Wednesday, January 14, 2015

பிரயாகை-74-கோடுகள் இல்லாத ஓவியம்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

கவிதை, கனவு, வாழ்க்கை மூன்றும் வெற்றிடத்தில் கோடுகள் இல்லாமல் எழும் ஓவியம். எத்தனை நீளம் அகலம் என்பதெல்லாம் கணக்கில் அமைவதில்லை. கணக்கில்லாமலும் இல்லை.

கர்ணனின் மனம் பாஞ்சாலியுடன் ஆலயத்திற்கு செல்ல விழைகிறது ஆனால் ஆலயத்திற்கு சென்றபின்பு அங்கு பாஞ்சாலி ஆலயம் நுழையபோதும் மாளிகைக்கு செல் என்கிறது, மாளிகைக்கு செல்லும்போது கங்கைக்கரைக்கு செல் என்கின்றது. கவிதை, கனவு, வாழ்க்கை மூன்றும் அப்படித்தான் செல்கின்றது.

கவிதை, கனவு, வாழ்க்கை நம் அறிகில் நின்று நம்முடன்தான் பேசுகின்றது அது என்ன சொல்கின்றது என்பதை அறியமுடியாமல் நாம் மரத்தடியில் நிற்பன் அமைதியாக இருப்பதாக நினைத்து அவனைத்திரும்பிப்பார்த்து கைக்கட்டி மரம்போல் நிற்றுப்பார்க்கின்றோம். மரமே ஒரு கவிதையாய், கனவாய், வாழ்க்கையாய் ஒவியமாய் காலத்தால் வரையப்படுகின்றது. 

கவிதை, கனவு, வாழ்க்கை வெற்றிடத்தில் கோடுகள் இல்லாத ஓவியம் என்று சொன்னேன் அல்லவா? கோடுகள் விழுந்தால் என்னவாக இருக்கும். கோடுகள் ஓவியத்தின் எல்லையை நிர்ணயம் செய்கின்றன. கவிதை, கனவு, வாழ்க்கையில் கோடுகள் விழும்போது பழைய ஓவியம் கழன்றுவிழுந்து உடைந்து  மனதின் அடியாழத்தில் சென்று துயில்கிறது. புதிய ஓவியம் வெற்றிடத்தில் மீண்டும் எழுந்துவிடுகின்றது.

கர்ணன் லட்சுமி ஆலயத்திற்கு சென்றது பாஞ்சாலியைப்பார்க்கத்தான் அந்த கோடு அங்கு விழுந்தபோதே அந்த ஓவியம் உடைந்து புதிய ஓவியம் அவனுக்கள் எழுந்துவிட்டது. “செல்வோம்” என்கின்றான். ஏன்? முகப்பில் இருந்தபலிமண்டபத்திற்கு வலப்பக்கம் பெண்கள் நின்றிருக்கும் வண்ணங்கள்தெரிந்தனபந்த ஒளிகளில் பட்டாடைகள் மின்னி அசைந்தன. அதன் பின்பு கர்ணன் முகம்  காணும் துரியோதனன் கண்டுக்கொள்வதுஅவன் முகத்தில் எரியம்பு துளைத்தவனின் வலி தெரிவதைக் கண்டுவியப்புடன் திரும்பி ஆலயத்தை நோக்கியபின் துரியோதனன் “செல்க,அரண்மனைக்கு” என்று சாரதியிடம் சொன்னான்.

அவன் கண்டுவிட்டான் குந்தியை. குந்தியை கண்டபின்பு  கர்ணனுக்கு தான் “கடன் பட்டவன்” என்ற எண்ணம் தோன்றுகின்றது. அங்கிருந்து அவன் பரசுராமனிடம் செல்கின்றான்.

கவிதை கனவு வாழ்க்கை மூன்றும் வெற்றிடத்தில் கோடுகள் இல்லாமல் வரையப்பட்ட ஓவியம்.  

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும், தத்தம்
கருமமே கட்டளைக் கல்-என்கின்றார் வள்ளுவர்.

கர்ணாமலைச்சிகரங்கள் சூழ்ந்த வெளியில் கூழாங்கல் என சிறுத்துநின்றிருக்கிறேனா?” என்று துரியோதனன் கேட்பதும். அதற்கு கர்ணன் திருதராஷ்டிரன் மகனுக்கு சிறுமைக்கூடாது என்பதும் எத்தனை பெரிய இடைவெளியை நிரப்புகின்றது. அதன் மூலமாகமே தன்னை வென்று மேல்நோக்கி செல்ல நினைக்கும் கர்ணனும் வெளிப்படுகின்றான். எதோ ஒன்று கர்ணனை முன்னோக்கி ஆராயாமல் அடி எடுத்து வைக்க சொல்கிறது பின் எதோ ஒன்று வந்து கண்முன் நின்று திரும்பி செல்லவைக்கிறது. மலைகளுக்கு இடையில் ஒரு கூழாங்கல்லாகவும். கூழாங்கல்லாகவே வளர்ந்து மலையாகவும் ஆகும் கர்ணன் அற்புதம்.

