Friday, March 18, 2016

ஆழ்தல்



நீலத்தைத்தான் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஆழ்ந்து செல்வதற்கு ஏதோ இருக்கிறது. முன்பு ஒரு கட்டுரையில் கல்பட்டா நாராயணன் சொன்னதாக எழுதியிருந்தீர்கள், பக்தியில்தான் ஆழ்மாகச் செல்வதற்கான இடம் இருந்துகொண்டிருக்கிறது என்று. அதைத்தான் ஞாபகம் பண்ணிக்கொண்டேன்

ஏனென்றால் பக்தி என்பது ஒரு ஸமர்ப்பணம். அதுதான் இந்த பிரம்மாண்டமான இயற்கைக்கு முன்னாலும் கடவுளுக்கு முன்னாலும் மனுஷன் செய்யக்கூடுவதாக இருக்கிறது. அதைத்தான் நான் யோசிக்கிறேன்.

நாராயணன்

சென்னை கலந்துரையாடல்


இம்மாத கலந்துரையாடலுக்கு வந்த முப்பது பேர்களில் ஏழு பேர் இந்த கூட்டத்திற்கு புதியவர்கள் ஆனால் அனைவரிடமும் தேர்ந்த வாசிப்பும் கலந்துரையாடல் குறித்த ஆர்வமும் இருந்தது.

4 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது 4:30 ஆயிற்று. ஜானகிராமனும் ரகுராமனும் பேசுவதாக இருந்த்து.

வெண்முரசு சென்னை கலந்துரையாடல்

வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை




அன்பிற்கினிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்களுடன் அ மலைச்சாமி எழுதுகிறேன்.

சென்ற ஞாயிற்றுகிழமையன்று சென்னையில் நடந்த வெண்முரசு கலந்துரையாடலில் புதியவனாக நான் கலந்து கொண்டேன். இதுவரை நான் கலந்துகொண்ட இலக்கிய கூட்டங்களுள் தாங்கள் பங்கேற்கும், தங்கள் வாசகர்கள் நடத்தும் கூட்டங்கள் முற்றிலும் வித்தியாசமானவை.

இன்றும் சென்னையில் நடக்கும் பல இலக்கிய கூட்டங்களை, சில பரிதாபத்துக்குரியவர்களே நடத்துகிறார்கள். வருபவர்களுக்கு டீயும், தவிட்டு ரொட்டியும் வாங்கி கொடுப்பார்கள். அந்த காசுக்கும் கஷ்டப்படுபவர்கள். அவர்கள் பேசும் இலக்கியம் கூட அதுபோல்தான் இருக்கும். அவர்கள் யாருமே நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிப்பதோ, பேசுவதோ கிடையாது.

சோற்றுக்கு போதாத வருவாயில் நான் வாழ்ந்து கொண்டிருந்த சமயங்களில் இப்படிப்பட்டவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் இவர்களால்தான் நான் இலக்கியம் வாசித்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

நான் இலக்கியத்தை வெறுத்த நாள் ஒன்று உண்டு. 2005 ல் சென்னையில் நான் மேற்சொன்ன வகையிலான இலக்கிய கூட்டத்தின் கவியரங்கில் கவிதை என்ற பேரில் சிலர் வாசிக்க கவியரங்க தலைமை என்ற பேரில் நான் முறைப்படுத்தி கொண்டிருந்தேன்.

அந்த விழா முடிந்து நான் வீட்டுக்கு கிளம்பி பேருந்து நிலையம் வந்து சட்டையை தடவினால் சட்டைப்பையில் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே இருந்தது. பேருந்து நடத்துனரை ஏமாற்ற மனமில்லாமல் கிண்டியில் இறங்கி அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்து அறைக்கு சென்றேன். அதன் பிறகு அது போன்ற கூட்டங்களுக்கு நான் செல்வதே இல்லை.

இதே நிலைமை சென்ற ஞாயிற்று கிழமையும் நடந்தது. நான் ஒரு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம் என்ற நினைப்பில் சோறு வடிக்காமல் கலந்துரையாடலுக்கு வந்துவிட்டேன். ஆழ்வார் திருநகரில் விழா நிறைவுறும் போதே மணி எட்டரையாகிவிட்டது. என் பையில் இருபது ரூபாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த காசில் நான்கு இட்லி வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன். பத்து மணிக்கு ஓட்டல் அருகே வந்து பையை துழாவினால் 18 ரூபாய்தான் இருந்தது. வேறு வழியில்லாமல் 10 மணிக்கு வீட்டுக்கு சென்று சமைத்து சாப்பிட்டேன். அந்த 18ம் மிச்சம்.

