்களுடன் இருக்குமிடம் வரை ஒரு ஒற்றைக் குறுநாவலாக வாசிக்கலாம். மண்ணிலிருந்து கொடைபெறும்பொருட்டு சூரியனால் அனுப்பப்பட்டவன். ஆனால் எதையுமே பெறவில்லை என நாவல் தொடங்குகிறது. அவன் ஒவ்வொருவருக்காகக் கொடுத்ததைச் சொல்லிக்கொண்டே வருகிறது. அம்மாவுக்கு வளர்ப்பு அம்மாவுக்கு தம்பிகளுக்கு கொடுத்தான். ஆனால் மகன்களிடமிருந்து பெற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பது ஓர் அழகான கிளைமாக்ஸ். அந்த இடமும் உணர்ச்சிகரமாக மெல்லிய தொனியுடன் சொல்லப்பட்டிருந்தது

ஜெயராமன்

இருட்கனியின் 6-ம் அத்தியாயம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனியின் 6-ம் அத்தியாயம் வாசித்தபின் இதை எழுதுகிறேன்.  தமது பேராசையாலும் அறமின்மையாலும் கர்ணனை தமது அரசியல் விளையாட்டிற்கு பலி கொண்ட குந்திக்கும் துரியோதனனுக்கும் அப்பால் கொடையால் மக்கள் தாம் அறிந்து கொண்ட பெரும் கர்ணனை, கொடையின் குறியீடு ஆகிவிட்ட கர்ணனை பிரித்துக் காட்டுகிறது இருட்கனி.  உண்மையில் அதுதான் அவனுக்கு செய்யப்படும் நியாயமும் கூட.  குந்தியும் துரியோதனனும் கர்ணன் பொருட்டு கொள்ளும் துயரில் அவர்களின் குற்றவுணர்சி இருப்பதுபோல் அரசியலுக்கு அப்பாலுள்ள பிறர் அவன் பொருட்டு கொள்ளும் துயரில் குற்றவுணர்சி இல்லை, பெரும் வள்ளலின் மீது கொள்ளும் பேரன்பு மட்டுமே உள்ளது.  இது என்னை மிகவும் பாஸிடிவாக உணரச்செய்கிறது.  அரசியல் விளையாட்டில் இருந்து பிரித்துக் காட்டப்படுவதிலேயே அவனது நிஜம் இருக்கிறது.  கர்ணன் என்றால் கொடை. கொடை எங்கெல்லாம் திகழ்கிறதோ அங்கெல்லாம் அவன் இருக்கிறான.  ஒவ்வொரு வள்ளலிலும் அவன் எழுவான்.

நான் இயேசுவை எண்ணுகிறேன்.  அன்பின், தியாகத்தின், மன்னித்தலின் குறியீடாக அவர் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  அத்தன்மைகள் கொண்டவர் அனைவரும் அவர் என்று கொள்ளப்பட வேண்டும்.  அவர் காலத்தில் அவருக்கு பிழை செய்தவர்கள், அரசியலாடியவர்கள் ”நம்மால் தான், நம் பாவங்களுக்காக தான் அவர் மரித்தார்” என்று குற்றவுணர்சியுடன் சொல்வதில் நியாயம் உண்டு.  ஆனால் ஒரு பாவம் செய்திராமல் அவர் மீது கள்ளமற்ற அன்பு கொண்டிருந்த எளிய மக்கள் அவர் பொருட்டு சிந்திய கண்ணீரில் குற்றவுணர்சி இருக்க நியாயம் இல்லை.  பின்னர் மதத்தின் மைய அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் தமக்கு முன்னர் இருந்த மத அமைப்புகளின் வீழ்ச்சியை அவதானித்து தம் அதிகாரம் வீழ்ச்சி அடையாதிருக்க உருவாக்கியதே ”நம் பாவங்களுக்காக அவர் மரித்தார்” என்று குற்றவுணர்சி புகுத்தும் உத்தி என்று எண்ணுகிறேன்.  இல்லாவி்ட்டால் அவர் அன்பின், தியாகத்தின், மன்னித்தலின் குறியீடாக ஆகிவிடுவாறே.

”நான் எந்த பாவமும் செய்யவில்லை.  என் பாவங்களுக்காக அவர் மரிக்கவும் இல்லை” என்று சொல்லியே இயேசுவைத் தொழவும் விசுவாசமாக (உண்மையிலேயே அதுதான் அவருக்கு விசுவாசமாக இருப்பதும் கூட) இருக்கவும் முடியுமே?

ஆனால் இங்கு அவர் பேரால் வலியுறுத்தப்படும் விசுவாசம் உண்மையில் யாருக்கானது? ”மேன் ஆப் காட்” எனப்படும் எவரிடமேனும் ”குற்றவுணர்ச்சி” தீட்சை பெறாமல் இயேசுவை பெற இலக்கியவாதிகள், வாசகர் அல்லாத எவராலேனும் இயலுமா?

