Wednesday, January 14, 2015

ஏன் தவறியது குறி?





வர வர பிரயாகையின் அத்தியாயங்களைப் படிக்கிறேனா இல்லை பார்க்கிறேனா என்ற சந்தேகம் வருகிறது. மணத் தன்னேற்புக்கு முன் திரௌபதி அணி செய்து கொள்ளும் அத்தியாயமாகட்டும், அன்னைவிழி முழுவதுமாகட்டும் அனைத்துமே திரைக் காட்சிகள். ஆனால் இன்று கர்ணன் வில்லேந்திய அத்தியாயம், ஒரு குறும்படம். அனைத்துமே அண்மைக் காட்சிகள். கண்ணின் கீழ் வந்த ஈரம் வரை அத்தனைத் துல்லியமான சித்தரிப்புகள். 

இங்கே வெளிப்படையாகத் தெரிந்தது கர்ணனின் அகப் போராட்டம். அதனாலேயே அவன் குறி தவறியது. வெளித் தெரியாதது திரௌபதியின் போராட்டங்கள். கர்ணன் வேண்டாம் என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள். ஆனால் அதை கர்ணனின் கண்ணைப் பார்த்துச் சொல்ல அவளால் இயலவில்லை. அதனாலேயே அவள் அவையில் யாரையுமே ஏறிட்டு நோக்கவில்லை. திரௌபதியின் அகத்தில் கர்ணன் இருக்கிறானா இல்லையா? அவனின் இடம் அவளில் எது? இதற்கு ஜெ ஒரு வரியில் கோடிட்டிருக்கிறார். கர்ணன் அமர்ந்திருக்கும் போது அவன் திரௌபதியை அணு அணுவாக, மிக அருகில் காண்கிறான். அவளின் முகத்தில் படிந்திருக்கும் மென்மயிர் பரவல் வரை அவனால் காண முடிகிறது. அவன் அவளின் மென்மையான கன்னத்தில் வந்திருந்த ஒரு பருவைக் காண்கிறான்.  பருவத்தில்  அகத்தில் முளைத்த ஆயிரம் கண்களின் பரு வடிவமாகத்  திரண்டு எழுந்த ஒற்றைக் கண் தானே அந்த பரு. உண்மையில் திரௌபதி தன் அகங்காரத்தைக் களைந்து ஓர் எளிய பெண்ணாக அவளே வாழ்ந்த அந்த கணத்தின் ஒரே ஆதாரம். கணத்தின் நிலையின்மை போலவே எழுந்த வேகத்திலேயே அணைந்து போகப் போகும் ஓர் சதைத் திரள்ச்சி. 

அதைத் தான் பார்க்கிறான் கர்ணன். அதைக் கண்டதாலேயே அவளின் அழுத்தம் அவனை அச்சம் கொள்ளச் செய்கிறது. அவள் கொள்ளும் போராட்டம் அவள் உடல் முழுவதும் அவனுக்குத் தெரிகிறது. வெகு நேரம் நாம் ஒரே விஷயத்தில் மனம் செலுத்தும் போது, நம் உடலில் தெரியும் முதல் மாற்றம் நம் உலர்ந்த இதழ்கள். கண் இமைகளை நம்மையறியாமல் மூடித் திறப்பதைப் போலவே, உதடுகளையும் நாம் ஈரப் படுத்துகிறோம். அதை அவள் செய்யவில்லை. அவள் அவனை விட்டு விலகிப் போக விழைகிறாள் என்பதை உணர்ந்து விடுகிறான். திரௌபதியில் தெரியும் அந்த மாற்றத்தை, "தொடுகையை உதறும் குழந்தையின் அசைவு" என்கிறார் ஜெ. இந்த இடத்தில் கர்ணன் தோற்கிறான். எவருடைய விருப்பமின்மையையும் நாம் பேசி மாற்றலாம். குழந்தையினுடையதை?? தெய்வங்களாலும் ஆகாது. அங்கு வருகிறது சினம். அவனைப் படைத்தவர்களிடம் வரும் சினம்.

