Saturday, January 3, 2015

ஓராண்டு




அன்புள்ள ஜெ,

நலமா? வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். வெண்முரசு ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது இந்த பணி தொடர வாழ்த்துகளும், அற்புதமான வாசிப்பனுபவத்தை அளித்து வருவதற்கு நன்றிகளும்.
2014-ம் வருடத்திற்கான இயல் விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

அன்புடன்,
இரா.சுப்ரமணி

அன்புள்ள சுப்ரமணி

பலர் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் இப்படி ஒருவருடம் முழுமையாக்கியதை ஒரு சாதனையாக கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். அது ஒரு நிறைவை அளிக்கிறது. செல்லும் தூரம் பற்றிய அலட்சியமாக ஆகிவிடக்கூடும். இது அன்றாடம் வாழும் ஓர் அழகிய உலகமாக இருந்துகொண்டிருந்தால் மட்டுமே முடிக்க முடியும்

இதைவிடப்பெரிய பணிகள் இங்கே நிகழ்ந்துள்ளன. புனைவல்லாத தளங்களில் சிங்காரவேலு முதலியாரின் அபிதானசிந்தாமணி, எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதி,  பெரியசாமித் தூரனின் கலைக்களஞ்சியம் போன்றவை. அவற்றைச் செய்தவர்கள் அச்செயலை அன்றாட வாழ்க்கையாகக் கொண்டவர்கள். அதில் மகிழ்ந்தவர்கள்

வாழ்த்துக்கு நன்றி

ஜெ