நல்லவேளை இங்கே இது உங்கள் கிருஷ்ணன் அல்ல என் கிருஷ்ணன் இளைய யாதவன், உங்கள் சிவன் அல்ல ஆதியோகி என் சிவன் என்று கூறமுடியும்.


அன்புடன்,
விக்ரம்,
கோவை.

Thursday, April 18, 2019

சென்னித்தல செல்லப்பன் நாயர்



அன்புள்ள ஜெ

கர்ணசபதம் கதகளியின் அந்தப்பகுதி அற்புதம். வயதான அன்னையாக நடித்த குடமாளூர் ஆடையை இழுத்து நெஞ்சொல் வைத்துக்கொள்வது திரும்பத்திரும்ப பாலூட்டியதைச் சொல்வது என அக்காட்சியை அற்புதமாக நடிக்கிறார்

ஆனால் கர்ணனாக நடிப்பவர் மிகப்பெரிய மாஸ்டர் என தெரிகிறது. கண்களில் தெரியும் ஆற்றாமை சோகம் கோபம், சட்டென்று எகிறி துரியோதனனையா பிரியச்சொல்கிறாய் என்று காட்டும் நளினமான ஆடல் எல்லாமே மாஸ்டர் ட்ச

அதில் உச்சம் அமர்ந்திருக்கையில் அந்தக் கால் துடிப்பது

மகாதேவன்


அன்புள்ள மகாதேவன்

அவர் பெயர் சென்னித்தலை செல்லப்பன் பிள்ளை. குரு செங்கன்னூரின் மாணவர். நுண்நடிப்புக்கு மைய இடம் கொடுக்கும் கப்ளிங்காடு முறையின் கடைசி மாஸ்டர் என்பார்கள் அவர் இன்றும் ஒரு தொன்மம் எனக் கொண்டாடப்படும் பெருங்கலைஞர்

ஜெ.

வாசிப்பின்பம்





அன்புள்ள ஜெ வணக்கம்...


//ஓம் என்பது ஆம் எனும் சொல்லே. நமக்கே உரைக்கையில் ஆம். விண்ணுக்கும் மண்ணுக்கும் என உரைக்கையில் ஓம்”//

//நதியில் ஓடும் கலங்கலும் சேறும் குப்பையும் அனைத்தும் விண்ணளித்தவையே”//

//எத்துயரிலும் எவ்வெறுமையிலும் நாக்கு இனிமையை உணரத்தான் செய்கிறது. அது ஒரு சொல்லுறுதி. இங்கிருந்து எவ்வண்ணமும் மீண்டுவிடமுடியும் என்னும் நம்பிக்கை. உண்க!” //
//
எத்துயரும் அதைக் கடந்து நாம் வளர்கையிலேயே அகலும். வளர்க!”//

//நான் என் ஆசிரியரை தேடிச்செல்கிறேன். எனக்குரிய ஆசிரியர் எவர்?” என்றான். “உன் முந்தைய ஆசிரியர் எவர் என்பதே வினா. அவரை வென்றவரோ வெல்லக்கூடுபவரோதான் உன் ஆசிரியர்” //

. //“ஒவ்வொருவரும் தங்கள் உச்சமொன்றைச் சென்றடைந்து அதில் ஏறிநின்றிருக்கும் ஒரு தருணம் உண்டு. அத்தருணத்தால் அவர்கள் மண்ணில் தோல்வியடைவார்கள், விண்ணவர்க்கு இனியவரும் ஆவார்கள்//

//நஞ்சென உடலில் எழுந்தவையும் நுழைந்தவையும் முற்றாகவே வெளியேறிவிடவேண்டும். ஒரு துளி எஞ்சினாலும்கூட அது நோயென்றாகி அழிவை கொண்டுவரும்”//

//ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோற்கிறார்கள், ஏனென்றால் மாணவனாக தான் அழிவின்மைகொள்வதை உணர்கிறார்கள். அறுதிவெற்றி என்பது தம்மின் பெருமைகொண்ட தன் மாணவனை அடைதலே என அவர்கள் அறிகிறார்கள். //


இவை எல்லாம் வெண்முரசின் ஒரு அத்தியாயத்தில் உள்ளவை.  நம் சிந்தனையை தூண்டுபவை, ஒவ்வொன்றையும் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்தெடுக்கலாம்.


மையக் கதை ஒன்று அதன் போக்கில் சென்று கொண்டிருக்கையில்,இவ்வாறான தலை சிறந்த வரிகள் வராத ஒரு வெண்முரசு அத்தியாயம் கூட இல்லை என்று சொல்லிவிடலாம்.


மு.கதிர் முருகன்


கோவை

Tuesday, April 16, 2019

கர்ணா தயாளு...





