Thursday, February 5, 2015

வெண்முகில் நகரம்-01-விதையும் வனமும்.





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

உங்கள் கதைகளை படிக்கத்தொடங்கியபோது ஏன் இவர் இப்படி அளவே இல்லாமல் எழுதித்தள்ளுகின்றார். இவருக்கு எழுத தொடங்கினால் நிறுத்த தெரியாதோ. எங்காவது மோதி தானாக நின்றால்தான் நிறுத்துவாரோ. படுத்துறார்ப்பா என்று எண்ணியது உண்டு.

எழுத்து என்பது நிறுத்த முடியாத ஒன்றுதான். எங்கே நிறுத்தினாலும் அதற்கும் அப்பால்தான் நிறைய இருக்கின்றது. இதை உணவின்பம், கலவி இன்பம், நட்போடு பேசும் பேச்சின்பம், காதலி்க்கு கொடுக்கும் முத்த இன்பம், குழந்ந்தையோடு கொஞ்சும் மழலை இன்பம், விரும்பும் நாயகன், நாயகி உடல் அசைவின்பம், தட்டோடு காத்திருக்கும் பிச்சைக்காரன் இனிவரவேண்டிய  காசுக்காக காத்திருக்கும் ஆவல். என்ன பொழப்புட இது என்று நினைக்கும் ஆதே நேரத்தில் இந்த வயசுபத்தாதே என்று காலனை அஞ்சும் கணம் என்று எழுத்து வரும்கணத்தில்தான் திரண்டு அள்ளென்று நிற்கின்றது எழுத்து. எழுத்தைப்பற்றி உங்களிடம் சொல்லிவது  ரோஜாவுக்கு(பூக்குத்தான்)லிப்ஸிடிக் போட்டுவிடுவதுபோன்றது அல்லது இமயத்திற்கு ஐஸ்கிரிம் வைப்பது போன்றது.  

வெண்முகில் நகரம்-1க்கு கடிதம் எழுதிவிட்டாலும் அது அதற்கு உரிய கடிதம் இல்லை என்பதும் தெரிகின்றது அதற்கு கடிதம் என்னால் எழுத முடியாது என்றும் தெரிகின்றது.

பசி எம்மாம் பெருசு? என்று ஒரு கேள்விக்கேட்டால் என்ன பதில் கிடைக்கும். ஒரு உருண்டை உணவால் அதை மூடி மறைத்துவிட முடியும் என்றாலும் அது மிக மிக சிறியதுதானா? ஒருசாண் வயிற்றில் சிறிய குடலுக்குள் இருக்கும் அது மிக சிறியது என்றாலும் அதை இந்த பெரிய உலகத்தால் வெல்ல முடியவில்லையே. இந்த பெரிய உலகத்தையே அதற்கு எதிராக நிறுத்தினாலும் அதை அது பணிய வைத்துவிடுகின்றதே. அந்த சிறிய பசிக்குள் இருக்கும் நெருப்பு அதையும்விட மிக சிறியது அதுவல்லவா மண்ணையும் விண்ணையும் இருக்கவும் அழிக்கவும் காரணமாகின்றது.

பசி என்பதை வெறும் வயிற்றுப்பசி என்று எடுத்துக்கொள்ளாமல் பசி என்ற அந்த மூலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அதற்குள் இருக்கும் அக்கினிதான் எத்தனைவிதமானது. அந்த அக்கினி என்பது ஒரு விதை என்று கொண்டால் அதிலிருந்து கிளைத்து கிளைத்து செல்லும் பெரும்காடுதான் மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற பெரும்வனம்.
 .
குழந்தையாக இருந்தபோது கதை ஒன்று ஆனால் அது கதை இல்லை வாழ்க்கை. எங்கள் ஊரில் ராப்பிச்சைக்குவரும் ஒரு பெரியவர். வீட்டுக்கு முன்வந்து அவரின் பேரைச்சொல்லி “வந்திருக்கிறேன்” என்பாராம். அவர் இரண்டாவது முறை கணைத்து, பெயரை சொல்வதற்குள் வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு உணவு இட்டுவிடவேண்டும். இல்லை என்றால் அவர் சொல்வது “இனி நான் பேசமாட்டேன், என்னோட அம்பது அடிமையில ஒரு அடிமை பேசுவான்” என்று சொல்லிவிட்டு போவாராம்.

