Monday, January 5, 2015

கடலானவன்



இனிய ஜெயம்,

இன்றெல்லாம் கர்ணனுடன் சிக்கிக் கிடந்த நினைவு  எங்கோ சட்டென புரண்டு  துரியன் வசம் சென்றுவிட்டது.  துரியன் கர்ணன் மீது கொள்ளும் நட்பு  இப்போது அரசியல் காரணங்களுக்கு  அப்பார்ப்பட்டதாக தூயதாக தெரிகிறது.

எனக்கு தெரிந்ததெல்லாம் 'எடுக்கவோ கோர்க்கவோ' துரியந்தான். வெண் முரசு  துரியன்  கலங்கடிக்கிறான். மொத்த வெண் முரசு  கதாபாத்திரத்தில்  ஒரே ஒரு ஆளுமையை மட்டும் உயிருடன் உன்னால் காண முடியும் எனில் நீ யாரை பார்க்க விழைவாய் என்று என் முன் ஒரு வினா எழுந்தால், காரணம் சொல்ல இயலாது ஆனால் நான் துரியனையே தேர்வு செய்வேன்.

காம்பில்யம் நகர் முழுவதும், துரியன் கர்ணனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் தத்தளிக்கும் தருணம் ஒன்றினை எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறான். வசதியாக கிருஷ்ணன் பெயரை வேறு விதைக்கிறான். ஆனால் கர்ணன் உண்மையாகவே பின்வாங்கும் தருணம் , துரியன் ஆளுமை விஸ்வரூபம் கொள்கிறது.  

தன்னுடைய 'ஆல்பா மேல்' தன்மையை கூட கர்ணனுக்காக விட்டுக் கொடுக்கிறான். கர்ணனுக்கு அங்க நாட்டை அளிக்கையில் துரியன் கர்ணனின்  தாள் பணியும் கட்டத்தை விட இது பல மடங்கு ஆழமானது. 

கர்ணனுக்கு அவனது குரு இழைத்தது, துரோணர் ஏகலைவனுக்கு இழைத்ததைக் காட்டிலும் பல மடங்கு அழுத்தம் கூடிய அநீதி.  

குரு சாபம் என்பது எத்தனை பெரிய ரணம். ஒரு சீடனால் குருவை எண்ணாமல் ஒரு கணமும் கடக்க இயலாது. குரு நினைவில் எழும் தருணம் எல்லாம் அவரது சாபம் மட்டுமே நினைவில் திமிறி எழும். 

லட்சுமி கோவில் நோக்கி திரௌபதியை தொடர இயலாமல் கர்ணன் திரும்பும் கணம் அவன் தனது ஷாத்ர குணத்தை இழக்கும் முதல் கணம்.  சிற்பி விரல்களை இழப்பது போல. 
இங்கு கர்ணனுக்குள் குரு சாபம் என விதைத்தது ஒரு மீள இயலா உளவியல் பிளவு.

இந்தப் பின்னணியில் துரியன் கர்ணனுக்கு தரும் வாக்கு  என்ன சொல்ல நான் மட்டும் துரியன் முன் இருந்திருந்தால் என் வாழ்வும் சாவும் உனக்கே என்று சொல்லி என்னை அவனுக்கு ஒப்புவித்திருப்பேன்.

துரியன் மிகப் பெரியவன். திருதுராஸ்த்றரை விடவும்..

கடலூர் சீனு