Thursday, December 4, 2014

இனிய போர்வீரன்




இனிய ஜெயம்,

அர்ஜுனனுக்கும் பீமனுக்கும் இடையேயான நட்பு  தனித்துவமானது. அந்த நட்பு  ஒரு வகையில் நீயும் நானும் 'ஒரு உயிர் கொண்ட கொல்லும் இயந்திரம்' எனும் தன்னுணர்விலிருந்து உருவாகி இருக்கக் கூடும்.

எனக்கான போரை நான் செய்யவே போவதில்லையோ  என அர்ஜுனன் வினவுகிறான்.  பீமனுக்கும்  கிருஷ்ணனுக்கும்  உள்ள  புன்னகையின்  பின்னுள்ளது  ஒன்றுதான். பீமனுக்கு  'குற்ற உணர்ச்சி' மரத்து விட்டது. கிருஷ்ணனின்  ஆன்மாவில்  அத்தகு தீமையின் முத்தத்தின் சுவடு ஏதும் இல்லை.

போருக்கு முன் உறங்கும்  படை வீரர்களின்  உறக்கம் குறித்து, அவ் வாழ்வின் துயர் குறித்து  அர்ஜுனன் கிருஷ்ணன் வசம் என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறான். கிருஷ்ணன் சொல்கிறார். 'புன்னகைத்துக் கொள்வேன்'.  மதுரா இரவுப் போரில் கொன்று குவித்து விட்டு  அர்ஜுனன் முகம் நோக்கி புன்னகைக்கிறான் கிருஷ்ணன்.
இந்த ஒரு குண பேதத்தில் கிருஷ்ணன் பீமனுக்கும்  அர்ஜுனனுக்கும்  ஆச்சர்யகரமான மறு கரையாக இருக்கிறான்.

இன்றைய அத்யாயம்  துவக்கம் மிகவும் ஆழமானது. கங்கைக் கரையை  அடைந்த தருணமே  பீமன் அவனுக்குள்  உறைந்திருந்த  கசப்பை ''இழந்துவிட்டான்'' எனக் காண்கிறான். அர்ஜுனன்.

அந்தக் கசப்பின் வேர் எது. தம்பியரை நம்பி  அவர்களுடன்  விருந்து என எண்ணி  அவர்கள் அளித்த நஞ்சை உண்டவன்  பீமன்.  அன்னையின் ஆணைக்கு இணங்கி   தெரிந்தே நஞ்சை உண்டவன் . பெற்றவளும்  உடன் பிறந்தவரும்  பாசத்தின்  நம்பிக்கை தேன் தடவி பீமனுக்கு அளித்தது நஞ்சே.
அந்தக் 'கசப்பைதான்' பீமன் இப்போது இழந்திருக்கிறான்.  இழந்த அந்தக் கசப்பை  பல மடங்கு உக்கிரத்துடன்  மீண்டும் எய்தப் போகிறான். அரக்கு மாளிகை  சம்பவத்திற்குப் பிறகு.

துரியனுக்கு  பீமனும், தர்மனும்  வெறுப்புக் கூறியவர்கள். அர்ஜுனன் என்ன பிழை செய்தான்?  தருமன் வசம் அவமானம் அடைந்து  துரியன் செல்கையில்  அவனுக்கு இணையாக அகம் வலித்தவன் அர்ஜுனன். அரக்கு மாளிகைக்குப் பிறகு  அர்ஜுனன், துரோணர் தர்மன் தொடர்ந்து   துரியன்  மீதான  நம்பிக்கையும் இழக்கப் போகிறான்.

கலைடாஸ்கோப் குலுக்கலின் சித்திர வடிவம் ஒரு போதும் மீண்டும் மீளாதது போல புதிய புதிய வடிவங்களில் கிருஷ்ணனின்  குண பேதம் பிறந்து வந்து கொண்டே இருக்கிறது. அர்ஜுனன் நோக்கில் கிருஷ்ணன் சுடர் போல் நிகழ்ந்துகொண்டே இருப்பவன் அதன் ஒளியே அவன் சொல்.

கிருஷ்ணனின்  குண ரூபத்தைக்  குறிக்கும்  மற்றொரு  முக்கிய சொல் ''ரதி விகாரி''.  துவாரகை  என்று தனது நகருக்கு பெயரிட  ரதி விகாரியால்தானே முடியும்? அதை உடனடியாக  உணர்ந்த குந்தி  அந்த நொடி ''ராதை''தானே?

கிருஷ்ணன் ஆளுமை குறித்த சொற் சித்திரங்களிலேயே  தலையாயது  போரில் இருக்கும் கிருஷ்ணன் குறித்து அர்ஜுனனின் விவரிப்பே என்று சொல்வேன்.

புறத்தில்  ஈட்டிகள்  கிருஷ்ணனின் மார்பு சட்டகத்தை நோக்கி வருகின்றன? கிருஷ்ணனின் அகத்தில் அந்த ஈட்டிகளும், ஈட்டியை எரியும் வீரர்களும்  யார் என்பது  கிருஷ்ணன் பாடும் பாடலில் இருந்தே தெரிகிறது.

காமம் படைக்கும் ஆற்றல். குரோதம் அழிக்கும் ஆற்றல். அகத்திலும் புறத்திலும் இரு ஆற்றல்களும் இரு இறகுகளாகக் கொண்டு சமன்வயம் கண்டு  விண்ணை அளக்கிறது இந்த நீல வண்ண மழைப் பறவை.

பூமிக்கு இறங்கி , இறகு மடித்து, நிலத்தில் கால் பதிக்கையில் இடையில் இருந்து  எடுத்து உண்கிறான்  கொஞ்சம் மதுரம்.

ஆம்  நாவின் ருசி முற்றிலும் மண்ணுக்கு சொந்தமானது அல்லவா?

இனிய ஜெயம்  உறங்கி இரண்டு நாட்கள் ஆகிறது. பிரயாகையில் வாசிக்கையில்  கண்ணில் பட்டதாகவே தெரியாத வரிகள்  இரவுகளில்  நினைவில் பெரும் கனவு உலகமாக விரிந்து கவிகிறது.

இனிமை இனிமை இனிய ஜெயம். இனிய என்றாலும் மதுரம்தான்.

கடலூர் சீனு