Monday, November 11, 2019

காகங்கள்




அன்புள்ள ஜெயமோகன் சார்,                                                                               
                                                                                                                                                                                                                                                                                             நீர்ச்சுடர் 58ஆம் அத்யாயத்தில்  குந்தி கர்ணன் தனது மகன் என்று கூறும்  காட்சியை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். குந்தி தருமரிடம் "கர்ணன்தான் எனது முதல் மகன். இந்த குருஷேத்திர வெற்றி நான் இரவல் வாங்கி அளித்தது" என கூறி அவள்பாட்டுக்கு கிளம்பிவிட  என்ன இவ்ளோதானா? என மனம் எண்ணியது. " யட்ஷி உறையும் இடம்"  என்னும் உங்கள் பதிவை படிக்கும்போதே  நீர்சுடரில் யார் யார் யட்ஷி ? எப்டி அவர்களின் நடவடிக்கை இருக்கும் ? என தீவிரமாக சிந்தித்து இருக்கிறேன். இப்போது யோசிக்கும்போது ஜாலி தாமஸ் பிடிபட்ட பின்தான் அவளின் முகம் விகாரமாக ஆரம்பித்தது. ஆனால் போர் நடக்கும்போதே கவரவ, பாண்டவர்களின் துணைவிகள் மன அழுத்தத்தில் விகாரமாகி இருக்கிறார்கள். வண்ணகடலில் வந்த குந்தி நீர்ச்சுடரில் எப்டி இருக்கிறாள்? என என்னும்போது நெஞ்சு கனக்கிறது.எல்லாரையும் ஆட்டிப்படைத்த யட்ஷி அவர்களின் ரத்தத்தை குடித்துவிட்டு வெளியேறிவிட்டாள்.                                                                                                                                                                                                                                                                                             ஜெயமோகன் சார்,நீர்க்கடன் என்பது எனக்கு மிகவும் அந்நியமானது. பத்து வருடங்களுக்கு முன்பு  நண்பர் ஒருவருக்கு ஜோசியம் பார்க்க செல்லும்போது ஜோசியர் கட்டணம் வாங்காமலே எனது கதையை கேட்டு எனது தாய் தகப்பனுக்கு நீர்க்கடன் செய்யசொன்னார். எனக்கு அவர்கள் தெரியாது என கூற "அப்பா,அம்மா " என்று கூறி செய் என்றார். நான் அவர்கள் உயிரோடு இருந்தால் தப்பாகுமே என்ற எண்ணத்தில் செய்யவில்லை. செய்யவேண்டும் என்று  தோணவும் இல்லை. செய்யணும்.                                                                                                                                                                       துரியோதனன் பிறப்பின் போது அஸ்தினபுரி முழுதும் காகங்கள். அவர்கள் யாருடைய மூதாதைகள் ? இன்று  கங்கைகரையில் அவ்வளவு காகங்கள். நீர்க்கடன் ஏற்றபின்னும் அவர்கள் மீண்டும் பிறப்பார்களா? ,அபிமன்யு இப்போதும் முந்திக்கொண்டு நீர்க்கடன் செலுத்தும் முன்னேயே புழுவாக ஆகியிருக்கிறானே,அதுவும் பிருகத்பலனோடு   என யோசித்துகொண்டிருக்கிறேன்.  நான் படிப்பதற்கு மிகவும்  அஞ்சிய நாவல்.ஆனாலும் எதோ ஒரு பீதியோடு படித்துகொண்டிருக்கிறேன்.                     

 நன்றி .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Sunday, November 10, 2019

நீர்ச்சுடர் - இறந்தோரை இல்லாதாக்குவது.



       இறந்தோர்களுக்கான சடங்குகள் செய்வது உலகின் அனைத்து இன மக்களுக்கிடையேயும் இருக்கின்றது.  அது இறந்தவர்க்ளைப் பெருமைப்படுத்துதல், அவர்களுக்கு தாம் செய்யும் நன்றிக்கடன் என்று சொல்லலாம். அல்லது அவர்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம்.  ஆனால்  இறந்தோரை இனி இல்லாமல் செய்வதற்கான செயல்களே அவை என நான் கருதுகிறேன்.

   நம்மைப்  பொறுத்தவரை நம்முடைய  உறவினனோ, நண்பனோ, பகைவனோ யாராக இருந்தாலும் அவருடைய   பிரதி ஒன்று நம்  உள்ளத்தில் வாழ்கிறது.  அவரைப்பற்றிய வெறும் நினைவுத் தொகையென   இதைச் சொல்லிவிடமுடியாது.    அந்த மற்றொருவருடைய குணாதிசயங்களில் மாற்றங்களைக் காணும்போது நாம்  தன்னுள் இருக்கும் அவனின்  பிரதிக்கும் அவற்றை மேற்கொண்டு  அப்பிரதியை மேம்படுத்திக்கொள்கிறோம்.  ஒருவனை நாம் நம் கண்ணால் கண்டாலும் உண்மையில் நம் அகம் அறிவது நம் உள்ளத்தில் கொண்டிருக்கும் அவன் பிரதியைத்தான்.  நாம்  மற்றொருவனின் உண்மை குணத்தைவிட நம் மனதில் கொண்டிருக்கும் பிரதியின் குணத்தையே அவன் குணம் என்று நம்புகிறோம்.   அதனால்தான் ஒருவன் நமக்கு நன்மை செய்வதை தீமை செய்வதாகவும், தீமை செய்யும் ஒருவனை நமக்கு  நன்மைசெய்கிறான் என ஏமாறுபவராகவும் ஆகிவிடுகிறோம்.  அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள் போன்றோரின் பிரதிகளையே ஒருவர் தம் மனதில் போற்றுகிறார்.   நம் மனதில் இருக்கும் அத்தலைவர்களின் பிரதியை நாம் பெரிதும் நம்புவதால்தான் அவர்களின் குற்றங்களை மற்றவர் சொல்லும்போது நம்மால் நம்பமுடியாமல் போகிறது. 

