Monday, November 3, 2014

வெண்முரசின் வழிகள்

 
மகாபாரதம் எழுதும் கணபதி. தக்கை ச் சிற்பம்]
 
 
அன்புள்ள ஜெ,

 நலமாக இருக்கிறீர்களா? 

  உண்மையில் பெருமகிழ்வுடன் இதை எழுதுகிறேன்.  சிறுவயதில் மகாபாரத கதைகளைப் படிக்கும்போது பல சந்தேகங்கள் எழும். வியுகங்கள் எப்படி இருக்கும். , ஹஸ்தினபுரியின் அமைப்பு, கதைமாந்தர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், குருகுலங்களில் எவ்வாறு கல்வி கற்பித்திருப்பார்கள்  என பலவாறு கேள்விகள். பிறகு கற்பனையில் மூழ்கி அதில் கிடைக்கும் அரைகுறை பதில்களை வைத்து சற்று ஆறுதல் கொள்வேன். ஆனால் என் வாழ்நாளில்  மகாபாரதத்தை இவ்வளவு விரிவாக  - முக்கியமாக எல்லையற்ற வாசின்பத்துடன் வாசிப்பேன்  என கனவிலும் நினைத்ததில்லை.  பெரும் பரவசத்துடனும் மனநிறைவுடனும் வாசித்துவருகிறேன். ஒவ்வொரு பகுதியும் ஒன்றையொன்று மிஞ்சி வருகிறது.  தத்துவத்தில் ஆர்வம் கொண்ட  வாசகனுக்கு  கல்வி  கற்பிக்கும் பகுதிகள் குறிப்பாக வண்ணக்கடலில்  துரோணர் அர்ஜுனனுக்கு கற்பிக்கும் இடம், கிருபர் - அர்ஜுனன் உரையாடல், உச்சகட்டமாக இளநாகன் சமணத் துறவியிடம்  துடுக்குரைத்து பின்னர் அவர் சொல்லும் அறவுரையை கேட்பது    - என  வாசிப்பது பெரும் ஆனந்தத்தை அளித்தது.  உண்மையில் இப்படி சில இடங்களை மட்டும் சுட்டிக் காட்டுவது சரியானதல்ல என்றாலும் , ஒரு பதின்பருவ வாசகனாக இவ்விடங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. 

ஆனால், மிக முக்கியமாக  நான் கருதுவது, உள்ளும் புறமும் முடிவற்ற தூரம் செல்லும் தங்களின் எழுத்தே. பாண்டுவின் கனவிலிருந்து, நிஷாத நாட்டின் பெரும் சிற்பங்கள் வரை..  ,  மகாபாரத்தின் உட்சிக்கல்கள் , விதி முகூர்த்தங்கள் என  கடலை கடலளவுக்கே கொள்வது போல் வெண்முரசை உருவாக்குகிறீர்.     பேரன்புடைய ஒரு தந்தை தனது அறிவுத்தாகம் கொண்ட  பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலவே ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது உணர்கிறேன்.   ஒரு நிமித்தம் போல இந்நிகழ்வைச்  சாத்தியமாக்கிய  சைதன்யாவிற்கு வணக்கங்கள் பல. தமிழுலகு - குறிப்பாக மூளைத்திராணியுள்ள இளம் வாசகர்கள் கொண்ட தமிழுலகு இதற்காக  அவருக்கு மிகவும்  கடமைப்பட்டுள்ளது . 

பொருளற்ற ஒரு இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு அல்லல்ப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்  ஒரு மீட்பாகவே வெண்முரசைக் காண்கிறேன்.  இந்த வாசிப்பின் பெருங்களியாட்டத்தில் இருந்து சற்று இறங்கிய பிறகே விரிவாக விமர்சன கண்ணோட்டத்தில் எழுத வேண்டும். 

இ ஆர் சங்கரன்