Sunday, October 5, 2014

அவரவர் அளவு



அன்புள்ள ஜெ

ஒட்டுமொத்தமாக மீண்டும் நீலத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து என்னவரும் என்று தெரியாமல் அன்றன்று வாசிப்பது ஒரு நல்ல அனுபவம். வெறும் ஒரு அத்தியயாம் ஒருநாளைக்கு என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிக்கவும் எல்லா வரிகளையும் கூர்ந்து கவனிக்கவும் முடிந்தது. 

ஆனால் ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது மொத்தநாவலும் நம் மனசிலே இருப்பதனால் நாவலின் ஒவ்வொரு பகுத்யும் எவ்வாறு ஒட்டுமொத்த நாவலுடன் ஒத்துப்போகிறது என்பதைக்காணமுடிந்தது

நீலக்குவளை மலர்கள் விரிந்த யமுனைவழியாகத்தான் கிருஷ்ணனை முதலில் வசுதேவர் கொண்டுபோகிறார். காற்றுவெளியில் எங்கோ இருக்கும் குழந்தைகளுக்காக உடல் கொடுப்போம் என்கிறாள் தேவகி.

எத்தனை கொடியதென்றாலும் ஒரு பிறவியில் செய்யவேண்டியதென்ன என்று அறியமுடிந்தவர் நல்லூழ் கொண்டவரே. இலக்கறிந்த பறவைக்கு திசைதடுமாற்றம் இல்லை

என்று தேவகிக்கு வசுதேவர் பதில் சொல்கிறார். ஆனால் கிருஷ்ணனைப்பெற்றால்கூட தேவகிக்கு முக்தி கிடைக்கவில்லை. அவள் துக்கத்திலிருந்து விடுபடவில்லை என்று நாவல் முடிவதை நினைத்துக்கொண்டு அந்த இடத்தை வாசித்தபோது மனம் திடுக்கிட்டது

இம்மாதம் அஷ்டமி ரோகிணியில் அன்னை மணிவயிறு ஒழிந்தாள். அக்கருவை கைதொட்டு எடுத்தவள் நான். கருக்குருதி பூசிய நீலப்பட்டுடலை என் கண்ணாலும் கருத்தாலும் கடந்துறையும் மெய்யாலும் மெய்யிறந்த நுண்ணாலும் அறிந்தேன். உலகாளும் செம்பாதங்களை என் சென்னியில் சூடினேன். இளவெந்நீரால் பூம்பட்டுச்சுருளை நனைத்து அவனைத் துடைத்தேன். நீலமணியின் ஒளியெழுந்து இருளறைக்குள் ஒளியெழக்கண்டேன்

என்று கண்ணனை கைதொட்டு எடுத்த வயற்றாட்டி உணர்கிறாள். அவளுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. ஆச்சரியம்தான். அவரவர் கர்மா வும் அவரவர் மனசும்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன


சுவாமி