Friday, January 9, 2015

ஐவரின் ஒருத்தி



மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,

       பிரயாகையில் ஐவரின் சங்கமமான பாஞ்சாலியின் அறிமுகம் மிக நுட்பமானது.அவளின் பிற்கால வாழ்வு பற்றிய உளவியல் ரீதியான காரணங்களை மிக அற்புதமாக காண்பித்துள்ளீர்கள்.

   ஒரு விதத்தில் திருமண உறவிற்குள் செல்லும் பெண்களின் மனநிலை இத்தகைய குழப்பங்கள் நிறைந்ததே.எதற்கும் அஞ்சாமல் கேள்வி கேட்பவன்,பகடியாய் பேசுபவன்,காதலாய் உருகுபவன்,தந்தையாய் நேசிப்பவன்,மகனாய் விளையாடுபவன்,எல்லா வேளையிலும் தோழனாய் உடன்வருபவன்,எந்த காரணங்களுமின்றி தன் துன்பங்களில் தாங்குபவன்,உரிமையாய் கண்டிப்பவன்,மாறாப் பற்று கொண்டவன் எனப் பல்வேறு ஆண் குணங்களையே எல்லாப் பெண்ணும் நேசிக்கிறாள்.நம் பண்பாடு ,இயல்புகளால் இவை வெளிப்படுத்தப்படுவதில்லை.

       ராதை,கண்ணன் போலவே பாஞ்சாலியும் நம் மரபின் வடிவே.மிக நுட்பமான உளவியல் சார்ந்தே இத்தகைய உயரிய புராணங்கள் நம் மண்ணில் உருவாக்கப்பட்டுள்ளன என எண்ணுகிறேன். இந்த அளவு உறவுச் சிக்கல்கள் சிந்திக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு முன்பே அச்சமூகம் எவ்வளவு நாகரீக வளர்ச்சியை அடைந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

       நம் மரபில் பெண்களிக்கு இருந்த முக்கிய இடத்தையும் நன்கு அறிய இயலுகிறது.வெண்முரசு முழுவதுமே பெண்களை மையப்படுத்தியே நகர்கிறதோ என்றே தோன்றுகிறது.

    ஜெ சார் உண்மையில் பெண்கள் இப்படித்தான் மதிக்கப்பட்டார்களா.ஆனால் அவர்கள் அரசியலில் வெறும் பதுமைகளாக,அந்தப்புர அலங்காரங்களாக இருந்தார்கள் என்றே நான் அறிந்திருந்தேன்.

         எப்படி இருந்தாலும் திரௌபதியின் காதல் மிக அழகாக,மனதிற்கு இணக்கமாக உணர வைக்கிறது.இத்தனை ஈடுபாட்டுடன் மகாபாரதத்தை என்னால் வாசிக்க இயலும் என்று நான் முதலில்

எண்ணவில்லை.ஆரம்பிக்கலாம் போரடித்தால் நிறுத்தி விடலாம் என்றே தொடங்கினேன்.எனக்கு பொதுவாக மிக நுட்பமான கதையாடல்களில் மட்டுமே ஆர்வமுண்டு.பல படைப்புகளை பாதி வாசிப்பில் நிறுத்தியிருக்கிறேன்.ஆனால் வெண்முரசு ஒவ்வொரு நாளும் மிக ஆர்வமூட்டுகிறது.மிக்க நன்றி.
அன்புடன்,
எம்.