2005 ல் நடந்த தூரத்தை காட்டிலும் அன்று நடந்த தூரம் அதிகம். ஆனால் கொஞ்சம் கூட கோபமோ, விரக்தியோ இல்லை. மாறாக மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தேன். 

கலந்துரையாடலில் வழங்கப்பட்ட உணவும், அதில் பேசிய கருத்துகளும் என்னை வெகுவாக கவர்ந்தது. ஒரு சிறந்த இலக்கிய அனுபவமாக மாற்றியது. இதுவரை நான் பங்கேற்ற பலநூறு இலக்கிய  கூட்டங்களில் ஒன்றில் கூட இவ்வளவு நுட்பமான வாசகர்கள் இருந்தததே இல்லை. அதைவிட முக்கியம் இதுவரை நான் கலந்து கொண்ட எல்லா இலக்கிய கூட்டங்களிலும் நானே மிக இளையவனாக இருப்பேன். ஆனால் என்னிலும் இளையவர்களாக அரசன், அஜிதன் என இன்னும் சிலர் இருந்தனர்.

கலந்துரையாடலில் அதிகமாய் பேசப்பட்ட பாத்திரம் துரோணர்தான்.

என் வாசிப்பில் வெண்முரசின் கதா பாத்திரங்கள் அனைத்தும் ஒரு தத்துவ தரப்பாகவே உணர்கிறேன். வெண் முரசு முழுக்கவே சூதர்கள் சொல்லும் தத்துவங்களுக்கு விளக்கங்களாகவே கதாபாத்திரங்கள் உரையாடுகிறார்கள். சில இடங்களில் கதா பாத்திரங்களின் உரையாடல்களை, நிகழ்வுகளை சூதர்கள் தத்துவங்களாக தொகுக்கிறார்கள். ஆகவே சூதர்களின் உரையாடல்களை நான் மிகவும் சிலாகித்து வாசிப்பதுண்டு.

என் முதல்குருவான திரு.கோவி மணிசேகரன் அவர்களின் யாகசாலை என்ற புதினத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவ தரப்பாகவே அமைந்திருப்பதை நான் ரசித்து வாசித்திருக்கிறேன்.

கலந்துரையாடலில் வெண்முரசு கதாப்பாத்திரங்களின் தத்துவத்தன்மையை கவனிக்க வேண்டும் என்று நான் கூறினேன். ஏற்கனவே நீங்கள் கூறியதாகவே நான் கூறினேன். அதன்பின் இரண்டு மணி நேரம் வெண்முரசின் தத்துவ விவாதமாகவே நகர்ந்தது. அஜிதன் தத்துவ கடலில் மூழ்கி கலந்துரையாடலை ஒரு ஆழமான நிலைக்கு கொண்டு சென்றார். அதுதான் வெண்முரசு வாசிப்பின் கூர்மை என நான் நினைக்கிறேன். நானோ கரையில் நின்று பாதுகாப்பாக வேடிக்கை மட்டுமே பார்ப்பவன். இன்னும் தத்துவங்களின் பெயர்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் பிடித்திருக்கின்றன.  


தல்ஸ்தோய், காண்ட் பற்றியெலாம் அஜிதன் பேசினார். நான் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நாவலை மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவில்லை. அஜிதன் சொன்ன பின்பு அந்த புத்தகம் இதுவரை இருந்ததை காட்டிலும் இப்போது சற்று அதிகமாகவே என்னை உறுத்திக்கொண்டுள்ளது.  

மொத்தத்தில் இலக்கிய கூட்டங்களுக்கு வெண்முரசு கலந்துரையாடல் ஒரு ஆரோக்கியமான புதிய இலக்கணத்தை எழுதி வருகிறது.

