Wednesday, January 7, 2015

காமரூபிணி




இனிய ஜெயம்,

இத்தனை எரோட்டிக்கான  ஒரு அத்யாயம் இதுவரை  தமிழில் எழுதப் பட்டதில்லை.  நீலத்தின் முதல் அத்யாயம் எல்லாம் இதனுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.

திரௌபதி எந்த எல்லையிலும் தனித்துவமானவள் என்பது அவளது தோழி மாயை வழியாகவே புரிகிறது. திரௌபதி மனமும் உடலும் அசையும் எந்த எல்லை வரையும் மாயையும் கூடவே வருகிறாள். திரௌபதியை தொடர இயலாமல் மாயை தயங்கி நிற்கும் ஒரு தருணமும் இல்லை.  அதனால்தான் திரௌபதியின் பிரியத்துக்கும் வெறுப்புக்கும் உரிய அணுக்கத் தோழியாக இருக்கிறாள் மாயை.

கர்ணனில் துவங்கி பீமன் வரை மாயை வித விதமான ஆல்பா மேல்களால் அகம் அதிருகிறாள். அருவியின் கீழ் பாறை போல. அதிலும் அன்னை விழி முதல் அத்யாயம் துவங்கி  மாயையின் பார்வையில் துலங்கும் திரௌபதியின் எழில் இந்த அக அதிர்வுக்கு மேலும் கிரியா ஊக்கி. 

உப்பு வீச்சம் அறியும் பெண் மிருகம்  என்ற புள்ளியில் இருந்து மாயையின் நிலை அழிவு துவங்கி விடுகிறது. பீமனின் முதல் பார்வையேஅவன்  அவளது ஸ்தனங்களை அள்ளிப் பற்றியது போல அவளுக்கு கிளர்ச்சி அளித்து விடுகிறது. 
அதன் பிறகான பயணம்,அதன் அதிர்வு  தொடைகளின் திணிவு, கழுத்தின் குழைவு எனப் பரவி, இட முலையை தூண் தட்டி விலகும் கணம்  கலவியேதான்.

மாயை உச்சம் கண்டு மெய் விதிர்த்து, அகம் அழிந்து  மயங்கித் தெளிகிறாள்.  இங்குதான் திரௌபதி மாயையை வெல்கிறாள்.   இத்தனைக்கும்  பிறகே திரௌபதி சாட்டையை சுழற்றுகிறாள்.

பெருங்காற்று அள்ளி  பரவும்  காட்டுத் தீ.  வாயு புத்ரனும், அக்னி புத்ரியும்  ஈடற்ற இணை.


 கடலூர் சீனு