     நம் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் உண்மை குணத்திற்கும்,  உள்ளத்தில் அவர்கள் பிரதிகளின் குணத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இருப்பதில்லை.  மேலும் அப்பிரதிகள் நம் ஆழுள்ளத்திலும் வேர் கொண்டு விடுகின்றன.  அதனால் அவர்களை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அருகாமையிலென உணர்கிறோம்.  அவர் எந்தஒரு விஷயத்த்ற்கு எப்படி எதிர் வினையாற்றுவார் என்பதை நம்முள்ளிருக்கும் அவரின் பிரதியுருவை வைத்து நாம் கணிக்கிறோம்.  ஒருவர் நம் நம் கனவுகளில் தோன்றுகிறார் என்றால் அப்போது நாம் காண்பது அவரின் பிரதியுருவே.   நாம் எந்த அளவுக்கு ஒருவரை நேசிக்கிறோமோ, பழகியிருக்கிறொமோ  அல்லது வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்கள் பிரதி நம்முள் ஆழமாக  பதிவாகி இருக்கிறது. சிலர் நாட்டார் தெய்வங்களை வழிபட்டு அதன் ஆளுமையின் பிரதியை தம்முள் கொண்டிருப்பர்.   சிலர் புராண பாத்திரங்களை,  சில கதை மாந்தர்களை, அல்லது திரைப்பட கதா நாயகர்களை தம்முள் ஒரு ஒரு ஆளுமையென வளர்த்துக்கொள்வதுண்டு. 

       சில சமயங்களில் மிக அரிதாக ஒருவர் மனதை மற்றொருவரின் பிரதியுருவொன்று  முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்வதுண்டு.      அது ஒருவேளை நாம் மிகவும்  விரும்பும், பிரம்மிக்கும்,  வெறுக்கும் அல்லது அச்சமூட்டும் ஒரு ஆளுமையாக  இருக்கலாம். அந்தச் சமயத்தில் அவருடைய  உண்மையயான  ஆளுமையை மறைத்துவிடும். அந்நேரங்களில் அவர் அந்த வேறொருவரின்  பாவனை பேச்சு, குணம் போன்றவற்றை வெளிப்படுத்தி முற்றிலும் அந்த நபரென தன்ன வெளிக்காட்டுவார்.     மென்மையான குணமுடைய சிலர் சாமியருள் வ்ந்து குதித்து ஆடுவதை  உரத்தகுரலில் தன்னைவிட மூத்தோரை ஒருமையில் ஆணையிடுவதை கண்டிருப்போம். அது அந்த நபரின் உள்ளிருக்கும் அந்த தெய்வத்தின் பிரதியுரு அவர் உள்ளத்தை ஆக்கிரமித்து இருப்பதைக் காண்பிக்கிறது. இதே தர்க்கத்தை நாம் ஒருவருக்கு இறந்துபோன ஒருவரின்  பேய் பிடித்திருக்கிறது என்ற கூற்றிலும் ஏற்றிப் பார்க்கலாம்.

    இதற்கு மாறாக சிலசமயம்   இப்படி வேறொருவர் ஆளுமை அவர் உளத்தை   முழுமையாக ஆட்கொள்ளாமல் அதே நேரத்தில் தன்னை அவர்களுக்குள் ஒரு நிஜ உருவென காண்பித்துக்கொண்டு இருக்கும். இது நாட்கணக்கில் நீடித்துக்கொண்டிருந்தால் பிளவாளுமை என்ற பெரிய உளசிக்கலாக ஆகிறது.   அப்படியல்லாமல் சிறிது சிறிது நேரம் இந்நிலை ஒருவருக்கு வந்து போவது உண்டு. அப்போது அவர் அந்த ஆளுமையுடைய நபர் தன்னுடன் உடனிருப்பதாக, தன்னுடன் பேசுவதாக, பார்வைக்குத் தென்படுபவராக  உணர்வார். 

        ஒருவரை நீண்ட நாட்கள் பிரிந்து தொடர்பற்று போகும்போது அவரின்  பிரதி நம்முள்ளிருந்து தேய்ந்து மறைகிறது.  அதைபோன்று ஒருவருக்கு தெரிந்தவர் இறந்துபோகும் போது அவருளு இருக்கும் இறந்தவரின் பிரதி கால ஓட்டத்தில் மறைந்துபோய்விடும்.   ஆனால் அவர் முதலில் அவன் இறந்துவிட்டான் என்று அவர் ஆழ்மனதிற்கு உணர்த்தவேண்டும். சற்றே தெரிந்த ஒருவருக்கு ஒருவரின் இறப்பின் செய்தியே போதும்.  ஆனால்  நெருங்கிய உறவினருக்கு அது போதாது.   இறந்தவரின் இறப்பை ஆழுள்ளத்திற்கு உணர்த்துவதற்கு சமூகம் பல சடங்குகளை வைத்திருக்கிறது.  இறந்தவரின் உடல் பல மணி நேரங்களுக்கு வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நான் முதலில் நினைப்பதுண்டு, ஏன் இறந்த உடலாக ஒருவரை நம் நினைவில் இறுத்த வேண்டுமென.  பின்னர்  எனக்கு புரிய வந்தது,  இறந்த உடலை ஒருவர் பார்க்கச் செல்வது அவரை நினைவுகொள்வதற்காக அல்ல,  அவர் இறந்துவிட்டார் என்பதை தமக்கு உணர்த்திக்கொள்வதற்காக.   இறப்பு வீட்டில் செய்யப்படும் சில சடங்குகள் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களின் துக்கத்தை  மேலும் பெருக்குவதாக, அவர்களை உளரீதியில் மேலும் இம்சிப்பதாக இருக்கும்.  ஆனால் அவை யாவும் அவர்கள் உள்ளத்தில் அந்த  இறப்பை பதிவு செய்து ஆழுள்ளத்திலிருந்து அந்த இறந்தவரின் பிரதியை இல்லாமல் ஆக்குவதற்காக எனக் காண்கையில் மிகவும் பொருளுள்ளதாகத் தெரிகிறது.  

   சகாதேவன் இறந்துபோன  தன் மைந்தன் சுருதசேனனின் இருப்பை உணர்வதை வெண்முரசு  இவ்வாறு உரைக்கிறது.

   சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே ஓர் உயிர் இருப்பதை உயிர் அறியும் நுண்ணுணர்வு.

   இருப்பும் இன்மையும் ஒரே கணத்தில்தான் வேறுபடுகின்றன போலும். அவன் அணுகி வருவதில்லை. அகன்று மறைவதுமில்லை. அவன் தொலைவிலெங்கும் இல்லை. மிக அருகேதான் இருந்துகொண்டிருக்கிறான். உடனிருந்துகொண்டிருக்கிறான். ஒளி மாறுபடுகையில் வலமிருந்து இடமும் பின்பிருந்து முன்பும் தோன்றும் நிழல் என.

