Thursday, April 28, 2016

எதன்பொருட்டு?




”எதன்பொருட்டு துறக்க விழைகிறார்கள்? துறந்து அவர்கள் அடையும் அப்பிறிது இதைவிடவும் பெரிதா என்ன?”

என்றவரியை வந்து அடையும்போது மேலே சொல்லப்பட்ட அந்த உக்கிரமான பெண் வர்ணனை அர்த்தமாகிறது ஜெ

சாரங்கன்

உடல் உடலென்று காட்டி ...






ஜெ

இன்றைய வெண்முரசின் அபாரமான பெண்ணுடல் வர்ணனைகள் எங்கே உச்சக் கொள்கின்றன என்று பார்த்தேன். அன்னை, அதன்பின் செவிலி, அதன்பின் களித்தோழி, அதன்பின் கன்னியரான காதலிகள், அதன்பின் துணைவிகள், அவர்களின் முதுமை, மகளின் தோற்றம் எனச்செல்லும் சித்தரிப்பில் ஒரு மனிதனின் காமம் தோன்றிமுதிர்வடைவதன் காட்சி உள்ளது.

முழுக்கமுழுக்க உள்ளே நிகழ்வது. பெண்களை இப்படித்தான் துளித்துளி அனுபவமாகத் திரட்டிவைத்திருக்கிறோம். எல்லாருக்குள்ளும் இப்படி ஒரு கலைடாஸ்கோப் சித்திரம் இருக்கும். பல்லாயிரம் சின்னச்சின்ன உடல்காட்சிகள் .நிகழ்ச்சிகளின் துளிகள். விஸ்வாமித்திரருக்கு நேரில்பார்த்ததுதான் இருக்கும். நமக்கு சினிமாவும் சேர்த்தி. அந்தக்குளம் கலங்கி வருகிறது இதில். அது பெண்ணுடல் அல்ல


உடல் உடலென்று காட்டி உடலில்லை உடலில்லை என்று அலைத்து உடல்மட்டும் அளித்து ஒளிந்தும் காட்டியும் ஆடுதலே அது. நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம். என்னும் இரு வரிகளில் அந்த பெண்ணனுபவம் ஒரே அனுபவமாகத் தொகுக்கப்பட்டுள்ளது

சாமிநாதன்

இணைகள்

மூன்றாம் விழி



“இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் காணத்தெரிந்தவனுக்கு நந்தி மட்டுமே அளிக்கும் அழகு என்ன?” –என்று கேட்கின்றான் ஜராசந்தன். இந்த கேள்வியின் முடிவில் வடித்து எடுக்கப்பட்ட உண்மை என்பது இன்பம் என்பதாகும். அதாவது இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் அறிகின்றவனுக்கு இன்பம் கிடைக்கின்றது.

வலிக்காமல் கிடைப்பது எல்லாம் இன்பம் இல்லை வலிக்க வலிக்கப்பெற்றாலும் இன்மையை அறியும் மூன்றாவது கண்ணால் இன்பம் காணப்படுகின்றது.

காண்டவனத்தில் துயிலும் சயனருக்கு கல்லில் இருக்கும் அன்னை மூன்றாவது கண்ணுக்கு தெரிகிறாள். அவளின் பாதத்தில் தொடங்கி விழிவரைக்கண்டு சயனர் தன் கழுத்து அறுத்து இன்பத்தை உண்கின்றார்.
பௌண்டரீகத்தில் கிருஷ்ணவாசுதேவன் யுத்தக்கலத்தில் தன்னை நெருங்கி நெருங்கி படையாழியோடு வரும் வாசுதேவகிருஷ்ணனின் பாதத்தில் தொடங்கி விழியில் வந்து நிற்கிறான்.
//கைகள் அம்பெடுத்து வில்நிறைத்துத் தொடுக்க, அவன் விழிகள் கரியவனின் ஒளிவிடும் நகங்கள் கொண்ட கால்களை நோக்கின. மஞ்சளாடை அணிந்த தொடையை, கச்சையில் வேய்குழல்சூடிய இடையை, மென்மயிர்ச்சுருளணிந்த மார்பை, அணித்தோள்களை, குண்டலங்களாடிய காதை, இளநகை மலர்ந்த இதழ்களை. அவ்விழிகளை அவன் மிக அருகிலென கண்டான். அவன் ஆடியில் நாளும் கண்ட அதே விழிகள்.//
கிருஷ்ணவாசுதேவனுக்கு இங்கு இன்மையை அறியும் மூன்றாம் கண்கிடைக்கிறது. தொடையில் அம்புப்பட்டு தெரிக்க அலறிக்குனியும் தருணத்தில் கழுத்தறுக்கும் படையாழி. அக்கணத்தில் இருகைகளை குவித்து தேர்தட்டில் விழுகிறான். இன்மையை காண்கின்றது அவது மூன்றாம் கண்.  
சயனர் சென்றது ஒருபாதை, சிற்பத்தொழிலையே கண்ணாக கருத்தாக தவமாக செய்தவர். பௌண்டரீக கிருஷ்ணவாசுதேவன் சென்றது வேறுபாதை. கிருஷ்ணன்போல் நடிப்பது.  ஆனால் இருவருக்கும் இ்ன்மையை அறியும் மூன்றாம்விழி முளைக்கையில் அறியும் இன்பம் ஒன்றே. இருவருமே வலியறிகின்றார்கள் குருதி வடிக்கின்றார்கள்.. வலியோ குருதியோ அவர்கள் அறியும் இன்பத்தை தடுத்துவிடவில்லை.
சயனர் கண்டது அன்னையின் தரிசனம். பௌண்டரீக கிருஷ்ணவாசுதேவன் கண்டது வாசுதேவகிருஷ்ணன் தரிசனம். இரண்டும் ஒரே இன்பத்தை விளைவிக்கின்றது. இரண்டும் ஒன்றா? அபிராமிப் பட்டர் அன்னையை இந்தப்பாடலில்  அலைகள் உடைய கடலில் அனல்வீசும் கண்களை உடைய ஆதிசேடன்மீது துயிலும் மேலானப்பொருளே என்கிறார். அன்னையே அண்ணன் நாரயணன். நாரயணனே அன்னை நாரயணி என்று காட்டுகின்றார். 

