Thursday, December 15, 2016

எல்லை




மனம் நேற்று வெற்றிடத்தில் விழுந்தபோது சொல்வளர்காடு நினைவுக்கு வந்தது.

//சகதேவன் “மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் இரக்கத்திற்குரியவர்கள்” என்றான்.//

மானிடன் மட்டும் அல்ல உயிர் உள்ள உயிர் அற்ற எல்லா ஜீவன்களும் எல்லை கடக்கும்படியாகவே புடவி தனது ஒவியத்தூவியை வளைக்கிறது. அந்த எல்லைக்கடத்தலே ஒரு ஒவியமாக அமைகின்றது. அது நன்மையா தீமையா என்பது எல்லாம் புடவிக்கு இல்லை. புடவிக்கு ஓவியம் வேண்டும் அவ்வளவுதான்.

இங்கு வெண்முரசு சுட்டுவது எல்லைக்கடந்து செல்வதைப்பற்றி அல்ல எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்களைப்பற்றி. எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் அடைந்தவற்றால் உலகுக்கு பெரிதாக தெரிகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு சிறிதாக இரக்கத்திற்கு உரியவர்களாக ஆகிவிடுவதை அவர்களாலும் அறியமுடியாத நுண்மையில் பிரபஞ்சம் அறிகின்றது. பிரபஞ்சம் அறியும் அந்த நுண்மையை மனிதன் அறிந்தால் மனிதன் என்னாவான்? லீலையில் விளையாடமாட்டான், அவன் விளைாயாடவேண்டும் அதற்காக னிதனின் கண்களை பிரபஞ்சம் கட்டிவிட்டு விளையாட சொல்கிறது. பிரபஞ்சத்திற்கு விளையாட்டு நடக்கவேண்டும். காரணம் தனது அசையாமையில் இருந்து தனது லீலைக்குவந்த பிரபஞ்சம் விளையாடலால் நிறைகிறது. இந்த விளையாடலை அறிந்துக்கொள்ள விளையாடிக்கொண்டே விளையாட்டுக்கு அப்பால் இரு என்கிறது புடவி. ஆனால்  ஆணவம் அவ்வளவு எளிதில் விளையாட்டுக்கு அப்பால் இருந்து விளையாட விடுவதில்லை.

// நகுலன் அவன் சொன்னதை விளங்காமல் கேட்டுவிட்டு “ஆனால் அத்தனை மானுடரும் மானுடருக்குரிய எல்லைகளை மீறுவதற்காகத்தானே முயன்றுகொண்டிருக்கிறார்கள்? அவ்வெல்லைக்கோட்டில்தானே முட்டிமோதுகிறார்கள்?” என்றான். “ஆம், அந்த ஆணவமே இப்புவியிலுள்ள அனைத்தையும் படைத்தது. இங்கு இத்தனை துயரையும் நிறைத்தது” என்றான் சகதேவன். “நீ மூத்தவரைப்போல் பேசத்தொடங்கிவிட்டாய்” என்றான் நகுலன். சகதேவன் புன்னகைத்தான்.//

வெளியே இடி மின்னல் மழை என்று பெய்துக்கொண்டு இருக்க உள்ளே மூட்டப்படும் ஆனல் எரியும் பிரமகபாலத்தில் பிரசண்டன் பிரசன்னர் பிச்சாடனர் இருக்கிறார்கள். ஒருவன் புடவியை கதையாக்கிக்கொண்டு, ஒருவன் புடவியை தத்துவமாக்கிக்கொண்டு, ஒருவன் புடவியை பித்தென்று புன்னகைத்துக்கொண்டு. எல்லாமம் ஒரு தலைதான். குகை ஆழத்தில் இருளில் எங்கோ இருந்தும் இல்லாததுபோல் ஆன்மகிளி வழி அறிந்தும் வழியறியாமலும் பறக்கவும் பறக்கமுடியாமலும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.  

