ஜெ,
இடும்பவனத்தில் குந்தி கதைசொல்லும் இடத்தை வாசித்தபோது நாவல் அதுவரை வேகமாக வந்து அப்படியே விரிந்து அமைதியாக ஓட ஆரம்பித்தது போல இருந்தது. ஆலாபனையில் ஒரு நிதானமான தொனி மாதிரி. அது சுகமான அனுபவம்
அந்தக்குடில் கட்டும் காட்சி, அதில் மூங்கிலை விரித்து தரை போடுவது [வடகிழக்கில் இதை செய்வதை நிறைய பர்த்திருக்கிறேன். மூங்கில் விரித்த தட்டி ஐம்பது வருஷம்கூட ஒன்றுமே ஆகாமல் இருக்கும் என்றார்கள்] அந்த நீரமான காடு. நீங்கள் காடு நாவலிலே சொல்லியிருக்கிற வறனுறல் அறியா சோலை. அது ஒரு பெரிய கருணை. அம்மா மாதிரி
குந்தியும் பாண்டவர்களும் மறுபிறப்பு எடுத்து அந்த காட்டின் மடியில் வந்து விழுகிறார்கள். தொட்டிலில் கிடப்பதுபோல. காட்டுக்குள் மறுபிறப்பு எடுப்பது ஒரு அருமையான விஷயம். பீமன் அங்கே புதியமனிதனாக ஆகிறான். குந்தியின் மாற்றம்தான் அற்புதமானது. அவள் ஒரு பழைய யாதவப்பெண்ணாக ஆகிவிடுகிறாள்
அவள் அந்தச் சின்ன வீட்டில் தன் பிள்ளைகளை அணைத்துக்கொண்டு மழையைக் கேட்டுக்கொண்டு கதை சொல்லும் இடம் அருமையான ஒரு சித்திரம்
சிவம்