“அது“ இயற்கையை படைத்தபோது, இயற்கையில் உள்ள அனைத்தும் இயற்கையை பயன்படுத்தியே வாழும்படியும் வைத்து உள்ளது. மனிதனையும் அப்படித்தான் வைத்து உள்ளது.
இயற்கையில் இருந்து கொண்டு, இயற்கையை பயன்படுத்தி இயற்கையில் உள்ள அனைத்துப்போலவும் வாழ்கின்ற மனிதன் இயற்கையை கட்டுப்படுத்தவும் கற்றுக்கொண்டான். இயற்கையை கட்டுப்படுத்தக்கற்றுக்கொண்டபோ து அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஆனல் ஒன்றை மற்றொன்றாக மாற்றமுடியும் என்று தெரிந்துக்கொண்டான்.
ஒன்றை மற்றொன்றாக மற்றத்தெரிந்த மனிதன் அந்த மாற்றத்தை தனக்காக செய்கின்றானா? மனிதகுலம் முழுவதற்குமாக செய்கின்றானா? என்ற வினாவின் புள்ளியில் நின்று தத்தளிக்கின்றான்.
குந்திபோன்ற அகம் கொண்டவர்கள் தனக்காக என்றும், தருமன் போன்ற அகம் கொண்டவர்கள் மனிதகுலம் முழுவதற்குமாக என்றும் நினைக்கின்றார்கள். எனக்கு உரியதை உண்டாக்கி உலகுக்கு கொடுப்பேன் என்பது குந்தியின் மனநிலை. உலகுக்கு உரியதை உண்டாக்கினால் அதில் எனக்கு உரியது கிடைத்துவிடும் என்று தருமன் நினைக்கிறான். குந்தியின் நீதி வாளாகவும், தருமன் நீதி நூலாகவும் ஆகிவிடுகின்றன.
வாளின் நீதி புறத்தை வடிவமைக்கிறது. நூலின் நீதி அகத்தை வடிவமைக்கிறது. புறம் கண்ணோடு இணைந்து எளிதில் உருமாற்றத்தை விளக்குவதால் மானிட கூட்டம் அதில் எளிதில் இணந்துக்கொண்டுவிடுகின்றது. வல்லான் வகுத்ததே நீதி என்றும் அகிவிடுகின்றது.
//இங்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை நீதிகளையும் நாம் அடித்துஉடைத்து ஆட்சியைக் கைப்பற்றி ஐந்துவருடம் அவர்கள் மகிழும் ஆட்சியைஅளித்தால் நம்மை நீதிமான்கள் என்பார்கள். கணவன்திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனைபெண்களை நீ அறிந்திருக்கிறாய்? அதைப்போலத்தான் மக்களும்.மன்னர்களை படைகொண்டுசென்று பக்கத்து நாடுகளைசூறையாடச்செய்யும் பெரும் விசை எது? மக்களின் ஆசைதான். அப்படிகொன்று குவித்து சூறையாடிக் கொண்டுவந்து மக்களுக்குக்கொடுப்பவனையே மக்கள் மாமன்னன் என்று புகழ்கிறார்கள் என்றுதான் நீகற்ற நூல்களும் சொல்லியிருக்கும்.//
நூலின் நீதி அகத்தை வடிவமைக்கிறது. அது வடிவதைத்து உள்ளது என்பதை விளக்குவது எளிதல்ல ஆனால் அதை ஒவ்வொரு அகமும் அறிகின்றது. அறிகின்ற அகம்கூட அதன் வலிமையை நம்ப மறுக்கின்றது. நம்பிக்கை இல்லாத ஒன்றுடன் இணையும் அனைத்தும் ஒரு புள்ளியில் நம்பிக்கை இன்மையோடே இருக்கின்றது. அந்த நம்பிக்கை இன்மையால் வயிறு பெரிதா? தலைபெரிதா? என்று வினாவினால் வயிறுதான் என்று அந்த தலையே ஆடி சாட்சியாகின்றது. தலையைவிட்டு வயிறோடு சேர்ந்துக்கொள்ளும் கூட்டம் ஆடாத ஒரு தலையை ஏக்கத்தோடுப்பாக்கின்றது. அப்படி ஒரு தலைக்கிடைத்தால் வயிற்றை மறந்து அந்த தலைக்கு தலைதாழ்த்தி விடுகின்றது.
