பிரயாகையில் வரும் வஜ்ர முகி குருவி படிமத்திற்கு பல பேர் அவரவர் பார்வையை, புரிதலை எழுதிவிட்டார்கள். அதை ஓரளவுக்கு படித்து பார்த்தேன். நானும் என் பங்கிற்கு ஒன்று எழுதுகிறேன்
தருமனின் பார்வையில் அந்த குருவி வெளியே இருக்க வேண்டும். மனிதர்கள் இருக்கும் இடத்தில் அதற்கு இடம் கிடையாது. அவையவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். அதுவே நெறி அதை நிலைநாட்ட விரும்புகிறான். ஆனால் நெறியை நிலைநாட்டுவதை மட்டும் தான் பார்க்கிறானே தவிர அதை எப்படி செய்வது அதில் உள்ள உட்சிக்கல் என்ன என்பதை அவன் பார்பதில்லை. ஒற்றை படையாக குருவியை வெளியே துரத்து என்கிறான்.
இன்று பிரயாகையில் இருக்கும் சிக்கலும் அந்த குருவிக்கு இருக்கும் சிக்கலும் ஒன்றே. அவரவர் தனிப்பட்ட முறையில் உணர்வுகளால் அலைகளிக்கப்படுகிறார்கள். சிலர் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தான் வெற்றி பெற நினைக்கிறார்கள் - குந்தி, சகுனி போன்றோர். ஆனால் உணர்வு முக்கியமல்ல அறம் தான் முக்கியம் என்று உணர்வுக்கும் அறத்திற்க்கும் இடையில் அலைகளிக்கப்படுகிறார்கள் சிலர் - திருதாராஷ்ட்ரன், விதுரர், தருமன் போன்றோர்.
கிருஷ்னன் இவை இரண்டுக்கும் நடு பாதை ஒன்றை எடுத்து குருவி பிரச்சினையை சரி செய்கிறான். குருவி வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டியது என்பது நெறி. ஆனால் குருவி வீட்டுக்குள் மீள மீள வருவது அதன் நியாமான உணர்வால். கிருஷ்னன் முதலில் பிரச்சினையை ஆராய்ந்து, அந்த குருவியின் உணர்வு நியாமானதா என்று பார்த்து, முதலில் உணர்வு பிரச்சினையை சரி செய்கிறான். அதை சரி செய்யும் போக்கில் நெறியை நிலைநாட்டுகிறான். கடைசியில் தருமன் விழைந்ததும் நடந்தது குருவியின் நியாயமான எண்ணமும் நிறைவேறியது.
இதே அந்த குருவி அங்கிருக்கும் பழத்தை திண்ண மீள மீள வருகிறது என்றால் கிருஷ்னன் என்ன செய்திருப்பான்? துரத்த சொல்லியிருப்பான். மீன்டும் வந்தால் வாசலில் ஒரு பழத்தை குருவிக்கு தெரியுமாறு வைக்க சொல்லியிருப்பான். அதையும் மீறி வந்தால் கொல்ல சொல்லியிருப்பான்.
தருமன் வறட்டு நெறியை சாதிக்க விரும்புகிறான். அதில் தோற்றும் போகிறான். கிருஷ்னன் உயிர்களின் அறத்தின் படி நெறியை எப்படி படி படியாக சாதிப்பது என்று காட்டுகிறான்.
ஹரீஷ்
வெண்முரசு குழும விவாதத்தில் இருந்து