Saturday, September 27, 2014

கண்ணனின் குழல்




ஜெ சார்

நீலம் வாசித்து முடித்து நிறைவடைந்த மனதுடன் இதை எழுதுகிறேன். இரண்டு பேர் நாவலில் வந்தார்கள். ஒன்று கண்ணன். நீலமணி வண்ணன். இன்னொருவர் கிருஷ்ணன். ராதையின் கண்ணன் ஒரு தென்றல். கிருஷ்ணன் ஒரு புயல். கிருஷ்ணன் சொல்லும் தத்துவங்கள் [ இந்திரனைப்பற்றி] கண்ணன் சொல்லமுடியாது. கண்மலர்ந்து சிரிக்கத்தான் முடியும். கண்ணன் குழலூதுபவன் . கிருஷ்ணன் கீதை சொல்பவன். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இருபகுதிகளும் சொல்லிக்கொண்டே வந்தன. இரண்டு பேருமே வளர்ந்து உச்சம் அடைந்தார்கள். கண்ணன் ராதையுடன் உறவுகொள்ளும் அத்தியாயத்தில் முழுமை அடைகிறான். கிருஷ்ணன் மதுராவை ரத்தத்தால் கழுவும்போது முழுமை அடைகிறான்

ஆனால் இன்றைய கடைசி அத்தியாயத்தில் இருவரும் ஒன்றாக ஆகிறார்கள். கீதை சொன்ன கிருஷ்ணன் குழலை கொண்டுவா என்கிறான். அவன் குழலூதுவான் என்பதே அங்கே எவருக்கும் தெரியாது. ராதை முன் நின்று ஊதும்போது அப்படியே அவன் கண்ணனாக மாறிவிடுகிறான். கிருஷ்ணனை விட கண்ணன் ஒருபடி மேலே என்ற ஆசிரியரின் எண்ணமும் அதிலே தெரிகிறது. அதுதான் என் எண்ணமும்

மகாதேவன்

கிருஷ்ணனும் கண்ணனும்




அன்புள்ள ஜெ,


நீலத்தின் முழுமை தரும் அத்தியாயம், கொடி, மனதில் ஏற்படுத்திய உணர்வுகள் வெகு அந்தரங்கமானவை. இதில் மாமன்னர் கிருஷ்ணரைப் பார்க்கிறோம். மகாபாரத யுத்தம் முடிவடைந்து விட்டது. தன் முடிவுணர்ந்த ஞானியாகவே கிருஷ்ணர் வருகிறார். அவரின் கண்ணசைவிலேயே கருத்தறிகிறார் பேரமைச்சர். ஆனால் அவருக்கும் தெரிவதில்லை கிருஷ்ணரின் இளமை. அங்கே யாருக்குமே தெிரவதில்லை, அனங்க மஞ்சரியைத் தவிர. 90 வருடங்களுக்கு முன்னர் ராதை பிறந்த தினம் என்கிறார்கள். அவள் கன்னியாகவே வாழ்ந்து காதலருக்கு அருள்கிறாள் என்கின்றனர். தங்கள் குலதெய்வம் என்கிறார்கள்.
ராதை மலர்ந்தது மனதிலல்லவா. குறிப்புணர்த்தியிருக்கிறீர்கள். கிருஷ்ணுருக்கு 81 வயது. நீங்களே வேண்டாமென்றாலும் தர்க்கம் உங்களை விட்டு போகாது ஜெ.!!!!


