Monday, October 13, 2014

தன்னறமும் தன்னகங்காரமும்







அன்பான ஜெயமோகன்


தன்னறம்

மீண்டும் முதற்கனலைக் கையில் எடுத்துள்ளேன். ஒரு இரவில் ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே. நிறுத்தி நிதானமாக, பல பகுதிகளை மீள்வாசிப்பு செய்து, உள்வாங்க முயற்சி செய்கிறேன். இந்த வாசிப்பு இன்னும் பல வருடங்களுக்கு நீளும், நீள வேண்டும் என்பதே அவா. எங்கேயும் எப்போதும் என் வழித்துணையாகும் சிறு அகல் விளக்காக அது இருக்கும்.
இனி எனக்குச் சோதனைகள் ஏதுமில்லை, நான் காமத்தையும் அகங்காரத்தையும் முற்றிலும் வென்று விட்டேன்” என்று பரீட்சித் சொன்னபோது அந்த அகங்காரத்தையே காரணமாகக் கொண்டு தட்சன் ஒரு சிறு புழுவின் வடிவில் பரீட்சித்தின் தவச் சாலைக்குள் நுழைந்தான். (வேள்விமுகம் 3, பக்கம் 34)

விதியை வெல்ல யாருக்கும் முடிவதில்லை என்பதற்கு உதாரணமாக இந்தக் கதையை அம்மா சொல்வார்கள். “பழத்தின் நடுவில் இருந்த பாம்பு வெளியே வந்து கொத்தி பரீட்சித்து ராசா செத்துப் போனாராம்.” இன்று இன்னும் ஆழமான அர்த்தம் கொண்டுள்ளது.
  
“தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில்  தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச் சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக் கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்”  என்று சித்ரகன் சிபிக்குச் சொல்கிறது. (பொற்கதவம் 4 பக்கம் 92)

அகங்காரத்தை முற்றிலும் வென்று விட்டேன் என்று சொல்ல வைப்பதே அகங்காரம். முழுமைக்கு முதற்படியில் ஒரு சிறு சறுக்கல். அந்நிலையில் ஒருவன் அழிவதற்கு ஒரு சிறு புழு போதும். சிறு கதவுகள் மூலமே அழிவின் பாதைகள் திறக்கின்றன. சிறு புழுக்கள் நுழைகின்றன. அவை அதற்காகவே காத்திருக்கின்றன. முக்தி அடைவதற்கு மட்டும் பல காத தூரங்கள்.


ரவிச்சந்திரிகா


அன்புள்ள ரவிச்சந்திரிகா,

முதற்கனல் ஒரு ஆரம்பகட்ட வரைபடம். பிறகு வரும் நாவல்களில் அதில் சொல்லப்பட்டவை மேலும் மேலும் விரிவடைந்து  சிக்கலாகிக்கொண்டே செல்லும்

தன்னறம் பற்றிய வரியை வைத்து துரியோதனனை துரோணரை கர்ணனை இன்னும் அணுக்கமாக புரிந்துகொள்ளலாம்

ஜெ