Monday, July 7, 2014

வெண்முரசு -தகவல்கள், கூறுமுறை

அன்புள்ள ஜெ,
நீங்கள் நலம் என்பது உங்கள் எழுத்திலிருந்தே தெரிகிறது.வெண்முரசு மிகவும் சிறப்பாக முழங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள். பாரதத்தை நீங்கள் உங்கள் மொழியில் சொல்லும் விதம் மிகவும் ஆர்வமூட்டும் விதமாக இருக்கிறது.
அம்பை-பீஷ்மர் உரையாடல்களும், சாந்தனு-பால்ஹிகன் முன்கதையும்,மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வேதவியாஸரின் அறிமுகம் (ஓர் சிறு குழந்தையைப்போல் அவர் ஜனமேஜயனின் யக்ஞசபைக்கு வரும் விதம்), மற்றும் சித்ரகர்ணியின் கதை எல்லாமே மிகவும் உத்வேகமூட்டுபவை.
குருஷேத்திர யுத்தகளத்தின் சிதிலமடைந்த கோலத்தின் விவரணைகள் எல்லாமே அருமை. நாகங்கள் குறித்தும் அவற்றின் படிமங்கள் இந்திய மனதில் ஏற்படுத்தும் மனோதத்துவ தாக்கம் குறித்தும் அழகாக எழுதியுள்ளீர்கள்.
இந்த 22 அத்தியாயங்களைப்படித்தவுடன் எனக்குள் சில கேள்விகள்.
1. வழக்கமாக புராண அல்லது வரலாற்று விஷயங்களை எழுத முற்படும் ஆசிரியர்கள் சில தகவல்களை வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுத்தும் விதம் சொல்லுவார்கள். உ-ம் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதத்தில் பல அத்தியாயங்கள் அக்கால சூழ்நிலையையோ அல்லது ஒரு சில சடங்குகளின்
முகாந்திரங்களையோ விளக்கி எழுதப்பட்டிருக்கும். நீங்கள் அவ்வண்ணம் பெரிய பீடிகை ஒன்றும் சொல்லவில்லை. இது படிப்பதற்கு வசதியாகவே இருக்கிறது என்றாலும் அனைவருக்கும் இது புரிவதற்கு தடையாக இருக்காதா?
2. இன்றைய நிலையில் இருந்து பாரதத்தையும் அது நடந்த அல்லது புனையப்பட்ட காலத்தின் கங்கைச்சமவெளி நாகரீகத்தை பார்க்கும்போது சில கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் உள்ளன. குறிப்பாக கதாபாத்திரங்களின் நிறம். மிகப்பேரழகிகளும் கடவுளர்களும் கருப்பு நிறத்தவர்கள். இது இன்றைய வாசகர்களுக்கு உரக்க சொல்லப்படவேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன். தொலைக்காட்சியில் நான் அன்று பார்த்த பாரதத்திலும் இன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாரதத்திலும் அடித்து சொல்கிறார்கள் ஆரியர் அனைவரும் வெளுப்பர்கள் என்று. கடவுளர் வடிவமனைத்திலும் படிந்த நிறம் வெளுப்பு என்று. அதை வெளிப்பட மறுக்கும் ஒரு முக்கியமான படைப்பாக வெண்முரசு நிற்கிறது. இது இன்னமும் உரக்க சொல்லப்பட வேண்டும். நிறத்தால் தென்னிந்தியர் கருப்பர் வடவர் வெளுப்பர் என்ற கருத்துக்கு நமது ஆறு தத்துவ தரிசனத்தில் இடமில்லை என்பது மேலும் ஆழமாக நீங்கள் நிறுத்திச்சொல்லவேண்டும்.
3. அன்றைய தொழில்நுட்ப சாத்தியங்களை நீங்கள் கையாளும் போது சில இடங்களில் இன்று இருக்கும் வர்மம் போன்ற கலைகளின் துணை கொண்டு சில விஷயங்களை உணர்த்தியிருக்கிறீர்கள், ஆனால் அதேசமயம் கல்லாலான அஸ்தினாபுரத்தின் கோட்டை அடித்தளம் எப்படி கட்டப்பட்டிருக்கும் என்பதும் கோட்டைகள் அந்த வேத காலகட்டங்களில் இருந்ததா என்பதும் சற்றே குழப்பமளிக்கிறது. இதையும் நீங்கள் தெளிவு படுத்தவேண்டும்.
