Friday, May 1, 2015

நடனசபை

[பெரிதாக்க படம் மீது சுட்டவும்]

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

சிரிக்கவும் கண்ணீர்விடவும் ஒரு நாடகம் தேவைப்படுகின்றது. சிரிப்பும் கண்ணீரும் உருவாகும் இடத்தில் ஒரு நாடகமும் தோன்றிவிடுகின்றது.
நாடகம் தொடங்கி முடிந்த உடன் வாழ்க்கை சரியாக அதன் ஆரம்ப புள்ளியில் தொடங்கி முடிவுப்புள்ளிக்கு விபத்தில்லாமல் சென்று விடுவதாக நினைக்கின்றோம்.  அங்கு உள்ள விபத்துக்கள் மறைக்கப்படுகின்றது அல்லது மறக்கப்படுகின்றது. மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டதை எடுத்து இயம்புவன் பெரும்தன்மை இல்லாதவன் என்ற பட்டம் பெருகின்றான்.

கண்ணீரும், சிரிப்பும் கலந்து ஓடும் ஒரு வாழ்க்கை தருணத்தில் அடியில் கிடக்கும் கல்லை காண்பவன் அது தடுக்கும் இடத்தை முன்னமே சொன்னால் அது பெருதன்மை இல்லை என்று ஆகிவிடும். ஞானம் உள்ளவனை முட்டாளாக்கும் ஒரு தருணம். விதுரன் முட்டாள் முட்டாள் என்று கிண்டாலாக்கப்படும் பல தருணம் வந்து வந்துபோகின்றது, அந்த கிண்டல் வளர்ந்து வளர்ந்து இளையதீர்க்கசியாமன் பெரும்தன்மை இல்லாதவர் என்ற இடத்தில் வந்து முடிவடைகின்றது. ஞானம் உள்ளவன் தன்னை கேளிசெய்வதற்கு வருந்தவில்லை, ஞானம் கேளியாகும் தருணத்தில் ஒலிக்கின்றான். இவரும் மேதைதான் அரசே, மேதைமை என்பது கனிவுடையதாக இருக்கவேண்டுமென்பதில்லைஎன்றார் விதுரர். ஒரு சொற்றொடருக்குள் விதுரர் தன்னை திருப்பி நிறுத்திக்கொள்ளும் இடம் அழகு. 


தீர்க்கசியாமன் இங்கு ஏன் இந்த கதையை சொன்னான். தான் மேதை என்பதை காட்டவா? கண்ணில்லாமையால் இடம் பொருள் தெரியாமல் பேசினாரா? அங்கு நடக்கும் அழுகைக்கும், சிரிப்புக்கும் இடையில் உள்ள உண்மையை கண்டுக்கொண்டார். கேளியாக்கப்படுவோம் என்றபோதும் அதையே அவர்சொல்கின்றார். தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. தனது ஞானத்தையே முன்னாடி எடுத்து வைத்துச்செல்கின்றார். ஞானத்தை முட்ட முடியதவர்கள், ஞானத்தை வைத்தவனை முட்டமுயல்கின்றார்கள்.

சூதர்கதையில் வரும் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு என்ற உலோகத்தைப்பார்க்கும் முன்பு. அவைகள் குடிக்கும் குருதிகளின் உறுப்புகள் அர்த்தம் நிறைந்தது. நெஞ்சம் ஒளிப்பட்டு பொன்னாகிவிடும், முகம் வண்ணம் கொண்டு வெள்ளியாகிவிடும், விழைவு ஒலிப்பெற்று செம்பாகிவிடும்.  அகத்தின் அடியில் உள்ள வஞ்சினம் மட்டும் எஃகு என்றே ஆகும். குழந்தைகளின் நெஞ்சம் கண்டு, முகம் கண்டு, விழைவுக்கண்டு ஆனந்தப்படும் திருதராஸ்டிர அகம் மறைந்திருக்கும் வஞ்சம் காணுமுமா? அந்த வஞ்சம் எல்லாம் எழுந்து திரண்டு ஆயுதமாகி வருமன்றோ? இதை தெளிந்தவன் கண்ணன் அவன் பேசவில்லை. இதை சிந்திப்பவர் பீஷ்மர் அதனால் ஒதுங்குகிறார். அதை உணர்ந்தவர் விதுரர் பேசமுடியாது. இதை அறிகின்றவர் பாண்டவர் அதை வெளிக்காட்ட முடியாது. இதை அறிந்தவர் சகுனி அதை அவர் மறைக்கிறார். இதை பார்த்தவர் இளையதீர்க்கசியாமன். அவர் கண்டதைக்கண்டப்படி சொல்கின்றார். பரிசோடு, இங்கிதம் இல்லாதவர் என்ற பட்டத்தை சேத்துப்பெறுவதற்காக சொல்கிறார்.

பொன், வெள்ளி, செம்பு இவைகளுக்கு உள்ள குறை களிம்பு ஏறுதல். அதை கழுவிவிட்டால் மீண்டும் புதியதாக ஆகிவிடும். இருப்புக்கு உள்ள குறை துறுப்பிடித்தால். நெஞ்சி, மூஞ்சி,விழைவு அனைத்தையும் அவைகளின் குறைகளை களைந்து புதியதாக்கிவிடலாம். வஞ்சினம் ஆயுதமாகி மற்றதையும் அழிக்கும், துறுவேறி தன்னையும் அழிக்கும். 

ரத்தின சபை, பொற்சபை, வெள்ளிச்சபை, தாமிரச்சபை, கண்டு நடனம் செய்யும் இறைவன் இரும்பு சபைக்காணவில்லை ஏன்? வஞ்சத்தில் இறைவன் நடனம் செய்வதில்லை, ஆனால் வஞ்சமே ஒரு நடனம் செய்கின்றது வையகத்தில்.  இறைவன் ஆனந்தன் அதனால் சித்திரசபையில் நடனம் செய்கின்றான். 

திருதராஸ்டிரன் ஓநாய் குருளைகளின் மணத்தில் மகிழ்ந்திருக்க, தீர்க்கசியாமர் அவையுள் நுழையும்போது அதே மணத்தை அறிந்து முகத்தை சுளிக்க, அவர் பாடுவதோ அம்மையப்பனின் குருதியில் விளைந்த எம்பெருமான் சுப்பிரமணியன் கதை.

மனிதனும், விலங்குபோல குட்டிகளின் குருதி மணத்தை கொண்டாடுகின்றான். அதனால் அவன் கருவறை சபையினல் நடனம் செய்கின்றான். பிள்ளைகளை கோபித்துக்கொண்டு காட்டுக்குப்போன திருதா? பிள்ளைகளின் மணத்தில் நிறையும்போது காந்தாரியை நினைப்பதுதான் கருவறை நடனம். 

ஞானி அம்பையப்பனின் ஒளியையே குருதியாகக்கொண்ட சுப்பிரமணியின் மணத்தை கொண்டாடுகின்றான். அதனால்தான் அந்த சபையில் அந்த இடத்தில் அந்த குருதி நாற்றத்திலும், திருதராஸ்டிரன் அறியமுடியாத கண்ணனின் மணத்தை தீர்க்கசியாமன் அறிகின்றார். மணம் அறிவதில் மன்னாதி மன்னன் என்ற திருதராஸ்டிரனை கட்டிப்போட்டது குருதிமணம். தீர்க்கசியாமர் தாண்டிப்போனது அந்த குருதிமணம். கண்டுக்கொண்டது கண்ணன் மணம்.   

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.