Saturday, August 31, 2019

சிற்பம்



அன்புள்ள ஜெ

நலம்தானே? வெண்முரசு முடிவில் ஒரு சோர்வை எப்போதும் உணர்வேன். இந்தமுறையும் அது இருந்தது. ஆனால் இன்னொருவகையான நிறைவையும் அறிந்தேன். அது ஒரு தப்பான உணர்ச்சி என்றும் தெரிந்திருந்தது. அதாவது அனைத்தும் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒரு மிகப்பெரிய சித்திரம் பூர்ணமடையும்போது உருவாகும் ஒரு நிறைவு என அதைச் சொல்லலாம். ஆரம்பம் முதலே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவைக்கப்பட்டிருந்த எல்லா முடிச்சுகளும் சரியாக அவிழ்ந்து ஒன்றாக்விட்டன. சோகம் இருந்தாலும் இது ஒரு சிற்பம் போல சரியாக அமைந்துள்ளது என்றும் தோன்றியது

சிவராஜ்

போர் நிறைவு




அன்புள்ள ஜெ,

மகாபாரதப்போர் இத்தனை நாளாக நடந்திருக்கிறது. 18 நாள் போர் ஐநூறுநாட்களாக நடந்திருக்கிறது. இது முடியும்போது ஒரு பெரிய வாழ்க்கைநாடகத்தையே பார்த்த உணர்வு உருவாகிறது. இவ்வளவுபெரிய நிகழ்வு. இதுதான் ஒரு எபிக் சொல்லும் சித்திரமாக இருக்கமுடியும். படிப்படியாக விரியும் பலநூறு சித்திரங்கள். இதற்குள் துணைக்கதைகள், புராணங்கள் எவ்வளவு வந்திருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன். மகாபாரதம் அளிக்கும் மலைப்பையே இன்னும் பெரிய அளவில் அடைவதுபோலத் தோன்றுகிறது. என் மனசில் இப்போதே வெண்முரசின் நிறைவு வந்துவிட்டது

ஆர். சிவசுப்ரமணியம்

அம்புகள்



அன்புள்ள ஜெ

பீஷ்மரின் அம்புப்படுக்கையும் அஸ்தினபுரியில் காத்திருந்த அம்புகளும் எங்காவது இணைந்துகொள்கின்றனவா? எனக்கு அப்படி ஒரு மனப்பிரமை. அந்த அம்புகள் சத்யவதியால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்லவா? முதல்நாள் விதுரன் இளைஞனாகச் சென்று அந்த அம்புகளைப்பார்வையிடும் இடத்தை வாசித்தேன். யாருக்கான அம்புகள் இவை என்ற கேள்வி அங்கேயே இருந்தது. ஏனென்றால் அஸ்தினபுரியின்மேல் எவரும் படைகொண்டுவரப்போவதில்லை. அப்படியென்றால் அந்த அம்புகள் எவருக்கானவை?

அவை கைவிடுபடைகள். அஸ்தினபுரியின் எல்லா வீரர்களின் கைகளிலும் அவைதான் இருந்தன

குமரவேல்

பெருந்தந்தை





அன்புள்ள ஜெ,

துரியோதனனின் குணச்சித்திரம் மெல்லமெல்ல வெண்முரசிலே உருவாகி வருகிறது. நாவல் முழுக்க வந்துகொண்டே இருக்கும் பல்வேறு பெருந்தந்தையரின் சில அம்சங்கள் அவனிடம் கூடியிருக்கின்றன. ஒன்று அவனிடமிருக்கும் யயாதி. இன்னொன்று தீர்க்கதமஸ். அவன் அவர்களைப்போல பெண்மேல் காமம் கொள்ளவில்லை. இதை வியாசர் மிகத்தெளிவாகவே பிரித்துக்காட்டியிருக்கிறார். அவனுக்கு திரௌபதிமேல் ஆசை இல்லை. எந்தப்பெண்ணையும் கவர நினைக்கவில்லை. அவனுடைய ஆசை மண்மீது மட்டுமே. அந்த ஆசை குருட்டுத்தனமானது. பெருந்தந்தையர் எல்லாமே அவனைப்போலத்தான் இருக்கிறார்கள். திருதராஷ்டிரர் கூட அப்படித்தான் இருக்கிறார்.

அவனுடைய பெருந்தந்தை என்ற குணச்சித்திரம் இந்தியாவில் மிகப்பரவலாக இருப்பது. அதாவது மகாபாரதத்தின் வியாசர் எழுதியதைக் கடந்த வடிவங்கள் இந்தியாவில் உண்டு. துரியோதனனை மண்ணில் மிகப்பெரிய வடிவமாக அமைத்து வழிபடும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் இந்தியாவிலுண்டு. அவர்கள் அவனை தந்தை என்றுதான் வழிபடுகிறார்கள். துர்மதியன் என்று ஒதுக்குவதில்லை. ஒரு கிளாஸிக் ஒரே நாட்டுக்கு இரண்டு அர்த்தங்களை அளிப்பதை மகாபாரதத்தை வாசித்தால்தான் உணரமுடியும். நீங்கள் இந்த துரியோதனனை ஃபோக் மரபிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

சாரங்கன்

தீயின் எடை முடியும் இடம்




அன்புள்ள ஜெ,

வெண்முரசு தீயின் எடை முடியும் இடம் முக்கியமானது. துரியோதனன் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அவருடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்து அஸ்வத்தாமனும் பிறரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை, அந்த நிலையின் அபத்தம். அவர்களின் வன்மம் அவர்களின் கண்களை மறைத்துவிட்டிருக்கிறது. அவர்கள் வேறொரு உலகில் இருக்கிறார்கள். துரியோதனன் அவர்கள் முன் தோன்றவே இல்லை. அந்த ஆழமான அமைதிபோல கொடுமையான பதில் வேறு இல்லை. நிறைவடையாத மூதாதையாகவே துரியோதனன் எஞ்சிவிட்டான்

கே.கணேஷ்

Friday, August 30, 2019

எந்தத் தீ?



