ஜெயமோகன் அவர்களே,
தாங்கள்
எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது நாவல் இந்த வெண்முகில்
நகரம். 91 அத்தியாயங்கள் கொண்டது. 17 பாகங்கள் கொண்டது.ஒரு புத்தகத்தை
வாங்கி அதை முழுமையாக வாசிப்பது என்ற வழக்கம் கொண்டவர்கள் நாங்கள். ஆனால்
இந்த நாளொரு அத்தியாயமென இணையத்தில் வாசிக்கும் வாசிப்பு வேறு பரிமாணம்
தருகிறது.
நம்மை
அறியாமலே நம் குழந்தைகள் வளர்வதைப் போல அந்த வளர்ச்சியும் இருக்கிறது.
அதில் வளர்ந்த குழந்தையின் உருவினையும் முதல் நாளில் பிறந்த குழந்தையின்
வடிவையும் எண்ணி சுகிக்க முடிகிறது வேறொரனுபவம். வெண்முகில் நகரம் தீயில்
பிறக்கிறது. இன்று வளர்ந்து நீரில் நதியலையில் முடிந்திருக்கிறது.
இந்நாவல்
மூன்று அடிப்படைப் பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. பாண்டவர்கள்
பாஞ்சாலி வளர்க்கும் காமத்தீ ! பூரிசிரவஸின் உள்ளம் மற்றும் விழிகளூடே நாம்
உணருகின்ற மனித உணர்வுகள் ! சாத்யகி எனும் யாதவனனின் வழியாக
பிணைக்கப்படும் கதையோட்டங்கள் !
இதன்
நாயகனாக யாரையும் குறிப்பிட்டு கூறிவிட இயலவில்லை. ஆனால் கதையின் மையமாக
திரௌபதியை எளிதில் சொல்லிவிட முடிகிறது. நாமறிந்த புராண மகாபாரதத்தில்
இருக்கும் சிறிய கதாபாத்திரங்களை விரித்து முதன்மைப்படுத்தும் வழக்கம்
இதற்க்கு முந்தைய நாவலகளிலும் தாங்கள் செய்தவையேதான். இந்த நாவலில் நீங்கள்
பூரிசிரவஸ் மற்றும் சாத்யகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை அப்படி
விரித்தெழுதியுள்ளீர்.
சாத்யகி
மற்றும் பூரிசிரவஸ் இருவரும் 7 முதல் 17 பாகங்களில் Propelling Character
ஆக இந்த நாவல் நகர்வைப் பெரிதும் அமைக்கிறார்கள் அல்லது நகர்வுக்கு
உதவுகிறார்கள். முதல் 6 பாகங்களில் பாண்டவர்களைக் காமத்தில் எரிக்கும்
பாஞ்சாலி இருப்பதால் அந்த பாகங்களுக்குள் ஏதும் தனிப் பாத்திரங்கள்
தேவையின்றியே வெகு விரைவில் நகர்ந்துவிடுகிறது.
வழக்கம்
போல சிறந்த சூதர் கதைகள் மூலம் உருவாகும் புனைகதைகள், வாழ்வியல்
சித்தாந்தங்கள், நிலப்பரப்புகளின் வர்ணனை, மகளிரின் வாழ்வியல் முறைமைகள்,
கதாபாத்திரங்களின் வண்ணங்கள் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
மேலும்
சிறந்த கதைப்போக்கினைக் கொண்ட இந்த நாவலில் குறிப்பிடத்தகுந்த
அத்தியாங்களாக முதல் அத்தியாயம், சகதேவன் திரௌபதி காதல்காட்சியின் எழுத்து
வீரியம், பூரிசிரவஸ் பால்ஹிகரை அழைத்து வருதல் காம்பில்ய போர்க்களக்
காட்சி, உண்டாட்டகக் காட்சி. சகுனி – கிருஷ்ணன் பகடையாடல்,
திருதராஷ்ட்ரரின் கொலைவெறி என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லமுடிகிறது.
இந்நாவல்
தொடர்பாக சில கருத்துகள் கருக்கொண்டுள்ளது என்னுள். அதை நானே ஆராய்ந்து
ஒரு தொடர் எழுதப்போகிறேன். கடந்த மூன்று மாதங்களாக எங்களை வெண்முகில்
நகரத்தின் மூலம் மகிழ்வித்த உம் எழுத்தைத் தொட்டு நன்றி பாராட்டுகிறேன்....
இப்படிக்கு
அடுத்த நாவலின் எதிர்ப்பார்ப்பில்
கமலக்கண்ணன்.