சகாதேவன் காண்பது அவன் உள்ளத்தில் இருக்கும் சுருதசேனனின் பிரதி அது.   தீயில் அழிந்து விட்ட அவன்  மகனின் இறந்த உடல் கிடைத்திருக்காது. அப்படி கிடைத்திருந்தாலும் கருகி உருமாறி இருந்திருக்கும். ஆகவே அவன் அறிவு எவ்வளவு சொன்னாலும் அவன் ஆழுள்ளம் அதை நம்பியிருக்காது. ஆகவே அவன் மகனின் பிரதி இன்னும் அவன் உள்ளத்தில் அழியாது இருக்கும்.  அதன் காரண்மாக அவன் சுருதசேனனின் இருப்பை உணர்கிறான். மற்றவருக்கு அது உளமயக்கம் என்று தெரியலாம்.  ஆனால் சகாதேவன் உள்ளம் அதை உண்மையென்றே உணர்கிறது.   அவனுக்கு ஒரு பொய்யான மன அமைதியைத் தருகிறது. அதனால் அப்பிரதியை  மீண்டும் மீண்டும் மனதில் கொணர்ந்து அழியாது வைத்திருக்கலாம் என நினைக்கிறான்.  ஆனால் அப்படி  வாழ்வது  ஒரு பொய்யானது. மேலும்  அவன் இயல்பாக மேற்கொண்டு வாழ்வதற்கு தடையாகிவிடும். பல உளச்சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 


   அதே நேரத்தில் சகதேவன் அறிஞன். அவன் அறிவான் இந்த நீர்க்கடன் சடங்குகள் சுருதசேனனின் பிரதியை அவன் உள்ளத்திலிருந்து அகற்றிவிடும். இனி அவன் கண்ணுக்கு  தோன்றமாட்டான். அவன் இருப்பை உணர முடியாது.  தாம் முழுமையாக அவனை இழந்துவிடுவோம் என   அஞ்சுகிறான். அதனால் விதுரரிடம் அச்சடங்கை நிறுத்தும்படி கெஞ்சுகிறான். விதுரன் அவனை நிலையை உடன் புரிந்துகொள்கிறார். அவன் உள்ளத்தில் நிகழ்வதை அவனுக்கு எடுத்துக்காட்டுகிறார்.


விதுரர் சொல்கிறார் “கூறுக, அவர்கள் என்ன சொன்னார்கள்? அவர்கள் இங்கிருப்பது எப்படி? நம்மைச் சாராமல் அவர்களுக்கு இருப்பும் இன்பமும் உண்டா?”     “இல்லை” என்று சகதேவன் சொன்னான். அவன் உள்ளம் தவிக்கத்தொடங்கியது. விதுரர் “ஆம், அதையே முன்னோரும் சொல்லியிருக்கிறார்கள். நாம் இப்போது காணும் அவர்களின் உருவம் நம்மால் அளிக்கப்படுவது. இறுதியாக அவர்கள் நம் விழியிலும் உள்ளத்திலும் எஞ்சிய வடிவத்திலேயே அவர்கள் நம் முன் எழமுடியும். நாம் முதிர்வோம், அவர்களுக்கு அகவையும் மாற்றமும் இல்லை. நம் விழைவால் மட்டுமே அவர்கள் தோன்றமுடியும்” என்று விதுரர் சொன்னார். “ஆம்”என்றான் சகதேவன். “உண்மையில் சற்று அகவை முதிர்ந்த அனைவரும் அறிந்த உண்மைதான் இது.” சகதேவன் பெருமூச்சுவிட்டான்.
மேற்கொண்டு விதுரர் சகாதேவனுக்கு உரைப்பது  மனிதர்கள் அறிந்துகொள்ள  வேண்டிய  பாடம். இறப்பின் முன் மண்டியிட்டு பணிய வேண்டியவர்களே  அனைத்து உயிர்க்குலமும். இறப்பு என்பது இல்லாமலாக்குவது.    இறக்கப்போகிறவர்கள்,  இறந்து போனவர்களை தக்கவைக்க நினைப்பது என்பது வீண்முயற்சி,  சற்றும் பொருளற்றது மற்றும் இயற்கைக்கு எதிரானது. விதுரரின் சொற்கள் சகதேவனின் உள்ளத்தை ஆற்றுப்படுத்துகின்றன.
சகதேவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க மீண்டும் அவன் தலையை வருடி “நீர்க்கடன்கள் நிகழட்டும், மைந்தா. நம் சிறுவர் விண்ணேகட்டும். இங்கு அவர்கள் ஒருதுளியும் எஞ்சாதொழியட்டும். எழுமுலகில் அவர்கள் நிறைவுகொள்ளட்டும். நம்மிலிருந்து அவர்கள் முற்றிலும் மறையட்டும். வான்பறவைத் தடம் போல் ஆகுக அவர்கள் சென்ற பாதை!” என்றார். சகதேவன் “ஆம்” என்றான்.

தண்டபாணி துரைவேல்

Saturday, November 9, 2019

நீர்ச்சுடர் - பாண்டவர்களை மீட்ட திருதராஷ்டிரர்



    பாண்டவர்கள் பெருமிதமில்லாத ஒரு வெற்றியை அடைந்திருக்கிறார்கள். அதன் காரண்மாக அவர்கள் அடைந்திருக்கும் துயரம் அவர்கள் தோல்வியடைந்திருந்தால்கூட பெற்றிருக்கமாட்டார்கள்.   அவர்கள் தம் பிள்ளைகள் அனைவரையும் இழந்துவிட்டிருக்கின்றனர்.  தம்முடன் போர் புரிந்த நட்பு மன்னர்கள் மற்றூம் பெரு வீரர்களில் அநேகமாக அனைவரையும் இழந்துவிட்டிருக்கிறார்கள்.  அடைந்த வெற்றியின் பலனை யாருக்கு தருவார்களோ அவர்களையும்,  எவருடன் பகிர்ந்துகொள்வார்களோ அவர்களையும் ஒருசேர  இழந்து விட்டிருக்கின்றனர்.    இதனால்  அவர்கள் பெருந்துயரம் அடைந்திருக்கிறார்கள்.   

    அத்துடன் இதுவரை அவர்கள் எப்போதும் போற்றிவந்த தமக்கான அறங்களை இப்போரில் இழந்துவிட்டனர்.  எந்த அறங்களின் காரணமாக அவர்கள் பெருமையும் புகழும் பெற்றிருந்தனரோ அவை அனைத்தும் இழந்து வெட்கி தலைகுனிந்து நிற்கின்றனர்.  அறமல்லாத ஆற்றல் என்பது அசுரர்களுக்குரியது.  மனிதத்திலிருந்து தாம் கீழிறங்கிவிட்டதாக அவர்கள் நினைக்கின்றனர். மற்றவர்களை நேர் கொண்டு காணஇயலாது அவர்கள் தலைகள் கவிழ்ந்து உள்ளன. அவர்கள் பெரும் அவமானத்தை அடைந்திருப்பதாக உணர்கிறார்கள்.     