அன்புள்ள ஜெ,

தீயின் எடை என்ற தலைப்பு எதைக்குறிக்கிறது என்று ஆரம்பம் முதலே எண்ணிக்கொண்டிருந்தேன். நாவல் முடிந்தபோதுதான் குடியை முழுமையாகவே தின்று முடித்த தீயைத்தான் சொல்கிறது என்று தெரிந்துகொண்டேன். திரௌபதி மட்டும் அல்ல. அவள் நிமித்தம்தான். முதற்கனல்தான் அந்தத் தீ. இங்கே கடிதம் எழுதிய பலரும் அதைச் சொல்லவே இல்லை. ஆரம்பத்தில் நாவலில் வந்த அந்தக்கனல் எரிந்து எரிந்து குருசேத்திரன் முழுக்க எரித்து இப்போது அவர்களின் குடியையே முழுமையாக எரித்து அழித்துவிட்டது.

பெண்ணின் போர்



அன்புள்ள ஜெ

இது பெண்களால் துவக்கப்பட்ட போர். சத்யவதி, அம்பை, அம்பிகை அம்பாலிகை, காந்தாரி, குந்தி, திரௌபதி என்று ஒரு பெரும் வரிசை. அந்தப்போரின் இறுதி கொலைகளை, ஒரே அடியில் பல ஆயிரம் பேரை வீழ்த்துவதும் பெண் தான்.  என்ன ஒன்று, இதை 'செல்ப்-டிபென்ஸ்' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

நகுலன் திரௌபதியை சந்திக்காமல் முதலில் பானுமதியை பார்க்க வருகிறான். ஆனால் அங்கும் அவன் முன் திரௌபதியே நிற்கிறாள். குருதி அலையடிக்கிறது.

இன்னொரு தளத்தில் காந்தாரத்தின் வெம்மை இந்திய மையநிலத்தில் பெய்துகொண்டே இருக்கிறது. முன்பு காந்தாரர்கள் வந்தபோது வெள்ளமாக வந்து வண்டலாக படிந்தது. இப்போது மணலாக பொழிகிறது. மண்ணுக்கு வளம் சேர்ப்பதில் பங்களிக்கிறது என்று கொள்ளலாம்.

மது

அடுத்த நாவல்



ஆசிரியருக்கு,

தீயின் எடை முடிந்துவிட்டது. உத்தேசமாக அடுத்த பகுதி எப்போது வருமென்று அறிவித்தீர்களென்றால் அதுவரை காத்திருப்பேன். இரு தினங்களாக இரவு பனிரெண்டுக்கு வந்து அடுத்த அத்தியாயம் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஏக்கத்துடன் திரும்பிச் செல்கிறேன்.

நன்றி 
சிவா

அன்புள்ள சிவா

வழக்கம்போல 15 நாள் இடைவெளி. 15 செப்டெம்பர் என திட்டம். அதற்குமுன் 10 அத்தியாயங்களாவது எழுதியாகவேண்டும். அப்போது அமெரிக்கப்பயணத்தில் இருப்பேன்

ஜெ

தீயின் எடை2





அன்புள்ள ஜெ

தீயின் எடை முடியும்போது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக போடப்பட்டுவந்த பல முடிச்சுகள் வந்து ஒன்றாகச் சேர்கின்றன. அதில் மிக முக்கியமான முடிச்சு அந்தக் கைவிடுபடைகள். கைவிடுபடைகள் சத்யவதியால் அமைக்கப்பட்டவை. அப்போதிருந்தே அவை காத்திருக்கின்றன. அவற்றை ஏவும் கணம் வரவேயில்லை. அவை எதிரிகளைக் கொல்லப்போகின்றன என்ற எண்ணம் இருந்தது. அவை அஸ்தினபுரியின் வீரர்களைத்தான் கொல்கின்றன. சத்யவதியின் அதே மீனவக்குலத்தைச் சேர்ந்த பெண்தான் அதை செய்கிறாள். அவளுடைய வீரியம்தான் சத்யவதியே திரும்ப வந்துவிட்டாளா என நினைக்கச் செய்கிறது.

அந்த அம்புகள் எழும் காட்சி ஒரு முனிவர் தவம் கலைந்து சாபம் கொடுப்பதுபோல் இருந்தது. பிறகு யோசிக்கும்போது இன்னொரு எண்ணம் வந்தது. அதாவது அந்த கைவிடுபடைகளின் இறுக்கம்தான் அஸ்தினபுரியில் மூன்றுதலைமுறைக்காலமாக இருந்துவந்தது. அது இல்லாமலாகிவிட்டது. அஸ்தினபுரி இறுக்கம் இல்லாமலாகி எளிதாகிவிட்டது. இதுவரை இருந்த டிப்ரஷன் இனி இல்லை என்பதையே அது குறிக்கிறது. அஸ்தினபுரியில் இனி வன்மம் வஞ்சம் எதற்கும் இடமில்லை. அது அம்பை ஓங்கியபடி முறைத்துக்கொண்டு நின்றிருந்த நகரம். இனி அப்படி இல்லை.

அர்விந்த்

அறத்தின் குரலாகப் பேசுபவர் யார்?



தன் அறம் பேசுகிறார்கள் அனைவரும். அறத்தின் குரலாகப் பேசுபவர் யார்? காந்தாரியையும், துரியோதனனையும் கைகாட்டிவிட்டு முடிகிறது தீயின் எடை.