//நாம் அறம் மீறி இவ்வரியணையை வென்று மக்களுக்கு தீனிபோட்டுநிறைவடையச் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நீதிமான் எழுந்து நம்மைநோக்கி கைநீட்டினால் மக்களுக்கு இரு தேர்வுகள் வந்துவிடுகின்றன. நாமாஅவரா என. அவர்கள் ஒற்றைப்பெருந்திரளாக அந்த நீதிமானை நோக்கிச்சென்றுவிடுவார்கள். நாம் உலர்ந்த மரம் போல ஒடிக்கப்படுவோம்” என்றான் (அர்ஜுனன்)//
வாள்நீதியிடம் இல்லாத ஒரு ஈரம், நூல்நீதியிடம் இருக்கிறது அந்த ஈரம் அதை மீண்டும் துளிர்க்க வைத்துவிடும் என்பதையும், வாள் துருபிடித்தே, தேய்ந்தோ அழிந்து தீரவேண்டிய ஒன்று என்றும் இன்று காட்டப்பட்டு உள்ளது போற்றுதலுக்கு உரியது.
இயற்கையை கட்டுப்படுத்த கற்றுக்கொண்ட மனிதன் அதை மற்றொன்றாக மாற்றமுடியாத தருணத்தில் அழிக்கவும் கற்றுக்கொண்டு உள்ளான் என்பதை குந்தியின் மூலம் காட்டுகின்றார் ஜெ. அதற்கு மானிட பேராசை என்று பெயர் என்று சொல்லாமல் சொல்கின்றார். அறிவு ஆசையாக மாறும்போது எத்தனை பெரிய இடர்கள் உண்டாகின்றன. //“உன்தமையனிடம் சொல். அவன் அஸ்தினபுரியை ஆளாமல் இம்மண்ணில்வாழமுடியாதென்று. பாண்டவர்கள் பைசாசிக வழியில் செல்லாமல்தடுக்கவேண்டுமென்றால் அவன் உயிர்வாழ்ந்தே ஆகவேண்டும் என்று”என்றபின் குந்தி//
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றமுடியும்” என்று மனிதனின் அறிவுக்கண்டுபிடித்தது என்றால், எந்த ஆற்றல் எந்த ஆற்றலாக மாறினாலும் அந்த ஆற்றலை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தவேண்டும் என்று கண்டுபிடித்தது மனிதனின் பேராசை.
இன்றைய பேராசையின் பெரும் நடனத்தில் நின்று விளையாடும்போதும் குந்தி ஒரு பிரபஞ்ச உண்மையை கனிபோன்று உதிர்த்து தன்னை உயர்த்திக்கொண்டுவிட்டாள். தானும் ஒரு கற்றவள் ஞானி என்பதை நினைவுப்படுத்துகின்றாள்.
//என்ன ஒரு இக்கட்டு” என்றாள். தலையை அசைத்துக்கொண்டு “ஒரு பெரியஇலக்கை நாம் குறிவைக்கையில் எல்லா பக்கங்களில் இருந்தும் இடர்கள்எழுகின்றன. எதிரிகள் மட்டுமல்ல, வேண்டியவர்களும் எதிர்க்கிறார்கள்.அத்துடன் இயற்கையும் இணைந்துகொள்கிறது//
எவ்வளவுதான் மனிதன் பேரறிவாளனாக இருந்தாலும், இயற்கையும் தான் எவ்வளவு பெரும் சக்திப்படைத்தவன் என்று மனிதனிடம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்கள். சான் ஏறுவது மனிதனின் ஆற்றல், முழம் சறுக்குவது இயற்கையின் ஆற்றல். அதையும் தாண்டி ஏறிக்கொண்டு இருக்கும் மானிடர் வாழ்க!
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.