குடும்பம் அழிந்து, மனைவி மக்களை பிரிந்து நிற்கதியாக நிற்கும் அவர்மீது ஏற்படும் ஊராரின் கழிவிரக்கத்தை, ஊரின் அச்சமாக அவர் புரிந்துக்கொண்டார். நாளுக்கு நாள் அந்த வன்மம் அவரிடம் பெருகுவதை தாங்கமுடியாமல் மக்கள் அவரை வெறுக்கவே தொடங்கினார்கள். ஊரும் அவரை அநாதையாக்கி சென்றது. எதனால் இந்த கொடுமை என்பதை அறியாத அவர் அந்த வார்த்தையின் வஞ்மத்தை செயலாக்கியபோதுதான் அந்த வார்த்தைக்கு அர்த்தத்தை ஊர் அறிந்தது.

சோறுபோடாத வீட்டில் தீக்குச்சியை கிழித்துப்போடுவது. தீப்பற்றிய குடிசையை அணைக்கும்போதுதான் அதை செய்தது அவர் என்பது தெரிந்து உள்ளது. ஊரே கூடி அவரிடம் சொன்னது. “இனி நாங்கள் உன்னிடம் பேசமாட்டீடோம், உனது அம்பது அடிமையில் ஒரு அடிமைதான் உன்னிடம்பேசுவான்”

இரட்டைக்கிளி தீப்பெட்டிக்குள் இருக்கும் ஐம்பது குச்சிகள். அவர் கையில் இருந்து ஐம்பது அடிமைகள்.  தன் தலையில் கொண்ட நெருப்பால் எத்தனைபெரிய போர்வீரன் அவன் ஆனால் கையில் வைத்திருப்பவன் அடிமை. தான் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமலே செயல்படும் அடிமை. அவனே விழிக்கு வெளிச்சாகவும், அவனே விழியில் கண்ணீரையும் கொண்டு வருகின்றவன் என்பதை அறிந்தபோது. அந்த இராபிச்சையின் இதயத்தில் எரிந்த தீயின் படிமம் இப்போது நினைத்து நினைத்துப்பார்க்க வைத்தது.

நீங்கள் எழுதிய மிக சிறிய தொடர் இதுதான் என்று நினைக்கிறேன். இதற்குள் விழியின் வெளிச்சமும் இருக்கிறது. விழியை பிடுங்கி செல்லும் ஒளியும் இருக்கிறது.

பாரதி அக்கினி குஞ்சு என்று சொன்னான். நீங்கள் முகில் என்று சொல்கின்றீர்கள். அதில் இருந்து எத்தனை எத்தனை வெள்ளி விதைகள் விழுகின்றன. நான் இந்த அக்கினிதேவனை உங்களால் விதையாக பார்க்கிறேன். அவனே விண்ணை மண்ணை உயிர்களை ஒன்றாக பின்னி கிளைத்திருக்கும் ஒளிமரம். 

பொன்னொளிர் நாக்கு படித்துவிட்டு, உங்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட நித்திய சைதன்யயதியின் இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள் கட்டுரைப்படித்தேன். ஒரு வனமும் அதை விதையும், ஒருவிதையும் அதன் வனமும் என்று மாறிமாறி நெஞ்சம் அள்ளியது. வெண்முகில் நகரம் இரண்டாவது கடிதம் இது. இன்னும் கூட நான் அதற்காக கடிதத்தை எழுதவில்லை என்பதை அறிகின்றேன் ஜெ.



நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.