தீயின் எடை | ஜெயமோகன்

Thursday, August 29, 2019

தீயின் மகள்




அன்புள்ள ஜெ

திரௌபதி தீயின் முன் நின்றிருக்கும் காட்சியைப் பார்த்தபோது என் உள்ளம் பல கோணங்களில் விரிந்தது. அவள் தீயின் மகள். இங்கே தீ அவள் மைந்தரை உண்ணுகிறது.ஆரம்பம் முதல் அவளுக்கும் தீக்குமான உறவு வந்துகொண்டே இருக்கிறது. அவள் தீயில் பிறந்தாள். அவள் காட்டை தீவைக்கும் காட்சி, அவள் ஆணைப்படி காண்டவ வனம் எரியும் காட்சி, அவளுடைய சபதம் தீயாக மாறி குருக்ஷேத்திரத்தை நிறைக்கும் காட்சி எல்லாமே ஞாபகம் வந்தது. அவள்தான் தீ. அப்படியென்றால் அங்கே ஐந்து மைந்தரைக் கொன்று தின்றுகொண்டிருப்பதும் அவளுடைய தீயேதான் இல்லையா?

ஜெயராமன் 

தீயின் எடை



Dear Jeyamohan
The weight of the fire is extremely heavy and poignant. Your narration on the last few days of the war at Kurukshetra is a master piece novel by itself. You move dramatically between the description of the topography and terrain of the Kurukshetra and the emotions each of the Pandavas and the left over Kaurava’s express.  You constantly maintain this theme of giving the readers how each one of them would have felt bewildered by the death of their kith and kin. Amazing art of narration which is not a mere fantasy or mutilating the original storyline of the great sage Vyasa.  
All the episodes are captivating. To name a few: 1. Duryodhana’s hiding and practicing Raja yoga and emerging as a balanced calm person. 2. The agony of Bhima on unable to find the hiding Duryodhana and the frustration of failing to defeat him at the Kurukshetra itself. 3. Aswathama and team searching for Duryodhana and their encounter with the Hunter. 4. Amazing portrayal of the Pandavas younger princes when they remember how Duryodhana took care of them when Pandavas were in exile and the pain they undergo after hearing about how Duryodhana was killed. 5. How Hastinapur was taken over by the women and Queen Bhanumathi’s prowess in managing the capital and the fort. 6. “Samvagai” the girl who mastered archery and the role she played. 5. The Mothers emotions and feelings of losing the children grown-up and unborn, churns one’s heart. It was classic when you wrote that the great queens will always speak and bless only “Mangalam”.   
A very sad episode without a happy ending.  But, as you wrote, life will sprout and continue the cycle as humans are the composition of good and bad. Life sprouts and blooms if we collectively work on the good side and suppress the bad or learn how to effectively control it.  Thank you as always for tirelessly writing and sharing the wonders of the great epic. Another dazzling jewel on the Venn Murasu crown. Take a nice break and looking forward to the next one.
Warm regards

Sobana Iyengar

கைவல்யன்



அன்புள்ள ஜெ

தீயின் எடை முடியும்போது மனதை அழுத்தும் சித்திரமாக எஞ்சியிருப்பது களத்தில் கிடக்கும் பீஷ்மர்தான். முற்றாகவே கைவிடப்பட்டு தன்னந்தனிமையில் வானைநோக்கியபடி கிடக்கிறார். அந்த படுக்கை அம்புப்படுக்கை. எனக்கு குருக்ஷேத்திரமும் பீஷ்மரும் ஒன்றுதான் என்று தோன்றியது. அம்புப்படுக்கை என்பது எவ்வளவு பெரிய குறியீடு என எண்ணி எண்ணி வியந்துகொண்டே இருந்தேன். அவருடைய மொத்த வாழ்க்கையும் கனவுபோல கலைந்துவிட்டது. அவர் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதும் அவ்வாறே மறைந்துவிட்டது. அவர் மட்டும் எஞ்சியிருக்கிறார். கேவலமுக்தி என்று சைவத்திலே சொல்வது இதுதான் என நினைக்கிறேன்

சிவக்குமார்.டி

புதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்



அன்புள்ள ஆசிரியருக்கு..     

எத்தனையோ தயக்கத்துடனும் அச்சத்துடனும்தான் புதுவை வெண்முரசு கூடுகைக்கு வந்தேன். பலமுறை வர எண்ணி தயங்கி பின் அதனைக் கைவிட்டு, இப்போதுதான் என்னை நானே உடைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

ஐந்து மணிக்கே முகவரியைத் தேடி வீட்டைக் கண்டுபிடித்து உறுதி செய்துகொண்டேன்.  அப்போதிருந்து மனம் படபடக்கத் துவங்கிவிட்டது. ஆறுமணிவரை அதே தெருவில் சுற்றிக் கொண்டேயிருந்தேன். என் தகுதி நானறிவேன் என்பதால் அப்போதுகூட திரும்பிவிடவே எண்ணினேன்.  இருந்தும் ஏதோவொன்றால் திரும்ப இயலாமல் அங்கேயே நின்றிருந்தேன். ஆறுமணிவரை அந்த வீட்டிற்கு யாரும் வருகிறார்களா என்று கவனித்துக்கொண்டேயிருந்தேன்.
யாரும் உள்ளே போனமாதிரி தெரியவில்லை. ஒருவேளை கூட்டம் நடந்துகொண்டிருக்கிறதோ என்ற ஐயம் வர, தயங்கித் தயங்கி உள்ளே வந்தேன். கீழ்தளத்தில் எதிர்பட்ட பெண்மணியிடம் தயங்கித் தயங்கி விசயத்தை உளறினேன். "அப்டி எதுவும் எனக்குத் தெரியல, எதுக்கும் மேல போய் பாருங்க" னு சொன்னாங்க.

மெதுவாக படிகளில் ஊர்ந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஐயா அவர்கள் கூப்பிய கரங்களோடு  "உள்ளே வாங்க, உட்காருங்க" எனச் சொல்ல. என்னை அறியாமலே கைகூப்பினேன். என் கால்கள் ஆடிக்கொண்டிருந்தது. அப்போதும் தோன்றிய எண்ணம் தெரியாமல் வந்துவிட்டதாகச் சொல்லிவிட்டு திரும்பிவிடலாம் என்பதுதான். இருப்பினும் சித்தம் உறைய ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டேன். எதிரே நிலைக்கண்ணாடியில் பார்த்தபோதுதான் வியர்வையில் சட்டை நனைந்திருப்பதை உணர்ந்தேன். அதைக் கண்டுவிட்ட ஐயா அவர்கள் இரண்டு மின்விசிறிகளையும் போட்டுவிட்டார். என் பதட்டத்தை உணர்ந்தவர்போல ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டு என்னை தனியாக விட்டுவிட்டார். 

