வெண்முரசு நாவலை
எழுதுவதற்கான தூண்டுதல்களும் காரணங்களும் பல உள்ளன. ஒரு தொடக்கத்துக்குப் பின்னர் திரும்பி
நோக்கி இதிலிருந்து தானோ என்று எண்ணிக்கொள்வதுபோல.. எல்லாமே தொடக்கங்கள்தான் என்பதுதான்
உண்மை
மிகச்சிறியவயதிலேயே
மகாபாரதக்கதைகளை கேட்டும் கதகளியாகக்கண்டும் வளர்ந்தவன் நான். என் அம்மா மறைந்த விசாலாட்சியம்மா
முறையாக மகாபாரத வாசிப்பை நிகழ்த்தக்கூடியவர். முறையாவக நிகழ்த்துவது என்றால் ஒரு தென்னையை
நட்டபின்னர் ஒவ்வொருநாளும் மகாபாரதம் வாசித்து முடிக்கவேண்டும். எழுத்தச்சனின் மலையாள
மகாபாரதம். முளைத்து இலைவிட்ட தென்னையை எவருக்கேனும் கொடுப்பார்கள். புனிதமான மரம்
அது. அம்மா மூன்றுமுறை வாசித்து நான் கேட்டிருக்கிறேன்
நிழல்குத்து என்ற
கதகளியை நினைவுறுகிறேன். கோட்டயத்துத் தம்புரான் எழுதியது. பாண்டவர்களைக்கொல்ல ஒரு
மந்திரவாதியை வரவழைக்கிறார் சகுனி. ஒருவரின் நிழலை வெட்டி அவரைக்கொல்லும் வல்லமை பெற்றவன்
அவன். மகாபாரதக் கதை ஒன்றை விரிவாக்கம் செய்து எழுதப்பட்ட அந்த கதகளி நாடகம் என்னை
பிரமிக்கச்செய்தது. இன்று வரை அந்தக்கற்பனை என்னை அலைக்கழிக்கிறது. ஒருவரின் நிழலைக்
கொன்று அவரைக்கொல்வது என்றால் என்ன அர்த்தம். நிழலில் இருக்கும் நம்முடைய உயிர் என்பது
என்ன?
நான் வாசித்த முதல்
மகாபாரதநாவல் என்றால் அது வி.எஸ்.காண்டேகரின் யயாதிதான். மகத்தான அந்த நாவலைப்பற்றி
நான் எழுதியிருக்கிறேன். இளவயதில் மகாபாரதத்தின் நிலவெளியில் அந்த கதைமாந்தருடன் வாழ்ந்த
பரவசத்தை அளித்த படைப்பு அது. அதன்பின்னர் பி.கெ.பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும்
[ஆ மாதவன் மொழியாக்கம் தமிழில்] காசர்கோட்டில் இருக்கையில் எம்.டி.வாசுதேவன் நாயர்
அவரது புகழ்பெற்ற இரண்டாமிடம் [தமிழில் குறிஞ்சிவேலன்] நாவலை எழுதத் தொடங்கியிருந்தார்.
பின்னர் எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா
இந்நாவல்கள் என்னை
பெரும் கனவு ஒன்றுக்குள் கொண்டுசென்றன. மகாபாரதத்தை எனக்குள் நிகழ்த்திக்கொண்டே இருந்தேன்.