    அவர்கள் இப்போரில்  கொன்றவர்கள்,  அவர்கள் குடும்பத்தின் மூத்த பிதாமகர்களை  அவர்களுக்கு   அண்ணன் தம்பி என அழைக்கும்  உறவு கொண்டவர்களை, பேணிப் பாதுகாத்து வளர்க்கக் கடமைப்பட்டிருக்கும் உறவினர் பிள்ளைகளை.   இறந்தவர்கள் தாம் இறந்தமையாலேயே அவர்களின் பிழைகளுக்கான கசடுகள் அழிந்து புகழடைந்துவிட்டனர். அவர்களுக்கு இனி  எப்பழிகளும் இல்லை.  ஆனால் உயிருடன் இருப்பவர்கள் மேல்வந்து சேர்ந்திருக்கும்  பழியின் எடை அவர்களி கூனிக் குறுக வைத்திருக்கிறது.   அப்படிக் கொல்லப்பட்டவர்களின் அன்னையர் , தந்தையர், மனைவிகள் முன்பு சென்று நிற்கவேண்டிய கணம் அவர்கள் வாழ்நாளிலேயே மிகக் கொடிதான ஒன்றென  அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.    இத் தருணத்தை எதிர்கொள்வதை விட நாம் களத்தில் உயிர் துறந்திருக்கலாம என எண்ணி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

   ஒருவர் துயரங்களிலிருந்து விடுபடுவது சற்று கால தாமதமானலும்அது தானாகவே   நடைபெற்றுவிடும். துயரம் காலத்தின் ஓட்டத்தில்  மெல்ல மெல்ல பனிக்கட்டி உருகுவதைபோல  உருகி கரைந்துவிடும்.  அதைபோலல்லாமல் பெற்ற அவமானங்கள் சீக்கிரம் மறந்துவிடாது. ஆனாலும் அவர்கள் அதற்கு ஈடுகட்டும் விதமாக  பல  சிறந்த செய்கைகளைச்  செய்வதன்மூலம் அந்த அவமானங்கள் மறந்துபோகப்படும்.  வரலாற்றில் ஒருவர் இறுதியாக அடைந்தது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்பதால், ஒரு பெருஞ் செயலைச் செய்து அல்லது பெரிய தியாகத்தைச் செய்து தம் புகழை மீட்டுக்கொள்ளலாம். 

          ஆனால் கொலைப்பழியை சுமந்து கொலையுண்டவர் குடும்பத்தின் முன் நிற்கும்  அவர்கள் இந்த  குற்றஉணர்விலிருந்து விடுபடுதல் மிகக் கடினமானது.   ஒரு பெரு வீரனின் வாளை எதிர்கொள்வதை விட ஒரு அபலையின் கண்ணீரை எதிர்கொள்வது மிகக் கடினமானது.  வாள் உடலை வெட்டி காயப்படுத்தலாம். ஆனால் தாம் தவறிழைத்தாக கருதி பாதிக்கப்பட்ட ஒருவர் வடிக்கும் கண்ணீர் அவர்  உள்ளத்தை கிழிப்பது.  அதை மனிதத் தன்மையுடைய எவர் ஒருவரும் அனுபவிப்பார்கள்.  தன்னை அசுரன் என ஆக்கிக்கொள்ளாமல், ஒருவனால் இக்கண்ணீரை அலட்சியப்படுத்தி கடந்து சென்று விட முடியாது.  இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தம் உறவாக, தம்முடன் உடன் வாழ்பவராக அமைந்து விடும்போது இது  அளிக்கும் மனத்துயர் மிகப் பெரிது.   பாண்டவர்களின் உள்ளத்தை அவர்கள் பிள்ளைத்துயரைவிட, அவர்கள் அடைந்த அவமானங்களைவிட அதிகம் பாதிப்பது இந்தக் குற்ற உணர்வே.  அவர்கள் தம்மீது இப்போர் திணிக்கப்பட்டது. போரில் கொல்வது தவிர்க்கமுடியாதது. அவர்களைக்  கொல்லவில்லையென்றால் நாங்கள் கொல்லப்பட்டிருப்போம். இப்போரில் அறம் எங்கள் பக்கம் இருக்கிறது போன்ற எவ்வித  தர்கங்களும் இங்கு உதவாது. ஏனென்றால் எதிர் நிற்பவர்கள் அவர்களுடன் தகிக்கவில்லை. அவர்களுடைய ஒரே தர்க்கம் அவர்கள் கண்ணீர்.   அதற்கு எப்படி ஒருவரால் பதில் சொல்ல முடியும்?

     பாண்டவர்கள் இவ்வாறு எதிர்கொள்பவரின் பிரதிநிதியாக திருதராஷ்டிரரும், காந்தாரியும் இருக்கின்றனர்.  அவர்களின் நூறு பிள்ளைகளை, ஆயிரம் பெயர் மைந்தர்களை பாண்டவர்கள் கொன்றிருக்கிறார்கள்.   ஆகவே அவர்களை பெருந்தயக்கத்துடன் பாண்டவர்கள் சந்திக்கச் செல்கிறார்கள்.  ஆனால் திருதராஷ்டிரரும் காந்தாரியும் தம் பேருள்ளதின் காரணமாக  அவர்களை  பொறுத்துக்கொள்கிறார்கள்.  தன்னை மீறி திருதராஷ்டிரர் முதலில் பீமனை கொல்ல முயல்கிறார். பின்னர் அதற்காக பெரிதாக வருந்துகிறார்.  பீமனை கொல்ல முயன்றதை தண்டனையாகவும் அதற்காக  அவர்  அடையும் வருத்தத்தை  மன்னிப்பெனவும் பாண்டவர்கள் உணர்கிறார்கள்.     பாண்டவர்கள் பெரிதும் எதிர்பார்த்த பாவ மன்னிப்பு அவர்களுக்கு அப்போது  கிடைத்துவிடுகிறது.  அதன் மூலம் இது நாள்  வரை குற்ற உணர்வின் காரணமாக உழன்றுகொண்டிருந்த  பெரும் உளச்சிக்கலில் இருந்து பாண்டவர்கள்  மீண்டுவிடுகின்றனர்.  அவர்கள் உள்ளம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறது.  ஒருவர் முகம்பார்த்து ஒருவர் இயல்பாக பேச முடிகிறது. புன்னகைக்க முடிகிறது. உண்ணும் அதிமதுரத்தின்  இனிப்பை உணர முடிகிறது.  திருதராஷ்டிரர்  இதுவரை பாண்டவர்களுக்காக செய்த எதைவிடவும் சிறந்த உதவியை  செய்திருக்கிறார். என்று நான் கருதுகிறேன்