எதையோ எதையோ எண்ணி இயல்பாக இருக்க முயன்றேன். ஆனாலும் படபடப்பு குறையவில்லை. பிறகு ஒவ்வொருவராக வந்து பேசத்துவங்கியதும்தான் கொஞ்சம் நிலமை சீரானது. ஒவ்வொருவரும் அறிமுகம் செய்துகொண்டு பேச, ஒவ்வொருவரின் பேச்சிலும் இணக்கத்தை உணர்ந்தேன். என்றாலும் மணிமாறன் அண்ணனை பார்த்ததும்தான் எங்கோ தூரதேசத்தில் பக்கத்துவீட்டு பையனைப் பார்த்ததுபோன்று ஒரு பாதுகாப்பு உணர்வை அடைந்தேன்.  பார்த்ததுமே சிலரை பிடித்துப்போய்விடுகிறது.

 இது எனக்கு முதல் கூட்டம் என்பதாலும் இத்தகைய எந்த வாசக வட்டடத்திலும் கலந்துகொண்டதில்லை என்பதாலும் 'கல்லாதவரும் நணிநல்லர்' என்ற பாங்கில் மறந்துகூட வாய்திறக்கக்கூடாதென எனக்கு நானே கடுமையான உத்தரவிட்டிருந்தேன். ஆனால் அனைவரும் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இங்கு என் உள்ளத்தில் தோன்றும் எதைவேண்டுமானாலும் சொல்லலாமென்ற எண்ணம் வந்துவிட்டது. அத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால் வெண்முரசு பற்றி பேசத்துவங்கியதுமே ஒவ்வொருவருக்குள்ளிருந்தும் அதுவரை இல்லாத ஒருவர் எழுந்துவருவதைக் கண்டேன். அந்த திகைப்பிலிருந்து கூட்டம் முடியும்வரை என்னால் வெளிவரவே இயலவில்லை. ஒவ்வொருவரும் தான் அறிந்தவற்றை, உணர்ந்தவற்றை  விளக்கும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் நான் என் அறியாமையையே உணர்ந்துகொண்டிருந்தேன். அதுவரை நான் அறிந்த அனைத்தும் என் கண்முன்னே உடைந்துசிதற திகைப்பும் நடுக்கமும் கொண்டேன். ஒவ்வொரு கணமும் கற்றுக்கொண்டிருந்தேன். 

 உள்ளுக்குள் நாம் எத்தகைய இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற வியப்பும், இப்போதாகிலும் வந்து சேர்ந்தோமே என்ற ஆறுதலும் கூடவே இருந்தது. முதல் சந்திப்பிலேயே என்னை உளறவைத்து அதனை அனைவரும் வியந்து பாராட்டியதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கூட்டம் முடிந்தபின் அனைவரிடமும் அப்படியொரு தோழமையை உணர்ந்தேன்.  


                              லெமூரியன்.

அரசியும் அரசியரும்



அன்புள்ள ஜெ,

வெண்முரசு பிறப்பிலேயே அரசியாய் இருப்பவர்களை மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டே இருக்கிறது. அம்பை துவங்கி தற்போதைய சம்வகை வரை. குந்தி சந்தேகமில்லாமல் அந்நிரையில் ஒருத்தி. குந்தியின் நிமிர்வும், தோரணையும் சகுனியின் கண்கள் வழியாகவும், சத்தியவதி வாயிலாகவும் மழைப்பாடலிலேயே வந்து விட்டன. ஆனால் திரௌபதி இவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவள். எவ்வகையில் என்றால், அவளுக்கு அவளைத் தவிர வேறு எவரும் அரசியாகத் தோன்றவேயில்லை. அவள் எவருடனும் போட்டியில் இல்லை. அவள் வழி வேழத்தின் வழி. யாரையும் விலக்க வேண்டுமென்றோ, சூழ்ச்சியால் தவிர்க்க வேண்டுமென்றோ அவள் ஒரு போதும் திட்டதில்லை. அவள் வழி அவளுக்காகவே சமைக்கப்பட்ட ஒன்று. அவ்வழியில் வரும் பிறர் வழிவிட்டாக வேண்டும். எனவே அவள் யாரையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மணத்திற்குப் பிறகு அவள் குந்தியைக் கடந்து வந்தமை குறித்த வெண்முரசின் சித்தரிப்பில் இதைத் தெளிவாகவே காணலாம். அவளுக்கு அரசத்தன்மை என்பது இயல்பு, அடைய வேண்டிய ஒன்று அல்ல. எனவே தான் அந்த அரசநடை அவளுக்கு பிறப்பிலேயெ வருகிறது. அந்த இயல்பே அவளை தன் மைந்தர் மறைவை கண்ணால் கண்டு, ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

மாறாக குந்தி இவை அனைத்தையும் விரும்பி, பயின்று அடைகிறாள். எனவே தான் பெயரர்கள் இறந்த அந்த உச்ச கட்டத்தில் அவள் உடைகிறாள். 

இவர்கள் அனைவருக்குமே இணையாக தன் தாய்மையாலேயே உயர்ந்து நிற்பவள் பேரன்னை காந்தாரி. அவளுக்கு இறந்த அனைவருமே மைந்தர்கள் தான். தன் பெயர் மைந்தர்களின் கொடி வழி அழிவதைத் தாங்க இயலாத அவளால் பாண்டவ மைந்தர்களின் இறப்பு நிலைகுலைவை உருவாக்குவது அதனால் தான். உண்மையில் திரௌபதி இயல்பாகச் சென்றடைய விழைவது அந்நிலையைத் தான். எனவே தான் அவள் காந்தாரியைக் காண்கையில் உடைகிறாள்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.

