இனிய ஜெயம்,
உளவியல் விசித்திரம் ஒன்றின் மற்றொரு இலக்கிய சாசனம் இன்றைய அத்யாயம்.
தருமன் கங்கையைக் கண்டதும் அடையும் தத்தளிப்புக் காண விடையை நூல்களில் தேடுகிறான்.புராண மாலிகையில் வரும் அஸ்வகன் கதை வரையே அவனால் செல்ல முடிகிறது. ஆனால் உண்மையில் அவனது அகத்தை, அக ஆழத்தை, அதன் இருண்மைகளை உருவாக்கிய ஆணி வேர் தர்மனின் பாட்டனார் சந்தனு ,சத்யவதி மீது கொண்ட காமம் அல்லவா?
அஸ்வகனின் கதையாக திறக்கும் 'பொற்கதவம்' சந்தனுவின் கதை இல்லையா? எதோ ஒரு கணத்தில் அஸ்வகன் சந்தனுவாக மாறுகிறான். நீராடியில் அஸ்வகன் கண்டு கலங்கும் பேரனாக தர்மன் கங்கைக் கரையில் நிற்கிறான்.
பீதி அளிக்கும் தர்மனின் துரியத்தின் ஒரு சிறிய கோட்டுசித்திரம். இன்றெல்லாம் இது எங்கெங்கோ என்னை யிட்டுச் சென்று அலைக்கழிக்கப் போகிறது.
திரௌபதி வசம்,அகத்தில் பாண்டுவாகவும் ,ஆற்றலில் அர்ஜுனனாகவும் இருக்க விழைகிறான் தர்மன்.
ஒரு எல்லையில் ஜலஜயாகவும்,மறு எல்லையில் புலோமையாகவும் நின்று காத்திருக்கிறாள் திரௌபதி.
கடலூர் சீனு