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட்பணி அணைமேல் துயில் கூருலும் விழுப்போருளே! –அபிராமி அந்தாதி
ராமராஜன் மாணிக்கவேல்

Wednesday, April 27, 2016

காளியும் அன்னையும்

அழகாக வெட்டப்பட்ட புல்தரையை, செடிகொடிகள் மரங்களைப்பார்க்கும்போது எத்தனை அழகாக இருக்கிறது என்று நினைப்பது உண்டு. குறிப்பாக பனைமரத்தின் ஓலைகள் களையப்பட்டு தலையில் பச்சை கிரீடம் சூடியதுபோல் நிற்கும் பனைமரத்தை பார்க்கும்போது உடல்பயிற்சி கூடத்தில் இரு்நது எழுந்து வந்த இளைஞன்போல் வல்லமை காட்டிப்புன்னகைக்கிறது. .

இயற்கையை இயற்கையாகவே வைத்திருப்பது அழகா? இயற்கையை மனித எண்ணங்களுக்கு ஏற்ப வெட்டியும் நீட்டியும் வைத்திருப்பது அழகா? செயற்கையாக செவ்வதுதான் அழகுபோல் உள்ளது. ஆழ்ந்து பார்க்கும்போது இயற்கைதான் அழகு. இயற்கையின் சக்தியை வளைத்து வைக்கும் செயற்கையில் ஏது அழகு? செயற்கையின் அழகில் அழகு மட்டும் உள்ளது சக்தி இல்லை. இயற்கையின் அழகில் சக்தி உள்ளது அந்த சக்தியின் எல்லையை நம்மால் அளவிட முடியாததால் அதை அழகில்லை என்ற அச்சத்தில் அறுவெறுக்கின்றோம். பெண்ணும் இயற்கையின் சக்தியில் நிற்கையில் எல்லைக்கடந்தவளாக தெரிகிறாள் அச்சத்தை ஏற்படுத்துகின்றாள். நெறியில் வைத்து அவளுக்கு ஒரு செயற்கை அழகை தருகின்றோம். நம் கண்ணாடியின் அளவுக்கு மரத்தை வெட்டி வைத்துவிடுகின்றோம். 

// முதலில் தோள்களை குறுக்குங்கள் இளவரசி. தோள்நிமிர்வென்பது ஆண்மை. தோள்வளைதலே பெண்மை” என்று செவிலியர் அவர்களுக்கு கற்பித்தனர். “தோள்கள் வளைகையில் இடை ஒசியும். கை குழையும். விழிகள் சரியும். குரல் தழையும். நகைப்பு மென்மையாகும். ஓரவிழி கூர்கொள்ளும். சொற்கள் கொஞ்சும். ஆண்களின் நிமிர்வை எண்ணுகையில் உடல்தளரும். வியர்வை குளிர்ந்து முலை விம்மும். நேர்நின்று நோக்காது தலைகவிழ்ந்து காலொன்று தளர இடை ஒசிய முலைதழைய நின்றிருப்பீர்கள். மேலுதட்டில் மென்னீர் பூக்கும். விழியோரம் கசியும். அத்தருணத்தில் நீங்கள் பெண்ணென்று உணர்வீர்கள். அதுவே பேரின்பம் என்பது.” ஒவ்வொரு நாளும் அவர்களின் தோள்களைப்பற்றி “சற்று தளர்வாக. சற்று குழைவாக. வீரன் நாணேற்றிய வில் என” என்று சொல்லிச்சொல்லி வளையச்செய்தனர். “காற்றில் ஆடும் கொடிபோல. கனி கொண்ட செடிபோல. வேள்விப்புகைபோல” என்று காட்டி பயிற்றுவித்தனர்.//