தண்டபாணி துரைவேல்

Friday, November 8, 2019

நீர்ச்சுடர் - பதுமையைக் கொன்ற திருதராஷ்டிரர்


   
     திருதராஷ்டிரர் பீமன் உருவில் இருக்கும் பதுமையை பீமன் என்று எண்ணி கொல்ல முயற்சிக்கையில் அது உடைந்து சிதறுகிறது.  கிருஷ்ணன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பீமன் உயிர் தப்பிக்கிறான்.  அப்பதுமையை உடைத்தபிறகு தாம் பீமனை கொன்றுவிட்டோம் என்றெண்ணி துயரப்பட்டு கதறுகிறார்.    தன் பிள்ளைகள் அனைவரையும் கொன்றவன் என்று அவர் மனதில் பீமன் மேல் வஞ்சம் கொண்டிருந்தார்.  அது தந்தையின் வஞ்சம். ஆயிரம் விளக்கம் சொல்லிக்கொண்டாலும். அந்த தந்தைமையின் காரணமாக அதைப் போக்கிகொண்டிருக்க அவரால் முடிந்திருக்காது.   ஏனென்றால் அந்தப் பாசம் மிக வலுவானது.  பெற்றோரின் பாசம் என்பது குருதியிலேயே இருப்பது.  மற்ற பாசமெல்லாம் நாம் நமக்கு கற்பித்துக்கொள்வது.    தான் உயிரென நேசித்த தம் சகோதரன் பாண்டுவின் பிள்ளைகளை துரியோதனன் தீயிட்டு கொல்ல முயன்றதை காணாமல் விட வைத்தது,  அவர்களிடமிருந்த நாட்டைக் கவர்ந்து  வனத்திற்கு அனுப்பியதையோ, திரும்ப வந்தபோது நாட்டை கொடுக்க மறுத்ததையோ அவரால் தடுக்கமுடியாமல் செய்தது.  இவையெல்லாம் தவறு என்று  கருதினாலும் அவர் பேரரசர் என்ற முறையிலோ குடும்பத்தின் மூத்தவர் என்ற முறையிலோ அவர் செய்யவேண்டியதைச் செய்யவில்லை.   துரியோதனனை  மன்றாடி கேட்டுக்கொள்வதுமட்டுமே அவர் செய்தார். அதற்கு மேலாக கடிந்து கொண்டால் அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்வாவோனோ என அஞ்சி ஏதும் செய்யாமல் விட்டு விட்டவர்.     அவர் துரியோதனன் மேல் வைத்திருந்த பாசம்  அவர் அற உணர்வை மழுங்க வைத்துவிட்டது.  அனைவரையும் தம் உறவென அணைத்துக்கொள்ளும் அவர் பேருள்ளத்தை குறுக்கிவிட்டது. பாண்டுவின் பிள்ளைகளை தம் பிள்ளைகள் என அவர்  கொண்டிருந்த பாசத்தை மறக்கவைத்துவிட்டது. அத்தகைய பாசம் துரியோதனனைக் கொன்றவன் மேல் வஞ்சமென திரண்டெழுவது இயல்பானது.     அவர் பீஷ்மரை தந்தையென்று கருதி பாசம் வைத்தவர்தான்.  ஆனால் பீஷ்மரை நெறி மீறி வீழ்த்திய பார்த்தனை மன்னிக்க அவரால் முடிகிறது. ஆனால் பீமனை அவரால் மன்னிக்க முடியவில்லை.

    அதே நேரத்தில் அவருடைய பேருள்ளத்திற்கு இப்படி வஞ்சம் கொள்வது என்பது  எதிரானது.  இதுவரை அவர் வாழ்வில் பல ஏமாற்றங்களை எதிர்கொண்டிருந்தாலும் அவர் நெஞ்சில் வஞ்சமென ஒன்று எழுந்ததில்லை.   எவர் மேலும் பகையோ வெறுப்போ இன்றி இருந்தவர்.  தனக்கு கிடைக்க வேண்டிய அரியணையை பாண்டுவிற்கு தரவேண்டி வந்தபோதும் தன் மகன் துரியோதனனுக்கு என எண்ணி இருந்த  அரியணையை தருமனுக்கு கொடுக்கவேண்டி வந்தபோது சிறிதும் தயக்கம் காட்டாதவர் அவர்.   மேலும் பீமன் துரியோதனனுக்கு அடுத்தபடியாக அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்திருப்பான்.  பீமனின் உடல் பலமும், குழந்தைபோன்ற வஞ்சனையற்ற உள்ளமும் அவனை தன் பிள்ளையென அவருக்கு உணரவைத்திருக்கும்.  பீமனே துரியோதனனைவிட திருதராஷ்டிரருக்கு மகனாக இருக்க தகுதிகொண்டவன் என்று எனக்கு தோன்றுகிறது. ஆகவே திருதராஷ்டிரர் துரியோதனன் மேல் காட்டிய பாசத்திற்கு இணையாக பீமன்மேலும் கொண்டிருப்பார். ஆனால் காலத்தின் நிகழ்வுகள் இப்படி பீமன் மேல் அவரை வஞ்சம் கொள்ள வைத்திருக்கிறது.   அந்த வஞ்சத்திற்கு  எதிராக அவர் மனதிற்குள் போராடிக்கொண்டிருந்திருப்பார். அதன் காரணமான மன அழுத்தத்தோடு இருக்கும்போதுதான்  பாண்டவர்களுடனான இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.  

      துரியோதனன் பீமன்மேல் கொண்டிருந்த வஞ்சத்தின் பருவடிவுதான் அந்தப் பதுமை.  இப்போது அது திருதராஷ்டிரர் என்ற தந்தையின் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சத்தையும் பிரதிபலிக்கிறது.  அவர் அதை பீமன் என்று அணைத்து கொல்ல முயற்சிக்கையில் உடைந்து சிதறுவது அந்த பதுமை மட்டுமல்ல,  அவர் பீமன்பால் கொண்டிருந்த  வஞ்சமும்தான்.  (  அப்பதுமை உடைந்தபோது  வானுலகில் இருக்கும்  துரியோதனனின்,  பீமன் மேலான வஞ்சமும் உடைந்து சிதறியிருக்கும் என நினைக்கிறேன். )  அதனால்தான் அவர் கதறி அழுகிறார்.  கிருஷ்ணன் பீமனை மட்டுமல்ல வஞ்ச நெருப்பில் கருகிவிடாதபடி திருதராஷ்டிரரையும் காப்பாற்றியருள்கிறான் என்பதுதான் உண்மை.

