Thursday, November 23, 2017

மீள்உருவாக்கம்



வணக்கத்திற்குரிய ஜெ,

 அன்புடன் கோ எழுதுவது.நலமென நம்புகிறேன்.கடந்த மூன்று மாதங்களாக வெண்முரசை வாசித்து வருகிறேன்.முதற் கனலில் துவங்கிய பயணம் சொல்வளர் காட்டை எட்டியுள்ளது.

என்னுடைய கால் நூற்றாண்டு வாழ்வில் மகாபாரதத்தை முழுமையாக வாசித்ததில்லை.சில தெருக்கூத்துகள்,திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவே ஓரளவுக்கு பாரதம் பரிட்சயம்.இவை தவிர எப்போதாவது மூத்த குடிமக்களிடம் கதைக் கேட்டதுண்டு.

 இந்நிலையில் நான் நேரடியாக வெண்முரசை வாசிக்க துவங்கிவிட்டேன்.இங்கு தான் சிக்கல்.இந்நாள் வரை எனக்கு தெரிவிக்கப்பட்ட பாரதம் வெண்முரசோடு ஆங்காங்கே முரண்படுவதாக தோன்றுகிறது.உதாரணமாக,திருதராஷ்டிரரின் குணங்கள்,கௌரவர்களின் பிறப்பு,கண்ணனை விட மூத்த ராதை,பாஞ்சாலியின் துகிலுரிப்பு,இன்னும் சில........

                
மீள்உருவாக்கம் என்பதை புரிந்துகொள்கிறேன்.ஆனால் இடைச்செருகல்களை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.இதனால் வெண்முரசின் வாசிப்பு பயணத்தில் பல்வேறு குழப்பங்கள்.
                 
இவையாவும் அர்ப்பமானவையாக கூட இருக்கலாம்.ஆனாலும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.நிச்சயம் தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.அது என்னைப்போன்று வெண்முரசு வழியாக முதன்முறை பாரதம் படிக்கும் இளம் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதும் உறுதி.

-கோவர்தனா,

திருவண்ணாமலை

அன்புள்ள கோவர்த்தனா,

நாவல் வெளிவந்துகொண்டிருக்கையிலேயே அதைப்பற்றி விளக்கம் அளிக்க முடியாது. பின்னர் அதைப்பற்றிய பேச்சுக்களில் ஈடுபடலாமென்பது என் எண்ணம்
மூலக்கதை என்ன என அறிவது மிக மிக எளிது. மகாபாரதம் மூலம் பல பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அருட்செல்வப்பேரரசன் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்தி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். ஓர் அத்தியாயத்தின் மூலத்தை வாசிப்பதென்றால் உடனே அந்த அத்தியாயத்தின் பெயர்களையும் நிகழ்ச்சியையும் கூகிளில் தேடிப்பாருங்கள். பாஞ்சாலி, துகிலுரிதல், அஸ்தினபுரி என தேடினால் துகிலுரிதல் அத்தியாயம் வந்துவிடும்
,மூலத்தில் இருந்து எங்கெல்லாம் விலகுகிறதோ அங்கெல்லாம் அதற்கான காரணங்கள் இருப்பதை வாசித்தால் உணரமுடியும். அப்படி யோசிக்கவைப்பதற்காகவே இந்த நாவல் எழுதப்படுகிறது


ஜெ

கண்ணனின் இருக்கை



அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் கணிகரின் பீடத்தில் சென்று அமர்ந்து அவரிடம் முகம் மலர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு அபாரமான ஒரு மன எழுச்சியை அளித்தது. அதைப்ப்ற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இருளும் ஒளியும். கிருஷ்ணன் இருண்டிருந்த காலகட்டத்தில் கணிகரை மிக நெருங்கி வந்திருப்பார் என நினைக்கிறேன். அவருக்கும் கணிகருக்குமான போட்டிதான் மொத்த மகாபாரதமும் என்று இப்போது ஆகிவிட்டிருக்கிறது. அவருடைய இருக்கையில் அவருக்குப்பதிலாக கண்ணன் மட்டும்தானே அமரமுடியும்?


