Sunday, August 28, 2016

கிருஷ்னனும் கோகுலமும்



நீலம் 30வது பகுதியில் அக்ரூரர், கிருஷ்ணனை  காண்பது விருந்தாவனத்தில் நீலக்கடம்பின் அடியில் குழலூதிக்கொண்டிருக்கும்போது.. சொல்வளர்க்காட்டில் இன்றைய பகுதியில், அக்ரூரர் உஜ்ஜயினியில் சாந்தீபனி  முனிவரின் குருகுலத்தில்  காண்பதாக வருகிறது (கிருஷ்ணன் வாயிலாக) அங்கிருந்தே மதுராவுக்கு கிளம்புவதாகவும் உள்ளது..ஏதும் திருத்தம் தேவையா?

சுரேஷ் கோவை.



 அன்புள்ள சுரேஷ்
ஆம் அதை நான் முன்னரே பார்த்துவிட்டுத்தான் அப்படி அமைத்தேன். உண்மையிலேயே பாகவதக் கதையில் கிருஷ்னன் எப்போது கம்சனைக்கொன்றான், கொன்றபின்னரா சாந்திபனிக்குச் சென்றான் என்பதெல்லாம் குழப்பங்கள்.

இங்கே அக்ரூரர் அவனை கோகுலத்தில் இருந்து அழைத்துச்செல்கிறார். அதன்பின்னர் அவன் சிலநாள் அக்ரூரிடம் பயின்றிருக்கலாம் . அதன்பின் அவன் தந்தை அவனை சாந்தீபனியில் சேர்க்கிறார். சாந்திபனியில் அக்ரூரர் வந்து அவன் கடமையைச் சொல்கிறார். கம்சனைக்கொல்ல அழைத்துச்செல்கிறார் என வைத்துக்கொண்டேன்

கிருஷ்ணனை ஒரு இளைஞனாக ராதை பார்ப்பதெல்லாம் அவள் கற்பனையே. அது நீலத்தில் உள்ளதுதான்

ஜெ

சொற்கள்





ஒருவர் தன் வாழ்நாளெல்லாம் எதை தன்னிடமிருந்தே மறைத்துவருகிறாரோ அதை அவரிடம் சுட்டும் சொற்கள். அவற்றை ஒருபோதும் நாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் கொல்லும் சொற்கள் எல்லாம் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை’

என்ற தருமனின் வரிகளை இன்றைய அத்தியாயத்தின் முழுமையாக கொள்கிறேன். ஒருவகையிலன்றி ஒருவகையில் அதை வாழ்க்கையில் உணராதவர்கள் இருக்கமாட்டார்கள். இது அறிவுள்ளவர்களுக்கு இன்னும் அதிகம். அறிவுக்கூர்மைகொண்டவர்கள் பிறர் மனங்களை கூர்மையாகப்பார்க்கும் தன்மைகொண்டவர்கள். அதனால் அவர்களால் பிறரை மிகக்கூர்மையாகப் புண்படுத்தவும் முடிகிறது என தோன்றுகிறது

ஜெயராமன்

யோகியின் மனம்




வெண்முரசின் அற்புதமே அது வாழ்வின் உளவியல் சிக்கல்களின் நேர்திசையையும் எதிர்திசையையும் அதன் மையத்தில் அமர்ந்து காணச்செய்வதுதான்.

அகமோ புறமோ வாழ்வின் கணங்களின் ஒருபுறத்தைமட்டும்தான்ந நாம் பார்க்கமுடியும். அதன் மறுமுனை என்னவென்று காணவோ அறியவோ முடியாது. முன்பக்கம் அமுதாக இருந்தால் பின்பக்கம் விடமாகத்தான் இருக்கவேண்டும் என்றோ அல்லது அமுதாகத்தான் இருக்கும் என்றோ யாரும் சொல்லிவிடமுடியாது.  அமுதம் விடமாகவோ அல்லது விடம் அமுதமாகவோ மாறுவதையும் வாழ்க்கை கணங்கள் நமக்கு தந்துக்கொண்டே இருக்கிறது. , அமுதம் அமுதத்தையும் விடம் விடத்தையும் உருவாக்கும் கணங்களும் உண்டு, எது உருவாகினாலும் வாழ்வின் கணங்களின் மையத்தில் நின்று நோக்கும் சமநிலை மனம் அமைந்தவன் யோகி.