உடல்  கர்மகளால் கட்டப்பட்ட மகாவீரியம், உடல் அன்னத்தை உண்ணும் அன்னத்தால் கட்டப்படும் அலைக்கடலை எதிர்த்து நிற்கும் பெரும் புற்றுகபுரி. இறுதியில் அது ஒரு வாள் இருந்த உறை மட்டும். 
  
//உறையிருந்த வாள் என்று அவ்வரண்மனை தோன்றியது. உறையின் வடிவும் கூரும் இருந்த வாளினால் அமைவது. இன்மையென வாள் அதனுள் எப்போதுமிருந்தது.//

உள்ளே இருந்த கிளியே நீ உள்ளே இருக்கும்போதும் வெளியே பறக்கும்போதும் நீ அப்படியேதான் இருக்கிறயாய், உனக்கு ஒன்றும் ஆவது இல்லை. நீ தீயால் சுடப்படுவதில்லை

ஆர்
ல

கற்பனை




"இவை மாகேந்திரம் எனப்படும் தொன்மையான வேதமரபைச் சேர்ந்த சடங்குகள்">

Indian History and Architecture தளத்தில் இன்று வெளியான சுவாரசியமான குறிப்பு: ஆய்வாளர் வரலாற்றாய்வாளர் டி என் ராமச்சந்திரன் அவர்களின் கருத்துப்படி மாமல்லபுரம் சிற்பங்கள் எழுந்ததில் முதலாம் மகேந்திரவர்மனுக்கு பெரிய பங்கு உண்டு. 

ஆறாம் நூற்றாண்டில் 'கிராதார்ஜுனியம்' காவியத்தை எழுதிய கவி பாரவியுடன் மகேந்திரவர்மன் மாமல்லபுரத்திற்கு வந்திருக்கவேண்டும் என்றும், அவரது காவியத்தை கேட்டு அதைக் கல்லில் வடித்ததே  புகழ்பெற்ற 'அர்ஜுனன் தபசு' புடைப்பு என்றும் ராமச்சந்திரன் கருதுகிறார்.

வரலாற்றாய்வாளர்கள் இதை இன்னும் முழுதாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கற்பனை செய்தால் நன்றாக இருக்கிறது இல்லையா !  மாகவியும் மாமன்னனும் இணைந்து தங்கள் கற்பனையால் உருவாக்கியது ...

 
 
மதுசூதன் சம்பத்

விழிகள்




இன்று வாலியும் அர்ச்சுன்னும் உரையாடுவதும் இருவரும் உணரும் விழிகள் அதன் வழியாக வாலி கிருஷ்ணனுக்கு எதிராக அர்ச்சுனனை உசுப்பேற்றும் முயற்சி என அனைத்தும் காவியத்தின் உச்ச பட்ச கற்பனையை குறிக்கின்றன. ஆசிரியரின் புனைவுலக சாதனையின் இன்னொரு மைல்கல்.


அர்ச்சுனன் இந்திரலோகத்திலிருந்து மட்டும் சாபத்தை வாங்கி வருவதை சீரயல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் என்னென்னவாக இருக்கும் என நேற்று யூகித்ததும இன்று யூகிப்பதும் வெவ்வேறாக இருக்கின்றன.


ராமன் தன் வாழ்வில் அறம் பிறழ்ந்து செயல்படுவது வாலிவதத்தின் போதுமட்டும். அந்த தருணத்தின் நோக்கோடே கிருஷ்ணனின் விழிகள் அமைந்திருப்பது என்ற விவரணை, அதை வீழ்ந்த ஒரு இந்திர மைந்தன், வீழ்ந்த இன்னொருவனிடம் சொல்வது ஆகியவை கலந்த இந்த அத்தியாயம்  இந்த காவியத்தின் நுட்பங்களுக்கான ஒரு சோற்றுப்பதமாக உள்ளது


காளிப்பிரசாத்

நால்வர்

 
 
 
ஜெவின் தமிழ்ப் புலமை என்றுமே வியப்பூட்டக்கூடியது. இன்று(கிராதம் 56) சனகாதி முனிவர் நால்வருக்கும் (இவர்கள் நால்வருக்கும் தான் தென்திசை இறைவன் - தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழிருந்து மோனத்தவத்தில் ஞானம் அருளினான்) அவரவர் பெயரின் பொருளைத் தந்திருக்கிறார்.