அப்படியென்றால் இங்கு ராதை முன் நிற்கும் கிருஷ்ணன் யார்? இவன் யாதவ அரசன். உலகின் அனைத்து பற்றுகளையும் துறந்தவன். ஞானி.  தன்னைச் சுற்றி நடப்பவற்றை எல்லாம் எங்கோ இருந்து பார்ப்பதைப் போல இருந்தவன் ராதை என்ற பெயரைக் கேட்டதும் இங்கே வருகிறான். திரும்பும் வைரம் என திருவிழிகள் கொள்கிறான். அவளிருக்குமிடம் நோக்கிச் செல்ல விழைகிறான். பொதுவாக நாம் நினைக்கும் ஒன்றை உடல் செய்வதற்கு சற்று முன்னரே மனம் அதைச் செய்திருக்கும். சில விஷயங்களில் மட்டுமே உடலும் மனமும் ஒரே கதியில் செயல்படும். இங்கே ராதையின்  பெயர் கேட்டவன் கிருஷ்ணன். எழுந்தவன் கண்ணன். ஜெ இவ்விடம் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. பெயரைக் கேட்டு திரும்பிய கிருஷ்ணர் சொலழொமல் எழுகிறார். மனமுணர்த்துவதற்கு முன உடல் உணர்ந்து விட்டது.
ராதை என்பவள் யாதவ மன்னனுக்கு யார்? அவன் பருவம் எய்துவது வரை அவனைத் தூக்கி சுமந்த ஓர் 'அக்கா'.


சங்குக்கள் கடல் உரையில் ஜெ நீலியை நேரில் பார்த்த ஓர் அனுபவத்தை சொல்லும் போது, மேலாங்கோட்டு கோவிலுக்கு ஓர் அக்கா(சுகாசினி அக்கா என்று சொன்னதாக நினைவு) கையைப் பற்றி சென்றதை சொல் லியிருப்பார். கூடவே இளம்பிராயத்து பையன்களுக்கு வயது வந்த அக்கா என்பது மிகவும் பிடித்த ஒன்று என்பார். அவள் ஓர் இளமையான அன்னை. அவள் கையைப் பிடித்து நடப்பதும், அவளைச் சிரிக்கச் செய்து, தேடச் செய்து விளையாடுவதும் மிகப் பிடித்த விளையாட்டுகள். எனக்கும் அப்படி இரு அக்காக்கள் இருந்தார்கள்.


இங்கே யாதவ கிருஷ்ணனுக்கு பர்சானபுரியின் ராதை அப்படி ஓர் அக்காவாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் முன்பு தான் கண்ணன் முதன்முதலாக குழலூதினான். இதோ இப்போது நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் முன் குழலூதி மெய்மறக்கிறான் கண்ணன்.
ஜெ இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து கிருஷ்ணர் கிருஷ்ணர் என்றே அழைக்கிறார். எல்லாம் ராதையின் பெயரை அவர் கேட்கும் வரை தான். அதன் பிறகு அவன் கரிய தருமேனியனாகிறான். இறுதியில் கண்ணனாகிறான்.


மிக உணர்ச்சிகரமான முடிவு இது. மனது மறந்த பழைய நினைவுகளைக் கிளறி விட்டது இந்த அத்தியாயம். மனதுக்கு மிக அணுக்கமான நூலாகி விட்டது நீலம்.
நன்றி ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

குலதெய்வம்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
இறைவன் மூத்தவனா? பக்தன் மூத்தவனா? என்ற கேள்வியை எழுப்பியது நீலம்.
பக்தன் மூத்தவன் இறைவன் இளையவன் ஆனால் இறைவன் முடியாதவன் பக்தன் முடிந்தாலும் முடிவில்லாதவன் என்றது நீலம்.
ராதை கன்னியானபின்பு பிறந்தவன் கண்ணன். நெடியோன் கண்ணனுக்கு அவன் கிழவனான பின்பும் வேண்டும் பொழுதெல்லாம் குழல்கொடுக்கும் குழந்தையும் ராதைதான்.  
கனியும், பூவும் ஒன்றுதான் என்பதுபோல் கன்னியும், குழந்தையும் ராதைதான் என்று காட்டி நீலம் தன் படைப்பால் அழகுக்கொள்கின்றது அல்லது பிரபஞ்சசொருபமாக காட்சித்தருகின்றது.
கண்ணனின் குழல் ஓசைக்காக ஏங்கி பர்சானபுரி பித்தியாகி, கண்ணனின் குழல்லோசை ராதை ராதை ராதை என்று ஏங்கும்போதெல்லாம் நீலக்கடம்பின் பின்மறைந்து இதழ்பொத்தி நகைப்பவளும் ராதைதான். காட்சியே ஒரு நாவலே கவிதையாக மாறும் படிமம், ஒரு நூலே ஓவியமாகும் சித்து.
ஆடை நெகிழ அனைத்தும் இழந்து ஓடுபளும் ராதைதான், பாவாடைப்பூவாய் எங்கும் பூத்திருப்பவளும் ராதைதான்.

//வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யா உனக்கு
மகனலனோ நீயெனக்கு வாய்ந்ததந்தை யலையோ
கோழையுலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருளொளியைக் கொடுத்தருள் இப்பொழுதே// என்கின்றார் வள்ளலார்.
காலம் காலமாய் வாழையடி வாழையாய் பக்தன் பிறந்துக்கொண்டே இருக்கிறான்பக்தனால் இறைவனும்இருந்துக்கொண்டே இருக்கிறான். ராதைக்காக கண்ணனும் கண்ணனுக்கா ராதையும் மண்ணில் மலராகவும், இசையாகவும் நிறைந்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
//வெண்மணல் விரிந்த முற்றமெங்கும் வண்ண மலர்களென ராதை மலர்ந்துகொண்டே இருப்பதைக்கண்டாள்அவள் அமர்ந்து படைத்த மலரெல்லாம் அவ்வண்ண இதழ்களுடன் கண்களிலும் காற்றிலும்எஞ்சியிருந்தன//
//தனிமை சூழ்ந்ததும் குழலை இதழ்சேர்த்தார் கிருஷ்ணர்விரல்கள் துளைகளில் ஓடினஇதழில் எழுந்தகாற்று இசையாகாது வழிந்தோடியதுசிரிப்பை அடக்கி சிறுகைகளால் இதழ்பொத்தி அமர்ந்திருந்தாள்ராதை.
குழல் மொழி கொண்டதுகுயில்நாதம் ஒன்று எழுந்தது. ‘ராதே’ என அது அழைத்ததுகாற்றில் கைநீட்டிப்பரிதவித்து ‘ராதேராதேராதே!’ என மீளமீளக் கூவியதுகண்டடைந்து குதூகலித்து. ‘ராதைராதைராதை!’என கொஞ்சியதுகல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள்//