Wednesday, August 28, 2019

செம்பதிப்புகள்




ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம், என்னை நீங்கள் அறிவீர்கள். வெண்முரசு கிழக்கில் செம்பதிப்பு வரத்தொடங்கிய காலம் முதல் ஒரு புத்தகம் தவராமல் வாங்கியுள்ளேன் உங்கள் கையொப்பத்துடன். அதில் ஒரு சிறுமகிழ்ச்சி. குறுதிச்சாரல்லுக்குப்பின் எந்த புத்தகமும் வெளியிப்படவில்லை, கிழக்கல் கேட்டத்திற்கும் "கூடிய விரைவில் வரும்" என்றே பதில் வந்தது. தாங்களாவது உரிய விளக்கத்தை தருவீர்கள் என்று நம்பி எழுதுகிறேன். அனைத்து வெண்முரசும் செம்பதிப்பாய் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. என் காலத்திற்கு அது என்றும் என்னுடன் இருக்கும்.

உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,

அஜித் குமார்.

அன்புள்ள அஜித்குமார்

இமைக்கணம் நாவலுக்குப்பின் போர் ஆரம்பித்துவிட்டது. வெண்முரசின் மனநிலையே போருக்கு முன் போருக்குப் பின் என மாறிவிட்டது. இமைக்கணத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தது. அதைச் செய்துவிட்டு செம்பதிப்பு கொண்டுவரலாம் என்றேன். பதிப்பகம் காத்திருந்தது, அவ்வப்போது நினைவூட்டியது. ஆனால் என்னால் திரும்பச்சென்று அதை திருத்தவே முடியவில்லை. வாசிக்கவும் கூட முடியவில்லை. இப்போது போர் முடிந்தபின் திருத்திவிட்டேன். செம்பதிப்பு அறிவிப்பு சிலநாட்களில் வெளிவரும். அடுத்தடுத்த நாவல்கள் உடனடியாக வெளிவரும்

ஜெ

தீயின் அரசி



வெண்முரசு மிகக் கடினமாக ஒரு உச்சத்தை அனாயசமாகக் கடந்து விட்டது. அது உருவாக்கி எடுத்த துரியனையும், உற்சாகக் கொந்ந்தளிப்பாக, இளமையின் உச்சத்தின் வலம் வந்து கொண்டிருந்த உப பாண்டவர்களையும் கொலைக்கு கொடுத்தாகி விட்டது. இவற்றிற்கு கிருஷ்ணனும், பிற அறம் உசாவுவோரும் காரணங்களைக் கண்டடைந்து கொண்டிருப்பர். ஆம், இவை பெரிய நிகழ்வுகள். ஆம், அவை அப்படித்தான் நிகழ்ந்தாக வேண்டும் என்பதில் இருந்து மிகச் சிக்கலான சமாதானங்கள் வரை வரும், வந்தாக வேண்டும். ஏனெனில் பொருளின்மை போல் மானுடரை பதற்றமடையச் செய்வது வேறொன்றில்லை அல்லவா?!!!

ஆயினும் திரௌபதி அவளது மைந்தரின் சிதைகளை ஆழமான அமைதியில் கண்டு நிற்கும் காட்சி வெண்முரசின் மானுட உச்சங்களில் ஒன்று. அவளால் எப்படி அவ்வாறு இருக்க இயன்றது. ஆம், அவள் இயல்பே அரசத்தன்மை தான், அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டில் வைத்திருப்பவள் தான் என பல காரணங்கள் அடுக்கலாம். ஆனாலும் இவை தானா? இவை மட்டும் தானா? உள்ளூர அவள் அவர்களின் மரணத்தை எதிர்நோக்கியிருந்தாள் என்றே வெண்முரசு காட்டுகிறது. அபிமன்யுவின் வருகை அதைத்தான் குறிக்கிறது. எது அவளை அவ்வாறு எதிர்நோக்க வைக்கிறது? உபபாண்டவர் துவங்கி தங்கள் மரணத்தை எதிர்நோக்கும் ஒவ்வொருவரும் அதற்கான காரணங்களை உணர்ந்தே இருக்கின்றனர். திரௌபதிக்கு என்ன காரணம்?

வெண்முரசு இதை மிக நுட்பமாகக் காட்டிச் செல்கிறது. திரௌபதி தனக்கு இணையானவராக ஒருவரையும் கருதியது இல்லை. அவள் போட்டியின்றியே நடையிடுகிறாள். அரசத்தன்மை என்பது அவளது இயல்பு. அவளைப் போன்றே பிறப்பிலேயே அரசத்தன்மையை இயல்பாகப் பெற்றவன் துரியன். எனவே இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளூர எதிர்த்துக் கொண்டிருந்தனர். துரியன் தன் பெருந்தன்மையால் அதைக் கடக்க விழைந்தான். அவளுக்கு தேவயானியின் மணிமுடியை அளித்து பணிகிறான். அது உண்மையில் தான் திரௌபதியை விட ஒரு படி கீழ் என்பதை ஒப்புக் கொள்வதே. ஆயினும் அவளுக்கு மேலும் ஒரு சொல் வெற்றி தேவையாய் இருந்தது. அதுவே மயநீர் மாளிகையில் நிகழ்ந்தது. அவனைப் பற்றி எரிய வைக்கும் ஒரு புன்னகை. அன்று துவங்கிய அவர்களுக்கிடையேயான ஆட்டத்தில் அவன் சபை நடுவே அவளை முறை மீறி அவமானப்படுத்துகிறான் துரியன். அந்த முறை மீறலே அவனை தான் தொடையறையப்பட்டு கொல்லப்படுவதையும், பாண்டவர்கள் இயற்றும் அத்தனை அற மீறல்களையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. 

