Friday, October 10, 2014

ராதாமாதவ யோகம்




அன்புள்ள ஜெ,

ஒரு யோகநூலாக நீலத்தை வாசிக்கலாம் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்கான சில குறிப்புணர்த்தல்களும் கொடுத்திருந்தீர்கள். அதை மேலும் விளக்கமுடியுமா?

நாவலில் இரண்டுவகையான யோகமுறைகள் சொல்லப்படுகின்றன என்று நான் புரிந்துகொள்கிறேன். ஒன்று ஹடயோகம் அல்லது கடுமையான உபாசனை போன்றது. அதைத்தான் கம்சன் செய்கிறான். அது ‘தத்’  ‘அது’ எதிர்நிலையில் இருக்க நாம் மறுமுனையில் நின்றுசெய்யப்படுவது

எல்லாவகையிலும் இயற்கையை மறுப்பதுதான் அது. காமம் குரோதம் மோகம் மூன்றுமே மனிதனுக்கு இயற்கையாக உள்ளவை. அவற்றை மறுப்பதும் தாண்டிச்செல்வதுதாம் அது

கருணை அறம் கூடிவாழ்வது ஆகியவையும் இயற்கையால் மனிதனுக்குக்கொடுக்கப்படுபவை. அவற்றையும் விலக்கிக்கொண்டுசெல்வது அது.

அந்தவழியில் செல்வது வாளேந்தி போவதுபோல. கம்சன் அதை செய்கிறான். வாளேந்திச்செல்லும் அந்தப் பாதையில் வாளேந்திவரும் கிருஷ்ணனைப் பார்க்கிறான்

அதற்கு அவன் பல படிகள் வழியாகச் செல்கிறான். பஞ்சபூதங்களையும் ஏவுகிறான். அவை தோற்கின்றன. கடைசியாக அவன் தன் அதிகாரபூர்வ தூதனை அனுப்புகிறான்

களத்தில் நேருக்குநேராக சந்திக்கும்முன்பு தன்னுடைய ஆணவமாயை ஆகிய யானையை ஏவுகிறான். கரியதும்  மதம்கொண்டதுமான யானை அது.

களத்திலே ஐந்து புலன்களையும் மனம் புத்தி அகங்காரம் என்னும் எட்டையும் ஏவுகிறன. கடைசியில் தானே வந்து தான் அழிந்து முக்தி அடைகிறான்

ராதை நேர் எதிர்த்திசையில் எல்லா இயற்கையான உணர்ச்சிகளையும் பெருக்கிக்கொள்கிறாள். அன்னையாகவும் விளையாட்டுத்தோழியாகவும் காதலியாகவும் கண்ணனை அவள் அறிகிறாள்

கண்னனை அவளே உருவாக்கிக்கொள்கிறாள். கடைசியாக காதலாக அடைகிறாள்

எட்டு நாயகிநிலையில் அவனை அறிந்து முழுமைகொள்கிறாள். இதுதான் ராதாமாதவ யோகம். நீங்கள் இதை முன்வைக்கிறீர்கள்

நான் உணர்ந்தது சரிதானே?

திலக் ராஜ்

[நான் ஓஷோ கம்யூனில் ஏழுவருடம் யோகா கற்றிருக்கிறேன். ஒருமுறை நாம் சந்திக்க விரும்புகிறேன்]

அன்புள்ள திலக்

நான் கோடிகாட்டியதே அதை வாசகர்கள் இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டக்கூடாது என்பதற்காகத்தான். எல்லா வாசிப்பும் நல்ல வாசிப்பே

சந்திப்போம்

ஜெ

மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்