அக்காலத்தில் சாகித்ய அக்காதமியின் கரூத்தரங்கு ஒன்றில் பேராசிரியர் இந்திரநாத் சௌத்ரி
இந்திய மகாபாரத நாவல்கள் பற்றிச் சொன்னார். இந்தியா அன்றும் இன்றும் மகாபாரதத்தைச்
சொல்லிக்கொண்டே இருக்கிறது என அவர் சொன்னது என்னை பெரும் எழுச்சி கொள்ளச்செய்தது
அக்காலத்தில் ஒருமுறை
பி.கெ.பாலகிருஷ்ணனிடம் அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் மதுக்கடையில் வைத்து அவரது நாவலைப்பற்றிச்
சொன்னேன். அது கர்ணனைப்பற்றிய நாவல். கர்ணனைப்பற்றி எழுதுவதனாலேயே அர்ஜுனனுக்கு நியாயம்
செய்யமுடியாமல் போகிறது. அனைவருக்கும் நியாயம் செய்வதாக இருந்தால் மொத்த மகாபராதத்தையும்
மீண்டும் எழுதவேண்டும் என்றேன். ‘நான் எழுதப்போகிறேன்’ என்று பாதி விளையாட்டாகச் சொன்னேன்
பாலகிருஷ்ணன் எழுந்து
என் தோளில் கை வைத்து ‘எழுதுடா தம்பி...நீ எழுதுவாய்’ என்றார். அப்போது அது கொஞ்சம்
விசித்திரமாக வேடிக்கையாகவே இருந்தது. ஆனால் நாள்செல்லச்செல்ல அந்த எண்ணம் எனக்குள்
வலுப்பெற்றபடியே வந்தது
ஆனால் மகாபாரதத்தின்
விரிவை வாசிக்க வாசிக்க அந்த தைரியம் இல்லாமலாகியது. மேலும் வியாசமகாபாரதத்தின் பல்வேறு
கதைக்குழப்பங்களையும் காலக்குழப்பங்களையும் பார்த்தபோது அவற்றை நீவி நேராக்கி ஒற்றைப்புனைவாக
நவீனநாவலாக ஆக்குவது சாத்தியமே அல்ல என்று தோன்றியது.
உதாரணமாக அர்ஜுனன்
துருபதனை தோற்கடித்து அவமதிக்கிறான். பழிவாங்கத் துடிக்கும் துருபதன் திரௌபதியை வேள்விமூலம்
பெற்றுக்கொள்கிறான். ஆனால் துருபதனை வென்ற சிலநாட்களுக்குள்ளாகவே சுயம்வரத்தில் திரௌபதியை
அர்ஜுனன் மணக்கிறான். அதற்கு திரௌபதி வளர்ந்தபெண்ணாக நேரடியாக தீயில் இருந்து தோன்றிவிட்டாள்
என்று சொல்லி செல்கிறார் வியாசன். நவீன நாவலில் அது செல்லுபடியாகாது. இந்தக்காலக்குழப்பத்தை
என்ன செய்வது? இப்படி அத்தனை இடங்களிலும் காலக்குழப்பம் வரும். இறந்தவர்கள் மீண்டு
வருவார்கள்—உதாரணம் ஜமதக்கினி தருமனைச் சந்திப்பது
ஆகவே ஒத்திப்போட்டுக்கொண்டே
வந்தேன். மகாபாரதத்தை ஒட்டி பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதினேன். அவை சொல்புதிது
பதிப்பகத்தால் மகாபாரதக்கதைகள் என்றபேரில் வெளியிடப்பட்டுள்ளன. பலமுறை பொய்வலி வந்தது,
பிரசவம் நிகழவில்லை. பூநாகம் என்ற பேரில் எழுதிய முற்றுப்பெறாத நாவலில் இருந்து இரு
அத்தியாயங்களை குறுநாவலக வெளியிட்டேன். நடுவே
மகாபாரதத்தை ஒரு தொலைக்காட்சித் தொடராக எழுத கோரிக்கை வந்தது. எழுதமுடியவில்லை. தொடர்ந்து
ஆய்வுசெய்துகொண்டெ இருந்தேன். என் ஆய்வுநூல்களே நூலகத்தை நிறைத்துவிட்டன
இன்னொரு தூண்டுதல்
ராபர்ட்டோ பொலானோவின் 2666 என்ற நாவல். ஐரோப்பிய வரலாறு மற்றும் தொன்ம மரபின் வழியாக
ஒரு நவீன் ஆசிரியன் கொள்ளும் பயணம் அது. மிகச்சிக்கலான
செறிவான ஆக்கம். பலமாதங்களாகியது அதை நான் வாசித்துமுடிக்க. அப்போது தோன்றியது அத்தகைய
ஒரு ஆக்கம் ஏன் நமக்குச் சாத்தியமில்லை என. நாம் ஏன் எளிய யதார்ர்த்தங்களையும் அன்றாட
அரசியலையும் மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம்?
