Wednesday, January 28, 2015

பிரயாகை-87-வானக நடிகன்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஆன்மா உடலெடுத்து மண்ணுக்கு வருகின்றது. சில ஆன்மாக்கள் உடலுக்குள் இருக்காமல் உடலாகவே ஆகி, உடலென்றும் ஆன்மாவென்றும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகி நிற்கின்றது. அதைத்தான் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டமரபென்கின்றோம். அதையும் தாண்டி ஒவ்வொரு யுகத்திலும் தருமத்தை நிலைநாட்ட நானே பிறக்கின்றேன் என்கின்றான் கண்ணன்.

கண்ணன்போல ஆன்மாமே உடலாகி வந்த ஒரு சீவன் திரௌபதி. எல்லாவற்றிலும் ஆன்மா இருக்கும் ஆன்மாவுக்குள் எதுவும் இல்லை. கண்ணனும் திரௌபதியும்கூட அப்படித்தான். கண்ணனையும், திரௌபதியையும் அச்சத்தோடு பார்க்கும் அர்ஜுனன் கண்டது அதுதானா? 

லெட்சுமிக்கோவிலில் அர்ஜுனன் கண்களில் காமம்வழியக்கண்ட திரௌபதி அல்ல இவள். இவள் கண்ணனின் பாதி. துர்க்கை ஆலயத்தில் துர்க்கையாக இருப்பாள். லட்சுமி ஆலயத்தில் லட்சுமியாக இருப்பாள். சரஸ்வதி ஆலயத்தில் சரஸ்வதியாக இருப்பாள். சாவித்திரி ஆலயத்தில் சாவித்திரியாக இருப்பாள். கேசினி ஆலயத்தில் கேசினியாக இருப்பாள். யுத்தகலத்தில் ஆற்றலாக இருப்பாள். பிணத்தின்மேல் நின்றாலும் மணமாலைசூட்டையில் மணப்பெண்ணாக இருப்பாள். அதற்கும் அப்பாலும் அவள் இருப்பாள்.

ஏகலைவனுக்கு எதிராக மதுராவின் மீது போர்தொடுத்த கண்ணன் பலரை கொன்று செல்லும் அன்று பாடிய காதல்பாடலும், பலரைக்கொன்று பின்பு திங்கும் இனிப்பு பண்டமும் இன்று அர்ஜுனன் அகம் எழுந்து திரௌபதியில் கண்ணனைக்காண வைக்கின்றது. பிணங்களின் நடுவே மங்கல இசை ஒலிக்கும் இந்த தருணத்தில் அர்ஜுனன் கிருஷ்ணனையும், கிருஷ்ணையையும் மாறிமாறிப்பார்ப்பது எத்தனை பொருள் பொதிந்தது. ஓரு உயிரின் இரண்டு உடல்கள். 

துருபதன் மனையில் அந்த மணமேடைத்தொட்டில் நன்றாகத்தானே ஆடிக்கொண்டு இருந்தது. இந்த கள்வன் ஏன் தொட்டிலில் ஆடிய திரௌபதியை கிள்ளினான். அவர்கள் பாண்டவர்கள் அவனுக்கு தெரியும் பலருக்கும் தெரியும் ஆனால் வைதீகர்கள் என்கின்றான். வைதீகர்கள் என்றதும் எதிர்க்கும் சத்திரியக்கூட்டத்திடம் அவர்கள் வேடம் புனைந்தவர்களாக இருக்கலாம் என்கின்றான். இவன் தொட்டிலையும் ஆட்டி குழந்தையை கிள்பவன் அல்ல குழந்தையையும் கிள்ளி தொட்டியை ஆட்டுபவர்களையும் கிள்ளி, வேடிக்கைப்பார்ப்பவர்களையும் கிள்பவன். அதை திரௌபதி மட்டுமே அறிந்து இருக்கிறாள். ஒரு மணமேடையை பிணமேடையாக்கி அந்த பிணமேடையை மணமேடையாகவும் செய்த பெரும் மாயக்கண்ணன் அவன். அதனால்தான் திரௌபதி சீற்றத்துடன் கண்ணனை நோக்கி திரும்பி பின் அவன் புன்னகையைக்கண்டு விழிநுனிகள் சுருங்க திரும்பிக்கொள்கின்றாள். அவன் வலப்பக்கம் இவள் இடப்பக்கம் அதனால்தான் மணவிழாவுக்கு வரும் கண்ணனின் வலப்பக்கத்தை மட்டும் திரௌதிப்பார்க்கிறாள். அவன் அன்றி ஒன்றும் தன்வாழ்வில் நடக்காது என்பதை அவள் அறிகின்றாள் ஆகவே அர்ஜுனன் கழுத்தில் மாலைச்சூடும்போதுகூட கண்ணனைப்பார்த்தே மாலை சூடுகின்றாள்.