இயற்கையை வெட்டி நீட்டி செயற்கை அழகில் வைப்பதுபோல்தான் பெண்ணை தெய்வமாக்குவதாக கல்லாக்கிக்கொண்டு இருக்கிறது உலகம். கல்லில் கனத்து கனத்து அவர்கள் கூன்விழுந்தவர்கள் ஆகிவிடுகிறார்கள். நெறி என்பதே ஒரு வாள் அது இயற்கையை வெட்டி வெட்டி பார்வைக்கு ஒரு அழகை உண்டாக்கி அதன் நிமிர்மை சக்தியை அழித்துவிடுகிறது.

//பெண் எனும் தெய்வத்தை பொற்பென்றும் பொறையென்றும் குலமென்றும் நெறியென்றும் அணியென்றும் ஆடையென்றும் ஆறுவகை மந்திரங்களால் கட்டி பீடத்தில் அமரச்செய்திருக்கிறோம். //



நிர்வாணமாக வந்த பிரமதத்தன் தனது நூறு மனைவிகளுடன் ஹிரண்யவனம் காட்டில் நுழைந்து அவர்களுக்கும் நிர்வாணம் அளிக்கிறான். அந்த வனத்திற்கு கன்யாவனம் என்ற பெயர் உருவாகிறது. அந்த வனத்திற்கு நைஷ்டிகர் அன்றி பிறர் செல்லக்கூடாது என்ற நெறி வந்ததுதான் அழகு.

இயற்கையின் சக்தியெனும்  அழகை அறியாமலே நெறி இயற்கையை வெட்டி வெட்டி ஒரு அழகை உண்டாக்குகிறது. சக்தியே ஒரு அழகுதான் அவள் தில்லைக்காளி. அவளை சங்கிலிப்போட்டு கட்டிவைத்துவிட்டு. அவளுக்கே அணிமணிகள் புனைந்து பொற்சபையில் புன்னைக்க நிற்க வைத்தோம் சிவகாமியாக.

தில்லைசிவகாமி உதடுபிரியாமல் புன்னகைக்கிறாள்.  தில்லைக்காளி பல்தெறிய சிறிக்கிறாள். அவளுக்கு வீடு. இவளுக்கு காடு. 

ராமராஜன் மாணிக்கவேல்

நகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)



    ஒரு குழந்தை பிறரைப்போல நடிக்க முற்படுவதன் மூலமே கற்றுக்கொள்கிறது. பெரியவர்கள் பேசுவதைப்பார்த்து  அதைப்போல் பேசக் கற்றுக்கொள்கிறது அவர்கள் நடப்பதைப் பார்த்து தானும் தன் சிறு பாதங்களை தரையில் ஊன்றி நடக்க முயல்கிறது.   வளர்கையில் நடனம் இசை அனைத்தும் மற்றவர்களின் செயல்களை திரும்பச்செய்வதின் மூலமே கற்றுக்கொள்கிறது. அதுவரை சரி. ஆனால் யாரோ ஒருவரால் கவரப்பட்டு அவரைப்போலவே தன்னை ஆக்கிக்கொள்ள நினைத்து அவரைப்போல் நடை உடை பாவனைகளை கைகொண்டு நாம் நம்முடைய வாழ்வை வாழாமல் பிறரை நடிப்பது எப்படி சரியாகும்?   
 
