Tuesday, February 24, 2015

ஆறாவது காதலன்



அன்புள்ள ஜெ,

மிகச் சரியாக அந்த குறிப்பைத் தவற விட்டிருக்கிறேன். மிகத் தெளிவாகவே "மண்டைக்கலம் இரண்டேந்தி திசையாடை அணிந்து தனித்தமர்ந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மையில் திசையாடை என்ற வார்த்தையில் முழுவதுமாக தோய்ந்து விட்டேன். திசைகளையே ஆடையாக அணிந்தவன். ஆடை அற்றவன், திக் அம்பரன். அதில் அந்த மண்டைக்கலம் என்ற குறிப்பை தவற விட்டுவிட்டேன். அதனாலேயே அந்த அத்தியாயத்தை சகதேவனின் அனுபவமாகக் கருதி விட்டேன். 

ஆனால் அது அந்த சாக்தன் என்ற அந்த குறிப்பு அந்த அத்தியாயத்தை மேலும் துலக்கமாக்குகிறது. இன்னும் குறைந்த பட்சம் இரு வாரங்களுக்கு இதைப் பற்றி தேடிக் கொண்டிருக்கப்போகிறேன். முன்பு தாந்த்ரீக மரபைப் பற்றித் தேடப் புகுந்தால் ஏதோ வழி தெரியாத காட்டுக்குள் நுழைந்த அனுபவம் வரும். இப்போதோ ஓர் கைவிளக்கு கிடைத்திருக்கிறது. நுழைந்து விட்டேன்.

பல்லுருக்காட்டியைப் (கலைடாஸ்கோப்பை இவ்வாறு சொல்லலாம் தானே) போல படிக்க படிக்க ஒவ்வொரு பொருளை, திறப்பை அளித்துக் கொண்டே செல்கிறது இந்த அத்தியாயம். திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அன்னை விழியின் துவக்கத்தில் நிறைந்த நெல்லி மரத்தின் பின்னாலிருந்து பார்க்கும் ஒருவனாக, ஊருக்கு வெளியில் இங்கு நடப்பவைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்ற, அங்கு பார்வையாளர்களாக இருந்த ஜிவ்ஹன் என்ற நரியால் "நம்மவன்" என்று உணரப் பட்ட அந்த சாக்தன், திரௌபதியின் திருமணத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அவன் வருகிறான். அனைத்து போட்டியாளர்களும் அறிமுகமாவதற்கு முன்பே முதலில் அவன் தான் அறிமுகமாகிறான். திருமணம் முடிந்த பின் கடைசியாக வருகிறான், அவளிடும் இடுகை ஏற்க வந்திருப்பதாக சொல்கிறான். அவனுக்குத் தான் தேவி தன் தலையில் சூடிய செங்காந்தள் மலர் எடுத்து கொடுக்கிறாள். அங்கும் அவன், "அன்னை வாழ்க! அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க!" என்று சொல்கிறான். இதோ அனைவரும் ஐந்து வழிகளில் அவளை அறிந்த பிறகு ஆறாவதாக அவனும் அவனின் வழியில் அறிந்து தானே ஆக வேண்டும். எல்லாம் தொடர்புற்று ஓர் முழுமையை, வடிவை அடைந்து விட்டது.

அன்புள்ள ஜெ, நாமறிந்த ஞானம் எல்லாம் இதுவரையிலுமிருந்த மானுடம் என்னும் உணர்வை மீறி மீண்டும் தூய விலங்கு தன்மையை அறிவதற்குத் தானா? நம்மைச் சுற்றி எழுந்த இத்தனைக் காவியங்களும், இத்தனை தரிசனங்களும் அந்த எதார்த்தத்தை உன்னதமாக உணரத்தானா? அறிவால், விடுதலையால், கீழ்ப்படுத்தலால், இணையாதலால், அரவணைப்பால் அறிந்ததை விட, அச்சத்தால், காத்திருப்பதால், வலியால் உணரும் தேவியை, அழகிலும், நளினத்திலும் மட்டுமல்லாமல் அழிவிலும், கழிவிலும், அருவருப்பிலும் உணரும் அந்த நிலை தான் மானுடம் கொள்ளச் சாத்தியமான உச்ச நிலையா? நினைக்க நினைக்க நிலையழிகிறது. உங்களின் நிலையழிவையும் உணர முடிகிறது. இன்னும் இன்னுமென அறிய மனம் ஏங்குகிறது. ஆனால் ஞானத்தின் முன் நிற்கும் போது வரும் பேரச்சம் என்னைச் சூழ்கிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்