குரு சீடன் உறவை கர்ணன் விளக்கும் இடத்தில் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறு எதுவும் இல்லை. வெண்முரசு வெறும் கதை அல்ல அழியா தொடர் வாழ்க்கை என்று மீண்டும் காட்டிப்போகும் ஒரு இடம்.

நாயன்மார் வாழ்க்கையில் மூர்த்தி நாயனார் வாழ்க்கை நெஞ்சை உறைய வைக்கும். நான் என்னும் ஷாத்ரம் மட்டும்தான் மூழுக்க முழுக்க மூர்த்தி நாயனார் வாழ்க்கையை முன்னெடுக்கிறது. அன்னை மீனாட்சி அரசுசெய்யும் மதுரையில் அவள் காதல்செய்யும் கடவுள் சோமசுந்தரபெருமானுக்கு சந்தனம் அரைத்துக்கொடுத்துக்கொடுத்து வாழும் மூர்த்தி நாயனார். சந்தனம் கிடைக்காதபோது தனது கையையே சந்தனமாக அரைத்தார். வலி..வலி..வலியில் பேரின்பம் காணும் சுகம். இறைபக்தியில் மூர்த்தி நாயனார். குருபக்தியில் கர்ணன். படைத்தவன் ஏதோ ஒரு நோக்கத்தில் வலியில் பேரின்பம் காணும் சுகம் காட்டுகின்றான். //பெருவலி எப்போது பேரின்பமாகியதுவலியும் இன்பமும் ஒன்றன்இரு முகங்களா? கண்ணீர் வழிய அங்கே அமர்ந்திருந்தேன்.// என்று கர்ணன் கேட்கும் இடத்தில் பெருவலி சிறுகதை விரிந்துவிட்டது  //வலிங்கிறது வாழ்க்கைவாழ்க்கைமேலே படியற மரணத்தோடஅதிர்வுவாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி//-பெருவலி சிறுகதை. வலியின் தேவதை அல்போன்ஸம்மாள் இந்த நாளில் நீ எனக்களித்த இனிய காதல் பரிசை பெற்றேன் கட்டுரையில் வந்து மனம் நிற்கும்போது இந்த பகுதி பிரயாகை-74 உள்ளுக்குள் அதிர்கின்றது.

“எவ்வளவு அடித்தாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்டா”  என்பது நகைச்சுவையாக இருந்தாலும் இந்த வலி கர்ணனை மீண்டும் மீண்டும் குடைந்து அவன் எந்த அளவு நல்லவன் என்று பார்க்குமோ?

பரசுராமன் சீடன் கர்ணனைப்பற்றிய இந்த பகுதியை படித்து முடித்து இதை எழுதும் போது ராகவ ராமன் பற்றி விதுரர் நினைக்கும் இந்த பகுதி நினைவில் வந்தது. அதுதான் எத்தனை உண்மை.
//ராகவ ராமன் தெய்வத்தின் மானுட வடிவம் என்கிறார்கள்அவன்மக்களின் மாண்பை நம்பியவன்அவர்கள் விரும்பியபடி வாழமுயன்றவன்அவர்கள் துயரையும் அவமதிப்பையும் மட்டுமேஅவனுக்களித்தனர்அவன் செய்த பெரும் தியாகங்களை முழுக்கபெற்றுக்கொண்டு மேலும் மேலும் என்று அவனிடம் கேட்டனர்//

வண்டு, மக்கள் என்பது எல்லாம் வெளிவேடம் அவைகள் தருவது வலி வலிமட்டும். அந்த வலியில் அவர்கள் பேரின்பம் காணட்டும்.

அன்புள்ள ஜெ பதினாறுபேறு பெறவேண்டும் என்பார்கள்.
1.    கல்வி 2.புகழ் 3.வலி 4.வெற்றி 6.நன் மக்கள் 7.பொன் 8.நெல் 9.நல்லூழ் 10.நுகர்ச்சி 11.அறிவு 12.அழகு 13.பெருமை 14.இளமை 15.துணிவு 16.நோயின்மை. இந்த பதினாறு செல்வங்களில் ஒன்று வலிமை என்னும் வலி. வலிமையாக இருக்கும் கர்ணனுக்கு வலியே வலியாகவும் இருக்கின்றது. இந்த வலிதரும்  வலியே கர்ணனின் பதினாறு செல்வங்களிலும் நிறைகின்றது. இந்த பகுதியிலும் பதினாறு வலி என்னும் சொற்களை விதைத்து  உள்ளீர்கள். அற்புதம் ஜெ.பிரயாகை-74யை வலி என்று தேடினேன். பதினாறு இடத்தில் வலி என்று வந்து உள்ளது. என்ன ஒரு ஆச்சர்யம்.

படைத்தவன் பெரியவன் அவன் வணக்கத்திற்கு உரியவன். அவனுக்கு வணக்கம். அவன் நாமம் வாழ்க!

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.