ஜெ,
பாஞ்சாலியைப்பற்றிய வெண்முகில்நகரம் 19 ஒரு உக்கிரமான யோக அனுபூதி நிலையை மொழியில் வளைக்க முயன்றதுபோலிருந்தது. பல இடங்களில் மொழி உங்களை முழுக்கவே கைவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. திரும்பத்திரும்பச் சொல்லி ஒரு உன்மத்தநிலையை அடைந்தபின் எங்கோ ஆழமாகச் சென்றபின்னர் திரும்பி வருகிறீர்கள். அப்படி ஒரு கட்டத்தை அடைந்தபின் கிடைத்த உரைநடைப்பிண்டத்தை வெட்டி ஐந்தாக ஆக்கும் ஒழுங்கைக்கொண்டுவந்திருக்கிறீர்கள் சரியா. இதிலே நீங்கள் அமைத்த ஆர்டர் இதற்கு ஒரு அர்த்ததை அளிக்கிறது. அது ஒரு வழிகாட்டி போல. ஆனால் மட்டுமீறிப்போன இடங்கள்தான் முக்கியமானது. அதில்தான் இதுவரை தமிழில் உரைநடையிலே சொல்லப்படாத ஏதோ ஒன்று உள்ளது. சித்தர்பாட்டிலோ திருமந்திரத்திலோ உள்ள ஒன்று. அதைத்தான் இதிலே காணமுடிகிறது.
ஒரேசமயம் ஒரு கவித்துவ உச்சம். மறுபக்கம் ஒரு பெரிய குமட்டல் அல்லது பயம். பல தடைகளைக்கடந்து போகும் ஒரு பயணத்தின் பரிதவிப்பு முழுக்கவே இந்த அத்தியாயத்திலே எழுதப்பட்டுள்ளது. நான் பன்னிரண்டு வருடங்களாக யோகம் பயில்பவன் எனக்குத்தெரிந்தவைதான் இதெல்லாமே. ஆனால் இதை மொழியிலே எழுதிவிடமுடியும் என்பது ஆச்சரியத்தைக்கொடுக்கிறது. படிக்கப்படிக்க கொந்தளிப்புகள் எழுகின்றன
இதுதான் இதுவரை இந்தநாவலிலே எழுதப்பட்டதன் உச்சம். நீலத்தில் இதேபோல நிறைய பகுதிகள் இருந்தன. ஆனால் negative pole இல்லாமல் இருந்தது என்று தோன்றியது. அது கேளியோகம். அதன் வழி வேறு. இதுதான் சரியான சாக்த யோகம்
ராமச்சந்திரன்