ஜெ
நீங்கள் பாஞ்சால குலங்களிலே உள்ள Polyandry பற்றி எழுதியதை வாசித்ததும் இணையத்தில் போய் தேடினேன். அப்போதுதான் நீங்கள் எந்த அளவுக்கு விரிவான் ஆராய்ச்சிக்குப்பின் இதை எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிந்தது. பாஞ்சாலம் என்று அன்று அறியப்பட்ட நாட்டிலும் அதைச்சுற்றியிருக்கிற மலைப்பாங்கான இடங்களிலும் சமீபகாலம் வரைக்கும்கூட பலகணவர்கள் கொண்ட குடும்பமுறை இருந்திருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களை மணந்துகொள்வது இன்னமும் கூட இருக்கிறது
இதன் சமூகவியல் உள்ளடக்கம் பற்றி நல்ல கட்டுரை ஒன்றினை அனுப்புகிரேன்
http://www.socialsciencenews.org/2013/11/06/women-with-multiple-husbands-the-socioeconomic-benefits-of-fraternal-polyandry-in-himalayan-societies-2/
மகாபாரதத்தில் கின்னரநாடு என்று சொல்லப்பட்ட இடம் இப்போது இமாச்சலில் கின்னார் மாவட்டமாக உள்ளது. அங்கே பலகணவர் முறை இன்றைக்கும் உள்ளது/ திபேத்திலும் பலகணவர் முறை இருக்கிறது
ஆகவே பாஞ்சாலி ஐந்து கணவர்களை மணந்தது ஒரு இயல்பான சமூக பின்னணியில்தான். அதை தெற்கே பிற்காலத்திலே புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆகவேதான் அம்மா அவர்கள் தேடிவந்த பரிசை பார்க்காமலேயே பகிர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் ஐந்துபேரும் அவளை எடுத்துக்கொண்டார்கள் என்ற கதை வந்தது
இதிலே என்ன வேடிக்கை என்றால் இது பெண்ணை அடிமையாக்குவது, புராணம் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்றெல்லாம் இங்கே முற்போக்கும் பகுத்தறிவும் கூச்சலிட்டதுதான். மகாபாரதம் ஒரு பெரிய சமூகவியல் ஆவணம் அதை வாசிக்கும் பக்குவம் இங்கே இந்த அறிவுசீவிகளுக்கு இல்லை
வெண்முரசு வரும்காலத்தில் இன்னும் நுட்பமாக வாசிக்கப்படும் என்று நினைக்கிறேன்
சிவராமன்