அன்புள்ள ஜெமோ
நீலம்
வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதலில் வாசித்த்தை வாசிப்பு என்று சொல்லமுடியாது.
ஆரம்பகட்ட வாசிப்பு ஒரு வெறும் பரவசம் மட்டும்தான். அது வார்த்தைகள் உண்டுபண்ணும்
போதை. ஒரு வகையான பதைபதைப்பு.
குளிர்
கனத்த இரவில் கூரைப்பனி சொட்டும் ஒலியாக காலம் நடந்தது. சொல் சொல் சொல்லென்று
சொட்டியது பனி. சொல்லி ஓய்ந்து விடிந்த காலையை வெண் திரையிட்டு மூடியிருந்தது
என்பது போன்றவரிகளை ஒருவகையான மதர்ப்புடன் வாசித்துக்கொண்டே செல்வதுதான் அது.
இந்தவகையான எழுத்தில் தேவையானது சொற்களெல்லாம் அழகாக இருப்பது. ஜெயதேவ அஷ்டபதியில்
அப்படி இருக்கும். பிரபந்தம் சொல்லவே வேண்டாம். நவீன தமிழிலே அது சாத்தியம்
என்பதற்கு ஒரு ஆதாரமும் நமக்கு இல்லை. நான் லா.ச.ராவின் பெரிய வாசகன். அவரை எனக்கு
நேரிலேயே தெரியும். ஆனால் அவரது நடையில் அங்கங்கேதான் சந்தமும் மொழியழகும் கூடும்.
நடுவே உரைநடையில் பிராமண பாஷையில் பேச ஆரம்பித்துவிடுவார்
சொல்லப்போனால் ரியலிஸ்டிக் ஆன ஒரு விஷயத்தை இந்த நடையில் சொல்லவே முடியாது என்று
தோன்றுகிறது. எழுத முயற்சிசெய்யலாம்.ஆனால் ஒரு மேஜையைச் சொல்ல ஆரம்பித்தால்கூட
சுருதி கலைந்துபோய்விடும். கர்நாடக ஸங்கீதத்தை புதுமைபண்ணுகிறேன் என்று புதிய விஷயங்களை
பாடும்போது சுருதிகுலைவதை காணமுடிகிறதல்லவா? அந்த ராகங்களில் உள்ள சூப்பர்
ரொமாண்டிக் பாவத்தை வரிகளும் வைத்திருக்கவேண்டுமில்லையா? கிருஷ்ணன் ராதை
உபாசனையின் இந்த போதை இல்லாமல் இந்த மொழி அமைந்திருக்காது. விஷயம்தான் மொழியைத்
தீர்மானம் செய்கிறது
மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் எங்கோ கொண்டு செல்கிறது.
ஒவ்வொரு வரியாக வாசித்தால் கிருஷ்ணன் ராதை எல்லாம் இல்லாமல் அந்த வரிகளே ஒரு
முழுமையான பொயட்டிக் மூட் ஐ அளிப்பதைப்பார்க்கமுடிகிறது
ஒற்றை
ஒருபிள்ளை.
அவன்
என் எண்ணச்சுழியின் மையம்.
அவனை
பித்தாக்கி அலைப்பவனோ மலையிறங்கும் பெருவெள்ளம். யாரவன் என்றறிவீரோ தோழியரே?
கன்றுமேய்க்கும்
குலத்தில் இப்படியொரு கரியோன் பிறந்ததுண்டோ? அல்லிக்குளத்தில் எழுந்த குவளை.
என்று வரிகள் துள்ளிச்செல்வதை வாசிப்பது ஒரு சுகம் என்றால் சிவந்த
ஆயர்குடிக்குழந்தைகள் நடுவே கண்ணன் நிற்பதை சிவந்த முலைமேல் காம்பு போல என
வர்ணிக்கும் அவன்
நம் மைந்தருடன் கூடி நின்றால் வெண்முலையின் நீலக்காம்பென்பான் யாழ்மீட்டி
பாவிசைக்கும் ஆயர்குலப் பாணன்
என்ற வரி தூக்கிவாரிப்போட்டு மேலே வாசிக்க
விடாமல் ஆக்குகிறது. இதுக்காக மட்டுமே நீலம் வாசித்துக்கொண்டிருக்கலாம்
சங்கர நாராயணன்
மழைப்பாடல் பற்றி கேசவமணி- மழையின் இசையும் மழையின் ஓவியமும்
வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின்மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.in/
மழைப்பாடல் பற்றி கேசவமணி- மழையின் இசையும் மழையின் ஓவியமும்
வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின்மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.in/