மேலும் படிக்க ஆவலுடன்,
ஜெய்கணேஷ்.
அன்புள்ள ஜெய்கணேஷ்,
நன்றி
1. இந்நாவலின் அமைப்பும் நடையும் பொதுவான ‘வெகுஜன’ நாவல்களுடையவை அல்ல. அத்தகைய நாவல்கள் வாசகர்களுக்கு அனைத்தையும் தெளிவாகச் சொல்லியாகவேண்டிய நிலையில் உள்ளன.
அதற்காக அவை சில இயல்புகளைக் கொண்டிருக்கின்றன.
அ. மொழியை அவை மிக எளிமையாக அமைத்துக்கொள்கின்றன. வர்ணனைகள் எல்லாம் மிகச் சம்பிரதாயமானவையாகவே இருக்கும் அந்நாவல்களை வேகமாக விழியோட்டி வாசிக்கமுடியும். பத்திபத்தியாக ஏன் பக்கம் பக்கமாகக்கூட வாசித்துச் செல்லமுடியும்.
ஆ. வெறும் கதையோட்டமாகவே கதையைக் கொண்டுசெல்கின்றன. அகநிகழ்வுகளை நோக்கிச் செல்வதில்லை. உளவியல் சிக்கல்களோ ஆன்மீகமான தேடல்களோ அவற்றில் இருப்பதில்லை. ஆகவே வாசகன் தன் அனுபவத்துடன் தொடர்புகொண்டு விரிவாக்கவேண்டிய எவையும் அவற்றில் இருப்பதில்லை.
இ. கதைப்பின்னல்களை முடிந்தவரை எளிமையாக்கிக்கொள்கின்றன. எந்த வாசக இடைவெளியும் இருப்பதில்லை. அனைத்தையும் அவையே விளக்கிச் சொல்லிவிடுகின்றன.
*
இந்நாவல் இம்மூன்று அம்சங்களிலும் முழுமையாகவே வேறுபடுகிறதென்பதைக் காணலாம். மொழி சொற்றொடரமைப்பில் மட்டுமே எளிமையாக உள்ளது. பொருள் அளவில் வாசகனின் கவனத்தைக் கோருகிறது. வரிவரியாகவே வாசித்தாகவேண்டும்.
இந்நாவலில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களும் அத்தகவல்களின் வரிசையும் வாசகனால் கவனிக்கப்படவேண்டும். உதாரணமாக வேள்வியில் மானும் பசுவும் பன்றியும் பலிகொடுக்கப்பட்டன என்ற வரியை கவனிக்கலாம். அடுத்த வரி அப்போதுதான் புரியும். செந்நிறமான மான் ரஜோகுணத்தையும் வெண்ணிறமான பசுக்கன்று சத்வகுணத்தையும் இருண்ட பன்றி தமோகுணத்தையும் குறிக்கிறது.
வணிகநாவல்களில் மிகக்குறைவான தகவல்களே இருக்கும். இதிலுள்ள எல்லா வரிகளும் தகவல்களே. இத்தகவல்களை வேறு நூல்களில் வாசித்துத் தெளிவடையலாம். அல்லது இந்நூலையே தொடர்ந்து கவனமாக வாசித்தால் மெதுவாகத் தெளிவாகும். ஆசிரியனே சொல்ல ஆரம்பித்தால் அது நாவலாக இருக்காது.
இந்நாவலில் உள்ள உவமைகள் அனைத்தும் அந்தக்கால வாழ்க்கையை காட்டக்கூடியவ.அவற்றை வாசகன் கற்பனையில் விரித்துக்கொண்டுதான் முன்னகரவேண்டும். வர்ணனைகள் சம்பிரதாயமானவை அல்ல. அவை ஒரு சூழலை, மனிதர்களை கண்முன் காட்டக்கூடியவை. அவற்றை கூர்ந்து வாசித்தாகவேண்டும்.
கடைசியாக இதில் உரையாடல்கள் மிகச்சுருக்கமாகவும் செறிவாகவும் மட்டுமே உள்ளன. விரிவாக வளர்ந்துசெல்லும் உரையாடல்கள் இருக்காது. ஆகவே ஒருவர் என்ன சொல்கிறார் அதற்கு என்ன பதில் வருகிறது என்பது எப்போதுமே மிக முக்கியமானது.