      பின்னர்  துரியோதனனும் காந்தாரியும் அந்தப்பதுமையை படுக்கையில் கிடத்தி ஒரு குழந்தையென அதை வருடிக்கொண்டிருக்கும் காட்சி வெண்முரசின் தலை சிறந்த காட்சிகளில் ஒன்றாக அமையும் என்று நினைக்கிறேன். இப்போது  அந்தப் பதுமை தன்னுள் ஏற்றப்பட்டிருந்த  வஞ்சமெல்லாம் அகன்ற ஒன்று.  அவர்கள்,  தம் இளங் குழவியாய் இருந்த துரியோதனனை அந்தப் பதுமையில்  உணர்ந்து  நெகிழ்வது   மனதை உருக்குவதாக அமைகிறது. 


தண்டபாணி துரைவேல்

Thursday, November 7, 2019

நீர்ச்சுடர் - தாயின் வஞ்சினம்

 
       

திரௌபதியின் வஞ்சினத்தால் இந்தப் போரும் அதனால்  பேரழிவும் ஏற்பட்டிருக்கிறது என்று அர்ச்சுனன் கூறுகிறான். இதே கருத்தையே அனைவரும் கொண்டிருக்கின்றனர். காந்தாரி அதனால்தான் திரௌபதியை சந்திக்காமல் திரும்பிவிடுகிறாள் என நினைக்கிறேன்.  அவர்கள் அனைவரும் அவ்வா று நினைப்பது சரியென்றே தோன்றுகிறது. இப்போருக்கு வெளியில் சொல்லப்படும் காரணமாக பாண்டவர்கள் நாட்டை திரும்ப அடைதல் என்று கூறப்பட்டாலும் தவிர்க்கமுடியாத  காரணமாக அமைவது திரௌபதி எடுத்த வஞ்சினம்தான்.  பாண்டவர்கள் பல தருணங்களில்  நாட்டின் உரிமையை விட்டுகொடுத்து இந்தப் போரிலிருந்து பின்வாங்கிவிடலாம என்று நினைத்தபோதெல்லாம்  போரைத்  தவிர்க்கமுடியாத காரணம் என்று எப்போதும் இருந்தது திரௌபதியின் வஞ்சினம்தான்.  அவள் துச்சாதனன், துரியோதனன் குருதி பூசி குழல் முடிப்பேன் என்று எடுத்த சூளுறையே பாண்டவப்படையின்  போர் எழுச்சிக்கு உந்துகோலாக இருந்து வந்திருக்கிறது. துரியோதனனை  துச்சாதனனைக் கொல்வது என்பது போரின் முடிவில் மட்டுமே நிகழக்கூடியது.   ஏனென்றால் துரியோதனன் பக்கம் நிற்பவர் அனைவரையும் வீழ்த்தியபிறகே அவர்களை போரில் கொல்லமுடியும்.  அதுவரை நடக்கும் போரில் பாண்டவர் தரப்பிலும் பலர் கொல்லப்படுவார்கள்.  இப்படியில்லாமல் இப்போர் வேறுவகையில் நடந்திருக்கமுடியாது என்ற நிலையை உருவாக்கியது திரௌபதியின் வஞ்சினம் மட்டுமே என்பது உண்மையென்றே தோன்றுகிறது.  ஆகவே அர்ச்சுனனின் கூற்றாக வெளிப்படும் இவ்வார்த்தைகள்  “அவளுடைய வஞ்சத்தால் அழிந்தது குருகுலம். பாரதவர்ஷமே குருதியால் மூடியது"  மிகச்சரியானது என்றே தோன்றுகிறது.

    ஆனால் தனிப்பட்ட ஒரு பெண்ணின் வஞ்சினத்திற்காக ஏன்  இவ்வளவு பெரிய போர் என்று ஒருவர் வினவத் தோன்றும். ஆனால் ஒரு அறம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இப்படி யாராவது ஒருவர் வஞ்சினத்தையே தன் ஆயுதமாகக் கொள்ளும். அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம் அவள் பெண்மைக்கு இழைக்கப்பட்டது.  அவளை ஒரு நபர் என்று செய்த அவமதிப்பல்ல. அதாவது அவளை குற்றமிழைத்தவள் என்று கூறி   தண்டிக்க வேண்டுமென்று கருதினால் அவளை சிறையிலிட வேண்டும்  அல்லது  இன்னும் அதிக தண்டனையென்றால்  கொலைத்தண்டனை விதித்திருக்க வேண்டும். மாறாக தண்டனையென  அவமதிப்புதான் செய்ய வேன்டுமென்றால்  அவளை பணிப்பென் என்று சொல்லி அடிமையாக்கியிருக்க வேண்டும்.  ஆனால் துரியோதனன் அவையில் நடந்தது பெண்மையை அவமதிப்பது.  பெண்மைக்கு எதிராக ஆன்மை நிகழ்த்திய குற்றம்.    பாரத நாட்டின் ஒட்டுமொத்த பெண்கள் இதுவரையிலும் இனிமேலும் இவ்வாறு தாம் பெண்  என்ற காரணத்திற்காக மட்டுமே அடையும் அவமதிப்புக்கு ஒரு அடையாளமாக  இது இருந்தது. இதற்காக  சொல்லப்பட்ட  வஞ்சினத்தை  வெண்முரசு திரௌபதியின் சொற்களாக  வெளிப்படுவதாக கூறவில்லை. அவள் தோழி  மாயையின் வார்த்தைகளாக உரைக்கப்படுகிறது,  அதற்கு காரணம்  இது தனிப்பட்ட  பெண்ணான  திரௌபதியின் வஞ்சினம் அல்ல என்பதுதான்.  இது திரௌபதியின் உள்ளுறையும் பெண்மை என்ற தெய்வத்தின் வஞ்சினம். எவ்வகையிலும் தான் ஆண் என்ற காரணத்தினால் ஒரு பெண்ணை அவள் பெண்மையை அவமதிப்பதன் மூலம் தண்டிபேன் என்பவரைக் கொல்வேன் என்று அத்தெய்வத்தின் கையில்   ஏந்தியிருக்கும்  கொடுவாலென   அமைவது இந்த வஞ்சினம்.  மனித குலத்தை இப்புவியில் நிலை நிறுத்தி பெருகி வாழவைக்கும் பேரறத்தின் வஞ்சினம் இது.  
 
