நதியின்
படகு பயணம்போன்றது வரலாறு, படகு நதியை பின்னுக்கு தள்ளிவிட்டுச்செல்வதாக
நினைக்கிறது ஆனால் நதி படகுக்கு முன்னும் பின்னும் இருந்துக்கொண்டே இருக்கிது.
வரலாறும்தான்.
பாண்டவர்களின்
சரித்திரநதி முன்னும் பின்னும் கிடக்கிறது. அவர்கள் ஒரு படகாகி இருக்கிறார்கள்.
எண்ணம் என்னும் கங்கையில் பயணம் சலிப்பதே இல்லை. குந்தி, தருமன், பீமன், அர்ஜுனன்.
நகுல, சகாதேவன் அனைவரும் பயணிக்கின்றார்கள். அவர்களுக்கு மட்டும் இல்லை
வாசகனுக்கும் புதிய பயணம்தான்.
குந்திக்கு
பின்னால் அன்னையும், முன்னால் பேரரசியும் என்னும் எண்ணம் நதியாகி கிடக்கிறது.
தருமனுக்கு
பின்னால் இளவரசன், முன்னால் சக்கரவர்த்தி என்னும் எண்ணம் நதியாகி கிடக்கிறது.
பீமன்
பின்னால் பேருடலும் முன்னால் புராணமும் என்னும் எண்ணம் நதியாக கிடக்கிறது.
அர்ஜுனனுக்கு
பின்னால் யோகமும், முன்னால் பக்தியும் என்னும் எண்ணம் நதியாக கிடக்கிறது. அல்லது
அர்ஜுனனுக்கு பின்னால் தனிமையும், முன்னால் உடையா இணைப்பும் என்னும் எண்ணம் நதியாக
கிடக்கிறது
நகுல
சாகதேவர்களுக்கு பின்னால் குழந்தைமையும், முன்னால் ஷத்ரமும் என்னும் எண்ணம் நதியாக
கிடக்கிறது.
இவர்கள்
அனைவரையும் இழுக்கும் இணைக்கும் கண்ணனுக்கு பின்னால் சராசரி, முன்னால் விண்ணளப்போன்
என்னும் எண்ணமும் நதியாக கிடக்கிறது.
//ஒவ்வொருவனுக்கும் மைந்தனாக இளையோனாக தோழனாக அவர்களின் இல்லங்களில் வளர்பவனாக இருந்தான். சாளரம் வழியாகத் தெரியும் மலைமுடி போல மிகத்தொலைவில் விண்துழாவி நின்றாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தருணத்திலும் வீட்டுப்பொருள் போல விழிக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருப்பான்//
வெண்முரசு
பாண்டவப்பாத்திரங்கள் முற்றாக தன்னை கங்கையில் வைத்து புதுபித்துக்கொண்டுவிட்டன.
எண்ணநதியின் பின்னால் உள்ள அனைத்தும் அவைகளுக்கு சிறியவை ஆகிவிட்டன, அவைகளுக்கு
இனி பெரியவை என்பது முன்னால் வரப்போகின்ற காட்சிகள்தான்.
அர்ஜுனன்
எண்ணமாகிய நதியில் பயணிக்கும்போது காணும் காட்சிகள்தான் இனி மகாபாரதம். அற்புதமான
படிமமாகிவரும் கங்கையின் காட்சியும், அர்ஜுனன் எண்ணமும் அற்புதம்.
//அர்ஜுனன் கரையை நோக்கியபடி நின்றிருந்தான். கங்கையின் பயணம் சலிப்பதேயில்லை. அது காலத்தில் பயணம் செய்வதுபோல. கங்கையின் வடக்கே செல்லச்செல்ல காலம் பின்னகர்ந்துகொண்டே செல்லும். நகரங்கள் பழையவையாக சிறியவையாக ஆகும். சிற்றூர்கள் மேலும் சிற்றூர்களாகி பின் பழங்குடி கிராமங்களாகும். அதன்பின் தவக்குடில்கள். அதன்பின் அடர்காடு. பனிமலைகளின் அமைதி//
வெண்முரசின்
வருங்கால கோட்டோவியம் மேல் உள்ளது. மகாபாரதத்தில் சகாதேவன் சிறந்த ஜோதிடக்காரன்
என்று சொல்வார்கள். அர்ஜுனன் ஞானி நாளையை இன்றே சொல்லிவிடுகின்றான். ஆனால் அவன்
சொல்வது அவனுக்கும் புரியவில்லை. இதை விதியிட்ட திரை என்று சொல்லலாமா? என்ன என்ன வரப்போகின்றது என்பதை
அர்ஜுனன் உள்ளம் கண்டுகொண்டுவிட்டான் இதுதான் வரப்போகின்றது என்று அவனுக்கு
சொல்லத்தெரியவில்லை. ஆனால் தருமன் ஏதோ வரப்போகின்றது என்கின்றான் ஆனால் உள்ளம்
செயலற்று உள்ளது என்கிறான்.
//பெருமூச்சுடன் தருமன் “இத்தருணத்தில் அவன் நம்முடன் இருந்திருக்கலாம்… ஏதோ நிகழவிருக்கிறது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் சித்தம் செயலற்றிருக்கிறது” என்றான். அர்ஜுனன் “அது நம் உளமயக்காக இருக்கலாம் மூத்தவரே” என்றான்//
ஒரே பயணம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்வாழ்க்கை விளையாடுகின்றது மனிதனுடன்.
நன்றி
அன்புடன்
ராமராஜன்
மாணிக்கவேல்.