  உருவங்களை நகலெடுத்தல்: இளைஞர்கள் ஆடைகள், பாவனைகளில் பிரபல நடிகர்களை நகலெடுக்க முயல்கிறார்கள். பெண்கள் ஏதோ ஒரு பெண்ணுருவை கற்பனை செய்து தன் புருவங்களை திருத்தி, உடலின் வண்ணங்களை மாற்றி, தன் சுருண்ட முடியை நேராக்கி, நேரான முடியை சுருள் முடியாக்கி, உடலை பெருக்க வைத்து, இளைக்க வைத்து என கடவுள் தனக்கு கொடுத்திருக்கும் உடல் வடிவை மறுதலித்து வேறு உடலாக்குகிறார்கள். வர வர பெண்கலின் முக அமைப்பு ஒன்றுபோல ஆகிவருகிறது.  எலும்புகளை மாற்றி வடிவமைக்க இதுவரை எளிய வழியில்லாத ஒரே காரணத்தால் நாம் ஒவ்வொருவரையும் தனித்தனியே அடையாளம் காண முடிகிறது. இல்லையென்றால் ஒரு பொம்மைத் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த பதுமைகளைப்போல்  அனைவரின் தோற்றமும் ஒன்றே என ஆகியிருக்கும்.
   ஆளுமையை நகலெடுத்தல்:   நாம் நமக்கென இருக்கும் இயல்பை மாற்றிக்கொண்டு ஏதோ ஒரு  ஆளுமையை நகலெடுப்பதிலும் ஈடுபடுகிறோம்.  பல நல்ல நடிகர்கள் மக்களால் போற்றப்பட்ட அவர்கள் நடித்த கதாபாத்திரத்தின்படி அவர்களுக்கென ஒரு ஆளுமை  உருவாகியபிறகு அந்த ஆளுமையை நகலெடுப்பவர்களாகவே அந்நடிகர்கள் மாறி தன் திறனையெல்லாம் வீணடித்துக்கொண்டதைப் பார்த்திருக்கிறோம்.  நடிப்புத் துறையில் மட்டும்தான் என்றில்லை.  அரசாங்க அதிகாரிகள் விரும்பியும் விரும்பாமலும்  முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு யாரோ எப்போதோ கற்பித்து வைத்திருக்கும் ஒரு ஆளுமையை நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலதிகாரிகள்  எல்லோரும் ஒரு ஆளுமையை நகலெடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு அந்த ஆளுமைக்கேற்ற இயல்பு  இருப்பதில்லை.  ஒரு ஆளுமை என்பது அவர்கள் இயல்பாகக் கொண்டிருக்கும் குணத்தின் காரணமாக, அவர்கள் வளர்ப்பு மற்றும் பண்பாட்டின் காரணமாக ஏற்படுவது.   ஆனால் பெரும்பாலானோர் தம் இயல்புகளுக்கேற்காத ஒரு ஆளுமையை நகலெடுக்க முயல்கிறார்கள்.   அந்த ஆளுமையை ஒரு கவசம்போல் அணிந்துகொண்டிருக்கிறார்கள்.  அந்த பொருத்தமற்ற கவசத்திற்குள்ளே தன்னை அடைத்து வைத்துக்கொள்கிறார்கள். அது தன் இயல்பான குணத்தை அழித்து ஆன்மாவை நசுக்கிவருவதை அவர்கள் உணர்வதேயில்லை. அதன் காரணமாக  பின்னர் பலவித உளவியல் சிக்கலுக்கு அவர்கள் ஆளாகவேண்டி வருகிறது. மேலும் அவர்கள் இப்படி நகலெடுப்பதில் சிலசமயம்  போலித்தனம் வெளிப்பட்டு மற்றவர்களின் நகைப்புக்கு ஆளாகிறார்கள். 
 
 
       பௌண்டரீகன்  இதைப்போல் இளையயாதவரின் ஆளுமையை  நகலெடுக்க முயல்கிறான்.  கிருஷ்ணனின் ஆளுமையை விரும்புவதும் அந்த ஆளுமையே உருவாய் நிற்கும் கிருஷ்ணனை வெறுப்பதுவுமான ஒரு உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான்.  தான் அணிய வேண்டிய அங்கியை இன்னொருவன் அணிந்திருப்பதைப்பார்ப்பதில் வரும் பொறாமையிலும் கோபத்திலும் கிருஷ்ணனை பழித்துரைக்கிறான்,  பகைகொள்கிறான். தனக்கு பொருத்தமற்ற  கிருஷ்ணனின் ஆளுமையை சுமந்துகொண்டு தடுமாறி மற்றவரின் ஏளனத்திற்கு ஆளாகிறான்.  கிருஷ்ணனுக்கு இப்படி தன்னைப்போன்ற வடிவமுடைய ஒரு   உலோக கவசத்திற்குள் சிக்கி புழுங்கி  வெளிவரமுடியாமல்  தத்தளித்துக் கொண்டிருக்கும்   பௌண்டரீகன் மேல் இரக்கம் வருகிறது.  அவனுக்கு தன் ஆழியின் மூலம் விடுதலை அளிக்கிறான். 
 
   தன்னை நினைத்து நினைத்து தன்னைப்போலாக  முயன்றவனை தானாகவே காண்கிறானோ கிருஷ்ணன்? அதனால்தான் என்னவோ  பௌண்டரீகன் இறப்பின் நிகழ்வில்  தன் இறப்பைக் கண்டதாக அறிகிறான் போலும். 

தண்டபாணி துரைவேல்