Saturday, October 11, 2014

கண்ணன் மனநிலை




அன்புள்ள ஜெ சார்,

நான் சிக்கலான மனநிலையைக் கொண்டவன்; நகைச்சுவையாக பகடியாக பேசுபவர்கள் கூட எளிதில் கையாள முடியாத இயல்புடையவன் நான். என்னுள் அவ்வப்போது எழும் வெறுமையை மறக்கவே படித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களது வெண்முரசு தான் நான் படிக்கும் முதல் இலக்கியம்; பாரதமும் நான் முழுவதாக முன்னர் அறிந்ததில்லை; கடினமாகத் தோன்றினாலும் வாசித்து விடுவேன்; சில பத்திகள் புரியாமலே கூட இருந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது வெண்முரசு விவாதங்கள் என தனியொரு இணையதளம் மூலம் நீங்கள் பிரசுரிக்கும் வாசக கடிதங்கள் மிகவும் உதவுகின்றன. 

இப்போது தான் நீலம் முதல் தடவை வாசித்து முடித்துள்ளேன்; சில வாசக கடிதங்களைப் படித்து விட்டு வாசித்ததினால் நிறைய இடங்களில் இதனை எதற்காக சொல்லியிருப்பார்? இதன் பொருள் என்ன? என்றெல்லாம் யோசிக்கிறேன்; பதில் கிடைக்காவிடினும் நானும் ஒரு கோணத்தில் பார்க்க விளைகிறேனே என்ற எண்ணமே மகிழ்ச்சி தருகிறது. 

தொடரட்டும் உங்களது இந்த பெரும் பணி; கடிதங்களைப் படிக்கும்போது திரும்ப அந்த பகுதியினை எடுத்துப் படிக்கவே தோன்றுகிறது. 

மேலும், 

சில வருடங்களுக்கு முன்னர் என் மனதில் தோன்றிய எண்ணம், நான் ஏன் பெண்ணாக பிறக்கவில்லை? காரணம் என் தோழி. அவளுடனேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் நான் பெண்ணாக பிறக்காமைக்காக வருந்தக் காரணம். அந்த எண்ணம் காலப்போக்கில் மறைந்து விட்டது; ஆனால் இப்போது மீண்டும் எழுந்துவிட்டது. காரணம் ராதை; அவளைப் போன்ற பிச்சியாக பிறந்திருக்கக் கூடாதா என வருந்துகிறேன். வருந்தவைத்து விட்டீர்கள். மன்னிக்கவும்...

நன்றி

தினேஷ்


அன்புள்ள தினேஷ்

ஆண் பெண் என்பதெல்லாம் பாவங்கள்தான் என்பதே ராதாமாதவ யோகத்தின் முதல்படி.

சிக்கலான மனநிலை கொண்டவர் என ஒருவர் தன்னை உணர்வதே அவர் அச்சிக்கலை நீவிச் சரியாக்கும் கலையை, அதை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவ்ர் என்பதற்கான ஆதாரம்

நானும் சிக்கலான மனநிலைகளில் இருப்பவனே. அதை கையாளவும் கற்றவன் . சிக்கலான மனநிலை என்பது நுண்ணுணர்வின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. பொதுவாக அனைவரிடமும் உள்ள பொதுச்சராசரி மனமோ சிந்தனையோ இல்லை என்பதனால் அப்படி அது உணரப்படுகிறது

நுண்ணுணர்வு என்பது ஒரு வரம். அதற்காக் நாம் இழப்பது நம் சராசரித்தனத்தை. ஆனால் அது மிகக்குறைந்த விலைதான்

ஜெ


அன்புள்ள ஜெயமோகன்

என் நாளை இனிமையாக்கினீர்கள். அற்புதமான அந்த இசைத்தொகுதிக்கு நன்றி. ஒடிசி எனக்குப்பிரியமான ஆடல்வகை. கேளுசரண்ஜி சம்ஜுக்தா பாணிகிராகி இருவரும் என் எப்போதைக்குமான ஆராதனைநாயகர்கள். நீலம் வாசித்தபின் ஜெயதேவரின் கீதகோவிந்தத்தை மேலும் நுபமாக புரிந்துகொண்டிருகிறேன். அவர் ராதையாக மாறி என்றுமுள்ள நீலமணிவண்ணனின் இசைக்கு நடனமிட்டிருக்கிறா


நீங்களும் அதே மனநிலையில்தான் இருந்திருக்கிறீர்கள். ஜெயதேவனைப்போல கண்ணனுக்கு ஒரு சொல் அஞ்சலி செய்திருக்கிறீர்கள். மாயக்கண்ணன் எப்போதுமே அந்த அகண்ட சுழியை ஒரு புன்னகையுடன் போடுகிறான். அதிதூய காதலை இந்த உலகில் தொடர்ந்து நிலைநிற்கச்செய்வது மிகக்கடினம் என அவன் அறிவான். அவன் யோகக்கண்ணனும் கூட ல்லவா?

நீங்கள் எழுதிய  அந்தக்கவிதை [நிகர்தெய்வம்] மிகவும் பிடித்திருந்தது. அகரத்தில் தொடங்கி அண்டத்தில் முடிகிறது இல்லையா? காளி கங்காளம் பற்றி நீங்கள் எழுதியதை நினைத்துக்கொண்டேன்

சோபனா அய்யங்கார்


அன்புள்ள சோபனா

உண்மைதான். ஒரு மனநிலை எங்கிருந்தோ வருகிறது. வானத்தின் கோடானுகோடி விதிகள் இணைந்து ஒரு தருணத்தில் ஒரு இடத்தில் மட்டும் மழைபெய்வதுபோல. அப்படியே மறைகிறது. அது நம் கையில் இல்லை. கண்ணன் கையில்

ஜெ]

கேசவமணி எழுதும் தொடர் மழைப்பாடல் பற்றி

மரபின் மைந்தன் எழுதும் தொடர் முதற்கனல்பற்றி