திரௌபதியும் துரியன் மரணத்தை, எங்ஙனமேனும் அது நிகழ்வதை எதிர்நோக்கியிருந்தாள் என்பதை துரியனின் குருதி படிந்த துணியை அவளே வாங்கிக் கட்டிக்கொள்கிறாள், அது மாயை அல்ல. இருவருக்கிடையேயான ஒரு நுண்ணிய ஆடல் அங்கு முடிவடைகிறது. துரியனைப் பொறுத்தவரை அந்த அவை நிகழ்விற்குப் பிறகே வஞ்சம் ஒழிந்து அவன் இயல்பான பெருந்தந்தையாக வாழ்ந்து மடிகிறான். மாறாக அவள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறாள். அது அடங்குவது அவன் மரணத்தில் தான். இனி தான் அவள் தன் வஞ்சம் ஒழிந்து ஒரு பேரன்னையாக மலர வேண்டும்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

குருதிமழை2



ஜெ

அஸ்தினபுரிக்குமேல் குருதிமழை பொழியும் காட்சி இதற்கு முன்னால் காந்தாரி நகர்புகுந்தபோது வந்தது. 11 ருத்ரர்கள் அப்போதுதான் நகருக்குள் நுழைந்தார்கள். அந்த நகருள் நுழையும் காட்சியே அபாரமாக காட்டப்பட்டிருந்தது. அவர்கள் ஒரு துளி ரத்தம் குடித்து கண் விழி திறந்தார்கள். கிளம்பி அஸ்தினபுரிக்குள் வந்தார்கள்.

அன்றைக்கு அவர்களைக் கொண்டுவந்தவள் காந்தாரி. அவளிலிருந்தே அழிவு. ஆனால் அவள் அழிவையே அறியாதவளாகவும் நியாயம் தவறாதவளாகவும் கசப்பே இல்லாதவளாகவும் பேரன்னையாகவும் இருக்கிறாள். இதை எப்படிப்புரிந்துகொள்வது? இதை விதி என்றுதான்ச் சொல்லவேண்டும்

செல்வராஜ்

குந்தியின் சிதைவு





அன்புள்ள ஜெ

குந்தி உருவம் சிதைந்தவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்வதை வாசித்தேன். ஆச்சரியமான விஷயம் ஒன்று அதன்பின் வந்தது. அவளே பரலிஸிஸ் வந்து உருவம் சிதைந்தவளாக ஆகிறாள். அவள் செல்லும் அந்த இடம்தான் அவள் வாயில் அப்படி வந்திருக்கிறது. சரியா என தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தை வாசித்ததுமே எனக்கு அப்படித் தோன்றியது


எம் செல்வநாயகம்

தெய்வங்கள் 3




அன்புள்ள ஜெ


தெய்வங்களே என்ற அழைப்பைப் பற்றிய கடிதங்களைப் பார்த்தேன். வெண்முரசிலே தெய்வங்களே மூதாதையரே என்ற அழைப்பை அந்தணர்கள் எழுப்புவதே இல்லை என்று தோன்றுகிறது [நான் முழுக்க பரிசோதிக்கவில்லை] ஆனால் இது ஒரு முக்கியமான அம்சம். மூதாதை வழிபாடு அந்தணர்களுக்கு இல்லையா? அவர்கள் ஆசிரியர்களையே வழிபடுகிறார்களா? மூதாதையருக்கான சடங்குகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களை தெய்வங்களாக எண்ணி வணங்குவதில்லை.

மகேந்திரன்


Tuesday, August 27, 2019

கனவு



அன்புள்ள ஜெமோ

தீயின் எடை முடியும்போது ஒரு அற்புதமான அனுபவம். எதிர்மறையாகவே சொல்லவேண்டும். எல்லாருமே செத்து நகர்மேல் எரிமழை விழுந்து பெரிய அழிவு. ஆனால் அதுகூட அழகியலுடன் அமைந்துள்ளது. அந்த ரத்தமழையும் மண்மழையும் இருட்டும் ஒரு பெரிய கனவுபோல அமைந்துள்ளன. அதை வாசிக்கையில் மகாபாரதம் என்னும்போது நாம் ஒரு கனவு காண்போமே அந்தக்கனவையே கண்டதுபோன்ற உணர்வு உருவானது. இதுதான் மகாபாரதத்தின் பெரிய விரிவான காட்சி என்று தோன்றியது. மகாபாரதம் நிகழ்ந்தகதை. ஆனால் வெண்முரசு அதை விரிவாக்கிக்கொண்டுசென்று மேலும் பல அடுக்குகளை உருவாக்கி பின்னிக்கொண்டே செல்கிறது. இந்த ஒரு அத்தியாயத்தில் எத்தனை முடிச்சுகள். கைவிடுபடைகள் எழுவது. முன்பு ரத்தமழை பெய்தபோதும் கைவிடுபடைகளில்தான் பெய்தது. காகங்கள் வந்திருப்பது. நரிகளின் ஊளை. எல்லாமே பிரம்மாண்டமான கனவுபோலிருந்தது

முருகேஷ்

குருதிமழை



அன்புள்ள ஜெ

வெண்முரசு முடியப்போகிறது. அது நகுலனில் வந்து முடியும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். அஸ்தினபுரியில் முடியும் என்றும் நினைத்தேன். துரியோதனன் இல்லாத அஸ்தினபுரி. அதில் அந்த குருதிமழை பெய்கிறது. 11 ருத்ரர்கள் எழுகிறார்கள். திருதராஷ்டிரர் காந்தார நாட்டிலிருந்து வந்தபோது அந்த குருதிமழை பொழிந்தது. அதில் கைவிடுபடைகள் நனைந்தன. அதன்பின்னர் இப்போது பெய்கிறது. இந்தக்குருதிமழை ஒரு பெரிய குறியிடாக அப்போதிலிருந்தே நின்றுகொண்டிருக்கிறது. அது எதைக்குறிக்கிறது, அந்த ரத்தம் எவருடையது என்பதெல்லாமே புரிந்துகொள்ள முடியாதது. ஆனால் விதி என்று மட்டும் அதைப்புரிந்துகொள்ளலாம் என்றும் தோன்றுகிறது