பக்தனும் பகவானும் ஆடுவது ஊஞ்சல் ஆட்டம். அது  போவதும் இல்லை வருவதும் இல்லை ஆனால் ஓய்வதும் இல்லை. கண்ணனும் ராதையும்  மண்ணில் பிறந்துக்கொண்டே இருப்பார்கள் அந்த பொன்னூஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும்.
அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்கின்றார் தாயுமானவர்சுவாமிகள். இங்கு ராதையை தெய்வமாக்கிவிட்டு கண்ணன் பக்தனாகி அன்பர் பணிசெய்யக் கிளம்பிவிட்டான். என்ன என்ன செய்வான் எப்படி செய்வான், எப்படி இருப்பான் எங்குபோவன் என்பதை சுட்டும் இடத்தில் நீலம் மலருக்குள் ஒரு மலர்போல் மகரந்தமாகி மணக்கிறது.
//அவரது கரிய கைபற்றி கண்மூடி தியானித்து மருத்துவன் சொன்னான். “பாண்டவர் முடிமீட்ட கைகள்.பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள்பாரதப்போர் முடித்த கண்கள்அரசர்குழாம் பணியும் அடிகள்ஆற்றுவதுஆற்றி அமைந்த நெஞ்சம்.”
செவ்வரி ஓடிய கண்களால் நோக்கி “திருமகளும் நிலமகளும் சேர்ந்த மணிமார்புதிசையெல்லாம்வணங்கும் திருநாமம்யுகமெனும் பசுக்களை வளைகோல் கொண்டு வழிநடத்தும் ஆயன்” என்றான்.பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “நாண் தளர்ந்து மூங்கிலானது வில்மரமறிந்து சிறகமைந்தது புள்.வினைமுடித்து மீள்கிறது அறவாழிநுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி” என்றான்//
வாழ்வும் தத்துவமும் ஞானமும், பழங்காலமும் நிகழ்காலமும் வருங்காலமும் நிறைந்து மலர்ந்திருக்கிறது நீலம். யார் யார் எந்த காலத்தில் நிற்கின்றார்களோ அந்த அந்த இடத்தில் உள்ளத்தேனை உண்டு சுவைக்கின்றார்கள்.
தேன் நேற்றும் இருந்தது இன்றும் இருக்கிறது நாளையும் இருக்கும்.
வண்டும் நேற்றும் இருந்தது இன்றும் இருக்கிறது நாளையும் இருக்கும்
தேனும் வண்டுபோல் பகவானும் பக்தனும், நீலமும் வாசகனும் தேனும் வண்டும்போல்.
நீலம் நேற்று எங்கோ இருந்தது இன்று இங்கு இருக்கிறது நாளை எங்கெங்கோ இருக்கும்.
நீலம் என்னும் அமுதக்கடலில் இனி வருங்காலம் குதிக்கும், குடிக்கும், நீலத்தை துளித்துளியாய் குடித்து கடலலேன் என்னும் காலத்தில் நான் இருந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு. பரிஷித்காணாத ஒரு பக்திக்கடல் நான் கண்டது.
மண்ணில் நீலமான நதி நீரால் ஆனது மட்டும் இல்லை குருதியாலும் ஆனது. மண்ணில் உயர்ந்து நிற்பது கல்லால் ஆனது மட்டும் இல்லை சொல்லாலும் ஆனது.
முன்னது உறவு. பின்னது பெயர்.
//“ராதையெனப் பெயரிட்டது தாங்கள் அல்லவா?” என்றாள் கீர்த்திதை. “ஆம்என் இல்லத்தில் சுடராக என்தமக்கை என்றுமிருக்க விழைந்தேன்உனக்கு என் அன்னைபெயரிட்டேன்உன் வயிற்றில் அவள் வந்துபிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன்” என்றாள். “கையில் எடுத்து இவள் கண்களைக் கண்டபோதேநினைத்தேன்இவள் அவளேஎன் அரசிஎன் குலத்தெழுந்த தெய்வம்.”//
நீலம் தந்த ஜெ வாழ்க! நீலம் வாழ்க! நீலத்தில் மலர்ந்த ராதைபாதம் வாழ்க! ராதையின் பாதம் கும்பிடும் கண்ணன் பாதம் வாழ்க! கண்ணன் மகள் வள்ளிப்பாதம் வாழ்க! வள்ளிப்பாதம் கும்பிடும் முருகன் பாதம் வாழ்க வாழ்க! அவ்வழி சென்ற என் முன்னோர்கன் பாதம்வாழ்க! அவகள் சென்ற நல்லவழி செல்ல வைக்கும்  என் குலதெய்வம் வாழ்க!
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.  