காரணம் நாம் மரபை
அறிந்தவர்கள் அல்ல. அறிந்தால்தானே விமர்சிப்பதும் மறுஆக்கம் செய்வதும். ஆகவே நம்மால்
எதிலும் ஆழமகாச் செல்லமுடிவதில்லை. நாம் சமகாலத்தை மட்டுமே பார்க்கிறோம். நேற்றுக்குள்
செல்லமுடியவில்லை. ஆகவே நம் ஆழ்மனதுக்குள்ளும் செல்லமுடியவில்லை. எளிய யதார்த்தத்தை,
கண்ணால் கண்டறிந்தவற்ரை, அப்படியே எழுதுவதே இலக்கியம் என்று எண்ணிக்கொள்கிறோம்
நம் பிரம்மாண்டமான
தொன்ம மரபை மீண்டும் நவீன மொழியில் கொண்டுவந்து நிறுவவேண்டுமென நினைத்தென். அதை மீட்டுருவாக்கம்
செய்யவேண்டும். ஊடும்பாவுமாக அதைவைத்து நெசவுசெய்யவேண்டும். அதிலுள்ள அத்தனை விதைகளையும்
முளைக்கவைக்கவேண்டும். அதற்காகவே வெண்முரசு எழுதப்படுகிறது
வெண்முரசு நம்
மரபின் படிமங்களின் பெரும் களஞ்சியம். அதை இன்றைய நவீன எழுத்தாளன் அண்மையாக உணரமுடியும்.
அது அளிக்கும் புனைவுமொழி அப்படிமங்களை இன்றைய நோக்கில் புனைவுக்குப் பயன்படுத்த வழிகாட்டுகிறர்து/
எதிர்காலத்தில் ஒரு படைப்பாளி ராபர்ட்டோ பொலானோ போல மேலும் ஊடுபாவுகள் கொண்ட ஒரு ஆக்கத்தை அதிலிருந்து உருவாக்கிக்கொள்ளமுடியும்.
சென்ற டிசம்பரில்
மகாபாரதம் பற்றி என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீ நாவலாக எழுது அப்பா என்றாள்.
அது ஒரு நிமித்தம் என்று தோன்றியது. உடனே அறிவித்து ஓரு வாரத்துக்குள் எழுதத் தொடங்கிவிட்டேன்.
தினம் ஒரு அத்தியாயம் வீதம் என் இணையதளத்தில் வெண்முரசு வெளிவந்துகொண்டிருக்கிறது.
வெண்முரசு நாவலை
நான் முன்னரே எழுதிய இறுதிவிஷம் என்ற குறுநாவலில் இருந்துதான் தொடங்கினேன். ஆனால் வெண்முரசின்
நடை வேறு. ஆகவே அந்தக்குறுநாவலையே திருப்பித்தான் எழுதவேண்டியிருந்தது. என்னைப்பொறுத்தவரை
ஒரு நாவலைத் தீர்மானிப்பது அதன் நடை. நடையைத் தீர்மானிப்பது அதன் முதல் வரி. அந்த வரிக்காக
நான் காத்திருப்பேன். முட்டி மோதுவேன். அது வந்ததும் எழுதி முடிக்கவேண்டியதுதான்.
முதற்கனல் அணியலங்காரம்
மிக்க நடைகொண்டது. ஆனால் அணிகள் இயற்கையாக, முற்றிலும் புதியவையாக, மீண்டும் வராதவையாக
இருக்கும். அது மகாபாரதத்தை உருவாக்கிய அடிப்படை எழுச்சிகளைப்பற்றிப் பேசுகிறது. மனஉச்சங்கள்
வழியாகவே செல்கிறது. பீஷ்மருக்கும் அம்பைக்குமான உறவு. முதற்கனல், அஸ்தினபுரியை எரித்து
அழித்த காட்டுத்தீயின் தொடக்கம், அம்பைதான்.
