ஜெ,
வெண்முகில்நகரம் ஆரம்பிக்கும்போது இந்திரனைப்பற்றிய வாழ்த்துதான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஏன் என்றால் இது இந்திரனைப்பற்றிய நகரம். இந்திரப்பிரஸ்தம் இல்லையா? ஆனால் அக்கினியைப்பற்றிய அழகான வர்ணனையுடன் ஆரம்பித்திருக்கிறது. ஒரு வேதமந்திரத்தின் மொழியாக்கம் மாதிரியே கேட்கிறது.
அக்னியின் விவரிப்பும் அக்னிதேவன் உருவானதைப்பற்றிய கதையும் எல்லாம் அழகாக இருக்கின்றன. ஆனால் ஏன் அக்னி முதலில் வருகிறது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். சரிவர புரியவில்லை. இன்னொரு முறை வாசித்தேன்.
வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன்
என்ற வரி ஒரு திகைப்பை அளித்தது. இந்த நாவல் முழுக்க விழைவின் தீதான் என்ற எண்ணம் வந்தது
சாரதி