யோகியின் மனம் தரசுமுள்போல் சமநிலைக்கு ஏங்கிக்கொண்டே இருக்கிறது. துளிக்காற்றின் எடைக்கூட அதை சமன்குலைக்க செய்துவிடுகிறது. பிரபஞ்சம் அதை லீலை என்கிறது. லீலையும் மாயையும் ஒன்றென வந்து நிற்கிறது இக்கணம். எது லீலை?, எது மாயை? மாயையை மையத்தில் நின்று நோக்கினால் லீலை. லீலையை துருவத்தில் நின்றுநோக்கினால் மாயை. இந்த உண்மையை கண்டுக்கொள்ள கண்ணன் கம்சனை கொல்லவேண்டி இருந்தது. சாந்தீபனி முனிவரின் குமரனை மீட்டுக்கொண்டுவர வேண்டி இருந்தது.

கம்சன் மூலம் கொள்ளப்பட்ட குழந்தைகள் அனைவரும் லீலையின் ஒரு அங்கும் என்று சொல்லும் குருநாதர் மாயையின் மையத்தில் நின்று அதைப்பார்க்கிறார் அதனால் அது லீலை என்று தெரிகிறது.

காணமல் போன மகன் இறந்தான் என்று ஏங்கிக்தவிக்கும் குருநாதர் அவன் உயிருடன் இருக்கிறான் என்றதும் பார்க்கத்துடிக்கும்போது லீலையின் துருவத்தில் நின்று லீலையை மாயை என்று சினக்கிறார்.
.  
மாயைக்கும் லீலைக்கும் உள்ள இந்த ஊசலாட்டத்தை கண்ணன் குருநாதருக்கு சுட்டும் இடத்தில் அவன் சொற்கள் அம்பாகிவிடுகின்றன. ஒரு சொல் வெல்லும் ஒருசொல் கொல்லும் என்பார்கள். லீலை மாயை என்ன வென்று வென்றுகாட்டும் கண்ணனி்ன் சொல் குருநாதரை கொல்லும் சொல்லாகவும் உள்ளது.

லீலை மாயையின் வழியாகவே முதலில் வந்து உள்ளத்தில் நிரம்புகின்றது. இது மாயை என்று நிரம்பிய அனைத்தையம் கொட்டி உள்ளத்தை வெற்றுப்பாத்திரமாக வைப்பவன் இடம் லீலை நிரம்பிவிடுகிறது. தந்தையை வெறுத்து வென்றுவரப்போகும் மகன்கள் எல்லாம் மாயையால் நிரம்பிய உளளத்தோடு ஓடுகின்றார்கள், மாயையை கவிழ்க்கத்தொடங்கியப்பின்பு லீலை நிரம்பத்தொடங்குகின்றது.

அன்னை தந்தை கணவன் மனைவி தந்தை மகன் அண்ணன் தம்பி குரு சீடன் என்று ஒன்றாகவே இருக்கும் இரண்டுகள் மாயைில் பிரிந்து லீலையில் இணைகின்றன. இந்த உண்மையைக்காட்ட சாந்தீபனி குருவும் அவரின் மைந்தரும் எத்தனை பெரிய வாழ்க்கை நாடகத்தை நடத்தவேண்டி இருக்கிறது. சாந்தீபனி முனிவரும் அவர் சீடன் கண்ணனும் எத்தனை சொற்கள் பேசி வாழ்ந்துக்காட்டவேண்டி உள்ளது. அற்புதம்ஜெ. சொற்களின் வழியாக வைரங்கள் செய்கின்றீர்கள் நன்றி.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

ஊசி

 
 
அன்புநிறை ஜெ.மோ,

தங்கள் வெண்முரசு வாயிலாக தொன்மை அறிவின் தரிசனங்கள் கிடைக்கும் தருணங்கள் மகத்தானவை.

