Friday, December 12, 2014

பிரயாகை-43-பேய்ப்பிடித்தல்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.


காவியத்தலைவன் படத்தில் காளியப்பனை ஜொளிக்கவைக்கும் முதல் கணத்தில் வெளிப்படும் திருப்புகழ்

கனகந்திரள் கின்ற பெருங்கிரி
     தனில் வந்து தகன்தகன் என்றிடு
          கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅநந்தவிதம் புணர்
     கவளந்தனை உண்டு வளர்ந்திடு
          கரியின் துணை என்று பிறந்திடு ...... முருகோனே” என்பது.

இந்த திருப்புகழ் காளிப்பனை ஒளியாக்குகின்றது. கோமதிநாயகத்தை கரியாக்குகின்றது. கோமதி எந்த அளவுக்கு கரியாகின்றானோ அந்த அளவுக்கு காளி நெருப்பாகி ஒளிர்கின்றான். ஒரு செயலின் இரு மூலங்கள். 

இந்த திருப்புகழின் பின்வரும் வரிகள்  மானிட அகத்தின் செயல்பாட்டை விளக்கும் அற்புதத்தின் அற்புதம்.

“பலதுன்பம் உழன்று கலங்கிய
     சிறியன் புலையன் கொலையன் புரி
          பவமின்று கழிந்திட வந்தருள் ...... புரிவாயே” அந்த திருப்புகழ் படித்த கோமதிநாயகம்தான் அனைத்து பாவங்களையும் செய்கின்றான். இந்த திருப்புகழின் அர்த்தம்புரிந்த ஆழம் தெரிந்த காளியப்பன்தான் அனைத்து பாவங்களையும்தாண்டிப்போக தனது உயிரையே கொடுக்கிறான்.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் இந்த திருப்புகழை வசனகர்த்தா ஜெயமோகன் கதைக்கருவின் விதையாக பயன்படுத்தி உள்ளார் என்பது படம் முடிந்தபின்பே தெரியவரும். ஒரு திரைப்படம் இலக்கியம் ஆகும் தருணம். பாவம் அழிந்திட அருள்தருவாய் முருகா என்று வேண்டும் திருப்புகழ் கற்றவன் அந்த திருப்புகழ் அர்த்தம் ஆழம்பெரும் இடத்தில் பாவம் செய்ய தொடங்குவது உச்சம். அது நெருப்புக்கான கரி.


பிரயாகை-43ல் வரும் இந்த வரிகள் காவியத்தலைவன் அந்த காட்சியை திருப்புகழை ஞாபகப்படுத்தியது.  காளியப்பன் பாண்டவராகவும், கோமதிநாயகம் கௌரவர்களாகவும் நிற்கும் தருணம் இன்று. வாரணவதம் சிவம்கோவில் பாவங்களுக்கு கழுவாய்தேடும் இடம். அங்கு சகுனி தனது முதல் பாவத்தை தொடுங்குவது முரண். பாண்டவர்கள் நெருப்பாக குவிக்கப்படும் கரிதான் கௌரவர்கள். விண்ணாலும் தெய்வங்களே மண்ணில் ஜோதிகளை உருகாக்க  மண்ணில் கரிகளையும் மனிதர்களாக பிறப்பிக்கின்றதோ?

//“இங்கிருந்து வடக்கே கங்கையின் கரையில் வாரணவதம்என்னும் இடம் உள்ளதுஅங்கே கஜாசுரனைக் கொன்று அவன்தோலை உரித்துப் போர்த்தி கோயில்கொண்டிருக்கும் சிவன்கோயில் உள்ளதுபிழைகளுக்குக் கழுவாய் தேடும் இடம் அது.பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் மக்கள்அங்கே வருகிறார்கள்அங்கே பாண்டவர்கள் செல்லட்டும்அங்கேஅவர்கள் எரிந்தழிந்தால் அது மகதத்தின் சதியென்றேகொள்ளப்படும்அப்படி நாம் பரப்புவோம்அரக்குமாளிகை அதுஎன்பதை இங்குவரை எவரும் கொண்டுவந்து சேர்க்கமுடியாது.”//


மனைவியை சாகும் நிலைக்கும் அடிக்கும் மனிதனிடம்தான் இவளுக்கு என்னைவிட்டால் தெய்வங்களின் துணைகூட இல்லை என்ற நம்பிக்கு இருக்கிறது. இது மனைவி என்ற ஒரு ஜீவனைப்பற்றியது மட்டும் இல்லை. தந்தைக்கும் மகனுக்கு இடையில் இதே நினைப்புதன். தாயிக்கும் மகளுக்கும் இடையில் இதே நினைப்புதான். நண்பர்களுக்கு இடையிலும் இதே நினைப்புதான். உறவுகளுக்கு இடையில் இருப்பதும் இதுதான். இந்த மானிட சிக்கலை ஆழத்தில் இருந்து பிரித்து காட்டும் இடத்தில் ஜெ மின்னுகின்றார்.

