கடும் காய்ச்சல் கண்டபின் துவண்டு போன உடல் போல ஆனது இன்று 37 படித்து முடித்த போது. மீண்டும் அதே சரிவு. ஒரு படி கீழே கூட ..ஏனெனில் மாடத்தில் செம்பட்டு மின்னியதால்.
மீண்டும் அந்த வெறுமை சூரிய மைந்தனுக்கு. கிந்தூரம் கைக்கு கிட்டாமல் சரிந்து அமரும் போது வந்த கரிய வெறுமை... ஆதி தெய்வீகம் நிழல் போல தொடரும் வெறுமை. ஜெயிக்கவே முடியாது என மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்வதாக வளர்கிறது பாண்டவர்களின் வலிமை அல்லது இவனின் வஞ்ச வதை விதி ஆடல் அல்லது துரியனின் சினக் கொதிப்பு விளைவு.
ஆயினும் முதலில் நுழைபவனே வீரன். அவளின் மண விழாவில் வில்லேந்தி நிற்கும் போதும் இன்று புகை நடுவே வெண்புரவி ஏறி அவன் கோட்டை உடைத்து நுழையும் போதும்... அற்புத சித்திரம் அது. ஒரு நல்ல slow motion சீன் காலை வேளையில் கோட்டை நுழையும் காட்சி.. அந்த வர்ணனை , பூரிசிரவஸ் உணர்த்தல்கள் , அக பிரிதல்கள் மற்றும் சாட்சி கண் கொண்டு காணுதல் என ஒரு கனவை ஒத்த நகர்தல் கொண்ட காட்சி. நெஞ்சு துடிப்பது கேட்டது. ஒலிகள் கூட காட்சிகளாக விரிந்து படர்ந்த கூர்மை போர்.
மீண்டும் அவனை சவமாகி அனுப்பி வைத்தது கூட மீண்டும் உயிரோடு சாவதற்கு என தோன்றியது ....வதை கொண்டே வாழ் கர்ணா !!
ஒரே ஆறுதல். ..அர்ஜுனனை கடைசியில் இறக்கி ஜெயிக்க வைத்து இன்னும் கர்ணனை வதைகள் ஏந்தி செல்லாமல் விட்டதற்கு ...தருமன் முன் வந்து நின்றதற்கு...மலை புக மனம் விரும்பினாலும் , மெல்லியதாக மலை இளவரசன் வீரனாகி நின்று விட்டதை தென்றல் தீண்டியது போல சொல்ல முடிந்ததற்கு.
அன்புடன், லிங்கராஜ்