குறிப்பாக சொல்வளர்காடு சிலிர்க்க வைக்கிறது. உங்களை குருவாக வரித்துக் கொண்டே இந்தப் பயணம் முன் நகர்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் (ஜூன் 9) , ஒரு சிறு படிமத்தை எழுதியிருந்தேன்.

சொல்வளர்காடு – 21 ஆம் அத்தியாயத்தில் அது தொடர்பான குறியீட்டை மேம்பட்ட கருத்துச் செறிவோடு படிக்கையில் மனம் நிறைந்தது.

சிறு குழந்தை தன் ஓவிய முயற்சியை வீட்டுப் பெரியவர்களிடம் காட்டும் அதே உணர்வோடு, உங்கள் பார்வைக்கு என் முயற்சி:

ஊசிமுனை நூலதுவும்
உள்நுழைந்து ஊடாடும்
நாசிதனில் சுவாசமது
ஓடும்வரை ஓடும்
நூலதுவும் திரிந்தலைந்து
ஆடையென நெய்யும்
ஆடையதை தானெனவே
நம்பிடவே செய்யும்
கைபுனையும் கலையதனை
நூலின்திசை சமைக்கும்
கைவிசையை நூல்மறக்க
காற்றின்வழி பறக்கும்
நிலைமறந்த நூல்திரிந்து
சிக்கிநிலை அழியும்
சிக்கல்அது விடுபடவே
விதியின்கரம் அறுக்கும்
அறுத்தகரம் அறுந்ததிரி
வரைந்தகலை மிஞ்சும்
முடிந்தகதை மறந்தபடி
ஊசியது உறங்கும்

மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ

யானை






ஜெ

அர்த்தமின்மையைத்தான் எல்லா உச்சகட்ட ஞானங்களும் சென்று அடைகின்றன. அர்த்தம் இருக்குமென்றால் அது நாம் உருவாக்கிக்கொள்ளும் அர்த்தம்தான். அதைநோக்கிச் சென்று அதைக் கண்டடைந்ததனால் தான் யோகியர் அதன்மேல் அமர்ந்திருக்கிறார்கள். அதை எதிர்பாராமல் அர்த்ததை உருவாக்கீக்கொண்டே வாழ்ந்து கடைசியில் அதைக் கண்டுபிடிப்பதனால்தான் குடும்பஸ்தர்கள் சோர்வடைந்து கடவுளை சரணடைகிறார்கள்

அர்த்தமின்மைமீது உட்கார்ந்திருக்கும் யோகியை இருட்டில் யானைமேல் அமர்ந்திருப்பவன் என்று சொன்ன உவமை ஒரு முக்கியமான வரி. அந்த யானையின் தந்தங்களைப்புன்னகை என்று சொன்னதும். எனக்கு கஜசம்காரமூர்த்தி ஞாபகத்துக்கு வந்தது

சுவாமி

நச்சுப்பாம்பு






‘நச்சுப் பாம்பை வளர்ப்பவன் அதனால் கடிபட்டாகவேண்டும் அல்லவா? உன்னிடமும் வளர்கிறது அச்சொல்’ என்று ஆசிரியர் கிருஷ்ணனிடம் சொல்லும் இடம் முக்கியமானது. தத்துவக்கொள்கைகளை புத்தியில் ஏற்றுக்கொண்டு அதையே சொல்லிக்கொண்டிருப்பவர்கள் உண்டு. சொல்லிச் சொல்லி அவர்கள் அறியாமலேயே அதுவாக ஆகிவிடுவார்கள். ஒருநாள் வாழ்க்கையில் அதன்மீது அடிவிழும். அப்போது தெரியும் ஒரு தத்துவம் எப்படி வாழ்கையாக ஆகிரது என்று.

இங்கே சொல்வளர்காட்டில் இந்த விஷயம் வந்துகொண்டே இருக்கிறது. தத்துவத்தை வாழ்க்கையுடன் இணைப்பதில் வெற்றியும் தோல்வியும் அடைபவர்களின் கதையாகவே சொல்வளர்க்காடு நாவலை வாசிக்கமுடியுமென நினைக்கிறேன்

நடராஜன்