       ஆகவே அந்த வஞ்சினத்தை தவறென்று யார் ஒருவராலும் கூறமுடியாது. ஆனால் இப்போது மீண்டும் அஸ்வத்தாமனை வீழ்த்தி அவன் நுதல் மணியை கொணரவேண்டும் என அவள் உரைக்கும் வஞ்சினம் அர்ச்சுனனுக்கு சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.  மீண்டும் மீண்டும் வஞ்சினம் என்ற தீயில் தாமும் கருகி மற்றவரையும் கருக வைப்பது எவ்வகையில் சரியானது என்று அவன் கேட்கிறான்.  "இன்னும் வஞ்சம் கொண்டிருக்கிறாளா? இனி விண்ணுலகை அழிக்கவேண்டுமா அவளுக்கு? மூன்று தேவர்களும் போரிட்டு மறையவேண்டுமா?”    தம் பிள்ளைகளை பலிகொடுக்காத  பெண்  என்பவளே  இல்லை. காந்தாரி மற்றும் அவள் சகோதரிகளின் நூறு பிள்ளைகளை, அவர்களின் மருமகள்களின் ஆயிரத்துக்கு  மேலான பிள்ளைகளை பாண்டவர்கள் கொன்றிருக்கிறார்கள்.  மேலும் முகமறியாத பல்லாயிரம் தாய்மார்களின் மகன்கள் இப்போர்க்களத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திரௌபதி  தம் பிள்ளைகளைக் கொன்றவனான அஸ்வத்தாமன் மேல் மட்டும் இப்போது வஞ்சினம் உரைப்பது அதீதம் இல்லையா?  போர்க்களம் செல்ல அனுமதிக்கும் ஒரு தாய் அவன் போர்க்களத்தில் கொல்லப்பட நேரிடுமென  என்று அறிந்துதானே அனுப்புகிறாள். தன் மகன் கொல்லப்பட்டல் அவள் துயரம் அடைவது இயல்பு. ஆனால்  அவள் அதற்காக அம்மகனைப் போர்க்களத்தில் கொன்றவன்மேல்  சீற்றம் கொண்டு வஞ்சினம் உரைப்பது எப்படி முறையாகும்? 

    ஆனால் உபபாண்டவர்கள் போர்க்களத்தில் கொல்லப்படவில்லை.  அவர்களை போருக்கு அழைப்பு விடுத்து போரிடவைத்து கொல்லப்படவில்லை.  போரில் காயம்பட்டு  போர் முடிந்ததென எண்ணி போர்க்களத்தை விட்டு அகன்று துயின்றுகொண்டிருக்கும் போது அவர்கள்  திடீரென்று தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள்  கொல்லப்படுவது போரின் முடிவை மாற்றப்போவதில்லை. அவர்கள் கொல்லப்படுவதும் அதற்கான முறையும்  எந்த அறத்தின்படியும் சரியென ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் மிகக் கீழ்மையான வகையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  இதைவிட கீழான ஒரு செய்கையை ஒருவன் செய்ய முடியும் என்று தெரியவில்லை.  இதைச் செய்தவனான அஸ்வத்தாமன் ஒரு பெரு வீரன். அவன் அறம் பேணுவான் என்று என்று கருதியே, பெரும் வில்லாற்றலும், தெய்வீக அஸ்திரங்களும் வழங்கப்பட்டிருப்பவன்.  ஒரு கொள்ளையன் கூட செய்யத் தயங்கும் ஒரு கொடிய செயலை அவன் செய்திருக்கிறான்.  துரியோதனனின் ஆவி அவனைச் செய்யசொல்லியது என்பது போன்ற ஒரு கருத்து வெண்முரசில் வந்திருக்கிறது.   துரியோதனன் கொண்டிருந்த வஞ்சத்தை அஸ்வத்தாமன் தனதாக்கிக்கொள்கிறான் என்பதே அதன் பொருள்.  ஆனால் துரியோதனன் தம் பிள்ளைகளைப் போல்   உபபாண்டவர்களை வளர்த்திருக்கிறான். போரில் அவன் அடைந்த அத்தனை இழப்புகளுக்கிடையேயும் உப பாண்டவர்கள்  கொல்லப்படுவதை அவன் தவிர்த்தான்.  ஆகவே துரியோதனன் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாத ஒரு செயலை துரியோதனனுக்காக செய்வதாக நினைத்து செய்வது துரியோதனனையும் வருத்தத்துக்கு ஆட்படுத்துவதாகும்.  துரியோதனன் வானுலகில் அஸ்வத்தாமன் செயல் கண்டு கதறி அழுதிருப்பான். ஒருவேளை இப்போதுதான் தான் கொண்டிருந்த வஞ்சத்தின் பாதிப்பை முழுதுமாக உணர்ந்திருப்பான் என்று நினைக்கிறேன்.   அஸ்வத்தாமன் பாண்டவர்கள் என நினைத்து அறியாமல் உப பாண்டவர்களைக் கொன்று விட்டான் என்று ஒருவர் சொல்லலாம். இது அதைவிட மேலும் மோசமானது.  தான் யாரைக்கொல்கிறோம் என்பதைக்கூட  ஒருவன் சரிபார்க்காமல்  கொல்பவன்  எப்படி ஒரு வீரனென இருக்க தகுதிவாய்ந்தவன்?  வஞ்சத்தின் காரணமாக, அஸ்வத்தாமன் தான் பெரு வீரன் என்ற நிலையிலிருந்து  மட்டுமல்லாமல் ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்தும் கீழிறங்கிவிட்டான்.   உண்மையில்  அரசாளும் பொறுப்பை அடைந்திருக்கும் பாண்டவர்கள்,  அஸ்வத்தாமன் செய்த பெருங்குற்றத்திற்கு தேடிப்பிடித்து தண்டிக்கவேண்டிய கடமை உடையவர்கள்.
   
         அஸ்வத்தாமன் தண்டிக்கபட வேண்டியவ்னாக இருந்தாலும் அவனை தண்டிப்பதற்கான வஞ்சினத்தை ஏன் திரௌபதி உரைக்க வேண்டும்.  அனைவரும் பெருந்துயரத்தில் இருக்கையில் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் இந்த  வஞ்சினம் அவரவர் இழந்திருக்கும் மனநிம்மதியை மேலும் குலைக்காதா?  ஆனால் வஞ்சினம் என்பது சிந்தித்து எடுப்பது அல்ல.  தன்நிலை மறந்து எடுக்கும் சூளுறை.  ஆனால் உபபாண்டவர்களின் தந்தையரான பாண்டவர்கள் பெருவீரர்கள் கொள்ளாத சீற்றத்தை ஏன் திரௌபதிகொள்கிறாள்?
      