கர்ணா தயாளு... என்னும் பாடல்

கர்ணசபதம் கதகளி

குடமாளூர் கருணாகரன் நாயர் குந்தி
சென்னித்தல செல்லப்பன் நாயர் கர்ணன்

இருட்கனி பற்றி



Dear Jeyamohan

You are giving the readers Irutkani as a “kodai” with Karna’s story.  The start itself is great with the flashback when Arjuna and Karmughil Vannan meets Karna. Arjuna learns what is a true “Kodai”. The Soodhars start reciting the glory of Karna and his debonair. You brought us back to Kurukshetra in Chapter 2. Another amazing episode where Duryodhana laments about his friendship with Karna.  In chapter 3, you have expressed Supradhar’s feelings and the comparison to elephant is another hidden gem which helps one to understand the meaning of how detachment is a great liberation. Shakuni with his usual attitude tries to usher his nephew away from the cremation ground worrying about his own demons. Learnt about the ritual practices related to the last rites for a great warrior.  It just melts the heart to see this “Maveeran” is dead
In the next few chapters, the Soodhars start to tell more stories about Karna’s life and the links. Every sentence is full of details and we travel along with Aswar to the days when Pandavas were in exile. We hear Kunti’s fear, dilemma, and guilty feelings of having abandoned her first born.  Aswar provide a great insight by asking her to reflect on the minute details of the day when she was hiding, swimming and left the child in a boat. Karna starts giving his first “Kodai” to his own Mother.  Another “aha” moment.
These chapters made me to sigh, happy to learn more hidden facts about a wonderful soul, more affection to take that child in the arms and console that he is not alone, finally to reflect on many of the hidden gems to control one’s ego and detachment. Looking forward to the next chapters.
Thank you.
Warm regards

கதிரோன்



இனிய ஜெயம் 

இருட்கனி மூன்றாம் அத்யாயம் அதில் கர்ணனின் இறுதி நிகழ்வு சித்தரிப்பு வெண் முரசு சித்தரித்த மரணத் தருணங்களில் மிக மிக தனித்துவம் வாய்ந்தது. காரணம் கர்ணன் இருதிக்கோலம் கண்டு நின்ற அக் கணம் முதல் கணம் மிகுந்த அதிர்ச்சி அளித்தாலும்  துரியன் போலவே என்னுள்ளும் உள்ளே எந்தத் துயரும் இல்லை.  காரணம் இந்த நிலை அளித்த ஆசுவாசம். ஆம் ஆசுவாசம்தான். கர்ணன் இனி கதிர் மைந்தனில்லை. முழுமை கொண்டுவிட்டான் இனி அவன் அந்தக் கதிரோனேதான். துறந்தோன் கடந்தோன் அமைந்தோன். 

வெண்முரசின் கர்ணன் கொண்ட தவிப்பு என்ன ? இன்று அது முற்றிலும் புறவயமாக விளங்குகிறது. கர்ணன் கொண்ட தவிப்பெல்லாம் முழுமை நோக்கிய தவிப்பே.  அது வில் திறத்தால் இயல்வதல்ல, பெரு நட்பின் துணைக்கோடல் கொண்டு இயல்வதல்ல, நிலம் வென்றோ,அன்னையின் மடி கொண்டோ, திரௌபதியின் அண்மை கொண்டோ அடையக்கூடியதல்ல,  இந்த உடல் கொண்டு இங்கே வந்ததாலேயே, அவன் கொண்ட முழுமையின்மை அது. இந்த உடலின் எல்லைக்குள் சிக்கியதாலேயே அவன் கொண்ட தவிப்பு அது. கொடுக்கும் தருணம் மட்டுமே அவன் கொள்ளும் உவகை அந்த முழுமையை அக் கணம் அவன் உணரும் கணங்களின் சாட்சி. அவன் உடலின் எல்லையைக் கடந்து முழுமையின் சன்னதில் ஒரு கணம் நிற்க  அவன் கொண்ட கொடை  குணத்தால் சாத்தியமாகிறது. அதன் பின். ? 

பால்கிகரை இழந்த அக் கணம் அவரது வேழம் அங்காரகன் கொள்ளும் தவிப்பு என்ன ? முழுமையின்மை.  அந்தப் பெருந்தவிப்பில் இருந்து அதை விடுவிக்கவே நீலன் உத்தரவிடுகிறான். 

''அர்ஜுனா அதை விடுதலை செய்'' .

யானை கொண்ட முழுமையின்மையின் தவிப்பை உணரும் நீலன் கர்ணன் முழுமைக்கு கொள்ளும் தவிப்பை அறியமாட்டான என்ன ?  இந்த உடலால் எல்லைகட்டப்படும் வரை கர்ணனால் அடைய இயலா முழுமை அது. பார்த்தனின் துணை கொண்டு நீலன் கர்ணனுக்கு அளித்த விடுதலையை இதோ விப்ரதர் கண்டு கொண்டு விட்டார். 

