Friday, February 6, 2015

பாதங்கள்



இனிய ஜெயம்,

திரௌபதி  தர்மன் என்ன வாசிக்கிறான் என்பதை கேட்டறிவதன் வழியே, தர்மனின் பயம் [ஜலஜை] என்ன, விருப்பம் [இடா] என்ன இரண்டையுமே  கண்டடைந்து விடுகிறாள்.  அவளால் இனி கட்டில் என்ன சுடுகாடு வரை எந்த சூழலிலும் தர்மனை எளிதாக கையாள முடியும் என்று புலனாகிறது.

திரௌபதியின் மருதாணி தீட்டிய பாதங்கள்  துவங்கி [தூரக் காட்சி] செஞ்சாறு பொருந்திய செவ்வொளிர் உதடுகள் வரை [அண்மைக் காட்சி] 'அங்கிருந்து' 'இங்கு' அவள்  வருவதை தர்மனின் நோக்கில் மிக மிக துல்லியமாக கொண்டு வந்து விட்டீர்கள்.

எந்த அளவு துல்லியம் எனில், வாசகன் தருமனாக கூடு விட்டு கூடு பாய்ந்து  தங்கள் உள்ளங்கையில் திரௌபதியின் அனலை உணரும் அளவு.

இடா ஏன் தேவர்களை தேர்ந்தெடுத்தாள்?  இளாவின் பாதங்களை மட்டுமே அறிந்த தேவர்களுக்கு இடா என்னவாக இருப்பாளோ, அதை இடா  விரும்பினாள்.

பாதம் மட்டுமே கொண்டு  தர்மன் கண்ட திரௌபதியின் அகச்சித்திரத்தின் வீர்யத்தை அவன் இனிதான் உணரப் போகிறான்.

உரையாடலின் இடையே அன்னம் சில சமயம் ஆந்தை போலவும் அலறும், என்கிறாள் திரௌபதி. தர்மன் கலுஷை வசம் வினவிய 'மூழ்கி விடுவேனா' எனும் வினாவுக்கு திரௌபதி பதில் தருகிறாள்.

திகைக்க வைக்கும் இந்த திரௌபதி எனும் அமானுடத்தை அனாயாசமாக கையாள முடிந்த ஒரே ஒருவன் அந்த 'எத்துவாளிப்பய' கிருஷ்ணன். அவன்  இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்?


கடலூர் சீனு