மழைப்பாடலில் நடை
மாறுபடுகிறது. வெண்முரசுக்கு என்று ஒரு தனி நடை உண்டு. உருவகங்களும் நுட்பமான சித்தரிப்புகளும்
கொண்ட நடை அது. அதற்குள் மழைப்பாடல்ம் பெரும்பாலும் நேரடியான நடைகொண்டது. அது காந்தாரம்,
யாதவநாடு, அஸ்தினபுரி என விரிந்த நிலக்காட்சிகளை அளிக்கமுனைகிறது. மகாபாரதத்தின் பின்னணியில்
இருக்கும் வெவ்வேறு நிலங்களின் மோதலை விவரிக்கிறது. அநிலங்களில் வாழும் வெவ்வேறு பண்பாடுகளின்
மோதலாக அதை விரிக்கிறது. அப்பண்பாடுகளின் தூல வடிவங்களாக வருகின்றனர் சத்யவதி, காந்தாரி,
குந்தி, அம்பிகை, அம்பாலிகை என்னும் பெண்கள். அன்னையரின் போர்தான் மழைப்பாடல்
வண்ணக்கடல் இரண்டு
சரடுகள் கொண்டது. ஒன்று இந்தியசிந்தனைமரபின் வேதம்சாராத சிந்தனைகளின் தொடர்ச்சியை சித்தரிக்கிறது.
இந்தியாவின் விரிந்த நிலம் வழியாகச்ச்செல்லும் இளநாகன் என்ற தமிழன் இந்த தத்துவங்கள்
வழியாகவும் கடந்துசெல்கிறான். அவன் அறியும் மகாபாரதக்கதைகள் வழியாக துரோணர்,. ஏகலைவன்,
துரியோதனன், கர்ணன் என பெரும்போக்கால் பின் தள்ளப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களின்
கதைகள் விரிகின்றன.
நீலம் முழுமையாகவே
கற்பனாவாதத்தின் உச்சநிலைகள் மட்டுமே அடங்கியது. ராதையின் பார்வையில் கண்ணனின் இளமைப்பருவத்தைச்
சொல்லும் நாவல் இது. உருகி வழியும் மொழி கொண்டது. பிரயாகை கிட்டத்தட்ட யதார்த்தவாத
நாவல். நேரடியாகவே மகாபாரதத்தின் அதிகாரப்போரைச் சுட்டுகிறது
இபபடி வெவ்வேரு
இயல்புள்ள வெவ்வேரு கோணங்களில் பேசும் முப்பது அல்லது அதிகமான நாவல்கள் வழியாக மகாபாரதத்தை
எழுதுவதே என் இலக்கு. முழுமையாக. இதுவரை இந்தியாவில் மகாபாரதம் பலரால் நாவலாக எழுதப்பட்டுள்ளது.
மகத்தான நாவல்கள், பெரிய நாவல்கள் உள்ளன. இந்த அளவு முழுமையான விரிவான நாவல்கள் இல்லை.
ஆனால் இது மகாபாரதத்தின்
உரைநடை வடிவம் அல்ல. மொழியாக்கம் அல்ல. இது ஒரு முழுமையான நவீன நாவல். கப்ரியேல் கர்ஸியா
மார்க்யூஸுக்கும் கார்லோஸ் புயண்டஸுக்கும் பிறகு எழுதப்படும் நவீன நாவல் என்று சொல்லலாம்.
மகாபாரதத்தின் கதைநிலம் இதில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் பேசுபொருள் மகாபாரதம்
முன்வைக்கும் அடிப்படை மானுடத்தருணங்கள் வழியாக இன்றைய வாழ்க்கையைப்பற்றிப் பேசுவதுதான்.