          ஒரு தாய் அவள்  மகன் வளர்ந்து பெரியவனான பிறகு அவனை தான் பேணிக்காக்கவேண்டிய குழந்தையென  கருத முடியாது.  அதே வளர்ந்த மகன் நோயுற்று பிறர் ஆதரவை எதிர்பார்த்து படுக்கையில் இருப்பவனை  மீண்டும்  தன்னை மட்டுமே நம்பி இருக்கும்  சிறு குழவி என அவன் தாய்க்கு தோன்றுவான்.    உபபாண்டவர்கள்  போர்ர்காயங்களால் நோயுற்று படுக்கையில் இருக்கிறார்கள். அவர்களைக் காண வரும் திரௌபதியிடம் தாய்மை பெருகி நிற்கும் தருணம். அப்போது அவர்கள் அஸ்வத்தாமனால் எவ்வித காரணமுமின்றி கொல்லப்படுகையில் அவள் உள்ளிருந்து எழும் தாய்மையின்சீற்றமே இந்த வஞ்சினம்.   அவன் தெய்வீக அஸ்திரங்களைப் பெற்றவன்,  வெல்ல இயலாதவன் என்ற தர்க்கம் எல்லாம் சீற்றம் கொண்டு எழுந்த அந்த தாய்மை உணர்வு அறிவதில்லை.   இந்த வஞ்சினத்தையும் திரௌபதி என்ற அரசி எடுக்கவில்லை அது அவளுள்ளிருந்து எழுந்த  தாய்மையின் தெய்வம் எடுத்தது.    

தண்டபாணி துரைவேல்

Wednesday, November 6, 2019

நீர்ச்சுடர் - தப்பிப்பிழைத்தவர்களின் தடுமாற்றம்



          ஆங்கிலத்தில் survivors guilt என்று சொல்வார்கள்.  ஒரு விபத்து ஒன்றில்  உடன் இருந்தவர்கள் இறந்துவிட  தாம் மட்டும் பிழைத்தவர்கள் அடையும குற்ற மனப்பான்மை என்று பொருள் கூறலாம்.  தாம்  உயிர் பிழைத்திருப்பதாலேயே தம்மை  குற்றம்புரிந்தவர்களாக  மற்றவர் இறப்புக்கு நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாக எண்ணி வருந்தும் ஒரு உளச்சிக்கல்.   சிலர் வருந்தி துயரத்தில் மூழ்கி இருப்பார்கள் ஒரு சிலருக்கு  இது தற்கொலை எண்ணத்தை உருவாக்கும். இத்தகைய மன நிலையிலிருந்து வெளிவர சிலருக்கு மனசிகிட்சை தேவைப்படலாம்.
   
           குருஷேத்திரப் போர் என்பது துவங்கிய சில காலத்தில் அது போரின் இலக்கணங்களை மீறி  ஒரு பெரு விபத்து என  ஆகிவிட்டது. ஒரு பெருங் கப்பல் நீர்ல் மூழ்கி அதில் பயணித்தவர்கள் மூழ்கி இறப்பதைப்போல. பெரு மாளிகையில்  தீப்பற்றி அதில் இருப்பர் எரிந்தழிவதைப்போல குருஷேத்திரப்போர்க் களத்தில் சென்றவர்கள் அனைவரும் இறந்தழிகிறார்கள்.  அதிலிருந்து தப்பி வருவதற்கே வழியில்லாத பெரும் விபத்து என ஆகிறது.  தனி மனிதர்களின் ஆற்றல் இயல்பை விட அதிகரித்துவிட்டால் அது அழிவுக்கே அடிகோலும்.  பீஷ்மர், அர்ச்சுனன், கர்ணன், துரோணர், அஸ்வத்தாமன்,  போன்றோரின் அதீத ஆற்றலே இந்தப் பேரழிவை உண்டாக்குகிறது. அவர்களும் மற்றவர்களைப்போல இயல்பான ஆற்றலைப்பெற்றிருந்தால் இப்போரில் இவ்வளவு அழிவு ஏற்பட்டிருக்காது.    பிழைத்தவர்கள் வெற்றி பெற்ற அணியில் மட்டுமல்லாமல்  தோல்வியடைந்த அணியிலும்  மிகுந்திருப்பர்.   மனிதனின் அதிக வல்லமை அதிக அழிவைத் தருகிறது.  பெரு வீரர்கள் மட்டுமே இதை போர் என்று சில நாட்களெ உணர்ந்திருக்கமுடியும். மற்ற வீரர்கள் எல்லாருக்கும் ஒரு பெரும் விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்றே உணர்ந்திருபார்கள்.  அவர்கள் அடைதிருக்கும் போர்த்திறனுக்கெல்லாம் இப்போரில் ஒரு பொருளும் இல்லாமல் போய்விட்டது.
    
           பாரத நாட்டின் அனைத்து வீரர்களும் ஆயிரம் ஆயிரமாக  பெரும் எண்ணிக்கையில் பங்குகொண்ட இப்போரில் பிழைத்தவர்களை ஒருவர் தம் இரு கை விரல்களால் எண்ணிவிடலாம்.   பாண்டவர்களை நாம் ஒரு பெரும்போரில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை விட ஒரு  பெரும் விபத்தில் தப்பிப்பிழைத்திருக்கிறார்கள்  என்றுதான் சொல்லமுடியும். ஏனென்றால் வெற்றி என்பது பெருமிதத்தை இன்பத்தை  நிறைவைத் தருவது. இவற்றில் எதை ஒன்றையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை.    தம் உற்றார் உறவினர்  அனைத்துக்கும் மேலாக தம் அனைத்து பிள்ளைகளையும் இழந்து விட்டிருக்கும் இந்நிலையை வெற்றி என்று யார் ஒருவர் கூற முடியும்.      பாண்டவர்கள் இப்போது கொண்டிருக்கும் உளநிலை தப்பிப்பிழைத்தவர்களின் உளநிலை.  அதன் சிக்கல்கள் அவர்களின் உரையாடல்களில்,   தயக்கங்களில்,  நிலை தடுமாறல்களில், துயரத்தால் பீடிக்கப்பட்டிருப்பதில்  தெரிகிறது. அதிலிருந்து அவர்கள் மீள கண்ணனின் குழலோசை எப்போது ஒலிக்கும் என்று தெரியவில்லை.

தண்டபாணி துரைவேல்