திரௌபதி சுயம்வரம் நம்மை அந்த அரங்கதிற்கே கொண்டு செல்கிறது , ஒவ்வொரிடமும் உள்ள தவிப்புகளை நாம் உணர முடிகிறது . ஒரு சந்தேகம் இது வரை பதித்த மகாபாரதத்தில் போட்டிக்காக ஒரு இயந்திர மீனின் கண்ணை குறிபார்த்து வீழ்த்த வேண்டும் என்றே குறிப்பிடபடுகிறது , ஆனால் வென்முரசில் ஏன் ஐந்து கிளிகள் என்று உள்ளது , இது கர்ணன் சினத்தால் தோற்றான் என்பதை குறிப்பதர்க்காகவா? திரௌபதி கர்ணனை சூத புத்திரன் என்று அவமாணிப்பதை பற்றி குறிப்பிடவில்லையே
நன்றி,
ராம்குமரன்
அன்புள்ள ராம் குமரன்
பல மகாபாரதக்கதைகளில் மீன் என்று இருக்கிறது. ஆனால் வியாசமகாபாரதத்தில் மீன் என்றோ கிளி என்றோ இல்லை. பொன்மயமான கூண்டு அதற்குள் இயந்திரத்தால் ஆன இலக்குகள் இருந்தன என்று மட்டுமே உள்ளது இதை நீங்கள் மகாபாரதம் மொழியாக்கம் கும்பகோணம் பதிப்பில் சரிபார்க்கலாம். [ஆதிபர்வம் 200,201,202 ] ஐந்து அம்புகளால் அடித்ததாக வருகிறது. கூண்டு எனும்போது மீனைவிட கிளியே ஏற்றது. ஐந்து இலக்கு ஐந்து கிளிகளுக்கு. ஐந்து குலங்கள் அவை என்று கொண்டு செல்லும் நான் கேசினி என்ற சொல்லுக்கு மேலதிக அர்த்தம் ஏற்றியிருக்கிறேன். ஆகவே கிளியாக வைத்துக்கொண்டேன். கேசம் என்பது நீளமான வால்
ஜெ