இதுவரை அவன் கதிர் மைந்தன். இதோ இப்போது அவன் முழுமை கொண்டு விட்டான், துறந்து சென்றுவிட்டான், கடந்து சென்றுவிட்டான் கதிரோன் என்றே ஆகிவிட்டான் .  கதிரோன் என கர்ணன்  கொண்ட முழுமையில் மின்னும் அவனது பொற்கவசத்தை இதோ துரியனின் தோளருகே நின்று நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.   அனலோன்,  வெய்யோன் ,கதிரோன்  வியாசரின் செல்லப் பேரன், எங்கள் பாரதப் பண்பாட்டின்  இணையற்ற ஒற்றைப் பெருஞ்சொல் கர்ணன்


கடலூர் சீனு

Monday, April 15, 2019

தொடக்கம்



அன்புள்ள ஜெ

பத்தாம் தேதியே எழுத நினைத்தேன். ஆனால் மறுபடியும் வாசிக்க நினைத்தேன். இன்று காலை எழுந்தவுடன் வாசித்தேன். எழுதுகிறேன்.

வழக்கம் போல் சிறப்பான ஆரம்பம். இருக்கட்டும்.

புனைவுதான். ஆனால் இந்த மாதிரியான ஆரம்பத்தை எதிர்பார்க்கவில்லை.


இவ்வுலகில் அரியவை இரண்டே. தவமும் கொடையும். இரண்டும் மானுட உள்ளம் செல்லும் இயல்பான திசைக்கு நேர் எதிர்த்திசை நோக்கி செல்பவை. கொடை ஒரு தவம். தவம் ஒரு பெருங்கொடை” என்று இளைய யாதவர் சொன்னார். “

 “அளிப்பவன் ஆணவம் கொண்டால் பெறுவது பொற்குவையே ஆனாலும் இரவலன் சீற்றமே கொள்கிறான். பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பால் நின்றிருக்கும் தெய்வமொன்று ஒவ்வொரு மானுடனுக்கும் உள்ளே உறைகிறது. அது வணங்கிப் படைப்பனவற்றை மட்டுமே பெற்றுக்கொள்கிறது”  

மேல் சொன்னவை என்னை போன்ற எளியவர்களுக்கான அறிவுரை எனக் கொள்கிறேன். என்னை யோசிக்க வைத்த வரிகள் இவை. 


“பசிப்பிணி நீக்கி நற்பேறு கொள்ளும் வாய்ப்பை அல்லவா இழக்கிறீர்?” என்றார். கர்ணன் “பசியால் நலிந்த ஒருவரைக் காணும் துயருக்கு ஆயிரம் நற்பேறுகள் நிகரல்ல, யாதவரே” என்றார். “ஒவ்வொரு முறையும் பசித்த ஒருவருக்கு கொடையளிக்கையில் நான் அடைவதே என் வாழ்வின் பெருந்துன்பம். சம்பாபுரியில் பசியுடன் எவருமில்லை. ஆனால் பயணங்களில் என்னால் தவிர்க்கமுடிவதில்லை 


இந்த வரிகளை முதல் நாள் படித்த போதே என் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. இன்று படித்த போதும் என் கண்களில் நீர்.

அர்ஜூனன் வணங்கியது போல் நானும் மனதார கர்ணனை வணங்கினேன்.

இந்த கற்பனை ஒரு பேருண்மையை/நெகிழ்ச்சியை  உங்கள் வாசகர்களுக்கு அளிக்கிறது என்பதை தெரிய படுத்தவே என் கடிதம்.

 இது போல்  எனக்கு அடுக்கடுக்காக உங்கள் வரிகளை வாசிக்கையில் நிறைய நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன. என் நாட்கள் நன்றாக அமைகின்றன்.

நன்றிகளும், வணக்கங்களும், அன்பும்

க்ருஷ்ணன் உங்களுக்கு இது போன்றே நல்ல வார்த்தைகளை உங்கள் உள்ளத்தில் எழச் செய்யட்டும்.

மாலா

( மட்றொன்றும் தோன்றியது. அர்ஜூனன் கர்ணனைப் போல் அவ்வளவு குணவானாக இல்லாமல் இருந்தாலும் க்ருஷ்ணன் அருகில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.

கர்ணன் குணவானாக இருந்தாலும், துரியன் அருகில் இருக்கப் பெற்றான். விந்தையல்லவா இது)

கொடை



அன்புள்ள ஜெ,

ஆயிரம் த்துவங்கள், நூறு நூறு தரிசனங்கள் எவையும் மனமுவந்து அளிக்கும் ஒரு கொடைக்கு ஈடாகாது அல்லவா?! 

இருவரிகளில் வண்ணக்கடலில் வந்த ஒரு சம்பவம். கொடுத்தவன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவன். அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த கணையாழி அளிக்கப்பட்டவனின் வாழ்வை எங்ஙனம் மாற்றியதென்று. பெற்றவனும் அறிந்திருக்கவில்லை தன்னை இங்ஙனம் ஆக்கியவனே தன்னையாளும் இறையென்று.

