Wednesday, January 7, 2015

மாயை துணையுடன்



இனிய ஜெயம்,

முன்பு கண்ட ஒரு காட்சி, ஒருமுறை  திரை சீலை போட்டு மூடிய , கம்பி வலையால் வேலி கட்டிய பால்கனி ஒன்றின் உள்ளே நின்றிருந்தேன்,

எதிர் வீட்டின் உள்ளறை வரை காற்றில் திரை சீலை விலகுகையில் தெரிந்தது. இளம் பெண் ஒருவள்  கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருந்தாள்.  கூந்தலை முன்னால் போட்டு நடு வகிடு துவங்கி, இடைக்கு கீழ் வரை வாரினாள், கூந்தலை பின்னால் போடஅவள்  கைகளை உயர்த்த, துப்பட்டா அற்ற சுடிதாருக்குள், ஸ்தனங்கள் கருவறைக் குழந்தை போல அசைந்தன. 

ஒரே கணம், அவள் முகத்தில் மலர்வு. மிக மிக இயல்பாக தன்னை வலம் இடம் என திருப்பி, தன் முன் எழிலை, அதன் நிமிர்வை வித வித கோணங்களில் நிறுத்தி, தன்னைத் தானே ரசித்தாள்.

குறிப்பிட்ட வயதில் ஒரு இளம்பெண் தன்னை உடலாக 'அறிவது' எத்தனை உவகை அளிப்பது. அப் பெண் நின்ற அத்தனை கோணமும், ஆணின் பார்வையில் 'நான்' என்ற கோணம் அல்லவா?

எந்த எளிய பெண்ணுக்கும் உள்ள இந்த அடிப்படை இயல்பு, திரௌபதிக்கு எத்தனை மடங்கு இருக்கும்? மழைப் பாடலில் லிகிதர் எனும் சுதனின் பாடலில் குந்தி குறித்து ஒரு வரி வருகிறது. 'குந்தி ஐந்து மடங்கு திமிர் கொண்டவள்.' பின்னால் அறிகிறோம் அது எந்த அளவு திமிர் எனில் அவளது காமத்துக்கு மண்ணில் உள்ள எந்த மானிடனும் சமம் நிற்க இல்லாமல், சூரியனையும், காலத்தையும், காற்றையும், மின்னலையும் புணர்ந்து கருவுருகிறாள்.

குந்தியின் மருமகள் அதில் பாதியாவது இருப்பாள் தானே. மழை பாடலில் குந்தி சொல்வதாக ஒரு வார்த்தை வரும் ' என்னிடம் அடங்குவோர் வழியே உருவாகும் மைந்தர், அவரை விடவும் அடங்கியவராகத்தான் இருப்பார்' என்கிறார். ஆகவே எவற்றாலும் அடக்க இயலாத மைந்தரை அவளது கருவறை சுமக்கிறது. அவர்களை 'அடக்கவே' திரௌபதியின் கருவறை ஏங்குகிறது.

இனி வரும் காலத்தில் குந்தி திரௌபதி இடையே மாமியாள் மருமகள் சண்டை நிகழ்ந்தால்  அதன் வேர்  பல மடங்கு ஆழம் சென்ற ஒன்றாக இருக்கும்.

தர்மனால் திரௌபதி சமன் குலைவது  திரௌபதியைக் காட்டிலும்  தர்மனின் ஆளுமையைஏ காட்டுகிறது. எந்த நிலையிலும் சமன்வயம் என்பது ஒரு உள்ளார்ந்த ஒழுங்கு. அதில்தான் தர்மன் இயல்பாக நிற்கிறான்.  அவன் நீதி வழங்கினால் வாதி பிரதி வாதி இருவரையும் எப்படி நோக்குவானோ, அப்படித்தான் அவன் த்ரௌபதயையும் மாயையும் நோக்குகிறான். 'சமன்வயம்'. அதுதான் திரௌபதியை நிலை அழிய செய்கிறது.

அன்பு எனும் விலங்கை  மீறும் மிருகம் எதுவும் இல்லை என்கிறாள் திரௌபதி. இங்குதான் திரௌபதி என்ன மொத்த பெண்மை நோக்கியே ஒரு பிரமிப்பு எழுகிறது.  பெண்ணின் அன்பில் ஆண் தன்னை முற்றிலும் கரைத்து அழித்துக் கொள்கிறான்.  ஆனால் அந்தப் பெண்ணுக்கு அவள் கொண்ட அன்பு, அவளது ஆளுமையில் ஒரு சிறு பகுதியே, அதுவும் ஒரு எல்லையில் அவளுக்கு பயன்பாட்டுக் கருவியே எனும் நிலை, இனிய ஜெயம் இன்று முற்றிலும் நிலை அழிந்து விட்டேன். அனைத்தையும் ஏறிக் கடந்து இறுதியில் ஒரு தாயாக மட்டுமே எஞ்சும் பெண்மை மட்டுமே ஆணால் தாங்க முடிந்த பெண்மையின் ஒரே நிலை என்று படுகிறது.ஒரு ஆண் கருவுக்குள் மிதக்கையில் அப் பெண் அவனுக்கு  என்னவாக இருக்கிறாளோ, அந்த நிலை மட்டுமே பெண்ணிடம் ஆணால் செறிக்க முடிந்த முடிந்த ஒரே நிலை போலும்.    

கடலூர் சீனு