கர்ணனின் மனம் கவர்ந்தவளாக, இணையான துணையாக திரௌபதி இருக்கிறாள். துரியோதனன் முன்னரே திரௌபதி தனக்கு வேண்டாம் எனக்கூறிவிட்டான். தான் சத்திரியன் என்பதை உலகம் முற்றாக ஏற்றுக்கொள்வதற்கான ஒரு அரியவாய்ப்பு. இப்படி இருந்தும் ஏன் அவன் குறி தவறுகிறது?
ஜெயமோகன் எழுத்தின்வழி எனக்கு தோன்றும் காரணங்கள்:
1. துரியோதனனும் இப்போட்டியில் கலந்துகொண்டான் எனபதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கர்ணன் இப்போட்டியில் வென்றால் அவன் துரியோதனனையும் வென்றதாக ஆகிவிடும். கர்ணன் எச்செயலின் வழியாகவும் தன்னை துரியோதனனைவிட உயரத்தில் வைக்க மனம் ஒப்பாதவன், அச்செயல் துரியோதனனுக்கு ஒருவேளை நன்மைபயக்கும் என தோன்றினாலும்கூட. துரியோதனன் ஏற்கெனவே அரியணை வாய்ப்பை இழந்தவன். அவன் இழப்புகளை சகித்துகொள்ளும் மனவலிமையை இழந்துவிட்டவன் என கர்ணன் அறிவான். திரௌபதியை காணும் தோறும் துரியோதனன் இழப்பின் பெருவலியை அடைவான். தான் அவனுடனே இருக்கப்போவதால் என்றென்றைக்கும் அந்த வலியை துரியோதனன் உணர்ந்தபடி இருப்பான் என கர்ணன் நினைத்திருப்பான். ஆகவே அம்பை பூட்டிய அவன் கையில் ஒரு தயக்கம் கூடியிருக்கும்.
2. தன்மேல் திரௌபதிக்கு விருப்பம் இருப்பதை கர்ணன் அறிந்திருக்கிறான். அவனுக்கும் அவள்மேல் விருப்பம் இருக்கிறது. அவள் பேரரசியாவதற்காகவே பிறந்தவள் என பாரத கண்டம் முழுவதிலும் பரவியிருக்கும் சூதர் சொல்லை கர்ணன் அறிந்தவன். ஆனால் அவனை மணந்தால் அவள் தன் பிறப்பின் நோக்கத்தை இழப்பாள்.ஒரு சிற்றரசனின் மனைவியாக ஒரு சாதாரண வாழ்க்கைக்கு அவளை கீழிறக்கப்படுவாள். தான் விரும்பும் ஒரு பெண் தன்னால் பேரிழப்பு கொள்வதை ஒரு ஆண்மகனாய் கர்ணன் எவ்வாறு ஏற்றுக்கொள்வான்?
இன்னொன்று தன்னை அறியாத பெண் தன்னிடம் நேசமின்றி இருந்தபோதும் அவளை மணம் புரிந்து கொள்வதை ஒத்துக்கொள்ளலாம். ஏனென்றால் பெண்களின் பெருங்குணம் தன்னை மணந்தவனை நேசிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் முதலில் நேசித்து பின்னர் வேண்டாம் என்று ஒதுங்கிய பெண்ணிடம் தகுந்த கரணமின்றி மீண்டும் அந்த நேசம் துளிர்க்காது. பெரும் மன விலக்கத்தையே அளிக்கும். திரௌபதி கர்ணனின் மேல் விருப்பம் கொண்டிருந்தவள். ஆனால் இப்போது கர்ணனை அவள் மணக்க விரும்பவில்லை என்பதை அவளில் அவன் காணும் சலனத்தில் மூலம அவன் அறிந்து கொள்கிறான். தன்னை மனதில் ஏற்காத திரௌபதியை தான் இந்த அம்பின் மூலம் வெல்லத்தான் வேண்டுமா என்ற தயக்கம் அவன் கையில் கூடியிருக்கும்.
3. பாண்டவர்கள் மீது எல்லா மனிதருக்கும் வரும் இயல்பான இரக்கம் கர்ணனுக்கும் வந்திருக்கும். பாண்டவர்கள் மேலெழுந்து வர இதுவே ஒரு சரியான வாய்ப்பு. இல்லையென்றால் அவர்கள் காலத்திற்கும் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். கண்ணன் தன் இருக்கையை விட்டு எழாமல் இருப்பதற்கு இதுமட்டுமே காரணம். அதை கர்ணன் அறிகிறான். பாண்டவர்கள் ஒரு போரால் அல்லாமல் இவ்வாறு தோற்றுப்போவதை கர்ணனின் வீர மனம் விழைந்திருக்காது.
பார்த்தனில் கர்ணன் எதைக்காண்கிறான். அவனைப்போலவே அவனும் கரியவன். அவனைவிட சிறியவன். அவன் சாயலைபெற்றவன். அவனைப்போன்றே வில்லவன். கர்ணனின் ஆழ் மனது தன் இளையோனாய் அவனை கண்டிருக்கும். ஒரு இனிப்பை கையில் வைத்திருக்கும் ஒரு அண்ணன் அதை பெரிதும் விரும்பும் தன் தம்பியின் கண்ணெதிரே எப்படி சாப்பிட முடியும். இதோ எடுத்துக்கொள் என்று தம்பியிடம் தராமல் ஒரு அண்ணன் என்னதான் செய்வான்? அவனுடைய இந்த குருதியுறவு அவனை அறியாமலேயே அவன் கையில் தயக்கத்தை அளித்திருக்கும்.
ஆனால் இத்தகைய தயக்கங்கள் எல்லாம் அவனை குறி தவற வைத்திருக்குமானால் அவன் எப்படி ஒரு சிறந்த வில்லாளி ஆவான்? அவன் எப்படி ஒரு சிறந்த ஷத்திரியன் ஆவான்? இத் தயக்கங்கள் எல்லாம் அவனுக்கு இருந்திருக்கும்தான். என்றாலும் அவன் வில் குறியை அடையாமல் போனதற்கு வேறொரு முக்கிய காரணமாக எது இருந்திருக்கும்.
4. கர்ணன் இப்போட்டியை வென்று திரௌபதியை அடைவதன் மூலம் தான் ஒரு ஷத்திரியன் என உலகிற்கு ஊரறிய உணர்த்திவிடுவான். பிறகு அவன் மேல் என்றும் சூதன் என்ற சொல் அமர முடியாது. அப்படி ந்நெருமானால் அது பரசுராமரின் சொல் பிழைத்தது என்பதாகிவிடும். கர்ணன் தன் குருவின் சொல் (அது சாபமே ஆனாலும்,) பிழைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான். பரசுராமர் தன் குரு காணிக்கையாக கர்ணனிடம் பெற்றது அவன் என்றும் ஷத்திரியனாக விளங்கக்கூடாது என்பதுதான். தன் குருவின் சொல்லை காக்கவேண்டியே அவன் மனம், அவன் கை, அதனால் அவன் அம்பு தன் குறியிலிருந்து விலகிவிடுகிறது. கர்ணன் என்றென்றும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டிய குரு காணிக்கையின் ஒரு விளைவே இந்நிகழ்வு.
த.துரைவேல்