எந்த தெய்வமும் மானுடனுக்கு நம்பிக்கையாக மட்டுமே வந்து சேர்ந்தாக வேண்டும் என்பது இப்புடவிக்கிறைவன் வகுத்த நீதி போலும். வாழ வழியுண்டு என்ற நம்பிக்கை, காக்க தெய்வமுண்டு என்ற நம்பிக்கை, பற்றுக்கோடென அறமுண்டு என நம்பிக்கை. அன்றிலிருந்து இன்று வரை, கிருதை துவங்கி, "ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல", என பிரகடனப்படுத்தும் ஓலைச்சிலுவையில் வரும் கதைசொல்லியின் தாய் வரை தெய்வம் அளியுடைத்தே!!

தன்மனிதனை அலகாக்கிய கலி அறிந்திருக்கவில்லை, அம்மையப்பனின் பகடையாடலில் தன்னிடம் தோற்ற துவாபரன் தான் உருவாக்கும் புது அறத்திற்கு மாற்றாக கதிர்மைந்தனை வைத்தாடியிருக்கிறான் என்பதை. பார் உள்ளளவும் கார் உள்ளளவும் கடுவெளி உள்ளளவும் இருப்பான் அவன்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

வெண்முரசு நேரம்



ஜெ.மோ, அவர்களுக்கு,

தங்களின் வெண்முரசு,  இருட்கனி தொடர்ந்து, வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் , பல்லாயிரக்கணக்கான, வாசகர்களில், நானும் ஒருவன்,

நான், வோர்ட் ப்ரஸ் , பதிவு செய்துள்ளேன். அதில், வெண்முரசு, தொடர்ந்து , வாசித்து வருகின்றேன். 
தங்களின் , இணைய தளத்தில், மின்னஞ்சல் மூலம் , வரும், இணைப்பிலும், வெண்முரசுக்கான, லின்க் கிடைக்கப் பெற்று, அதில் , வெண்முரசல்லாத, மற்ற தகவல்களை, வாசித்து வருகிறேன். 

இன்று, இருட்கனி 4 - வோர்ட் ப்ரஸ் , மாலையே படித்து விட்டேன். ஆனால், தங்கள் ,இணைய தளம் மூலம், வருவது, இரவு, 11.05 க்கு எனக்கு , மின்னஞ்சல் கிட்டி, அதன் மூலமும் கிடைத்தது. 

வோர்ட் ப்ரஸில், வெண்முரசு , முன்னரே, வெளியிடப்படுகிறது . சரிதானே என் புரிதல்?
மற்ற பதிவுகளும் இருப்பதால், உங்கள் , மின்னஞ்சல், தாமதமாகத்தான், இணையத்தில், வெளியாகிறது. 

ஒரு , தகவலுக்காகத்தான் , இந்தக் கேள்வி... 
அன்புடன்,
மணிவண்ணன், கோவை.

அன்புள்ள மனிவண்ணன்

உண்மையிலேயே இது எப்படி என எனக்குத்தெரியவில்லை. இதனுடன் எனக்குச் சம்பந்தமில்லை

ஜெ

இருட்கனி தொடக்கம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 3ம் அத்தியாயம் முழுதும் நாவல் பழம் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது.சாப்பிட்டுவிட்டு தூர எரியும் கொட்டையை போல் கர்ணன் இடுகாட்டில் கிடக்கிறான். கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் இனிய தசை பகுதியையும் சாப்பிட்டுவிட்டு வெறும் கொட்டையை எறிந்துவிடும் உலகம். ஆனால் அதில் துவர்ப்பும் கலந்து இருக்கும். எல்லா கனிகளும் இரட்டை சுவை உடையதுதானா?,அதனால்தான் மனிதர்களுக்கு கனிகளின் மீது அத்தனை மோகமா?  வெண்முரசில் மனிதர்கள்......ஆணும் பெண்ணும்......மேக்கப் போட்டுகொள்வதும்,ஆடை அணிகலன்கள் மாட்டிகொள்வதும்[ பெரும் விருப்பத்தோடும், ஏக்கத்தோடும்] விரிவாய் வந்துள்ளது. ஆனால் விரிவாய்  ஒரு அரசனுக்கு  இறுதி அணிகலன் மாட்டிவிடும் சடங்கு முதலில் இப்போதுதான் வருகிறது.கர்ணனுக்கு துரியோதனன்  தான் அரசன் என்பதை துறந்து சாதாரணனாக மாறி அணி செய்வது நெஞ்சை பிசைகிறது.சுப்ரதர் வாழ்வு இரண்டு பத்திகளில் திடீர் என விரிந்து செல்கிறது. உண்மையான அந்தணன் என எண்ணிக்கொண்டேன். 