அன்புள்ள ஜெ. திரௌபதி குளிக்கும்போது குருதிவடி வந்த குழந்தைபோல இருந்தாள். தனிக்கோலத்தில் நகர்வலம் வந்தபோது வானத்து தேவதைபோல் இருந்தால், உடலெல்லாம் வைரங்கள் மின்ன மணமேடையில் இருந்தபோது உடலெல்லாம் கண்கள்கொண்டவள்போல் முழுதும் பூத்த பூமரம்போல் இருந்தாள். இந்த திரௌபதியைத்தான் மகாமங்கலை என்றான் நிமித்திகன். இன்று குருதியும் மலரிதழும் ஒட்டிய முகமும்.அணங்குகொள், ஆயிழைகொள் என்பது இதுதானோ? துர்க்கையும் மகாலெட்சுமியும் என்பது இதுதானோ? யார்தான் இந்த திரௌபதி?   

மகளின் மணவிழா போர்கக்கோலம் ஆனதில் கண்ணீர்விடும் துருபதனை என்ன சொல்வது. இந்த கண்ணீருக்காகத்தானே அவன் தவம் செய்தான். குரோதம் அக்கினிப்போன்றது. அக்கினி மகாஅக்கினியையே பிறப்பிக்கிறது என்று உபயாஜர் சொன்னபோது கேட்காமல் “பிறக்கட்டும், அந்த அக்கினியில் நானும் என் தலைமுறைகளும் எரிந்து அழிகின்றோம்” என்று சொன்ன துருபதன் ஏன் இன்று அழுகின்றான்.

தீயவை தீயப் பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும் என்றார் வள்ளுவர்.  தீயை பிள்ளையாகப்பெற்றவன் மடியிலும் வைக்கமுடியாமல், மண்ணிலும் வைக்கமுடியாமல் இனிப்படும்பாடு காலம் போடும் நாடகம். பலாபழத்தை முள்ளாடையில் கட்டிவைத்த இறைவன். தீயை பூவாடையில் கட்டிவைப்பான். அவனுக்கு எல்லாம் சாத்தியம்.

எல்லாம் சரிதான் இந்த கண்ணன் ஏன் இப்படி சொன்னான். //கிருஷ்ணன் “துருபதரேஉமது மகள் தகுதியானவர்களைஅடைந்திருக்கிறாள்” என்றான்துருபதன் என்ன சொல்வதென்றுஅறியாமல் பதைப்புடன் தன் மைந்தர்களை நோக்கினார்//

துருபதரே. உமது மகள் தகுதியானவனை அடைந்திருக்கிறாள் என்றுதானே சொல்லவேண்டும். வென்றவன் ஒருவன்தானே. திரௌபதி மாலையிட்டதும் ஒருவனுக்குதானே. துருபன் அதைக்கேட்டு பதைப்பதும். மைந்தர்களை நோக்குவதும் துருபனுக்குதான் ஆச்சர்யம். கண்ணன் எல்லாவற்றையும் எழுதி அதன்படியே யதார்த்தமாக நடப்பதுபோல் நடிக்கிறான். வானக ரசிகருக்காக மண்மீது நடிக்கும் மகாநடிகன். அவன் தலைசூடிய மயிற்பீலிக்கண் காண்பது எல்லாம் வானகத்தை மட்டுமே. மண் அவனுக்கு நாடகமேடை மட்டும். 

என்னப்பன் முருகனை பாடும் அருணகிரிநாதர் சுவாமிகள் முருகனின் மாமனை இப்படி பாடுகின்றார்.

திருவொன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்திசை
திகழும் புகழ்கொண்டவன் வண்டமிழ்-------------பயில்வோர்பின்

திரிகின்றவன் மஞ்சுநிறம் புனை
பவன் மிஞ்சுதிறங்கொள வென்று அடல்
செயதுங்க முகுந்தன் மகிழ்ந்தருள் ------------------மருகோனே. (திருப்பரங்குன்றம்-சருவும்படி---திருப்புகழ்)

முருகனை மருகானாய் கொண்ட அந்த முகுந்தன்  பாஞ்சாலியை வாழ்த்துகின்றான்.  இளவரசிஇன்றுடன் அரசியாகிறீர்கள்எட்டுமங்கலங்களும் திகழ்க!”  மண்ணும் விண்ணும் காணா இப்படி ஒரு திருமணத்திற்கு  என்னை அழைத்துசென்ற ஜெவுக்கு நன்றி 

வாழ்த்தும் கிருஷ்ணனையும், வாழ்த்துபெறும் கிருஷ்ணையையும் வாணங்குகின்றேன்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.