அன்புள்ள ஜெ,
அத்தகைய பாலுணர்வெழுத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை, வெண்முரசுக்கு முன்பு வரை. (படித்ததெல்லாம் பாலியல் கிளர்ச்சி எழுத்துக்கள் தான்) நீலத்தில் பல பகுதிகள் அத்தகைய அந்தரங்க உலகை உருவாக்கின. நீலத்தின் அமைப்பில் அதற்கான சாத்தியங்களில் புகுந்து புறப்பட்டிருந்தீர்கள். என்ன தான் இருந்தாலும் அது நிகழ்ந்த இடம் முழுக்க முழுக்க மனதில். உங்களிடமிருந்து நேரடியான யதார்த்த மொழியில் நகமும் சதையுமாக ஓர் பாலியல் எழுத்து வருமா என எதிர்பார்ப்பைத் தூண்டியது அது. அதற்கான இடம் வெண்முரசில் வருமா என்று பல நாட்கள் நினைத்ததுண்டு. ஏனென்றால் என்னைப் பொறுத்த வரை வெண்முரசு நாவல் தொகுப்பில் இலக்கியத்தின் அத்தனை சாத்தியங்களையும் பார்த்து, படித்து அனுபவித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்று பீமனின் நீர் விளையாடல் அத்தியாயம் அந்த எழுத்தின் மிகச் சிறந்த உதாரணம். புலனின்பத்தை, அதன் சாத்தியக் கூறுகளை அது தரும் கிளர்ச்சியோடும், அதற்கும் மேலான மலர்ச்சியோடும் படித்த போது என் பேருடலின் எடையே குறைந்து மிதந்து வந்த ஓர் மகிழ்வை அடைந்தேன், என்றுமில்லாத வகையில் இன்றைய காலை எனக்கு விடிந்தது. இதை எழுதும் போதும் உதட்டில் ஓர் கோடு வளைந்திருக்கத் தான் செய்கிறது. மறைக்க முடியவில்லை....:-) உடலை நேசிக்கக் கற்றுத் தந்திருக்கிறீர்கள்.
இலக்கிய வாசிப்பாவது, நுண் வாசிப்பாவது ஒன்றும் வேண்டாம். இந்த அத்தியாயம் வாசித்த இருமுறையும் ஒரே உணர்வு தான், மிதக்கும் உணர்வு, எடையிழந்த உணர்வு.
கற்பனையத் தூண்டும் என்றேனே... ஒரே ஓர் உவமை, "முலைகளின் பிளவில் நீராலான ஓர் ஊசி எழுந்து எழுந்து அமைந்தது." 'நீரூசி' - இன்று எத்தனை பேரைத் தைத்ததோ!!!
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்