இனிய ஜெயம்,
இன்றைய விவாதத்தில் தருமனுக்கும் குந்திக்கும் விவாதம் வழியாகவே கட்டுக்கள் தளர்ந்து உருவாகும் நெருக்கம் ஒரு முக்கிய கணம்.
இளவரசனாக தருமனுக்கு சிக்காத பிழைகள், இப்போது நாடோடியாக இருந்து யோசிக்கையில் அவனுக்கு சிக்குவது மற்றொரு உளவியல் சித்திரம்.
தருமனை இப் பயணம் இவ் வகையில் பக்குவப் படுத்துகிறது. யாருக்கு இளவரசுப் பட்டம் என விவாதிக்கும் மந்தன சபையில், குந்தி திரைக்குப் பின்னால் நின்று பாண்டுவுக்காக பேசி உருகும் கணம் ஒன்று வரும்.
குந்தி திரைக்குப் பின்னால் இருப்பதால் அவளது உணர்வுகள் மெய்யா, அல்லது அச் சூழலை உணர்சிகளை ஏவி ஆள்கிராளா என்றொரு gray area நிலவும். அதற்க்கு இன்றைய அத்யாயம் தெளிவாக விடை அளித்திருக்கிறது.
அன்று 'அவருக்காக பேச நான் மட்டுமே இருக்கிறேன்' என்ற குந்தியின் சொல்லும், இன்று 'அவராக இருந்துதான் பேசுகிறேன்' என்ற தர்மனின் சொல்லும், மனம் பொங்கச் செய்யும் உணர்ச்சித் தருணங்கள்.
கடலூர் சீனு