அன்பு ஜெயமோகன்,
பூரிசிரவஸ் அறிமுகமான இருபதாம் அத்தியாயத்திலிருந்தே மலைகளைக் குறித்த விவரணைகளைக் கவனித்து வருகிறேன். நுட்பமான மலைக்காட்சிகளை மனதுக்குள் விரித்தபடியே நகர்ந்து கொண்டிருக்கும் அவ்விவரணைகளால் எனக்கும் மலைபயணம் சாத்தியமாகி இருக்கிறது. மலையடுக்குகளின் குளிரும் வெப்பமும் எனக்கும் பழக்கமாகிக்கொண்டு வருகிறது. தனித்திருக்கும் பொழுதுகளில் உள்ளுக்குள் கேட்கும் ஓநாயின் ஊளையால் மலையடுக்குகளில் அமர்ந்திருப்பவனாகவே உணர்கிறேன். மலையிருளில் என்னுடைய எவ்வித அடையாளங்களும் எனக்குத் துணையாய் இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறேன். மலைநிலத்தின் மூச்சில் எவ்விதக் கலப்படமும் இல்லாதிருப்பதில் எனக்கு வியப்பேதுமில்லை. பேரொலிகளுக்கு நடுங்காது சிற்றொலிகளுக்கு அஞ்சும் மலைவாழ்வின் விசித்திரத்தில் நான் குதூகலிக்கிறேன்.
மலையும் மலை சார்ந்த நிலப்பரப்பை குறிஞ்சி என்று சொல்வார்கள். குறிஞ்சிப்பூ மண்டிக்கிடக்கும் நிலப்பரப்பு என்பதால் அப்பெயர் பெற்றதாகவும் கருத்துண்டு. அப்பூவின் நிறம் நீலம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அப்பூவைக் கொண்டே மேற்குத்தொடர்ச்சி பழங்குடியினரான பளியர்களும் தோடர்களும் தங்கள் வயதைக் கணிப்பர். நீலவண்ணத்திலான குறிஞ்சி மலர் பூத்துக்குலுங்குவதால்தான் நீலகிரி எனும் பெயரே அமைந்தது.
”மலைகளை அன்னையென்றே மலைமக்கள் கருதுகின்றனர். அவளுடைய முலைப்பாலே ஆறுகளாகவும் ஓடுகிறது என்பதும் அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை” எனும் பூரிசிரவஸின் நினைவுகூர்தலில் மலைகள் எனக்கு இன்னும் நெருக்கமாகின. வானுக்குப் புதிய பாதை அமைத்ததுபோல பெய்யத்துவங்கும் மழைத்துளிகளை உள்ளுக்குள் உருவகித்துக் கொள்ளும்போது குளிர்ந்துபோகிறேன். சிறுவனொருவனின் கண்கள் கொண்டு அம்மழையைக் காண்பதற்கு நான் தயாராகும்போதே மழைச்சேறின் புதுமணம் மனதுக்குள் கமழத் துவங்குகிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் நடந்தேறும் நீர்ப்போரைக் கவனிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இடைவிடாத இசைத்துணுக்கொன்றை முணுமுணுத்தபடியே பெய்தபடியிருக்கும் மழை ஓயும்போது சிறுவனின் கண்கள் என்னைவிட்டுத் தானாகவே மறைந்துவிடுகின்றன. செஞ்சேற்றில் இறங்கி கால்களால் மிதிக்கும்போது பூக்கள் மேலிருந்து கொட்டுவதான உணர்வு. உடலே மலராகும் அற்புதத்தை அக்கணமே அறியும் வாய்ப்பு.
மலைகள் என்னை அடையாளங்களில் இருந்து விடுவிக்கின்றன. வாழ்க்கை குறித்த அபத்தமான கருதுகோள்களை ஒருநொடியில் காணாமல் போகச் செய்கின்றன. தழுவிக்கொள்ளும் என்னை உச்சிமோர்ந்து இன்னும் மேல்செல்ல அனுமதிக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் புதிது புதிதான வாழ்க்கையை அறிமுகப்படுத்தியபடியும் இருக்கின்றன. விதவிதமான ஒலிக்குறிப்புகளால் நிரம்பி வழிந்தபடி இருக்கும் மலைகளில் நான் மெளனத்தை எளிதில் கற்றுக்கொள்கிறேன். அம்மெளனம் ஒலிகளற்ற வெறுமை அல்ல; விளங்கிக்கொள்ள முடியாத ஒலிகளின் முன் திகைத்து நிற்கும் அறியாமை. மலைகளை வணங்குகிறேன்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.