யோகம் இரண்டு




அன்புள்ள ஜெ


நீலம் உங்கள் படைப்புகளிலேயே தனிச்சிறப்பானது. கொற்றவையில் ஒரு மெல்லிய தாளம் உடைய மொழிநடையை கைக்கொண்டிருந்தீர்கள். தூயதமிழ்நடையும்கூட. அது இதிலே உச்சம் கொண்டுவிட்டது. நடை என்று சொல்லமுடியாது. நடனம் என்றுதான் சொல்லவேண்டும்

அந்தநடை இதற்குத் தேவையாகிறது. அந்த நடை இல்லாமல் இந்நாவலை யோசிக்கவே முடியாது. எனென்றால் இந்நாவல் நடைமுறைசார்ந்தஉலகிலேயே இல்லை.நடைமுறை விஷயங்கள் கொஞ்சம் வந்தாலே கீழே இறங்கியிருக்கும். இதில் ராதையின் பகுதி மனசுக்குள்ளேயே நடக்கிறது. ஒரு நினைவு மாதிரி. கம்சன் பகுதி அதோடு ஒட்டாத யதார்த்தமாக இருக்கக் கூடாது. ஆகவெ அதை வெவ்வேறு குரல்கள் சொல்வது மாதிரி அமைத்திருக்கிறீர்கள். இரண்டுக்குமே சந்தம் உள்ள நடை கைகொடுக்கிறது. நடப்பதை பார்ப்பதுமாதிரியான யதார்த்தவாதம் இல்லாமல் சொல்லிக்கேட்பதுமாதிரி அல்லது மனசுக்குள் தாளத்துடன் மொழி ஓடுவதுமாதிரி நாவலை உணரமுடிந்தது.

அதோடு மிகச்செறிவான மொழி. அலங்காரத்துக்காக ஒரு வரிகூட எழுதப்படாமல் சந்தத்தை கையாள்வது பெரிய சவால். அது நிகழ்கிறது.நூற்றுக்கணக்கான வரிகளை நான் குறித்துவைத்தேன். பலவரிகள் ஒட்டுமொத்த ஆன்மீகத் தேடுதலையே சொல்லக்கூடியவையாக இருந்தன

நாவலின் கட்டிட அமைப்பை நான் இப்படி உருவகம் பண்ணிக்கொண்டேன். சரியாக இருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். ஒரு ஓட்டம் ஹட்யோகம் அல்லது அகோரமார்க்கம் போன்ற ஒரு வழி. இன்னொன்று பக்தி உபாசனா மார்க்கம். முதல் வழிக்கு கம்சன். இரண்டாவதுக்கு ராதை. இது இருவருமே முக்தி அடைந்ததைப்பற்றித்தான் பேசுகிறது. ஆனால் பரிபூரணம் அடைந்து பிரம்மம் ஆனவள் ராதைதான்

கிருஷ்ணனின் பிறப்பும் சரி, கம்சன் செய்யும் கொலையும் சரி குறியீடுகளாகவுமே வாசிக்கக்கூடியவை. ‘யோகத்திலே முதலில் செய்யவேண்டியது கொலை. சொந்தக் குடும்பத்தையும் குழந்தைகளையும் கொலைசெய்யவேண்டும். உறவினர்களை கொலைசெய்யவேண்டும். மொத்த உலகையும் கொலை செய்யவேண்டும். அந்த ரத்தம் வழியாகத்தான் நாம் விடுதலை அடையமுடியும்’ என்று என் குருநதர் சொல்லுவார். அதுதான் குழந்தைக்கொலை. அதைத்தான் கம்சன் செய்கிறார். ஆனால் ஒரு சின்னப்பறவை மிஞ்ச்விடுகிறது

அதன் முதல் அத்தியாயம் சொல்லெழுதல் என்று இருக்கிரது. மனசுக்குள் முதல் சொல் எழுவது முக்கியம். அதுதான் தொடக்கம். அந்த முதல்சொல்லை மூலமந்திரம் என்பார்கள். திலகவதி அருணகிரிக்குச் சொன்னதுமாதிரியான சொல் அது. அடுத்து பொருளவிழ்தல். அடுத்து அனலெழுதல்.

பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக! - என்று வசுதேவர் நடனமாடுகிறார். அந்த அத்தியாயமே மூலாதாரக் கனல் எழுவதுமாதிரி இருக்கிறது. ரத்தம் தீயாக மாறுவதுமாதிரி. ‘இதன் வலக்கையில் அனல்குறி உள்ளது’ என்று யோகமாயை பற்றி சொல்லப்படுகிறது. அதுதான் குறியீடு.

