மிக அழகாக ஒரு அரசன் தன்னை ஞானம் நோக்கி செல்வதற்கு தயார் ஆவதை இமய மலை சாரல் சென்றான் என்றும் குருகுலங்கள் சென்றான் என்றும் சிறு வரிகளில் சொன்னபடி போகிறீர்கள். உள் இருக்கும் விதை மலர்வதை போன்று அவன் வளர்வது தான் இயல்பாக உள்ளது. யாதவ குல காப்பாளன் தான் முதலில். மலர்க்கு பதில் மயில் பீலி. ஓவ்வொருவரின் தன்மை போல் அவனது பேசும் மொழி, உடை, உடல் மொழி என செல்வது அடக்கமாக உள்ளது. திரௌபதியை காட்டிலும் இவனது வர்ணனை சத்தம் மின்றி செல்கிறது. நீலம் பிரயாகைக்கு பின்னால் வந்து இருந்தால் கிருஷ்ண பிரியர்கள் இன்றைய பகுதி படித்து விட்டு ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள்.
இவனது தீர்க்கமான பார்வை, வீரம், பின்னால் நிற்கும் மக்கள், ஒருங்கிணைக்கும் சக்தி என அரசியல் பொருட்டு ஆரம்பித்து இருக்கிறது பாண்டவர்களின் ஓர் பந்தம். ஒரு குருவி உள்ளே வந்து விட்டது. முட்டையிட்டு வளர்ந்து அவ்வீட்டின் பகுதியாக இனி ஆகும். இப்படித்தானே உறவுகள் எப்படியாவது தொடங்கியாக வேண்டும். வெகு ஆழமாக தேசத்தின் அரசியல் திசைகளும், அவரவர் கணக்குகளும், வெல்லும் வெறிக்கு காலம் அணையிட்டு காத்து வைத்து இருக்கும் கணக்குகளுமாக செல்கிறது கடந்த 3,4 பகுதிகள். விதுரர் போன்றவர்களின் ஊறிய diplomacy, அதையும் உரசி பார்க்கும் கனிகர் போன்றவர்களின் கூர் புத்திகள் என இன்றைய நாளின் , நாட்டின், அரசியலின் நிலை பிரதிபலிகிறது. அல்லது அது தான் இன்றும் தொடர்கிறது.
நீங்கள் சொன்னது போல் பொங்கி ஓடும் கங்கை கரைகளுக்கும், அதை கொண்டு வளர்ந்து இருக்கும் புல் வெளிக்கும், தொலை தூரத்து காந்தும் பாலை மண்ணுக்கும் இடையிலான சண்டை உக்கிரம் கொள்கிறது எதனால் என்று சொல்ல முடியாத நிகழ்வுகள் மற்றும் திரிபுகளால்.ஒரு மாபெரும் மழைக்கு ஒரு பகுதி மேக மாற்றம் மட்டுமா காரணம்?
அன்புடன்,
லிங்கராஜ்