Sunday, May 3, 2015

மூன்று தழுவல்கள்,



ஆசிரியருக்கு,

மூன்று  தழுவல்கள், மூன்று வெளிப்பாடுகள் . முதலில் சில மாதங்களுக்கு முன் குண்டாசி பீமனைத் தழுவியது, இரண்டாவது துரியன் பீமனைத் தழுவியது , இறுதியாக தனியாக திருதராஷ்ட்ரன் துரியனைத் தழுவியது.

முதல் தழுவலில் குண்டாசி பீமன் கரங்களில் அவனறியாத வன்மத்தை  உணர்ந்துவிட்டான். கள் பானை விஷம் அது.  மின்னற் பொழுதில் அது  எப்பொழுது வேண்டுமானாலும்  வெடிக்கும். 

இரண்டாவதில் பிறரை துரியன் தழுவுவதற்கும் பீமனைத் தழுவுவதற்கும் உள்ள ஒரு மெல்லிய வேறுபாடு . அர்ஜுனனைப் போல பீமனை அவன் மார்புரத்  தழுவவில்லை, போரிடும் நாகங்களான அவர்களின் கைகள் மட்டும் பிணைந்து கொள்கிறது. வன்மம் அணைக்கப் படாமல் காப்பாற்றப் பட்டிருக்கிறது , அவர்கள் அறியாமல் ஒரு துளி மிஞ்சுகிறது. மானுடத்தால் இயலாது அது. கரடியின் பிடியில் உள்ளது அது. அறுபடாமல் பிழைத்த அவ்விழை எபொழுதும் அறுபடாமல் தொடரும்.

மூன்றாவது திருதராஷ்ட்ரன் தனியாக துரியனை அணைத்துக் கொள்வது. பிழைத்தாலும் தனது ரத்தம் அவன், இக்கொடுங் கனவை கடக்கவே அவனும் விரும்புகிறான்,  ஆனால் சூதுக்குப் பின்னும் அது தொடரப் போகிறது.  உதறி உதறி பற்றிக் கொள்ளும் இவ்வுறவே குற்றமும் மன்னிப்பும்  தண்டனையும். 

கிருஷ்ணன்.