தான் நல்லவன் என்று நம்பவும் வேண்டும்.காமகுரோதமோகங்களை பின் தொடர்ந்து ஓடவும் வேண்டும்.மானுடனின் முதன்மையான இக்கட்டே இதுதான்” என கணிகரின்குரலும் மெல்லிய சிரிப்பும் கேட்டது

காமக்குரோதமோகங்கள் பின்னால் ஓடிக்கொண்டே தன்னை நல்லவன் என்ற நம்ப தனது செயலில் உள்ள ஞாயத்தை கற்பிக்கும் ஆற்றல் பெற்று இருக்கவேண்டும். சகுனிக்கு ஓநாய் கடிக்குப்பின்னால் அந்த நிலை கிடைத்துவிட்டது. கணிகன் போன்றவருக்கு அவர்களின் நீதிகள் துணைசெய்கின்றன. நீதிகள் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து எரிந்து வெறும் நீதியாக இரக்கமற்று நின்றுவிடுகின்றது. வெட்டுப்பட்டு இரத்தம் வழியும் உடல் துடிக்கும்போது வெட்டியவாள் இரத்தம் வடிய வடிய நின்றாலும் துடிப்பது இல்லை. நீதி அந்த வாள்போல். பாசத்தில் கட்டுப்படும் கௌரவர்களுக்கு ஆசையும் இருக்கு, பயமும் இருக்கு. அவர்களின் ஆசையை பெருக்கவேண்டும், அந்த ஆசையே அவர்களின் பயத்தையும்போக்கவேண்டும். அதற்கு ஒரே வழி “துரியோதனன் பாண்டவர்களின் தாசன்” என்ற நிலையை உடைப்பது அதற்காக எதையும் செய்வது. அந்த இடத்தில் அனைவரும் கட்டுண்டுப்போகிறார்கள்.

ஆட்டைப்பளிக்கொடுக்கும்போது வெட்டுபவனுக்கு மட்டும் அல்ல வெட்டுப்படும் ஆட்டுக்கும் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பிக்கைதான் அதை சந்தோஷமுடன் வெட்டச்செய்கிறது. அநிவார்யம் என்னும் கொலைக்கு பின்னால் சாதாரணப்பாண்டவர்கள் தெய்வங்களாகிவிட வாய்ப்பு உண்டு. யமன், மாருதன்,இந்திரன் அஸ்வினிதேவர்கள். கொற்றவை. வெறும் மாமிசப்பிண்டமாக இருப்பதைவிட இந்த தெய்வபிம்பம் அற்புதம். வாழ்வாங்கு வாழாமலே தெய்வத்தில் வைக்கப்படும் தெய்வங்கள். கௌரவர்களும் நல்வர்கள். பத்திமான்கள். நம்புவதற்கு இன்னும் பலியாடுகள் இருக்கிறது. இருக்கும் அல்லது உற்பத்தி செய்வார்கள்.  

துரியோதன் மட்டும் தனது சுயநலம் என்னும் தம்பாக்கு (புகையிலை) எச்சில் ஊறிஊறி வருவதை கண்டு அருவருத்து காரிக்காரி துப்புகின்றான். கடைசியாக முழுவதும் காரித்துப்பிவிட்டான். நாக்கில் அதன் கரகரப்பும், ஈர்ப்பும் போவதில்லை முதல்முறை என்பதால் இந்த அருவருப்பும் துப்பலும் உள்ளது. அதன்போதை போகப்போக அவனை சுயநலஎச்சிலுக்காக ஏங்க வைக்கும்.

பேய் பிடிக்கும் வரைதான் பேய்மீது பயம். பேய்பிடித்தபின்பு அவனே பேய்தானே! சுயநலம்கூட பேய்தான். துரியோதன் போவதற்கு ஒரு பாதை கிடைத்துவிட்டது. வானம்மிதக்கும் தடாகத்தில் கருநாகம் புரள்கிறது. என்ன ஒரு அற்புத படிமம் ஜெ!  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.