செழுங்குருதி,சுழலாழி,பாலாழி என்று மூன்று அத்தியாயங்கள். அனல் கண் திறழ்ந்தபிறகு வரும் நிலைகள்.
‘அதற்குமேலே ஐந்து கோட்டைகளை இடிக்கவேண்டும்’ என்று என் ஆசிரியர் சொல்வார். ‘மூலாதாரம் முதல் ஐந்து சுழிமுனைகள். மூலாதாரம் பூதனை. பூமி. அன்னம். மண். அடுத்து காற்று அதாவது பிராணன்.

அதுக்கப்பால் நீர்.அதற்குப்பிறகு ஆலகால விஷம் எழும் நெருப்பு. அதுதான் காளியன். அதன்மீது நின்று ஆடுகிறது பெரிய யோகக்குறியீடு. அதன் பிறகு வானம்.அதுதான் ஆக்ஞை. அதை தாமரையாகவும் சக்கரமாகவும் அந்த அத்தியாயம் சொல்கிற்து. சொல்லாயிரம்,பொருள் ஒன்று, ஒன்றே அது என தலைப்புகளே அந்த வளர்சியை சுட்டிக்காட்டுகின்றன. அதுதான் கடைசியில் முடி,கொடி என்று நிறைவடைகிறது.

அதேமாதிரி ராதையின் பிரேமையின் வளர்ச்சியும் பல யோகஅடையாளங்கள் வழியாகவே செல்கிறது.இந்த கட்டிடமே நிறையவிஷயங்களைச் சொல்கிறது. நான் இனிமேல்தான் முழுசாக வாசிக்கவேண்டும். புத்தகமாக புரட்டிப்புரட்டிவாசித்தால்தான் சரிவர வாசிக்கமுடியும்

மீனாட்சி சுந்தரம்

அழியாதது




ஜெ

ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல கோணங்களில் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இடம் மிகவும் புதியது. இப்படி எதிர்பார்க்கவே இல்லை. கிரியேட்டிவிட்டி என்பது நாவல்ட்டியெதான் என்று புரியாமல் எத்தனை வாசித்தாலும் பயனில்லை

கண்ணன் வயதாகி இருக்கிறான். பாரதப்போர் முடிந்துவிட்ட்து. 80 வயதில் கிருஷ்ணன் 82 வயதில் சித்தியடைந்ததாக கணித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். 

நாண் தளர்ந்து மூங்கிலானது வில். 
மரமறிந்து சிறகமைந்தது புள். 
வினைமுடித்து மீள்கிறது அறவாழி. 
நுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி

என்று நிமித்திகன் சொல்வதை வைத்துப்பார்த்தால் கிருஷ்ணன் கூடிய சீக்கிரத்தில் மறையவிருக்கிறார். அது அவருக்கே தெரியும். அவர் காத்திருக்கிறார். அதற்குமுன் ராதையைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்

நீங்கள் காட்டும் இந்தக் கிருஷ்ணரிடம் விளையாட்டுத்தன்மை இல்லை. முதிர்ந்திருக்கிறார். அவரை சின்னவயது முதல் தெரிந்த சிலர்தான் இருக்கிறார்கள். அவர் தனிமையிலே இருக்கிறார். அவரது அமைச்சர்களுக்கு அவர் புல்லாங்குழல் வாசிப்பார் என்றே கூட தெரியவில்லை. ராதையை அவர்களுக்குத் தெரியாது

கதையை வைத்துப்பார்த்தால் அப்போதே யாதவர்களின் உட்சண்டைகள் ஆரம்பமாகியிருக்கும். கிருஷ்ணர் சலித்திருப்பது தெரிகிறது. அவர் ராதையைப் பார்க்கும்போது கடைசிக் கடமை முடிகிறது.

