Saturday, November 8, 2014

விழா- கடிதங்கள் 3


அனபுள்ள ஜெயமோகன்,

தங்களது தளத்தில் வெளியான வெண்முரசு விழா ஏன்? என்ற கேள்விக்கான தங்களது பதில் எனக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது. எது எதற்கோ விழா கொண்டும் நாம் ஓர் இலக்கிய நிகழ்வுக்கு விழா கொண்டாடக்கூடாதா என்ன? அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு படைப்பாளி விழா ஏன் என்று விளக்கமளிக்கும் நிலையிலேயே நம் இலக்கியச் சூழல் இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது. ஒரு படைப்பாளிக்கு ஊக்கம் தராவிடினும் புண்படுத்தாமலும் கொச்சைப்படுத்தாமலும் இருக்கும் ஓர் எளிய நாகரிகத்தைக்கூடவா நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை?

குறிப்பிட்ட படைப்பாளியின் எழுத்துக்கள் மீதும், படைப்பாளியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்வது நம்மவர்களுக்கு கைவந்த கலை என்பதைச் சொல்லவேண்டியதில்லை. படைப்பாளியையும் படைப்பையும் கொண்டாடும் மனோபாவம் இன்னும் நம் இலக்கியச் சூழலில் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும். ‘சொல் புதிது சுவை புதிது என்று தன் கவிதைகளைப் பற்றித் தானே சுயவிளம்பரம் செய்து கொண் அவல நிலையில் பாரதி வாழ்ந்த மண் அல்லவா இது?

சுந்தர ராமசாமி குறிப்பிடுவது போல ஒரு படைப்பை வாசித்து ஒரு முடிவுக்கு வராமல், தாங்கள் கொண்ட பல்வேறு முன்முடிவுகளால் கருத்துக்களை உதிர்ப்பவர்களைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தங்கள் பயணம் எத்தனை தூரம் என்றாலும் அத்தனை தூரத்திற்கும் காலோயாது தங்களுடன் பயணிக்க என்னைப் போன்ற வாசகர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்கிறேன். தங்களின் வெண்முரசு மகாபாரதம் இந்த மண்ணில் இருக்கும் காலம் வரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தங்களுக்கு என்னைப் போன்ற பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.

அன்புடன்,
கேசவமணி.


 திரு ஜெ அவர்களுக்கு,

இன்று 'வெண்முரசு விழா ஏன்?' படித்தேன்.

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்.

என தாங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் நானும் இவ்விழாவில் பங்கு கொண்டு
எளிய வாசகனின் பங்களிப்பை உங்களுடன் தொடர
இருக்கிறேன்.

முதற்கனலும், மழைப்பாடலும் தி நகர் நியூ புக்லாண்டில் வாங்கியாகி
விட்டது. வண்ணக் கட்லும், நீலமும் விழாவில் வாங்கவிருக்கிறேன்.

அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்



அன்பு ஜெயமோகன்,
நான் உங்கள் ரசிகன் இல்லை. உங்களைப் புகழ்வதும் என் நோக்கமில்லை. மனதுக்கு நெருக்கமான சில படைப்புகளின் வழி பெற்றுக்கொள்ளும் ஊக்கத்தைப் பகிர்ந்து கொள்வது ஒரு வாசகனின் கடமை. அவ்வகையிலேயே உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன்.
எங்கும் நாங்கள் ஜெயமோகனின் சீடர்கள் என்பதான தோற்றத்தைத் தந்துவிடவில்ல்லை என்றாலும் ஜெயமோகனைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டாலே அஞ்சுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு சக மனிதன்; இன்னும் அதைத் தாண்டி மனதுக்கு நெருக்கமான நண்பன். அதன்பொருட்டு உங்களின் எல்லாக் கருத்துகளையும் நாங்கள் அப்படியே ஒப்புக்கொணடது இல்லை; அதை நீங்களும் வலியுறுத்துவதில்லை. வெண்முரசு விவாதங்களில் சிலர் உங்களைக் காட்டிலும் சிறப்பாக எழுதுவதை நான் கண்டிருக்கிறேன். அதை மனதார வரவேற்பதில் எவ்விதத் தயக்கமும் உங்களுக்கு இருந்ததில்லை என்பதையும் நான் அறிவேன். ராமராஜன் மாணிக்கவேல் அதற்கு சரியான சான்று.
மார்க்சியத்தை மார்க்சியவாதிகளைக் காட்டிலும் யதார்த்தமான சூழலில் எங்களுக்கு அறிமுகப்படுத்தியது நீங்கள் மட்டுமே. ஒரு புள்ளிக்குள் சிறைப்படுத்திவிடும் குறுகிய மனப்பாங்கை நேரடியாய் கேள்வி கேட்கும் படைப்புகள் உங்களுடையவை. ஒருவனை அவனின் இறுக்கமான மன அமைப்பிலிருந்து தளர்த்தி ஆசுவாசப்படுத்தவும் நீங்கள் முயல்கிறீர்கள். மேலும், எங்கும் புனிதப்பிம்பத்தைக் கட்டமைத்து கருத்துசொல்லியாக ஒருபோதும் உங்களைக் காட்டிக்கொண்டதேயில்லை. கருத்து பகிர்வாளனாகவும், அதை ஒட்டிய மேலதிக நகர்வுகளுக்குத் துணைபோகிறவராகவுமே நீங்கள் இருக்கிறீர்கள். அக்குணத்தாலேயே என்னை ஈர்க்கவும் செய்தீர்கள்.
வெண்முரசு விழா தொடர்பான கருத்துக்கு வருகிறேன். வெண்முரசைக் கொண்டாடுவது என்பது ஜெயமோகனையோ, மகாபாரதத்தையோ கொண்டாடுவது ஆகா. அது நம்மை நாமே கொண்டாடுவது. ஆம், வெண்முரசு திறந்து வைக்கும் பாதைகளில் நாம் காணும் மனிதர்கள் நம்மின் பிம்பங்களே. அப்பிம்பங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வை அகத்தளத்தில் நின்று கேள்வி கேட்கின்றன. வெண்முரசு நாவல்கள் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களுக்கும், நமக்கும் இடையேயான உறவைச் செறிவூட்டுகின்றன. மேலும், ஒற்றைத்தளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் நம் மனதை பன்முகத்தளங்களில் பயணிக்கவைத்து வாழ்வை அதன் பன்முகக்கோணங்களில் உள்வாங்கிக்கொள்ளவும் உதவுகின்றன. தொழில்நுட்பங்களால் பலவீனப்பட்டுப் போயிருக்கும் நவீன மனதுக்கு இணக்கமற்ற காப்பிய வெளியின் ஒளிர் முத்துகளை முடிந்தவரை அதற்கு அறிமுகப்படுத்தவும் வெண்முரசு முயல்கிறது. வெண்முரசும், வெண்முரசு தொடர்பான விவாதங்களுமே வெண்முரசின் முழுமை. அவ்வகையில் வெண்முரசு மிகச்சிறப்பாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது. எங்கும் வெண்முரசு புனிதத்தன்மை கொண்டிருக்கவில்லை என்பதும் அதன் தனிச்சிறப்பு.
          வெண்முரசுவை விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜெயமோகனை விமர்சிக்க வேண்டி வெண்முரசைக் கையில் எடுக்காதீர்கள். அப்படி எடுக்க விரும்பினால் தாராளமாக வெண்முரசு விவாதங்களில் மாற்றுக்கருத்துகளோடு பங்கேற்றுக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, மலின அரசியல்வாதிகள் போல வசவுகளைப் பொழிந்து கொள்வது நமக்கழகன்று. நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
கோபிசெட்டிபாளையம்