சாந்தகுமார்

காட்டாளன்


அன்புள்ள ஜெ

நான் உங்கள் தளம் வழியாகவே கதகளியை அறிமுகம் செய்துகொண்டேன். வேலைவிஷயமாக ஆண்டில் பாதிநாள் கேரளம் என்பதனால் கதகளி பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு பரதநாட்டிய அறிமுகம் உண்டு. ஆகவே முத்திரைகளையும் கதையையும் கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும்

கதகளியில் வரும் அதே காட்டாள வேஷத்தை ஜல்பன் என்ற பேரில் வெண்முரசிலே பார்த்தேன். அதே நையாண்டி. அதே துள்ளல் ஊளை. காட்டாளனை கதகளியில் புத்திசாலித்தனமும் கோமாளித்தனமும் சுயநலமும் கோபமும் வீரமும் கொண்டவனாகவே காட்டுவார்கள். இந்தவகையான ஒரு நாவலில் காட்டாளவேஷம் ஊடுருவி வந்ததைஆச்சரியமாகவே பார்க்கிறேன். அதிலும் மிகமிகச் சரியாக அதே குணாதிசயங்களுடன் காட்டாளன் வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம்


எஸ்.ஸ்ரீகாந்த்

அழிவின் வழி


அன்புள்ள ஜெமோ




குந்தி சொல்லும் இந்த வரியை நான் என் அனுபவம் ஒன்றுடன் இணைத்துப்பார்த்துக்கொண்டேன்




நான் அப்ரண்டீஸாக வேலைசெய்தபோது என் ஃபோர்மேன் ஒன்று சொல்வார். அதாவது சரியான வடிவமாக உள்ள் பொருட்கள் பரவாயில்லை. கொஞ்சம் வடிவம் சிதைந்த பொருளானாலும் உடனே எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும். அத்தகைய பொருட்களுக்கு உரிய பெட்டியில் போட்டுவிடவேண்டும். நார்மலான வடிவம் உடைய பொருட்களுடன் வைக்கக்கூடாது. வடிவம் சிதைந்த பொருட்கள் ஆபத்தானவை. அவற்றால்தான் விபத்தே உருவாகும்.

அந்த விஷயம்தான் மனிதர்களுக்கும் பொருந்துவது என்று குந்தி சொல்கிறாள்: ஒரு அன்னையாக தன் அனுபவத்தில் அவள் இதைக் கண்டிருக்கலாம். உண்மையிலேயே கொஞ்சம் ஊனமுற்றவர்கள் தோற்ரம் சிதைந்தவர்கள் நம்மை புண்படுத்துவார்கள். பெரிய குற்றவாளிகளிலும் அதேபோன்றவர்கள் அதிகம். குற்றவாளிகளின் பெயர்களிலேயே மாலைக்கண் செல்வம், மூக்கறுந்தான் போன்று உறுப்பு அடையாளங்கள் இருப்பது இதனால்தான் என தோன்றுகிறது



ரா கணேஷ்

தெய்வங்கள் 2


அன்புள்ள ஜெ

தெய்வங்கள் பற்றிய கடிதம் கண்டேன். நானும் இதை எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். வெண்முரசில் தெய்வங்களே என்று கூவுகிறார்கள். ஆனால் அதை தெய்வங்களை மட்டுமே சொல்வதாகக் கூவுவதே இல்லை. கூடவே மூதாதையரே என்றும் கூவுகிறார்கள். தெய்வங்களுக்குச் சமானமகாவே மூதாதையரும் இருந்த காலகட்டம். தென்புலத்தார், தெய்வம் என்றுதானே குறளும் சொல்கிறது

அதிலும் ஒரு நுட்பம் உள்ளது. பெண்வழிச்சமூகங்களில் மூதன்னையர் என்ற சொல் உள்ளது. குந்தி மட்டுமல்ல காந்தாரிகூட தெய்வங்களே மூதன்னையரே என்று கூவுகிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் மதம் வகித்த பங்கை இது சொல்கிறது என நினைக்கிறேன். இந்த கோணத்தில் ஒவ்வொருவரும் எந்தெந்த தெய்வங்களை எப்படி அழைக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்

ராமச்சந்திரன்



Monday, August 26, 2019

இருவர்



அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு சந்தேகம் வந்தது. அதை கவனித்துக்கொண்டே வந்தேன். துர்யோதனனின் சாவு அந்த எண்ணத்தை மீண்டும் வலிமையாக உருவாக்கியது. துரியோதனன் அனைவரிடமும் அன்பானவனாக இருக்கிறான். அத்தனைபேரையும் நேசிக்கிறான். மற்றவர்களின் சின்னச்சின்ன பிரச்சினைகளைக்கூட அறிந்து அதை நிவர்த்தி செய்கிறான்

ஆனால் அந்த இயல்பே யுதிஷ்டிரனிடம் இல்லை. தன் உடன்பிறந்தவரைத்தவிர வேறு எவரிடமாவது அவன் அன்புகாட்டியதுபோல வெண்முரசிலே வரவே இல்லை. துரியோதனனின் அணைப்பையும் சமமாக அனைவரையும் நடத்துவதையும் பற்றி பலரும் சொல்கிறார்கள். ஆனால் எவருமே  அப்படி யுதிஷ்டிரனைப்பற்றிச் சொல்லவில்லை. இதை வேண்டுமென்றே நுட்பமாக உருவாக்கியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அதேபோல யுதிஷ்டிரனுக்கு எப்போதுமே பதற்றமும் என்ன ஆகுமோ ஏதோ என்ற எண்ணமும் இருந்துகொண்டே இருக்கிறது. “இப்பழியால் என் குலம் அழியுமா? என் குருதிவழி அறுபட்டுவிடுமா?”என்று அவன் கேட்கிறான். துர்யோதனனைக் கொன்றதுமே அந்தச் சந்தேகமும் வருகிறது. ஆனால் எதைப்பற்றியுமே கவலைப்படாத ஆளுமையாக துரியோதனன் இருக்கிறான்