கார்கடலின் 4ம் அத்தியாத்தில் "பாலைவன ஓநாய்" சகுனி வருகிறார்.குடித்த ரத்தம் பத்தாமல் இன்னும் மிச்சம் இருக்கிறவர்களின் ரத்தம் தேவை என்பது போல. துரியோதனன் ஏன் கர்ணனின் உடல் அருகிலேயே நிற்க விரும்புகிறான்? என்று மூன்றாம் அத்தியாயத்தில் கேள்வி எழுந்தபடியே இருந்தது. ஆனால் இங்கு அவன் கர்ணன்- தான் ஏன் அப்படி நட்போடு இருந்தோம் என்பதற்கான விடையை தொகுத்துகொள்கிறான். வாழ்நாள் முழுதும் தேடிய விடையாய் இருக்கலாம். சுப்ரதர் கூறுகிறார்" இடுகாட்டில் எவரும் நெடும்பொழுது நின்றிருக்கலாகாது. இடுகாடு இறந்தவர்கள் விட்டுச்செல்லும் இறுதி எண்ணங்களால் நிறைந்தது. அதில் ஆற்றாமையும் வஞ்சினமும் வெறுமையுமே மிகுதி. அவை நம்மில் வந்து படியக்கூடும்.நம்மை ஊர்தியெனக் கொள்ளவும் கூடும். சிதையேற்ற ஒரு நாழிகை, சித்தத்தில் மூன்று நாழிகை என்று. இது உண்மையா? ..... எனக்கு இன்றும் இடுகாடு செல்லவேண்டும் என்பது போலவே தோன்றுகிறது. யாரோ ஒருவரின் வஞ்சினமும், ஆற்றாமையும் வெறுமையும் கூட வந்தால் நல்லதுதான் என்பதுபோல...சகுனி மீண்டும் போர்களத்திற்கு [ இறந்தவர்களை புதைத்துவிட்டு மீண்டும் வரும் நமது உலகமா?] செல்வதை பற்றி கசப்புடன்  “இங்கே நாம் மீண்டுசெல்வதும் ஒரு பெரும் சுடலைக்காட்டுக்கே. அங்கு மங்கலங்கள் என்பவை கொல்லும் படைக்கலங்களே” என கூற  சுப்ரதர் “ஆம், ஆனால் வெற்றிமகள் அங்கு தான் தோன்றும் அனைத்தையும் மங்கலமாக ஆக்கிவிடுகிறாள்” என்கிறார். சகுனி “அவளைத்தான் வணங்கி எழுப்ப முயல்கிறோம்” என்கிறார். இவர்கள் உணமையிலே தேவர்கள்தான். எதுவும் யாரும் பொருட்டில்லை என்றால் எதற்கு வாழ்வது? அதனால் தான் ஊழ் இவர்களை சுற்றி நின்று காக்கிறது போலும்.

துரியோதனன் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் என்ன வேறுபாடு என ஆராய்கிறான் ." உடல் பெரும்பாலும் ஒன்றே. ஆனால் எவரும் உணரும் ஒன்று மாறுபட்டிருந்தது” என்கிறான். பூரிசிரவசிடம்  கேட்டதையும் அதற்கு பூரிசிரவஸ் [மலையில் இருந்து வந்தவன். ஆகையால் இங்கு உள்ள எல்லாவற்றையும் புதிதாக அளந்து மதிப்பிட்டு கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன். இப்போதும் சென்னையில் நான் இப்படிதான் சுற்றி கொண்டு இருக்கிறேன். உங்களின் வெற்றி சிறுகதையில் வரும் " மேலே செல்ல செல்ல இரும்பு மனிதர்களையே காண்பாய் " என்பது வேறு ஞாபகம் வருகிறது]  ......."அர்ஜுனனிடம் நீங்காது ஒரு பெண்கூறு உள்ளது, கர்ணனோ ஆண்மை முழுத்தவர் என்று". துரியோதனன் மேலும் கூறுகிறான் ...."அர்ஜுனன் பிறிதொருவரால் அன்றி நிரப்பமுடியாத ஆளுமை கொண்டவன். அதையே பெண்ணியல்பு என நாம் உணர்கிறோம். அங்கர் பிறர் ஒருதுளிகூடத் தேவையற்றபடி முழுமையடைந்தவர்…அதை ஆண்மை என எண்ணிக்கொள்கிறோம்.” இது எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஏன் என்றால் எப்படியெல்லாம் எண்ணி பார்க்கும் வாழ்க்கைக்குள்ளே நான் இல்லை. உண்மையிலே இதுதான் பெண்ணியல்பா? 