கதைப்பின்னலில் ஏராளமான விஷயங்கள் வாசகனின் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளன. உணர்ச்சிகரமான தருணங்கள் சுருக்கமாகச் சொல்லபப்ட்டு வாசகன் மனதில் விரியவேண்டுமென விடப்பட்டுள்ளன. ஆன்மீகமான மன எழுச்சிகளை மொழி ஓரளவுக்கே குறிப்புணர்த்தமுடியும்.
இவற்றை வாசகன் கூர்ந்து கவனித்தாகவேண்டும். தெளிவடையாதவற்றை பிறரிடம் விவாதிக்கலாம். சில விஷயங்கள் அவன் சொந்த அனுபவம் மூலம் மட்டுமே தெளிவடையக்கூடியவை. அதாவது ஒரு நவீன நாவல் வாசிக்கும் மனநிலை இதற்குத்தேவை. ஒன்றுக்கும் மேற்பட்டமுறை வாசித்தாகவேண்டும்.
வெகுஜனநாவல்களை வாசிப்பதுபோல வேகமாக வாசித்துச்செல்பவர்கள் இந்நாவலை பெரும்பாலும் இழந்துவிடுகிறார்கள்.
ஏன் இப்படி இருக்கிறது என்றால் இது நவீனநாவல் என்பதனால்தான். நவீனநாவல்களும் சரி மகாபாரதம்போன்ற பேரிலக்கியங்களும் சரி ஒரு பொது அம்சம் கொண்டவை. அவை வாசகனும் சேர்ந்து விரிவாக்கிக் கொள்ளவேண்டியவை. வாசகன் கற்பனையால் கூடவே சென்றாகவேண்டும்.
விரித்து எழுதலாம். எழுதினால் அதில் வாசகனுக்கு இடமிருக்காது. பக்கம்பக்கமாக நீர்த்துக் கிடக்கும். இதுவரை எழுதியதை ஐந்துமடங்கு நீட்டவேண்டியிருக்கும். அதற்கு இலக்கிய அமைதி இருக்காது.
*
2. இந்நாவலில் உள்ள கதாபாத்திரங்களும் சரி, பிற தகவல்களும் சரி மகாபாரதத்தை ஒட்டியவைதான். மிகக்குறைவாக பிற புராணங்கள் மற்றும் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். கதைக்காக சற்று விரிவாக்கப்பட்டவையும் உண்டு. கரியவர்கள் என இந்நாவலில் சொல்லப்படும் அனைவருமே கரியவர்கள் என வியாசனாலேயே சொல்லப்பட்டவர்கள். மகாபாரதத்தின் அழகிகளும் அழகர்களும் எல்லாருமே பெரும்பாலும் கரியவரக்ளே.
மகாபாரத காலகட்டத்துக்கு முன்னரே கல்கோட்டைகள் சிந்து-கங்கை சமவெளிகளில் வந்துவிட்டன. லோத்தல் மேலும் ஆயிரம் வருடம் பழைய கோட்டை. ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்தது. இன்றும் உள்ளது.
இந்நாவலில் சொல்லப்படும் வர்மம் ஆயுர்வேதம் மற்றும் பிற தகவல்கள் ஒன்று மகாபாரதத்தில் குறிப்புணர்த்தப்பட்டவை. அல்லது அக்காலகட்டத்திலேயே இருந்திருக்கலாமென பிறநூல்கள் வழியாக சொல்லப்படுபவை. அவையும் புனைவுக்காக விரிவாக்கப்பட்டவையே.
*
மகாபாரதத்தை வாசிப்பவர்களில் இரு வகையான வாசிப்புப் பயிற்சிகள் உள்ளன. இங்கே சென்ற ஆயிரம் வருடங்களாக பக்திநோக்கிலான ஒரு வாசிப்பு உருவாகியிருக்கிறது. அதை ‘பாகவத மரபு’ எனலாம். அது மகாபாரதத்தில் உள்ள அடிப்படை உணர்வுகளின் மோதல்களை, வாழ்க்கைச் சிக்கல்களை, அறமோதல்களை, சிந்தனை கொந்தளிப்புகளை எல்லாம் வெறுமே இறைவனின் விளையாடல் என சுருக்கிக் கொள்கிறது. எல்லா நிகழ்ச்சிகளையும் பக்தி நோக்கி கொண்டுசென்று சேர்க்கிறது.