அப்படியென்றால் யார் மேலானவர்? எவருக்கு அறத்தில் பற்று இருக்கிறது? ஒன்றுமே புரியாமலிருக்கிறது

மணி


அந்த வேடன்




ஜெ

நான் இப்போதுதான் ஜல்பன் வரை வந்திருக்கிறேன். ஒருவேடனால் தவம் கலைக்கப்படுவது இந்தியாவிலே நம் புராணங்களில் திரும்பத்திரும்ப வருகிறது. அந்த வேடன் காடு என்ற ஃபினாமினாவின் ஒரு சிறு பகுதியே என்று காட்டுகிறீர்கள். அவனை வால்மீகியுடனும் கிருஷ்ணனைக் கொன்ற வேடனுடனுமெல்லாம் சம்பந்தப்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். காடு எப்படியிருந்தாலும் வந்து தவம்கலைத்தே தீரும் என்பது ஒரு கவித்துவமான உருவகம். அதேபோல காமத்திலிருப்பவர்களை அம்புவிட்டு கொல்வதும் புராணங்களில் அடிக்கடி வருகிறது. பாண்டுவும் அதைச்செய்தான். ஆகவேதான் சாபம் பெற்றான். வால்மீகியும் செய்தார். இப்படி தாவித்தாவி இணைத்துச்செல்லும் அந்தப் பகுதி மிகவும் கிரியேட்டிவாக இருந்தது. நான் துரியோதனன் நீரில் மூழ்கிக்கிடக்கும் காட்சியை ஒரு வேடன் பார்த்து சொன்னான் என்ற இடத்தை கொஞ்சம் விரிவுபடுத்துகிறீர்கள் என்று மட்டும்தான் நினைத்தேன். அதை நீங்கள் இப்படி பெரிய கவிதையுருவகமாக ஆக்குவதை வால்மீகிராமாயணத்தின் முதல்வரியான மா நிஷாதவை வேடனே சொல்லும்போதுதான் புரிந்துகொண்டேன்.  நில் காட்டாளனே, காதல்கொண்ட இணைகளில் ஒன்றை வீழ்த்திய நீ முடிவிலாக் காலம் நிலைகொள்ளாமல் அலைவாய். அமைதியடையாமல் தவிப்பாய் என்று அவன் சொல்லும்போது ஆகா என்று ஒரு விழிப்பு ஏற்பட்டது

சுவாமி

தமியன்


அன்புள்ள ஜெ

என்னால் இன்னமும்கூட துரியோதனனின் சாவுக்காட்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த அத்தியாயங்களை இன்னும்கூட தாண்டவில்லை. தன்னந்தனிமையில் எரிகிறான் அரசன்…” என்று கிருபர் சொன்னார். “நூறு உடன்பிறந்தாரும் ஆயிரம் மைந்தரும் பல்லாயிரம் உற்றவரும் கொண்டவன்” என்ற வரி விம்ம வைத்தது. அந்த கௌரவப்படையில் அத்தனைபேருக்கும் அவன் கொள்ளிபோட்டான். ஆனால் அவன் அனாதையாக எரிகிறான். வெண்முரசில் இந்த உச்சம் நோக்கி ஆரம்பம் முதலே கொண்டுவந்தீர்கள் என நினைக்கிறேன். அவன் கடைசியாக தனிமையில் நின்று சாகும் காட்சிக்காகவே முந்தையநாளிலேயே கௌரவர்கள் அத்தனைபேரும் சாகும்படி எழுதினீர்கள். மூலத்தில் அப்படி இல்லை. கடைசிநாளில் ராவணனைப்போலவே அவனும் தம்பியர் எவரும் இல்லாமல் தமியன் ஒருவன் சென்றான் என்றபாணியில் தனியாகவே களத்திற்கு வருகிறான். தனியாகவே இறக்கிறான்.

லக்ஷ்மணன்

மூதேவி




அன்புள்ள ஜெ

நான் சில கோயில்களில் ஜ்யேஷ்டையின் சிலையைப் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவில் மையமாகவே கோயிலில் வைத்துக் கும்பிடுவார்கள். எப்படி இப்படி ஒரு அமங்கலமான தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். மனிதர்கள் அஞ்சி நடுங்கி நீ வராதே என்று சொல்லிக் கும்பிடுகிறார்கள் என நினைப்பேன். மத்தியப்பிரதேசத்தில் சில ஊர்களில் ஜ்யேஷ்டையை வாரியலால் வீசுவார்கள். வாரியலால் அடிக்கிறார்கள் என நினைத்தேன்

ஆனால் வெண்முரசை வாசிக்கையில் வேறு ஒரு சித்திரம் தோன்றுகிறது. இந்த சீதேவி மூதேவி வடிவங்களெல்லாம் நாம் அளிப்பவை. நம் லௌகீகத்திலே நின்று அளிப்பவை. அவை பிரபஞ்சத்திலே உள்ள இரண்டு சக்திகள். அவற்றுக்கு தங்களுக்குரிய பணிகள் உண்டு. ஒன்று நல்லது அதை கும்பிடுவேன் இன்னொன்றை வெறுப்பேன் என்று சொல்வது அறியாமை. ஆகவேதான் மூதாதையர் இரண்டையுமே தெய்வமென வைத்து வழிபட்டார்கள் என நினைக்கிறேன்

ஜ்யேஷ்டையை போர்க்களத்திலே கௌரவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவள் அமுதம் அளிக்கிறாள். அது கசக்கிறது, நாற்றம் அடிக்கிறது. ஆனால் குடித்தபின் இனிக்கிறது. மணக்கிறது. ஏனென்றால் கௌரவர்களுக்கு விதி அளிக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அது இனியதுதான். அதுவும் தெய்வ அருள்தான். இதை சும்மா சொல்லிபார்க்கிறேன். இதை என்னால் சரியாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை

ஜெயராமன்