மகாபாரதம் முன்வைக்கும்
அழகியல் ஒன்று உண்டு. அதை புராணவாதம் எனலாம். மாய யதார்த்தவாதம் போல ஒரு தனித்த அழகியல்
அது. அதற்கான விதிகள் உண்டு. அந்த விதிகளின்படித்தான் இந்தியாவெங்கும் பல்லாயிரம் புராணங்கள்
பின்னர் உருவாயின. மகாபாரதத்தில் உள்ள புராணங்களின் விரிவாக்கமே பாகவதம் உட்பட பிற
புராணங்களில் உள்ளது. அந்த புராண அழகியல் இருநூறாண்டுகள் முன்புவரை நீடித்தது
அந்தப்புராண அழகியலை
மீட்டுருவாக்கம் செய்து நவீன வாழ்க்கையின் இக்கட்டுகளைப்பேசமுடியுமா என்று பார்ப்பதே
வெண்முரசின் நோக்கம். இதுவரை வெண்முர்சில் வந்துள்ள புராணங்கள் அனைத்தும் அவ்வாறாக
மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளவை. ஏராளமான புதிய புராணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புராணங்களால்
ஆன ஒரு பெரிய உலகம் வெண்முரசால் கட்டமைக்கப்படுகிறது
என்னைப்பொறுத்தவரை
எழுத்தாளர்கள் இருவகை. தன் அந்தரங்க உலகை, தானறிந்த யதார்த்ததை மட்டுமே எழுதக்கூடியவர்கள்
முதல்வகை. அவர்கள் எழுதும் எழுத்து மிகவும்
எல்லைக்குட்பட்டது. தன் பண்பாட்டையே மொத்தமாக மறு ஆக்கம் செய்பவனே பெரிய எழுத்தாளன்.
அவனே இலக்கியத்தை வரலாறாக ஆக்குகிறான். வரலாற்றை இலக்கியமாக்குகிறான். அவன் எழுதும்
படைப்புகள் கலைகளஞ்சியத்தன்மை கொண்ட்வை. தல்ஸ்தோய் முதல் ராபர்ட்டோ பொலானோ வரை அதற்கு
முன்னுதாரணங்களைச் சொல்லமுடியும். என் இலக்கு அத்தகைய படைப்பாளிகளே.
வெண்முரசு ஒட்டுமொத்த
இந்தியப்பண்பாடையே மறுஆக்கம் செய்யமுயல்கிறது என்று சொல்லலாம். இதில் இந்திய சிந்தனை
முழுமையகாவே இடம்பெறவேண்டுமென நினைக்கிறேன். இந்தியாவில் அனைத்து நிலங்களும் அத்தனை
தொன்மங்களும் அத்தனை புராணங்களும் இதில் இருக்கவேண்டும். இந்தியப்பண்பாட்டின் அத்தனை
நுண்ணியதகவல்களும் இதில் இருக்கும். ஆம், பண்பாட்டை முழுமையாக அள்ள முயல்கிறேன். பெரிய
கனவுதான். ஆனால் முயலலாமே
வெண்முரசு ஒரு
மரபார்ந்த வாசகனுக்கு அவனுடைய பண்பாட்டின் இன்றைய சாத்தியங்களைக் கண்டடைய உதவும். அவன்
அறியாத ஒரு மகாபாரதத்தை இதில் அவன் வாசிக்கமுடியும். ஒரு நவீன வாசகனுக்கு அதிநவீன நடையில்
அமைந்த ஊடுபாவுகள் மிகுந்த நுண்பிரதிகள் செறிந்த ஒரு நவீன நாவலை வாசிக்கும் அனுபவத்தை
அளிக்கும்.
நான் உருவாக்குவது
படிமங்களின் ஒரு காடு. உணர்ச்சிகளின் ஒரு கடல். மகாபாரதம் நம் மரபின் பெருந்தொகை. அதை
மறு ஆக்கம் செய்வதன் வழியாக பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட ஒரு மரபையே மறுபடியும்
சமைக்கிறேன் என்று தோன்றுகிறது. ஒருவகை நிமிர்வையும் அச்சத்தையும் ஒருங்கே அடைகிறேன்
நிறைவளிப்பது இதற்குக்
கிடைத்துவரும் வாசிப்பு. மிகமிகக்கூர்மையாக வாசிப்பும் பல்லாயிரம் வாசகர்கள் இதனுடன்
வந்துகொண்டிருக்கிறார்கள். என் இணையதளத்தின் வருகையாளர் எண்ணிக்கை நான்கு மடங்காகிவிட்டிருக்கிறது.
ஒவ்வொருநாளும் வாசகர்கடிதங்கள் வந்து குவிகின்றன.
ஒரு புதிய புனைவுலகை
திறந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். அது வாசகர்களை இன்று கவர்கிறது. நாளை அதிலிருந்து
எழுத்தாளர்கள் உருவாகி வருவார்கள்.
[குமுதம் தீராநதி டிசம்பர் 2014 இதழ்]