மகாபாரதம் வரலாறு போல. அதில் அனைத்துமே உள்ளன. ஆகவே அது சங்கடமான உண்மைகள், கசப்பான உண்மைகள் அனைத்தும் அடங்கியது. ஒரு கந்தகக் கடல் அது. அதில் ஈராயிரம் வருடங்களாக நாம் தண்ணீர் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். பாகவத மரபு செய்தது அதைத்தான்.
மகாபாரதத்தில் உள்ள முற்பிறப்புக் கதைகளில் பெரும்பாலானவை அதில் உள்ள தாழ்ந்த சாதியைச்சேர்ந்த பேரரசர்கள் மற்றும் முனிவர்களின் அடையாளத்தை மழுப்பி அவர்கள் உயர்குடியினரே என்று காட்டும் நோக்கம் கொண்டவை. கணிசமான பகுதிகள் இடைச்செருகல்கள் என நன்றாகவே தெரியும். சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் உண்டு. இவற்றை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பண்டைக்காலத்திலேயே இவை பிரக்‌ஷிப்தம் என சுட்டப்பட்டுள்ளன. இந்நாவல் அவற்றை விலக்கியே முன்செல்லும். இது வியாசமானசம் நோக்கிய பயணம்.
அதைப்போன்றதே நிறம் பற்றிய மழுப்பல். கிருஷ்ணன் கரியவன் என எல்லா நூல்களும் சொல்கின்றன. கிருஷ் என்ற வேர்ச்சொல் வளத்தைக் குறிக்கிறது. அவன் பச்சைநிறமானவன். கரியவனே அல்ல. கருப்பாக இருக்க அவன் என்ன மாட்டுக்காரனா என ஒரு புராணிகர் பேசுவதை கேட்டிருக்கிறேன். இது நம் மனச்சிக்கல்.
நாம் அதிகமாகக் கேட்டு வந்திருப்பது அந்த பாகவத மரபையே. அதன் மனநிலைகளைத் தாண்டித்தான் இந்நாவல் செல்லும்.
இதற்கு மறுபக்கம் இந்த பாகவத மரபை முழுமையாக நிராகரித்து எளிய அரசியல் வாசிப்பை இதன்மேல் போடும் நோக்கு. ஆரியதிராவிடவாதம் போன்றவை. அவர்களும் இந்த கறுப்புவெளுப்பு மனச்சிக்கல்களுக்குள் இருக்கிறார்கள். சம்பிரதாயமான இவ்வகை வாசிப்பில் இருந்தும் விடுபட்டால் மட்டுமே இதைத் தொடரமுடியும்.
மகாபாரதத்தின் மானுடக்கதை, மீபொருண்மை உலகமே இந்நாவலின் இலக்காகும். எளிய அரசியல் கோஷங்களை முன்வைப்பதல்ல. எது வாழ்க்கையோ அதைநோக்கிச் செல்வது மட்டுமே இதன் வழி.
*
இந்நாவலை வாசிப்பவர்களில் மிகச்சிறுபான்மையினரால் மட்டுமே இதை முழுமையாக உள்வாங்கமுடியும் என நான் அறிவேன். கணிசமானவர்கள் உதாசீனமான வாசிப்பு வழியாக கதையை மட்டும் தெரிந்துகொள்கிறார்கள். அந்நிலையிலேயே கருத்தும் சொல்வார்கள் . அது இயல்பே.
ஆனால் ஓர் இலக்கியப்படைப்பு என்பது நாம் வாசிக்க வாசிக்க நம்முடன் வளரவேண்டும். இந்நாவல் வாசகர்களுடன் சேர்ந்து வளரும். நவீன இலக்கியங்களும் செவ்வியல்நூல்களும் கொண்டுள்ள இயல்பு இது. மிக நுட்பமான வாசகர் மட்டுமே அறியும் இடங்கள் இதில் உள்ளன. எளியவாசகர்கள் அவற்றைக் கடந்துசெல்லலாம்.
இது நம் பண்பாடு, நம் வாழ்க்கையின் நுட்பம் என்றால் ஒரே வாசிப்பில் அனைத்தையும் அள்ளிவிடமுடியாதல்லவா?
கடைசியாக, இதில் கணிசமான அத்தியாயங்களை நானே மிகப்பிந்தித்தான் தெளிவாக யோசித்து புரிந்துகொள்கிறேன். எழுதும்போது சன்னதம் கொண்டவர் பேசுவதுபோலத்தான். இதில் எனக்கு இருக்கும் பெரிய ஈர்ப்பே இன்று என்ன வரப்போகிறது என்ற ஆர்வம்தான்.
ஜெ