பிறந்து ஒருநாள் கூட ஆகாத கைக்குழந்தையாக இரண்டாம் அத்தியாயத்திலே வந்த கிருஷ்ணனை இப்படி பார்ப்பது ஒருமாதிரி மனசை கஷ்டப்படுத்த்னாலும் இதெல்லாம்தான் அறிந்துதானே அவன் வந்தான் என்றும் தோன்றுகிறது. கிருஷ்ணனைக் கொன்ற வேடன் பெயர் ஜரா. அப்படியென்றால் நரை. மூப்புதான் அவரை கொன்றது.

ராதையின் சன்னிதியில் குழலூதி நிற்கிற கிருஷ்ணனுடன் கிருஷ்ணனின் வாழ்க்கைக்கதை முடிந்த்து. பூத உடல் மறைவது மட்டுமே மிச்சம். அப்படியென்றால் தொடக்கம் முதல் முடிவு வரை சொல்லிவிட்டீர்கள்.

கிருஷ்ணனுக்கு வயதாகிறது. ராதைக்கு வயதே ஆகவில்லை. இப்போதுதான் ஐந்தாறு வயது ஆகியிருக்கிறது. இன்னும் பிரேமையையே ஆரம்பிக்கவில்லை. ராதை ஏகப்பட்டபேர். அவர்கள் பிறந்து வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் கிருஷ்ணன் ஒருவர்தான்.

இன்னொருமாதிரி முடித்துவிடமுடியுமா என்று ஒருநாவல் தோன்றுமென்றால்தான் அது உண்மையிலே நிறைவு அடைகிறது. சில கிளாசிக்ஸ்தான் அப்படிச் சொல்லமுடியும். இது அப்படிப்பட்ட நாவல்.

ஆசிகள்


சுவாமி

Friday, September 26, 2014

இரு முழுமைகள்




அன்புள்ள ஜெ,


ராதையின் முழுமைக்குப் பிறகும் நீலம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை இன்றைய அத்தியாயத்தில் கோடிக்காட்டி விட்டர்கள். முடி என்பதை கண்ணன் அணியும் முடியாகவும் பார்க்கலாம் அல்லது தன்னறம் காட்டும் செயலைப் பற்றில்லாமல், விளைவை எதிர்பாராமல் முடிப்பவனாகவும் பார்க்கலாம். கீதையின் சாங்கிய யோகத்தைப் படிப்பதைப் போல உள்ளது.


சரியாகத்தான் வாசிக்கிறேனா?


அன்புடன்,

அருணாச்சலம், நெதர்லாந்து

அன்புள்ள அருணாச்சலம்,


‘சரியானவாசிப்பு என ஒன்று உண்டா என்ன? கவனமான வாசிப்புகள் எல்லாமே சரிதான். படைப்பு நம்முள் நுழைய நம் அகங்காரமும் நம் முன்கல்வியும் இடம் அளிக்கவேண்டும். படைப்பை நம் கற்பனையும் சிந்தனையும் தியானமும் மேலெடுக்கவேண்டும். அது நம்மில் ஒரு கனவாக நிகழவேண்டும், அவ்வளவுதான்


இரு சரடுகளாக வந்து கொண்டிருந்த்து நீலம். இருவகை யோகமுறைமைகள் என்று பார்க்கலாம். ராதையுடையது தன்னிலை அழியும் பிரேமை. கம்சனுடையது அகங்காரம் நிறைந்த உபாசனை. இரண்டும் இருவகைகளில் நிறைவடைகின்றன


இதுவரை வந்த உபதலைப்புகள் வழியாக தொகுத்துக்கொள்ளலாம். கம்சனின் முறை ஐம்பூதங்கள் வழியாக ஆணவம் வழியாக முழுமைநோக்கிச் செல்கிறது. ராதை தன் உலகை தானே உருவாக்கி அழித்து முழுமை அடைகிறாள்


ஜெ