அன்பன்
அ மலைச்சாமி

பக்தி



ஜெ

வெண்முரசின் நீலம் பகுதி மட்டும் தனித்துவமானது. மீண்டும் மீண்டும் வாசித்துகொண்டிருக்கிறேன். ஜயதேவர் முதலான பக்தர்களின் மனநிலைகளை பறி தெரிந்துகொள்கையில் அதெல்லாம் மிகையானது சாத்தியமானது அல்ல என்றுதான் நினைப்பேன் நீலம் அதெல்லாம் இன்றும் இன்றைய மொழியிலே சாத்தியமாகிறது என்பதற்கான ஆதாரமாக இருக்கிறது

பலவர்ணனைகளை புனைவு என்று நினைக்காமல் கண்ணனை கண்ணாரக் கண்டு எழுதியது என்றே வாசிக்கும்போது மனம் மயங்குகிறது

ஆனந்த்

நீலம் வர்ணனைகள்

 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்களின்  வெண்முரசு  நாவலை படிக்க வேண்டும் என்று தாங்கள் அந்நாவலை இணையத்தில் வெளியிட்ட நாளில் இருந்து எண்ணிக்கொண்டிருந்தேன்  . ஒரு வழியாக இரு நாட்கள் முன்பு வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அதிலும் என் கணவர் நீலம் பகுதி  வேறு  நடையில் இருப்பதாகவும் ஒவ்வொரு பகுதியும் தனித்தும் வாசிக்கலாம்  என்றும் கூறியதும், எனக்கு மிகவும் பிடித்த கண்ணனை  பற்றி முதலில் படிக்கவேண்டும்  என்ற ஆர்வம் மேலெழ நீலம்  முதல் பகுதியைப்  படிக்கத் தொடங்கினேன்.

ஊட்டி  சந்திப்பில் தங்களிடம் நான் ஒரு படைப்பில் வர்ணனை என்பது அதிகமாக இருக்கலாமா எவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்டேன்.அதற்கு காரணம் சில படைப்புகளின் வர்ணனைகள்  அதன் சுவாரஸ்யத்தை குலைத்து விடுவதாக எனக்கு தோன்றியதுண்டு .(இத  எதுக்கு இப்ப சொல்றேனு  கேட்காதீங்க  ---நிச்சயமாக ஞாபகம் வந்ததால  சொல்லலே )...நீலம் படிக்கும்பொழுது  அதன் நடையும் வர்ணனையும் நான் வாசிக்கிறேனா  அமுதை பருகுகிறேனா என்ற சந்தேகத்தையும் அமுதுண்ட பேரின்பத்தையும் எனக்கு அளித்தது...அளிக்கிறது....வர்ணனைகள்  எத்தகைய பேரின்பத்தை வாசகனுக்கு அளிக்கும் என்பதை இப்பொழுது உணர்கிறேன்.இப்பொழுது ராதை கண்ணனை காணும் மூன்றாம் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த எழுத்துக்களில் எந்த ஒரு மெனக்கெடலும் இல்லை....வார்த்தைகள் கோர்வையாக  தானே வந்து அமர்ந்துக்கொண்டனவோ என்று தோன்றுகிறது.  படிக்கும்பொழுதே தங்களை மானசீகமாக வணங்கினேன்...உங்களுக்கு உடனே கடிதம் எழுதினால் தான் மேலும் வாசிக்க இயலும் என்று தோன்றியது....எழுதிவிட்டேன்...தமிழமுதில் நனைய விடைபெறுகிறேன்...
எழுத வேண்டும் என்று தோன்றி அந்த கணத்தில் எழுதிய கடிதம்...பிழை இருந்தால் மன்னிக்கவும்...


தங்களை மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திக்க காத்திருக்கும் 
ரமா  பிரவீன்குமார்.

Wednesday, March 16, 2016

இரு ஐயங்கள்



ஜெ,

பிரபஞ்ச தரிசனம் எனும் பெருவெடிப்புக் கொள்கையில் ஆரம்பித்த வெண்முரசு துவக்கம் முதலே தனக்கான அறிவியல் நோக்கினைக் கொண்டுள்ளது.  மீயதார்த்தங்கள் கூட கனவுகளிலோ மயக்க நிலைகளிலோ அல்லது சூதர் பாடல்களிலோ தான் வருகின்றன. ஆனால் வெய்யோனின் சில தகவல்கள் அவை சாத்தியம் தானா எனும் கேள்விகளை எழுப்புகின்றன.  அவை :

1 . காண்டவ வன எரிப்பின் போது கந்தகம் கலந்த சீனர்களின் வெடி பொருள் பயன்படுத்தினர் என்பது- - சீனர்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தான் அவற்றைக் கண்டு பிடித்தனர் என தரவுகள் சொல்லுகின்றன. மேலும் ஈரம் நிறைந்த இடங்களில் அவை நீரில் ஊறி வெடிக்காது போய் விடும் என்பது என் ஐயம் .