செல்வராஜ்

மைந்தர்



அன்புள்ள ஜெ,

வெண்முரசின் விரைவான நாவல்களில் ஒன்று எழுதழல். மொத்தமாக இதற்கு ஒரு வடிவம் வந்துவிட்டது. இது பாண்டவர்கள், யாதவர்கள், கௌரவர்களின் மைந்தர்களின் கதை. அல்லது அவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதை. அவர்கள் அனைவரும் தந்தையரைப்போல இருக்கிறார்கள். தந்தையரிலிருந்து வேறுபாடு கொள்கிறார்கள். ஆனால் கிருஷ்ணனின் வாரிசுகள் அவருடைய அருங்குணங்கள் ஏதுமில்லாமல் இருப்பதும் அழிவதும்தான் உண்மையிலேயே பெரிய துயரம். கிருஷ்ணனின் கதையில் இந்த மகத்தான துயரம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனாலிங்கே அது பேசப்படுவதில்லை. குழந்தைக் கண்ணனும் காதலன் கண்ணனும்தான் அனைவரும் அறிந்த வடிவங்களாக இருக்கிரார்கள் என நினைக்கிரேன்


சத்யமூர்த்தி 

Wednesday, November 22, 2017

கிருஷ்ணை




அன்புள்ள ஜெ

கிருஷ்ணையின் திருமணவிழாவில் எதிர்பாராமல் கிருஷ்ணன் வந்தது ஓர் அற்புதமான திருப்பம். ஆனால் அந்த அத்தியாயத்தில் நான் கவனித்த ஒன்று உண்டு. அது கிருஷ்ணன்தான் என்கிறான் பிரதிவிந்தியன். யார் சாம்பனா என்று கேட்கும்போது இல்லை அவள் என்கிறான். அதாவது கிருஷ்ணைதான் கிருஷ்ணன். அவள் அவனுடைய பெண்வடிவம்தான். அவனை அவள் காதலனாக தலைவனாக அல்ல, தான் என்றே நினைக்கிறாள் என தோன்றுகிறது.


ஜெயராமன்

கருமை



அன்புள்ள ஜெ,


//வாழ்த்தொலிகள் சூழ தெருக்களினூடாக ஓடி அரண்மனைக் கோட்டையைக் கடந்து புஷ்பகோட்டத்தின் வாயிலில் தேர் சென்று நின்றது. அவ்வோசை கேட்டு விழித்துக்கொண்ட பலராமர் “எங்கு வந்திருக்கிறோம், இளையவனே?” என்றார். “என் அவைக்கு, ஆசிரியரே” என்றான் துரியோதனன். “நீயா?” என வாயை துடைத்துக்கொண்ட அவர் “ஆம், நீ…. இது அஸ்தினபுரி” என்றார்.//


களைத்துயிலில் கூட தம்பியுடன் இருப்பதையே அவர் அகம் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் புற உலகில் அரசு சூழ்தல்களால் தம்பியைப் புறந்தள்ளி நிற்க வேண்டிய இக்கட்டில் சிக்கிக்கொண்டு அதன்படி செயல்படுகிறார். அவர் "நீயா?" என்று கேட்டபோது 'மனுஷன் பாவம்யா. ஏண்டா இவர போட்டு இப்புடி படுத்தி எடுக்குறீங்க?' என்று தோன்றியது.

அரசன் .உ

திட்டங்கள்



ஜெ

யௌதேயன் போடும் திட்டங்கள் மிகக்கூர்மையானவை. ஆனால் அவை அனைத்தும் பலராமரும் துரியோதனரும் கொள்ளும் பெருந்தன்மையால் முழுமையாகவே அழிக்கப்படுகின்றன. அதேபோல அபிமன்யூ போடும் திட்டங்கள் மிகச் சிறப்பானவை. அவை யாதவர்களின் சிறுமையால் வெல்லப்படுகின்றன. அதேபோல சுருதகீர்த்தி பேசுபவையும் சிறப்பானவை. அவை அந்தத்தருணத்தின் இணைப்பால் வெல்லப்படுகின்றன. மனிதனின் பெருந்தன்மை சிறுமை தர்செயல் மூன்றுமே மனிதனின் தந்திரங்கள் கணக்குகளை விட மிகவும் விரிவானவை என்று தெரிகிறது


ராதாகிருஷ்ணன் எஸ்