துரியோதனன் தனக்கும்  கர்ணனுக்குமான வேறுபாடு என்ன என்று  எங்கு நின்று கூறுகிறான்?...."“தம்பியர் நூற்றுவர், மைந்தர் ஆயிரத்தவர், குடிகள், நண்பர், அணுக்கர்… நான் பல்லாயிரம் வாயில்கள் கொண்ட மாளிகை…அங்கரைப்போல அல்ல.எனினும் எனக்கு அங்கர் தேவைப்பட்டார். ஏன் என்று இங்கே நின்று எண்ணிக்கொள்கிறேன்,"“எனக்கு எல்லாமே வேண்டியிருக்கிறது… நாடு,செல்வம்,புகழ்,சுற்றம்.நாடும் செல்வமும் புகழும் தேடும் ஒருவனால் சுற்றமின்றி அமைய இயலாது”[இது சக்கரவர்த்திகளுக்கு உரிய குணம் என்று வெண்முரசில் ஒரு இடத்தில் வருகிறது. ஆனால் சக்கரவர்த்தியாய் இருந்த துரியோதனனுக்கு சொல்லபட்டது போல் சரியாய் பொருந்துகிறது].துரியோதனன் "நான் எனைச் சார்ந்தவர் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டுமிருந்தேன். மூச்சோட்டம்போல் அது நிகழ்ந்துகொண்டிருந்தது என்கிறான். ஆனால் தனக்கும் கர்ணனுக்கும் ஆன உறவை குறித்து "எதையும் கொடுக்கவோ பெறவோ செய்யாமல் நிகழ்ந்த உறவு எனக்கும் அங்கருக்குமானது.....அங்கர் மாபெரும் வள்ளல். இங்கே அனைவரும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர்கள்தான். நான் அல்ல. வள்ளல் என்னும் அந்த மணிமுடியையும் கழற்றிவிட்டு இருக்கும் ஒரே இடம் என்னுடைய அருகமைவுதான் போலும்” என்கிறான். அனைவரும் அவரவருக்கு தேவையான உறவை தேடுவதும்,அதில் நிறைத்து இருப்பதும் இயல்பாய் நடக்கும் போல. கண்டுகொண்டு ,முரண் கொள்ளாமல் அமைந்திருகிறவர்கள் பாக்கியவான்கள் தான். 


சகுனி "கர்ணன் தெய்வம் ஆகிவிட்டான்....தெய்வங்கள் தனிமையில் இருக்கின்றன" என்கிறார்.யாரை சொல்கிறார்? கர்ணனையா? தன்னை குறித்தா?  சூதர்கள் பாடுவார்கள் போலும்...

ஸ்டீபன்ராஜ்

Sunday, April 14, 2019

மயக்கம்


ஜெ

நான் எப்போதுமே நினைப்பது ஒன்று உண்டு. தெள்ளத்தெளிவானவற்றை எளிதாக எழுதிவிடலாம், மனம் மயங்குவ்சது சொல்குழறுவது உள்ளம் குழம்புவதுபோன்றவற்றை எழுதுவதுதான் கடினம். ஏனென்றால் அந்த மனநிலைக்கே சென்று எழுதாவிட்டால் குழப்பமாக ஆகிவிடும். அந்த மனநிலைக்கே சென்றுஎழுதியவை கர்ணனின் சடலம் கிடக்கும் காட்சி. துரியோதனன் பேசிக்கொண்டே இருக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்று என இயல்பாக மனம் தாவிக்கடக்கிறது. சில புதிய விஷயங்களைச் சொல்கிறான். பல விஷயங்களை மறைக்கிறான். எங்கே செல்கிறான் என்ன பேசுகிறான் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறான். அழுவதற்குப்பதில் அவ்வாறு பேசுகிறான். அந்த குழப்பமும் மயக்கமும் உளறலும் கண்டடைதலும் கலந்த இடம் ஆழமான ஒரு பகுதி

சாரங்கன். 

தொடுகை



ஜெ ,

இன்றைய அத்தியாயம் படித்தவுடன்இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது.

என் அப்பா B.S.N.L.  இல் SDE. அவரைப் பிடிக்கும்ஆனால்பயம்அவருக்கு ஒரு P.A. போல , வரும்தொலைபேசி அழைப்புகளை குறிப்பு எடுப்பதுஅவர் பைல்களை பத்திரமாக வைப்பதுபார்க்கர்பேனாவிற்கு மை ஊற்றுவதுகல்லூரிக்கு பணம் கேட்பது , புத்தகம் தேவையானால் தெரிவிப்பது இவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான உரையாடல்அவர் பேசுவதும் பெரும்பாலும் படிப்பு பற்றிய திட்டுஅல்லதுகாபி தா , சாப்பாடு எடுத்து வை அவ்வளவு தான்அவருக்கு என்னை பிடிக்குமா , பிடிக்காதா என்று எனக்குதெரியாதுசொன்னதில்லைகொஞ்சம் எதிர்த்து பேசுவேன் என்பதால் பிடிக்காது என தான்நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு அவரை பற்றி , அவர் வேலையைப் பற்றி ஒரு பெருமிதம் இருந்ததுஒரு நாளும் அவரிடம்சொன்னதில்லைஎன் கண்களுக்கு அவர் அழகன்அவர் விரல்கள் குண்டு குண்டாக , உள்ளங்கை பஞ்சுபோல மென்மையாக இருக்கும்அவர் கரம் பற்றி நடக்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவுஅவரிடம்சொன்னதில்லைநேரில் பார்க்கையில் பேச பயமாக இருக்கும்.