2. சூரிய கிரகணம் கருநிலவு நாளில் தான் வரும் என்பது அறிவியல். பீமன் முழு நிலவு நாளில் விழவு என்று தான் துரியனை அழைக்கிறான். அன்று நிகழும் கிரகணமும் குறியீட்டு நோக்கில் மிகவும் பொருந்தினாலும் நிகழ் தகவினை கேள்விக்குள்ளாக்குகிறது.

வழக்கம் போல் தயக்கமும், சோம்பேறித் தனமும்.தாமதத்திற்கு மன்னிக்கவும். 

அன்புடன்,
செந்தில்நாதன்


அன்புள்ள செந்தில்நாதன்,

வெண்முரசு நாவல்கள் முன்வைக்கும் புனைவில் மானுட உணர்வுகள், உறவுச்சிக்கல்கள், அரசியல் ஊடுபாவுகள், வரலாற்றுப்புலம் ஆகியவை யதார்த்தம் சார்ந்து இருக்கும்.

அந்த யதார்த்ததின் மேலேயே சாகஸம் சார்ந்தும் தொன்மம் சார்ந்தும் மிகைக் கற்பனை இருக்கும். சாகசங்கள் சிறுவர்கதைகள் போலவும் தொன்மங்கள் தேவதைக்கதைகள், குலக்கதைகள், பேய்க்கதைகள் போலவும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மிகைபுனைவு மகாபாரதத்தின் பௌராணிகத்தன்மை அளிக்கும் சுதந்திரத்தை, குறியீட்டுத்தன்மையை தக்கவைப்பதற்காக. சிறுவர்கதையின் அழகியலைத் தவறவிட்டுவிட்டு புராணம் அமையமுடியாது.

போர்க்களக்காட்சிகள் அத்தகைய சாசசப்புனைவு வகையானவை. சிறுவனாக உருமாறி வாசகன் செல்லவேண்டிய இடங்கள் அவை. அவற்றுக்கு ஒரு சாத்தியக்கூறுத்தன்மை இருந்தால் மட்டும் போதுமானது.

வெடிமருந்து விஷயத்தில் அந்த சாத்தியக்கூறு என்னவென்றால் கிமு ஒன்றாம்நூற்றாண்டிலேலேயே சீனர்கள் வெடிமருந்து குறித்து எழுதிவிட்டார்கள். அதன் வெடிச்சாத்தியங்கள் பற்றி

அப்படியென்றால் அதற்கு முன்னரே கந்தகத்தின் எரியும்தன்மை குறித்து அவர்கள் அறிந்திருக்கக்கூடும். அது அழுத்ததில் வெடியாக ஆகும் என்பதை அறிவதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே விரைவில் எரியும் ஒன்றாக அதை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். சீன பேரிலக்கியங்களில் எரியம்புகள் பற்றிய ஏராளமான வர்ணனைகள் உள்ளன

இரண்டு, கந்தகம் பற்றிய ஞானம் மகாபாரதக் காலகட்டத்திலேயே இருந்தது. நாற்றமடிப்பது என்னும் பொருளில் அது கந்தகம் எனப்பட்டது. கந்தகம் உமிழும் கந்தமாதன மலை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன

ஆகவே விரைவாக எரியும் பொருளாக கந்தகக்கலவை பயன்படுத்தப்பட்டிருக்க ‘சாத்தியம்’ உண்டு. அது போதும் புனைவுக்கு. எரிபொருளாக அதை நனையாமல் கொண்டுசெல்வதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.

சூரியக்கிரஹணம் நிலவின் தொடக்க நாட்களில் மட்டுமே வரும். அப்படித்தான் இந்திரப்பிரஸ்தத்தின் நிமித்திகர் கணித்துமிருந்தனர். ஆனால் மிக அபூர்வமான ஒரு நிகழ்வாக அது நிகழ்ந்தது என்றே நாவல் சொல்கிறது. நிகழாது, நிகழ்ந்தது என்று. அது இரண்டாம்வகையிலான ஒரு ஃபேண்டஸி மட்டுமே.


ஜெ