சனகர் - என்றுமுள தொன்மை
சனாதர் - ச + அநாதர் - எக்காலமும் அழிவின்மை
சனந்தனர் - ச + அனந்தர் - குன்றாஇனிமை
சனத்குமாரர் - ச + குமாரர் - வளரா இளமை

சன என்ற சம்ஸ்கிருத சொல் - பழமையான, தொன்மையான என்ற பொதுப் பொருள் தருவது. அதற்கு நான்கு வித பொருத்தமான தமிழ்ச் சொற்கள். வெண்முரசின் சிறப்புகளில் ஒன்று அது வாசகருக்குத் தரும் பரந்து பட்ட சொற்கள் மற்றும் சொல்லாட்சிகள். 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Wednesday, December 14, 2016

இது கங்கை

 
 
சிறுமி  ஒருவள், தன் துணிப்பைக்குள் இருந்து, இது இமயம் , இது கங்கை என பாரதத்தை பரப்பிவைப்பது போல, மூன்றே அத்தியாயங்களில், காமநிறைவை சொல்லிவிட்டீர்கள். 

நான் , அவள் பெற்ற பிள்ளைகளை திரும்ப கேட்பாள் என்றே நினைத்திருந்தேன். 

கோல் சுழற்றியவளின் கன்ன சிவப்பும், குனிந்து மறுமொழி சொன்ன அர்ஜுனனின் குறுநகையும் , பரிவாரங்களுடன் வெளியேறும் இந்திரனும் மனதில் ஓவியமாகிவிட்டார்கள்.

நன்றி !

பேரன்புடன்,
ராஜா

Monday, December 12, 2016

ஃபாஸம் பிரதிஃபாஸம்



சாதாரண வாசகன் உளறல்போலவோ வெறும் வார்த்தைகள் போலவோ கடந்துசெல்லும் வரிகளால் ஆன இந்த அத்தியாயத்தை இந்நாவல் முடிந்தபின்னர் தனியாகத்தான் வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அத்வைதத்தின் உலகக்காட்சியின் அற்புதமான சித்தரிப்பு இது

உணரப்படுகையிலேயே பொருள் உருக்கொண்டது. 
உணரப்படும் வடிவை அது சூடியது. 
உணர்வுக்கேற்ப உருமாறியது. 
மீண்டும் கருநிலைகொண்டது. 


அந்த காட்சி நுண்மையாகி நுண்ணணுவாகி அணுவ்வுக்குள்ளும் அதே மாண்புடன் இருக்கிறது

நுண்ணணு வடிவ மாமலைகள். 
நுண்துளிக் கடல்கள். 
ஒளித்துளியென வானம். 
அங்கே ஒவ்வொன்றும் ஆயிரம்கோடிமடங்கு எடைகொண்டு 
கணத்திற்கு ஆயிரம் மடங்கென எடைபெருகின. 

இருத்தலும் இன்மையுமாகி அவை ஒரு முடிவில்லாத நடனத்தில் இருந்துகொண்டிருக்கின்றன. 

எடைமிகுந்து அவை இன்மையென்றாகி 
அவ்வெல்லையில் சென்றுமுட்டி 
மீண்டும் எடை இழந்து மீண்டுவந்தன.

அத்வைத வகுப்பில் பிரபஞ்சம் ஃபாஸம் என்றும் பிரதிஃபாஸம் என்றும் மாறிமாறி உருவம் கொள்வதை விளக்கு விளக்கு என விளக்குவார்கள். இந்த சுருக்கமான கவிதை அதை ஒரு படிமமாகவே சொல்லிவிடுகிறது

ஆனால் இத்தகைய வரிகளை இப்படி உரைநடை ஓட்டத்தில் சொல்லிவிட்டுச்சென்றால் வாசகர்கள் கவனிப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு

சிவா