ஒரு நாள்வீசிங் என ராத்திரி மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள் . நானும் தங்கையும் காலையில்காபி எடுத்து கொண்டு சென்று பார்த்தோம்ஆனால் எப்படி இருக்குது அப்பாஎங்களுக்கு பயமாஇருந்துச்சு னு ஒண்ணுமே சொல்லலை . அப்படி அவரிடம் பேசி பழக்கம் இல்லை . அவரை டிஸ்சார்ஜ்செய்தார்கள்நல்லா தான் இருந்தார்இரவு எங்கள் குடும்ப மருத்துவரிடம் தனியாக சென்றார்சிறிதுநேரத்தில் மாரடைப்பில் மரணம் அடைந்தார் என தகவல் வந்தது.  அப்பாவுக்கு 45. வயது.  எனக்கு 19.  15,8, என அடுத்து இரு தங்கைகள்எங்கள் உலகம் தலைகீழாக மாறியது.

அப்பா உடலை கொண்டு வந்து ஹாலில் வைத்தார்கள்முதல்முறையாக அப்பாவுக்கு பக்கத்தில் நான்மெதுவாக விரல்களை பிடித்து கொண்டேன்என்ன மென்மைஎத்தனை நாள் ஆசைமெதுவாககன்னத்தை தொட்டு பார்த்தேன்இன்னும் எவ்வளவு நேரம்இப்போ அப்பா என்ன சொல்வாரோ என பயம்இல்லைஅவரால் தான் எதுவும் சொல்ல முடியாதேஆனால்  உங்களை பிடிக்கும் அப்பா என ஏன்சொல்லவில்லைஎது தடுத்ததுஇனி எப்படி சொல்வேன்நம் பிள்ளைகளுக்கு நம் மீது அக்கறை இல்லைஎன நினைத்திருப்பாரோ ? அந்த கவலையில் உயிர் பிறிந்ததா ?

அப்பா உடலை எடுத்தார்கள்ஆம்புலன்ஸ் ல் நானும் தங்கைகளும்அம்மா வீட்டில்மெதுவாக அப்பாநெற்றியில் முத்தமிட்டு சொன்னேன் அப்பா I லவ் யு .


இருபது வருடங்கள் ஓடி விட்டனஆனால் அப்பாவிற்கு என்னை பிடிக்குமா , என்றாவது என்னை நினைத்துபெருமைப் பட்டு இருக்கிறாரா ? கேள்விகள் என்னை இன்னும் துரத்துகிறது.

இன்று கர்ணனைப் படிக்கையில் , நான் என் அப்பாவை தான் பார்த்தேன்ஆனால் என் நிலை துரியனைவிட மோசம் அல்லவா?

பிரியமுடன்

அன்புள்ள அ

இது என்னுடைய அனுபவமும் கூட,. நானும் அப்பாவைத் தொட்டது அரிது. உண்மையில் தொடவேண்டும் என்னும் விருப்பம் இன்னும் உள்ளது - அவர் இறந்து முப்பதாண்டுகள் கடந்தும்கூட

சென்றகாலங்களில் மனிதர்கள் தொடுவதை மிக கவனமாகத் தவிர்த்தார்கள். அது உள்ளத்தை வெளிக்காட்டிவிடும் என்னும் அச்சம். ஆண்கள் பெண்களை தொடுவது மிக அரிது

சென்ற ஆண்டு ஒரு குடும்பச்சடங்குக்குச் சென்றிருந்தேன். ஒரு வயதான அக்காவை  சாதாரணமாக தொட்டேன். அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தவர் அழத் தொடங்கினார். அவரை பிறர் தொடுவது மிக அரிதாக ஆகிவிட்டிருந்தது. தொடுகை நெகிழச்செய்தது. அத்தனை அக்காக்களையும் அத்தைகளையும் சித்திகளையும் தொட்டு அணைத்துப்பேசினேன். பெரும்பாலானவர்கள் கண்ணீர்விட்டுவிட்டனர். 

தொடுகை, ஆத்மார்த்தமான தொடுகை, நம்மில் மிகக்குறைவு. நம் பண்பாட்டு எச்சரிக்கைகள் அத்தகையவை

ஆனால் அது அன்பின்மையின் அடையாளம் அல்ல. பலசமயம் மிதமிஞ்சிய அன்பை தனது பலவீனமாக ஆண்கள் நினைப்பார்கள். ஆகவே அதை கடுமையால் விலக்கத்தால் மறைத்துக்கொள்வார்கள். என் அண்ணா அப்படித்தான். என்னிடம் ஒரு நல்ல சொல் சொன்னதே இல்லை. ஆனால் அவர் என்னை மிக விரும்புபவரென தெரியும்

உங்கள் அப்பாவும் அப்படித்தான். தொடாமல் அவர் தவிர்த்ததே அன்பு- அவர் அதை பலவீனமாக எண்ணி கூச்சம் கொண்டிருக்கலாம் - வெளியே தெரியக்கூடாது என்பதனால்தான்

தொடவே முடியாத ஓர் ஆணை குந்தி ஏன் விரும்பினாள் என்பது ஆச்சரியமானதுதான்

ஜெ