திரௌபதி அவனை தேர்வு செய்யவில்லை என்பதை அர்ஜுனனும் உணர்ந்திருக்கிறான் என்பதைத் தான் அவனின் அந்த மென்புன்னகை வழியாக கர்ணன் அறிகிறான். அதோ அந்த புன்னகை, அவன் என்றுமே அடைந்து கொண்டிருக்கும் இழிவின் உடல் வெளிப்பாடு அல்லவா??? அர்ஜுனன் அவனையறியாமல் வெளிப்படுத்திய இந்த உடல் மொழி, இனி வரும் காலமெல்லாம் கர்ணனை எரிக்கப் போகிறது. கர்ணனை அர்ஜுனனைக் களத்தில் கொல்லலாம் என்று நினைக்க வைக்கப் போகிறது. ஒரு சிறு வளைவு, என்றுமே நேர்ப்படுத்த முடியாத ஒரு பிளவைச் செய்து விட்டது.

அந்த புன்னகை தான் அவனை நான்கு கிளிகளையும் வீழ்த்த வைத்தது. ஆனால் ஐந்தாவது கிளி, கேசினி. அந்த பெயரே அவனுக்கு திரௌபதியை நினைவுறுத்தி விட்டது. அவளின் உதாசீனம் அல்லது அவளின் விலக்கம், அது தந்த ஆற்றொணாக் கோபம். மீண்டும் வண்டு துளைத்த வலி. தன்னைப் படைத்து விளையாடும் தெய்வங்களின் மீதான தன் பிரதிகாரம். கர்ணன் தன்னிலை இழக்கிறான். அவன் சினம், அதை நினைவுறுத்தும் அந்த வலி, அது அவன் மீது செலுத்தும் ஆதிக்கம், அவனுடலில் அதிர்வாகிறது. அதிர்வை உடன் வாங்கி நீருக்கு கொடுக்கும் மரத் தரை, நீரில் நெளிவை ஏற்படுத்திகிறது. குறி தவறுகிறது.

மீண்டும் ஓர் முரண்நகை. இளமையில் துரோணரின் குருகுலத்தில் ஓர் வெம்மை கொப்பளித்த மதிய நேரத்தில், ஓடும் நீரில் தெரியும் பறவையை அடிக்கும் படி கொடுக்கப் படும் தேர்வில் அர்ஜுனனும், அஸ்வத்தாமனும் குறி தவறுவார்கள். சரியாக அடிப்பவன் கர்ணன் மட்டுமே. மற்றவர்கள் நீரின் அசைவில் தெரிந்த இடமாறு தோற்றப் பிழையைக் கவனிக்கவில்லை என்று கர்ணன் அவர்களின் குறி விலகியதற்கான காரணத்தைச் சொல்வான். அப்போதே அர்ஜுனன் என்றோ ஓர் நாள் தான் அவ்வித்தையில் கர்ணனை முந்துவேன் என்பான். இன்று அது தான் நடக்கப் போகிறது.

மேலும் கர்ணனுக்கு அவள் வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்தது. விழைவின் இச்சை செயலில் படிகிறது. அது தான் அவன் குறியைத் தப்ப வைக்கிறது. அர்ஜுனன் அச்செயலைச் செய்யப் போகும் போது நிச்சயம் திரௌபதியை நினைக்க மாட்டான். செயலை மட்டுமே விழைவை நோக்காது செய்வதைத் தான் அவன் வித்தையாகக் கற்றிருக்கிறான். எனவே அவன் நிச்சயம் வெல்வான். அதைத் தான் திரௌபதியும் எதிர்பார்க்கிறாள். அவளை உடலாக மட்டுமே காணும் ஒருவன். இங்கே கிந்தூரத்தையும் வெறும் வில்லாகவும், குறியை மட்டுமே நோக்கும் அம்பையும் மட்டுமே கொண்டவனே அப்போட்டியில் வெல்ல முடியும். அது அர்ஜுனன் மட்டுமே. 

அவ்வாறு வென்றாலும், வென்றவனும் வெல்லப்பட்டதும் நிறைவின்மையிலேயே எஞ்சுவது தான் விதியின் என்றுமே விளங்க முடியாத விளையாட்டு. மீண்டும் மீண்டும் காவிய உச்சங்களே வருகின்றன. அற்புதமான அனுபவம்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்